ஆடுகள் மோதிக்கொண்டால்….. [ 1987 பெப்ரவரியில் எழுதிய கட்டுரை]ஈழத்து நிகழ்ச்சிகள்:- சர்வசித்தன்

ஆடுகள் மோதிக் கொண்டால், கொண்டாட்டம் ஓநாய்க்கன்றோ ?

[ 1987-02-08 ல் எழுதப்பட்டு, பெப் 10,1987 ‘தினமணி’(மலேசியா) நாளிதழில் வெளியான கட்டுரை]

இந்தக் கட்டுரையினை எழுதிக்கொண்டிருக்கையில், இலங்கையின் வட மாநிலத்தின் பல பகுதிகளில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே மிகப் பெரும் அளவில் மோதல்கள்  நடைபெற்றுக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

மன்னார், வவுனியா,கிளிநொச்சி ஆகிய வடமாநிலப் பிரதேசங்களில் நடைபெறும் தாக்குதல்களின் காரணமாக; ஏராளமான அரச படையினரும்,பொதுமக்களும்,போராளிகளும் இறந்துகொண்டிருப்பதாயும், சுற்றாடலில் உள்ள பல பகுதிகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் அத்தியாவசிய  பொருட்களும், உணவும் இன்றி மக்கள் தவிப்பதாகவும் தெரிய வருகிறது!

ஈழத்தமிழர்களும் ஸ்ரீலங்காவின் பிரஜைகளே என்று கூறிக் கொள்ளும் சிங்கள அரசு; நடாத்தும் இந்த மூர்க்கமான தாக்குதல்கள்-எதிரி நாட்டைச் சூறையாடும் பகைவர் படைகளை ஒத்திருந்தாலும்-இன்னமும் இக்கரையிலிருந்து,இந்தியா எச்சரிக்கை விடுகிறதேயன்றி- இந்த இன அழிவினைத் தடுத்து நிறுத்திட எந்த முயற்சியினையும் செய்யக் காணோம் என்பது கவலை அளிக்கும் விஷயந்தான்.

’அழுதாலும் பிள்ளை(யை) அவளே பெறவேண்டும்’ என்பது போன்று;அராஜகம்,அடாவடித்தனம்,போர்நடவடிக்கைகள், அடக்குமுறை இவற்றிலிருந்து விடுதலை பெற விரும்புபவர்களே அதற்காகப் போராட வேண்டுமேயன்றி- அண்டை நாட்டுக் காரர்களல்ல என்னுமாப் போல்; கைகட்டி வெறும் ‘வாய்ப் பேச்சின்’ மூலம் ‘சேவை’யாற்றும் இந்த நேரத்தில்…….. நேற்று விட்ட இடத்திலிருந்து மீதியைத் தொடருகிறேன்.

‘ஊர் இரண்டு பட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பார்கள்!

அது போன்று,போராளிகள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டால், அதனைக் கொண்டாடுபவர்கள் அவர்களுக்கு வேண்டாதவர்களாகத்தான் இருப்பர். ஆனால், தமிழகத்தின் பத்திரிகைகளில் சிலவோ, தமிழர்கள் தம்முள் மோதிக்கொள்வதை வேடிக்கை பார்க்கின்றன அல்லது ‘தூபம்’ போடுகின்றன. இவை இரண்டையும் விட்டால் தமது கற்பனையில் உதித்த கதைகளை எழுதி வியாபாரம் பண்ணுகின்றன!

அரசியல் வாதிகள், ஈழப் போரளிகளைப் ‘பங்கு போட்டுக்’ கொண்டு அவர்களை மோதவிட்டுத் தங்கள் ‘பலத்தைப் பரிசோதிக்க நினைத்தது போல் ; தமிழகத்தின் பத்திரிகைகள் சிலவும் இந்தப் போராளிகள் விஷயத்தில் ‘சிண்டு’ முடிந்து வேடிக்கை பார்த்ததன் மூலம், நம்மவர்களே, நம்மவர்கள் மோதிக்கொள்ளத் துணை புரிந்தார்கள். இதற்கு வேற்று மனிதர்கள் சிலரது பண உதவிகளும் மிகவும் அதிக அளவில் புகுந்து விளையாடிற்று!

விளைவு; சண்டித்தனம் செய்பவர்கள் கூடச் ‘சரித்திரம்’ படைக்கப் புறப்பட்டார்கள். இவர்களைத் ‘தத்தெடுத்து’ வளர்க்கவெனக் கடல் கடந்து ‘கப்பல் விடும்’ வீரர்களும், இன உணர்வு மிக்க சில ‘படைஞர்’களும் முன்வந்தார்கள். வளர்த்தார்கள்,வளர்த்து விட்ட பின் தாம் வளர்த்த ஆடுகளையே மோதவிட்டு வேடிக்கை பார்த்தார்கள். இம் மோதல்களின் போது, சில ஆடுகள் செத்து வீழ்ந்தன, பலம் மிக்கவை பிழைத்துக் கொண்டன. பலம் மிக்க ஆட்டினை வளர்த்தவன் தலையை நிமிர்த்தி ‘எக்களிப்புடன்’ சிரிக்க, பலமிழந்த ஆடுகளின் வளர்ப்பாளன், நமக்கென்ன வந்தது, நாம் வளர்த்த ஆடுகள் தாம் பலியாகி விட்டனவே, மற்ற ஆட்டினை எந்த ஓநாய் எப்படித் தின்றால் நமக்கென்ன ,என்று அமைதியாகத் தூங்கப்போனான்.

இன்று, வட இலங்கையில் நடைபெறும் கொலை நிகழ்வுகளை இக்கரைத் தமிழ்த் தலைவர்கள் ‘வெறுமனே’ பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு இலங்கைத் தமிழ் அரசியல் வாதி ஒருவர் பேசியபேச்சு- எனக்கு இப்படியொரு ‘ஆடு-ஓநாய்’க் கதையினைத்தான் ஞாபகப் படுத்திற்று.

பலம் மிக்க ஆடாக இன்று, வட இலங்கையின் காடுகளில் ‘புலி’களாகப் போராடும் விடுதலை அணியினரைப் பற்றி நான் அறிந்த சில தகவல்களை இச் சந்தர்ப்பத்தில் உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

ஆம்; விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு எதிராகப் புலிகள் இயக்கத்தின் உள்ளேயே ‘புகைச்சல்’ கிளம்பிவிட்டது எனச் சில பத்திரிகைகள் எழுதின, அல்லது எழுதவைக்கப்பட்டன!

அவற்றுக்குப் பதில் கூறும் வகையில், வேறு சில பத்திரிகைகள் மறுப்புக்களையும் தாங்கி வெளிவந்தன. இவ்வாறான செய்திகளை வெளியிட்டு வந்த நடுநிலை ஏடுகள்; விடுதலைப் புலிகளின் பேச்சாளர் பாலசிங்கத்தின் விளக்கங்களையும் வெளியிட்டிருந்தன.

அவரது கூற்றுப்படி, சுமார் பத்து வருடகால வளர்ச்சியைக் கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவராக விளங்கும் பிரபாகரன்; நிர்வாக மற்றும் போராட்டக் குழுக்களுக்குத் தலைமை தாங்குவதாகவும், அவரின் கீழ் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கென ஐந்து தளபதிகள் பொறுப்பில் இருப்பதாகவும் தெரிகிறது!

இந்த ஐந்து பிரிவுகளும்; யாழ்ப்பாணம்,வவுனியா,மன்னார்,திருகோணமலை,மட்டக்களப்பு ஆகியவைகளாகும்.இவற்றுள் வவுனியாப் பிரிவின் கீழ் கிளிநொச்சியும் முல்லைத்தீவும் அடங்குகின்றன.

அவற்றுக்குப் பொறுப்பாகவுள்ள தளபதிகள் என, யாழ்ப்பாணத்தில் கிட்டுவும்; மன்னாரில் ராதாவும்; வவுனியாவில் மதிய ஸ்ரீயும்;திருகோணமலையில் சந்தோசமும்; மட்டக்களப்பில் குமரனும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது! இத் தளபதிகளின் கீழ் நிர்வாகப் பிரிவொன்றும், போராட்டப் பிரிவொன்றும் இயங்குகிறது!

ஏனைய போராட்ட அணிகளைப் போலன்றி – விடுதலைப் புலிகள் அணியில், (அரசியல்) நிர்வாக மற்றும் போராட்ட அணிகள் இணைந்தே செயல்படுவதாகத் தெரிகிறது! இதன் மத்திய நிர்வாகத்தில் பல மூத்த உறுப்பினர்கள் அங்கம் வகிக்கிறார்கள்.இதன் தலைமை பிரபாகரன் கையில் உள்ளது. பொதுவாகப் போராட்டம் பற்றிய முடிவுகளை அவ்வப் பகுதிக் குரிய தளபதிகளே எடுத்தாலும் முக்கிய முடிவுகளை அதன் தலைவரான பிரபாகரனே எடுக்கிறார்!

ஒரு ராணுவ நிலையைத் தாக்குவதோ அல்லது தாக்கவரும் ராணுவப் பிரிவினை எதிர்க்கும் உத்திகளை செயல்படுத்துவதோ முழுதாகத் தளபதிகளின் பொறுப்பிலேயே உள்ளது.

மற்றொரு புறம், ஒவ்வொரு போராளியும் தெரிவுசெய்யப்படுவதற்கு முன்பாக, அவர்களது பின்னணி பற்றி முழுதாகத் தெரிந்து கொண்ட பின்பே ஏற்றுக்கொள்ளப் படுகிறார்கள். அதன் பின்புதான் ராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு போராளிக்கும் இரண்டு பொருட்கள் எப்போதும் அவரிடமே இருக்கும் படி வழங்கப்படுகிறது. ஒன்று, விஷக் குப்பி (சயனைட்)- இது தப்பித்தவறி அரசுப் படைகளால் பிடிபடும் நிலை ஏற்படின் உட்கொண்டு உயிரை மாய்ப்பதற்காக வழங்கப்படுவது; மற்றது அடையாள அட்டை, இது மீண்டும் தளபதியை அடைய வழி செய்கிறது!

இதில் ‘மிலிட்டரி’ப்பிரிவு கூட முழுவதும் போராட்டக் காரர்களால் நிரம்பியது அல்ல.

ஆராய்ச்சி, தொடர்பாடல்,மருத்துவம்,போரியல் எனப் பல துணைப்பிரிவுகள் இங்கு உண்டு,அவற்றுக்கென வரையறைகளும் தனியாக உள்ளன. இவர்கள், போர் ஓய்வுக் காலங்களின்போது, குடிசார் வேலைகளில் ஈடுபடுவார்கள். ஏனைய சமயங்களில் இவர்களது வேலை பெரும்பாலும் ராணுவத் துறையாகவே இருக்கும்.குடிசார் நிர்வாகத்துக்கென தனிப் பிரிவொன்று அங்கு நிரந்தரமாக உண்டு.

உலக அளவில்;அமெரிக்கா,பிரிட்டன்,மேற்கு ஜெர்மனி,அவுஸ்திரேலியா,கனடா உட்பட சுமார் நூறு நாடுகளில் இதன் கிளைகள் இருப்பதாயும் அவற்றோடு தலைமை நிலையம் தொடர்போடிருப்பதாகவும் சொல்கிறார்கள்!

இத்தனை அமைப்புகள்-கட்டுப்பாடுகள்-திட்டங்களோடு இயங்கும் ஒரு போராட்டக் குழுவினர், சிறுபிள்ளைத் தனமாக ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்வார்கள் என்பதை நம்பமுடியுமா?

அவ்வாறு அவர்கள் மோதிக்கொண்டால்,அதனை ஆதரிக்கும் மக்கள்-அவர்களை நம்பியிருக்கும் சமுதாயம் அதனை ஏற்றுக் கொள்ளுமா?

அல்லது அவ்வாறு மக்களால் ஏற்றுக்கொள்ள இயலாத செயலை இது போன்ற விடுதலைக் குழுக்கள் செய்ய இயலுமா?

இவை எதுவுமே சாத்தியமில்லாத போது, ‘வெறும் வாயை மெல்லும்’ சில பத்திரிகைச் செய்திகளை எவ்வாறு நம்புவது?!

என்னவோ எனக்கு நம்பிக்கை இல்லை; போங்கள்!

*******************************************************************************

 

 

 

இலங்கைப் பிரச்னையில் இந்தியாவின் நிலை என்ன?

[ ஜூலை 5,1987ல் எழுதப்பட்டு ஜூலை 10,1987 ‘தமிழ் நேசன்(மலேசியா) இதழில் வெளியான கட்டுரை]

ஈழ அரசியல் கண்ணோட்டம்:-சர்வசித்தன்

ஜனநாயக ஆட்சிக்கு எதிரான ஆயுதப்போரும், மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதமும் ஆபத்தானவையே!

‘இந்து சமுத்திரத்தின் முத்து’ என்று ஒருகாலத்தில் வர்ணிக்கப்பட்ட இலங்கையில்- தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் முத்துமுத்தாகக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்கள்!

அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிக மோசமான ‘கட்டம்’ இப்போது அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆரம்ப காலங்களில் வெறும் அரசியல் கிளர்ச்சிகளாக; ஜனநாயக ரீதியில் அமைந்திருந்த, சிறுபான்மை இன மக்களின் போராட்டம்; இன்று ஆயுதப் புரட்சியாக  அங்கே பரிணமித்துக்கொண்டிருக்கிறது.

விளைவு, அரசியல் மேடைகளில், விவாத அரங்குகளில் சொற்போரில் ஈடுபட்டுக்கொண்டிருந்த; இலங்கையின் அரசியல் வாதிகளுக்குப் பதிலாக, கைகளில் துப்பாக்கிகளையும், நவீன ஆயுதங்களையும் ஏந்திக்கொண்டு… ஒரு புறம் அரசுப் படைகளும், மறுபுறம் தமிழ் இளைஞர்களும் விலைமதிக்க முடியாத மனித உயிர்களோடு ‘விளையாடி’க் கொண்டிருக்கிறார்கள்!

இந்த அவல நாடகத்தின் ஆரம்பம் யாது ? இத்தனை தூரம் இதனை வளரவிட்டவர்கள் யார்? இனிமேல் இதற்கு என்னதான் முடிவு ?

அண்டை நாடான இந்தியாவும், இலங்கைப் பிரச்னையில், தன் தலையை நுழைத்துக்கொண்டு திண்டாடுகிறதே- இதன் காரணம் என்ன ? இந்திய அரசு இலங்கையின் இனப்பிரச்னைக்கு எந்த வகையில் தீர்வினைகாண உதவ முடியும்?

இத்தனை கேள்விகளுக்கும் விடை காண- இலங்கையின் அரசியல் பின்னணியினையும், இந்தியாவுடனான அதன் தொடர்புகளையும் சிறிது தெரிந்துகொள்ளவேண்டும்.

புரிந்துணர்வுக்குப் பஞ்சமா?

இலங்கையில் இன்று ‘தலைவிரித்தாடும்’ இனப் பூசல்களுக்கெல்லாம் மூலகாரணம்; அங்குள்ள இரு பெரும் இனங்களான சிங்கள, தமிழ் இனங்களிடையே முறையான புரிந்துணர்வு இல்லாமையே ஆகும் என்று சொல்பவர்கள் உளர்.

இலங்கையில் உள்ள மொத்தம் ஒன்பது மாகாணப் பிரிவுகளில்- வடக்கு,கிழக்கு ஆகிய இரு மாகாணங்களிலும் வாழும் தமிழ்பேசும் மக்களும், ஏனைய ஏழு மாகாணங்களில் வாழும் சிங்கள மக்களும் ஒருகாலத்தில் இந்தியாவிலிருந்து அங்கு சென்று குடியேறியவர்கள் தாம்!

ஆம். அந்தக் குடியேற்றங்கள் யாவும், சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது என்கிறது இலங்கையின் பூர்வீக வரலாறு.

அங்கு முதலில் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்தார்களா அல்லது சிங்களமொழி பேசுவோர் வாழ்ந்து வந்தார்களா என்னும் சர்ச்சையினை வரலாற்று ஆசிரியர்களிடமே விட்டுவிட்டு, அங்கு சுதந்திரத்தின் பின்னர் நடைபெற்ற சில சம்பவங்கள் பற்றிய விபரங்களை மட்டும் பார்ப்போமாயின்……..

அங்கு படிப்படியாகத் தமிழர்கள் ஒதுக்கப்பட்டு வந்தது தெரியவரும்.

அந்நாட்டின் மொத்த ஜனத் தொகையில் 74 விழுக்காட்டினர் சிங்கள மொழி பேசும் சிங்களப் பெரும்பானமையினர். 2500 வருடங்களுக்கு முன்னர், இந்தியாவின் கிழக்குக் கரை மாநிலமான ஒரிஸ்ஸாவிலிருந்து, தன் தந்தையால் விரட்டப்பட்ட ‘விஜயன்’ என்னும் இளவரசனின் வழித்தோன்றல்களே இந்தச் சிங்களர்கள் என்பது சரித்திரம்!

அதிலும், வெறும் பேச்சு வழக்கிலேயே இருந்துவந்த சிங்கள மொழிக்கு வரிவடிவம் கிடைத்ததே  கி.பி 12 ம் நூற்றாண்டிற்குப் பின்னர்,அந் நாட்டில் சோழர்கள் அதிகம் வலுவுற்றிருந்த காலப்பகுதிகளில் தான் என்று கூறுவோரும் உண்டு.

இத்தனையையும் மீறி, மற்றொரு ஆச்சரியகரமான உண்மையொன்றினையும், மொழியியல் அறிஞரான ‘ஆக்ஸிமொரன்” (Oxymoran) கூறிச்சென்றிருக்கிறார். அவரது கூற்றுப்படி, ஆதிகாலத் திராவிடத்தில் இருந்துதான் தமிழ், சிங்களம் உட்பட மொத்தம் இருபது கிளை மொழிகள் பிரிந்து வந்தன என்றாகிறது.

இதன்படி, தமிழ் அந்நாட்டில் கி.மு 2000 ஆண்டிற்கு முன்பாகவே பேசப்பட்டு வந்திருக்கிறது என்கிறார் மற்றொரு மொழியியல் அறிஞரான எச்.எஸ்.டேவிட்.

எனவே இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனத்தவரான தமிழர்கள், அந்நாட்டின் மக்கட்தொகையில் 19 விழுக்காட்டினராக இருந்தாலும், சிங்களருக்குரிய உரிமை தமிழர்களுக்கும் உண்டு என்பது தெரிகிறது.

எஞ்சியுள்ள ஆறு(6) விழுக்காட்டினர் இஸ்லாமியர்களாயும், ஏனைய இனத்தினர் ஒரு விழுக்காட்டினராயும் உள்ளனர்.

இந்த்த் தமிழ் பேசும் மக்களில் 13 விழுக்காட்டினர்; நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களைத் தங்கள் தாயகமாகக் கொண்டுள்ளனர். மீதமுள்ள 6 விழுக்காட்டினரான மலையக மக்கள், பதொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொழில் நிமித்தம் அன்றைய பிரித்தானிய அரசினால் அந்நாட்டிற்கு அழைத்துவரப்பட்டு, அதன் மத்திய மலைப் பகுதிகளில் குடியமர்த்தப் பட்டவர்களாவர். இவர்களது

பூர்வீகம் முற்றுமுழுதாகத் தென் தமிழ் நாடேயாகும்.

பகையுணர்வின் ஆரம்பம்:-

இலங்கையின் முன்னைய வரலாற்றினைப் புரட்டிப் பார்ப்பவர்கள், அங்கு வாழும் தமிழர்-சிங்களர் இவ்விரு இன்ங்களுக்கும் இடையிலான பகைமை உணர்வினை, கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் மன்னன் எல்லாளனுக்கும்,சிங்கள இளவரசன் துட்ட கெமுனுவுக்கும் இடையே உருவான விரோதத்தையும், அப்போது  அவர்களுக்கிடையில் நடைபெற்ற போரையும் குறிப்பிடமுடியும் என்றாலும்;………. தொடர்ந்து இடம்பெற்றுவந்த அந்நாளைய அரசர்களது வரலாறுகள், பல சந்தர்ப்பங்களில் சிங்களருக்குத் தமிழ் மன்னர்கள் துணைசெய்த விபரங்களையும், அதே போன்று தமிழ் நாட்டில்,  தமிழ் அரசர்களுக்கிடையே நிகழ்ந்த போர்களில் சிங்களர்கள் படைத் தலைவர்களாகப் பணியாற்றியதையும் கூடவே குறிப்பிட்டு, இந்த இரு இனங்களுக்கு இடையிலான நட்புறவினையும் சுட்டிக்காட்ட மறக்கவில்லை!

ஏழாம் நூற்றாண்டில், நரசிம்ம பல்லவன் வாதாபியின் புலிகேசிக்கு எதிராகப் படை நடாத்திய சமயம், இலங்கை இளவரசனான மானவர்மன் படைத்தலைவனாகப் பணியாற்றி அவனோடு நட்புப் பூண்டிருந்த்தாக வரலாறு கூறுகிறது.

எனவே, அந்தக் கால வரலாறுகளை மறந்து விட்டு, இலங்கையில் ஆங்கிலேயர்களது ஆட்சி நிலவிய இறுதிக்காலங்களைப் பற்றிச் சிறிது அலசுவோம்.

பிரித்தாளும் தந்திரத்தில் கைதேர்ந்த ஆங்கிலேயர்கள், இலங்கையின் பெரும்பான்மைச் சமூகமான சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் ஒற்றுமை உருவாகா வண்ணம் செயற்பட்டிருப்பது தெரிகிறது.

இயல்பாகவே சிறிது மேம்பட்ட அறிவும், சுறுசுறுப்பும், வர்த்தக மனப்பாங்கும் கொண்டிருந்த தமிழர்களை, ஆங்கில அரசு தமக்கு நெருக்கமான பதவிகளில் அமர்த்தி- படிப்பறிவில் சற்றுத் தாழ்ந்திருந்த சிங்கள இனத்தின் மனதில் தமிழர்களுக்கு எதிரான பொறாமை உணர்வினை வளர்த்துவிட்டிருக்கிறது!

தமிழர்களது உழைப்பினை உரிய வகையில் பெறுவதற்காக அவர்களுக்குச் சலுகைகளை அளித்த ஆங்கிலேயர்கள் சுதந்திரத்தின் பெயரால் பெரும்பான்மை இனத்தின் கைகளில் அரசியல் அதிகாரத்தினை வழங்கிவிட்டுச் சென்றபோது, சிறுபானமை இனத்தின் அரசியல் பாதுகாப்பினுக்காக திடமான திட்டங்கள் எதனையும் அளித்துவிட்டுச் செல்லாதது-காலப் போக்கில், அந்த இனத்தின் மீது பெரும்பான்மை அரசு பழிவாங்க முயன்ற சமயத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாயிற்று.

இந்திய பிரஜாவுரிமைச் சட்டம், சிங்கள அரசகரும மொழிச்சட்டம் போன்ற புதிய சட்டங்களை, பெரும்பான்மைச் சிங்கள அரசு இயற்றிய போது, சிறுபான்மை இனத்தினரான தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவற்றை எதிர்த்து எழுப்பிய உரிமைக் குரல்கள்; அரசியல் போராட்டங்கள் யாவுமே, அரசியல் அதிகாரத்தினைக் கையில் வைத்திருந்தவர்களது காதில் விழவில்லை.

அவ்வப்போது தேர்தல் சமயங்களில் நேர்ந்த அரசு மாற்றங்கள், ‘சமரச உடன்படிக்கை’கள் என்னும் பெயரில் சில ஒப்பந்தங்களை உருவாக்க முயன்றாலும், எதிர்க் கட்சிகளின் எதிப்புகளுக்கு ஈடுகொடுக்க இயலாமல், எழுதிய ஒப்பந்தங்களைக் கிழித்து வீசியதும் உண்டு.

இவ்வாறு, 1956 ம் வருடம் இலங்கையின் பிரதமராக இருந்த  எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவுக்கும்; தமிழர் தலைவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துக்கும் இடையே ஏற்பட்ட சமாதான ஒப்பந்தத்தைக் கிழித்தெறியக் காரணமாக இருந்தவரே- இன்றைய அதிபரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனாதான் என்றால் நீங்கள் நம்புவீர்களா?

1956 ல்,அரசினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட ‘சிங்களம் மட்டும் அரசகரும மொழி’ என்பதற்கு மாற்றீடாக, தமிழர் பிரதேசங்களான வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு ஓரளவு பிரதேச சுயாட்சியினை வழங்கி, தமிழர்களது உள்ளங்களுக்கு ஒத்தடம் தர முனைந்த அந்தப் ‘பண்டா-செல்வா’ ஒப்பந்தம் முறிவடையக் காரணமாக விளங்கிய ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் தலைமையின் கீழ் சுமார் 200 பௌத்த பிக்குகளும்,15,000 சிங்களரும் அணிவகுத்துச் சென்றதாக அன்றைய ‘டெய்லி நியூஸ்’ செய்தி வெளியிட்டிருந்த்து!

எதிர்க் கட்சியான  யூ.என்.பி யின் செயலாளராக ஜே.ஆர் இருந்த அந்நாட்களில் தான்,சுதந்திர இலங்கையின் முதல் தமிழ்-சிங்கள இனப் பூசல் வெடித்த்து.

இதன் பின்னர்; 1961,1965.1972.1977 என இலங்கையில் இனக் கலவர வருடங்கள் தொடர்ந்தன.

பொதுத் தேர்தல்களை அடுத்து அவ்வப்போது,மத்தியில் ஆட்சிகள் மாறினவாயினும், தமிழர்களது உரிமைகளை வழங்குவதில் எந்த அரசும் மன மாற்றத்தைக் கொண்டிருக்கவில்லை.

பிரிவினை எண்ணம் உருவானது:-

மொழியால்; வேலை வாய்ப்புகளால்; பொருளாதாரத் திட்டங்களால் இத்தனைக்கும் மேலாக உயர் கல்வியில் திட்டமிடப்பட்ட புறக்கணிப்பால், உளம் நொந்த தமிழர்களது  மனங்களில் ; அதற்கு முன்பு சுமார் 25 வருட காலமாகத் தாம் போரடிவந்த வழிமுறைகள் சரியானவை தாமா என்னும் சந்தேகம் எழலாயிற்று.

அதுவரை இணைப்பாட்சி என்னும் ‘பெடரல்’ அமைப்பிலான பிரதேச ஆட்சியினுக்காக அஹிம்சைப் போராட்டங்களை நடாத்திய தமிழ்த் தலைவர்கள், இனிமேலும் இணைப்பாட்சியினையே கேட்டுக் கொண்டிருந்தால் எதுவும் கிட்டாமல் போய்விடும்; எனவே தன்னாட்சிக்குக் குரல் கொடுப்போம் என்று எண்ணியிருக்கவேண்டும்!

இந்த எண்ணத்துக்கு நெய் வார்த்தன, அன்றைய ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளும், அடாவடித்தனங்களும்!

விளைவு 1976 ஆம் வருடம் ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்னும் பெயரில்- தமிழர்களது தன்னாட்சிப் போராட்டம் தமிழ் மக்களின் ஒப்புதலோடு முன்வைக்கப்பட்ட்து.

அதனை அரசியல் ரீதியாக வலியுறுத்தி தமிழர் பகுதிகளில் 77 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுத் தமிழ்த் தலைவர்கள் நாடாளுமன்றம் சென்றார்கள்.

இது நடைபெற்ற வருடம் 1977!

அதே வருட்த்தில்தான், இலங்கை அதுவரை கண்டிராத மிகப் பெரும் இனக் கலவரம், மலையகத் தமிழர்களையும் சேர்த்தே பாதிக்கும் வகையில் இடம்பெற்றது.

இந்த இனக் கலவரம் மிகவும் மோசமானதாக அமைந்து விட்டதற்குப் பல காரணங்கள சொல்லப்பட்டன.

அதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அவ் வருடம் படுதோல்வி கண்டிருந்தது. சுதந்திர இலங்கையில், அவ்வருடத்தில் தான்

தமிழர் ஒருவர் எதிக்கட்சித் தலைவராகும் வாய்ப்பும் கிட்டியிருந்த்து. இது, சிங்களர்களின் மற்றொரு பெரும் கட்சியான ஸ்ரீ.ல.சு.க வுக்குப் பிடிக்கவில்லை. அதே சமயம், மலைப் பிரதேசங்களில்; பெரும்பாலும் தேர்தல் வெற்றி-தோல்விகளை நிர்ணயம் செய்யும் வாய்ப்பு மலையகத் தமிழர்களின் வாக்குகளிலேயே தங்கியிருந்தது.

அந்த வருடம் மலைப் பகுதித் தேர்தல் தொகுதிகள் அனைத்திலும் சுதந்திரக் கட்சி அடைந்த தோல்வி-அதன் தொண்டர்களது கோபத்தினை மலையகத் தமிழர்கள் மீது திரும்பியதும் ஓர் காரணமாகும்!

மற்றொரு காரணம், ஆட்சியில் இருந்த யூ.என்.பி கட்சியின் தலைவரும், அன்றைய பிரதமருமான ஜே.ஆர் ; நாட்டில் ஏற்பட்டிருந்த கொந்தளிப்பான சூழ்நிலையிலும், வானொலி மூலம், ‘தமிழர்கள் போராடுவார்களானால்,நாங்களும் போராடத் தயார் !’ என்று போர்ப்பிரகடனம் செய்த செயல்!

இது ‘எரிகிற தீயில் எண்ணெய் வார்த்த’ கதையாய், அப்பாவித் தமிழர்களை, சிங்களரின் கொலைப் பசிக்கு இரையாக்கிடவே துணைசெய்து விட்டது!

இனக் கலவரம் முடிவுக்கு வந்த போது  ஏற்கனவே நடந்து முடிந்த நிகழ்ச்சிகளால் ஏற்பட்ட பாதிப்புகள் தமிழர் நெஞ்சில் ஆறாத வடுக்களாகப் பதிந்து போக…….

தமிழர்கள் மீது அடக்குமுறையும், அரசியல் பாரபட்சமும் அதிகரித்துக் கொண்டிருக்க…..  அரசின் அசட்டையினை வெறும் அரசியல் போராட்டங்கள் மாற்றிவிடப் போவதில்லை என்னும் சிந்தனை, சில தமிழ் இளைஞர்களது மனங்களில் முளைவிட…..

விரட்டப்படும் பூனை கூடத், தான் தப்புவதற்கு வழி தெரியாவிடில், திரும்பி நின்று தன்னை விரட்டிவரும் நாயோடு மோத எண்ணிச் சீறுமே………. அது போன்று; சிங்கள அரசுச் சிங்கத்தை எதிர்க்க…. குட்டிப் புலிகளின் பிறப்பு தவிர்க்க இயலாததாயிற்று.

*******************************************************************************

இனக்கொலை நாயகர்களின்…./’20-11-2009 ஈழநேசன்

 

 

இனக்கொலை நாயகர்களின், இழுபறிப் போர் !

சர்வசித்தன்”

(நவம்பர் 20,2009 ஈழநேசனில் (www.eelanation.com)வெளியாகியது.)

இருபதாம் நூற்றாண்டின் ‘யூதஇன’ப் படுகொலைகளுக்குப் பின், இந்நூற்றாண்டு மறக்கவோ மன்னிக்கவோ இயலாத ‘சிறுபான்மை இன அழிப்பு’ இவ்வருட(2009) முற்பாதியில் அரங்கேறியிருக்கிறது.

அதனை ‘வெற்றி’கரமாக நடாத்தி முடித்தவர்கள் இலங்கையின் அதிபர் ராஜபக்‌ஷேயும், முப்படைத்தளபதியாக அதிபரின் கட்டளையை ஏற்றுச் செயற்பட்ட சரத் பொன்சேகாவும் !

‘ஈழம்’ என்னும் ஓர் தனித்தமிழ் நாடு உருவாகிவிடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயலாற்றிய ஓர் அண்டை நாடும் இந்த ‘வெற்றி’யில் கணிசமான பங்கினை வகித்திருந்தது.

உலக நாடுகள் பலவற்றின் நவீன ஆயுதங்கள் ; மறைமுகத் தூண்டுதல்கள் ; உற்சாகமூட்டல்கள் ; வேவு வேலைகள்; காலை வாருதல்கள் என்னும் பன்முக ஆற்றல்களது உதவியுடன் நசுக்கப்பட்ட இந்தத் தமிழின உரிமைப்போரின் ‘வெற்றி’க்கு உரித்துடையவர் தாமே என்று மார்தட்டிக் கொள்வதில் எழுந்த போட்டியும், அதிகார மோகமும் இன்று இந்த இரு ‘நாயகர்’களையும் எதிரிகளாக மாற்றிவிட்டிருக்கிறது.

 

‘புலி’களால் தூக்கம் தொலைத்து நடமாடிக்கொண்டிருந்த இந்த இரு சிங்களத் தலைவர்களும், இன்று ஒருவர் மற்றவரால் தூக்கத்தை இழந்து அவதியுற்றுக் கொண்டிருக்கிறார்கள்!

இவர்கள் இருவரும் அடித்துக் கொள்வதால் அந்நாட்டில் வாழும் தமிழர்கள் அடையப்போவதோ அல்லது இழக்கப்போவதோ எதுவுமில்லை. அதுதான் அவர்கள் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார்களே. இனி இழக்க அவர்களிடம் என்ன இருக்கிறது?. என்றாலும், இவர்களது இந்தப் பூசலுக்கான ‘யுத்தத்தில்’ தமிழினம் தொடர்புற்றிருப்பதை மறுப்பதற்கில்லை.

எனவே இந்த இரு ‘இனக்கொலை நாயகர்’களது போராட்டத்தின் பின்னணிபற்றி எழுதுவது, ஒருவகையில் தேவையானதுங்கூட.

அதிபர் பதவி என்னும் அதிகாரம் கிட்டுவதற்கு முன்னர்- ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய புள்ளியாக விளங்கிய, ராஜபக்‌ஷே ஒரு முன்னாள் மனித உரிமைப் போராளி என்றால் நம்புவதற்கு சிரமமாகத் தானிருக்கும். ஆனால் உண்மை.அதுதான்.

அண்மையில் கொழும்பு மேல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் வழி இருபது வருடக் கடூழியச் சிறைத் தண்டனை பெற்ற ஊடகவியலாளரான திஸ்ஸநாயகம் தமது வாக்குமூலமொன்றில்; அப்போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷே மற்றும் அவரது ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தாம் மேற்கொண்டிருந்த ‘காணாமல் போனோர்’ பற்றிய தகவல்களைத் திரட்டும் பணியில் தமக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிவந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.

ஆக ….. இந்த ராஜபக்‌ஷே, ஆரம்பத்தில் ஓர் மனித உரிமைப்போராளியாகத் தன்னை இனங்காட்டி வந்திருக்கிறார். அதன் மூலமாக பொதுஜன ஆதரவினையும் பெற்றிருக்கிறார்.

இது, ஒருவகையில் ‘கலைஞர்’ கருணாநிதி தம்மைத் ‘தமிழினக் காவல’ராக வெளிக்காட்டிக்கொண்டதற்கு ஒப்பானதெனலாம்!

இவர்களைப் போன்ற தலைவர்களது சுய உரு வெளிப்படும் சமயத்தில்; அதனால் பெருமளவிலான அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை இவர்கள் உணர்வதில்லை என்பதுதான் வேதனையானது.

எது எப்படியோ, மனித உரிமைகளை மதித்து அதற்காகப் போராடிய ஓர் முன்னாள் மனித உரிமைப் போராளி, இலங்கையின் அதிபர் என்னும் உயர்ந்த பதவியை எட்டிய பின்னர், மனித உரிமைகளை மிதிக்கும் ஒருவராக மாறிவிட்டிருப்பது ஆச்சரியமான உண்மை!

இவரது மனித உரிமை மீறல்களுக்கு சிங்கள ஊடகவியலாளர்கள் பலரும் பலியாகும் நிலையும் ஏற்பட்டிருந்தது. சிறுபான்மை இனமொன்றின் நியாயமான போராட்டத்தினை நசுக்குவதற்குத் தாம் எடுக்கும் நடவடிக்கைகளைத் தட்டிக்கேட்கும் சுதந்திரத்தினைப் பறிக்கும் இவரது செயல்கள் சிங்களர்கள் மத்தியிலும் இவருக்கு எதிப்பினை உருவாக்கத் தவறவில்லை.

மற்றொருபுறத்தில், தனது குடும்ப அரசியலை வளர்த்தெடுப்பதில் இவர் கடைப்பிடித்த உத்திகளோ நமது(?), ‘கலைஞரை’யும் மிஞ்சுவனவாக இருந்தன!

‘கலைஞரைப் போன்று, இவர் தமது பேரனுக்கும் ‘பதவி’யினைப் பெற்றுத்தரத் தவறிவிட்டாலும் ( ஒருவேளை இவரது பேரப்பிள்ளைகள் வாக்களிக்கும் வயதை எட்டாதது காரணமாயிருக்கலாம்) ஏனையவற்றில் இவர் கலைஞரைவிடவும் வேகமாகவே செயலாற்றினார்!

இப்போது இலங்கையை ஆள்வதும், இனியும் சில தலைமுறைகளுக்கு அந்நாட்டை ஆளப்போவதும் ராஜபக்‌ஷே பரம்பரையினரே என்னும் நிலையை உருவாக்க இவர் அரசியல் சதுரங்கத்தில் நகர்த்த முயன்ற ‘காய்கள்’, காட்டிய சர்வாதிகார அடக்கு முறைகள் என்பன, இவருக்கு எதிர்ப்பினை உருவாக்கும் காரணிகளாக அமைந்தன.

சென்ற மே மாத நடுப் பகுதிவரை- அதாவது ‘புலிகள் இயக்கம் முறியடிக்கப்பட்டுவிட்டது’ என்னும் செய்தி உறுதியாகும்வரை- ‘புலிகளையும் அவர்களை ஆதரிக்கும் தமிழர்களையும் பற்றிச் சிங்கள அரசியல் வாதிகள் உருவாக்கிவைத்த ஒருவித ‘கிலி’யில் வாழ்ந்த சிங்களப் பொதுசனம், அதன் பின்னர் தமது உண்மை நிலையினைச் சிறிதுசிறிதாக உணர ஆரம்பித்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் மஹிந்தவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் இன்று இலங்கை அரசியலில் பரபரப்பினை உருவாக்கியுள்ளது.

தலைநகர் கொழும்பில் இந்த இருவருக்கும் இடையேயுள்ள முறுகல் நிலையினைத் தங்கள் அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்துவதில் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், அதிபர்மீது அதிருப்தி கொண்டுள்ள ஜாதிக விமுக்திப் பெரமுனவும் முனைந்து நிற்கின்றன.

அதிலும் குறிப்பாக அண்மைக்காலங்களில் ராஜபக்‌ஷேயின் அரசியல் அதிரடிகளால் சிதிலமாகிவிட்டிருக்கும் எதிக்கட்சியான ஐக்கியதேசியக்கட்சி சரத் பொன்சேகாவை எதிர்வரும் அதிபர்தேர்தலில் ஆதரிக்க முன்வந்துள்ளது. ஜேவிபியும் சில நிபந்தனைகளுடன் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவில் இருப்பதாகக் கோடிகாட்டுகின்றன!

கொழும்பில் நிலமை இவ்வாறிருக்க,

உலகின் ஒரேயொரு ‘காவல்காரன்’ தானே என்னும் இறுமாப்பில் ஆப்கானிஸ்தான், ஈராக் என்று தன் கைவரிசையைக் காட்டிவந்த அமெரிக்காவுக்கு ……

அதிலும் தொடர்ந்து வட-கொரியா, ஈரான் ஆகிய நாடுகளைப் பணியவைக்கப் பகீரதப்பிரயத்தனம் செய்துவரும்

அமெரிக்காவுக்கு………….,

‘சுண்டைக்காய்’ நாடான இலங்கை…….. சீனாவின் துணையோடும், இந்தியாவின் ஆசியோடும், சற்று அதிகமாகவே ‘வாலாட்டுவது’ பிடிக்கவில்லை.மேற்குலக நாடுகளின் கோரிக்கைகளைத் தட்டிக்கழித்ததோடு அவை இலங்கைமீது கொண்டுவந்த மனித உரிமை மீறல்களுக்கான கண்டனங்களையும் இந்தியா , கியூபா மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளின் உதவியோடு முறியடித்ததையும் அது மறந்துவிடவில்லை.

ஈழத்தமிழர்களைக் கொல்வதற்கு ஆயுதங்களை வழங்கியும் , அவர்களது விடுதலைப் போராளி இயக்கத்தைப் ‘பயங்கரவாதிகள்’ எனப் பட்டியலிட்டு அவர்களைத் தனிமைப்படுத்தவும் உதவிய இந்த ‘உலக மகா சண்டிய’’ருக்கு, ராஜபக்‌ஷே ‘மூக்கில் தும்பைவிட்டு’ ஆட்டுவது பிடிக்குமா ? என்ன ?!

அதற்குக் காலம் பார்த்திருந்த அமெரிக்கா, சரத் பொன்சேகாவின் ‘பச்சை அட்டை’ விவகாரத்தின் மூலம் அவரைத் தனது வழிக்குக் கொண்டுவரத் திட்டம் தீட்டியது.

இதனால், ‘பச்சை அட்டை’க்காக அமெரிக்கா சென்ற சரத், அங்கிருந்து அதிபர் தேர்தலுக்கான ‘பச்சை கொடி’யுடன் நாடுதிரும்பினார்.

உலகின், பல முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவ-சர்வாதிகார நாடுகளுக்கும், முடியாட்சி தேசங்களுக்கும் ஆபத்பாந்தவனாக விளங்குவதில் மகிழ்ச்சியடையும் இந்த ‘மக்களாட்சி’யின் மகிமை போற்றும் நாட்டுக்கு…. இப்போது இலங்கையின் ராணுவத் தலைவர் ஒருவர் கிடைத்திருப்பது இரட்டை மகிழ்ச்சி தரும் விடயமல்லவா?

அமெரிக்காவிலிருந்து இலங்கை திரும்பியதும், தனக்கு வழங்கப்பட்டிருந்த பதவியைத் துறந்த சரத், ராஜபக்‌ஷேயின் அரசுக்கெதிராக பதினாறு அம்சப் பட்டியலொன்றினையும் தயாரித்து அளித்துள்ளார். அதில் முதல் பதின்மூன்றும் முற்றுமுழுதாக அவரது பதவி பற்றியதே. இறுதியாக உள்ள மூன்றிலும், இடம்பெயர்ந்துள்ள தமிழர் நலன்கள் மற்றும், இலங்கையில் வாழும் தமிழர்களது அரசியல் உரிமைகள் விரைவில் தீர்க்கப்படவேண்டும் என்பனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவைகூட, சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர்… அவர் ஈழத்தமிழர்கள் குறித்துக் கொண்டிருந்த எண்ணத்திற்கும், வெளியிட்ட கருத்துகளுக்கும் நேர்மாறானதாக- பதவியை அடைவதற்கு தமிழர்கள் பற்றிப் பேசியே ஆகவேண்டும் என்னும் நிர்ப்பந்தங்காரணமாக இடம்பெற்றிருப்பதாகவே தெரிகிறது.

இதில் உள்ள நேர்மை பற்றி, கடந்த சில வருடங்களாக அவரது ராணுவத் தலைமையின் கீழ் செயலாற்றிய இலங்கை அரசபடைகளின் நடவடிக்கைகளை அனுபவித்த; இப்போது எஞ்சியிருக்கும் (!)ஈழத் தமிழர்கள் நன்கு அறிவார்கள்.

அவர்களைப் பொறுத்த மட்டில்……

“தமிழர்களுக்கு எது செய்யவேண்டும் என்பது எனக்குத் தெரியும்…. அவர்கள் நினைப்பதை எல்லாம் நான் வழங்கிவிட மாட்டேன்” என்று திமிர்த்தனமாகப் பேசிய ராஜபக்‌ஷவும்;

“இலங்கையில் தமிழர்கள் தங்களுக்கென எவ்வித தனியான உரிமைகளையும் பெற்றிருக்கவில்லை. அவர்கள் சிங்களரோடு இணங்கி வாழப்பழகவேண்டும்” என்னும் தொனியில் கருதுத் தெரிவித்த பொன்சேகாவும் ஒரே முகம் கொண்ட இருவர்தாம்.

என்றாலும்,

‘ஆடுகள் மோதிக்கொண்டால்…… ஓநாய்க்குக் கொண்டாட்டம்’ என்னும் பழமொழி ஒன்று இருப்பதால்…..

ஓநாய்கள் மோதிக்கொள்ள ஆரம்பிக்கும் போது; ஒருவேளை ‘ஆடுகள்’ தப்பி விடுதலை அடையக்கூடுமோ ? என்னும் ஒருவித ‘நப்பாசை’ என் மனதில், துளிர்விடத்தான் செய்கிறது!

எதற்கும் பொறுத்திருந்துதான் பார்ப்போமே.

 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Top of Form

Bottom of Form

கருத்துக்கள் (2)

உங்கள் ஆசை நிறைவேறும்

2சனிக்கிழமை, 21 நவம்பர் 2009 12:37

எஸ். இராமச்சந்திரன்

ஐயா, அற்புதமான கட்டுரைகளை எளுதிவரும் உங்களுக்கு நன்றி.
இராச பக்சாவும், பொன்சேகாவும் தமிழினத்தை அழித்த பாவிகள். இனிமேல் தமிழ்ரை காப்பாற்ர நடிப்பார்கள்.தமிழர்களே கவனமாக இருங்கள். மீண்டும் ஏமந்து போகாதீர்கள்.
ஈழனேசனுக்கு ஒரு வேண்டுகோள். சர்வசித்தன் அவர்களது கட்டுரைகளைத் தவறாம்ல் வஅரம் ஒன்றாவ்து வெளியிடுங்கள்.நன்றி (இராமச்சந்திரன்)

மிக நல்ல யதார்த்தம்

1வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009 21:00

மாதவன்

யாதார்த்தம் அதுதான். தமிழினத்தைக் கொல்வதற்கும் . இறந்த தமிழர் தலைகளைக் காட்டி வாக்குகள் எண்ணுவதற்கும் சிங்கள அரசியல் வாதம் துணிந்து நிற்கும். இப்பொழுது வாக்குகளுக்காக நடிப்பு நடக்கிறது. பதவி உறுதியானதும் அல்லது வந்ததும் பேய்களின் தாண்டவம் புதுச்சுடலையில் நடக்கும். நன்றி உங்கள் கட்டுரைக்கு-மாதவன்

வாசகர் கருத்துக்கள், category: “இலங்கை

உங்கள் ஆசை நிறைவேறும் “இனக்கொலை” நாயகர்களின் இழுபறிப் போர்!

மிக நல்ல யதார்த்தம் “இனக்கொலை” நாயகர்களின் இழுபறிப் போர்!

[ நன்றி- ஈழநேசன்]

 

சாகாது தமிழீழ உணர்வின்……/ 11-11-2009 ‘ஈழநேசன்’

சாகாது தமிழீழ உணர்வின் வீச்சு !

கவிதை- ”தமிழினப்பிரியன்”

{ நவம்பர் 11, 2009 ‘ஈழநேசன்’  இணைய இதழில் வெளியானது  }

”வட கிழக்கும், மலை நாடும் தமிழர் பூமி

மறுபவரை மறுத்திடடா தமிழா நீயும்

அட அந்தச் ‘சிங்கத்’தின் வழிவந்தோரால்

அனுபவித்த துயரங்கள் போதும் போதும்!

இடங்கண்டால் சிறு நரியும் சிறுத்தை முன்னால்

இயலுமட்டும் ‘தன் வீரம்’ காட்டித் துள்ளும்”

திடங்கொள்வாய் திட்டங்கள் பலவும் உண்டு

இழந்தவைகள் இனியுன்றன் உடமையாகும்!”

“வாய்ப் பேச்சில் ‘வீரர்’தம் உறவு வேண்டாம்

வகையறிந்து உதவுவோரின் உறவைத் தேடு

‘தாய்த் தமிழர்’ பலகோடி உன்றன் பின்னால்

தணியாத தாகமது ‘ஈழம்’ காணப்

பாய்ந்தோடி வருகின்ற காலம் கூடும்

பகலவனின் முன்னந்தப் பனியைப் போல

தேய்வுற்ற நம்மீழத் தமிழர் துன்பம்

தெறித்து விழும், தெருவெல்லாம் தமிழே ஆளும்!”

”சிறு துரும்பா ?.. பல் குத்த உதவும்; அந்தச்

சிற்றுளியா ..? மலையுடைக்கும் வலிமை சேர்க்கும்

சிறுபான்மை என்பதனால் சிறுமை யில்லை

சிறுத்தையடா நீ; சீறும் இயல்பை நீங்கில்

‘வெறும் பூனை’ தானுமுனை உரசிப் பார்க்கும்

வெறுப்பேற்றி உன்னினத்தில் பிரிவை ஊட்டும்

எறும்பாகக் கூடியுழை; எதற்கும் அஞ்சா

உறுதியுடன் போராடு உரிமை கிட்டும்!”

“ஏகடியம் பேசுபவர் ; எதிரிகாலில்

எண்சாணும் ஓர் சாணாய்க் குறுகி நிற்போர்

போகட்டும் விட்டுவிடு , நீயுன் வீரம்

போகாமல் பார்த்துக்கொள்; எதிர்ப்போர் எண்ணம்,

வேகாது என்றறிந்தால் ,இனத்தின் பேரால்

மீண்டுனது நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்வர்

சாகாது தமிழீழ உணர்வின் வீச்சு

சாதிக்கும் நாள் வரைக்கும் இதுவே மூச்சு! “

========================================

{  நன்றி <www.eelanation.com>  }

கண்ணனைக் கொண்டாடிக்……./16-10-2009 ‘ஈழநேச’னில் வெளியானது

கண்ணனை”க் கொண்டாடிக்  “கம்ஸனை” ஆதரிப்போர் !(16-10-2009 Eelanation ல் வெளியாகியது)

சர்வசித்தன்”

அண்மையில் 13 அக் 2009 அன்று வெளியாகியிருந்த இரண்டு செய்திகள் தாம் எனக்கு ‘இந்தக் கட்டுரை’யினை எழுதத் தூண்டியது.

அதில் ஒன்று, தமிழக  நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த ஆருண் என்பவர் கூறிய தகவல்.

“இந்திய ஊடகங்கள் தெரிவிப்பது போன்று தமிழர்கள் அவல நிலையில் இல்லை” என்றும், வடக்கு இடம்பெயர் முகாம்களை நேரில் பார்வையிட்டதின் மூலமாகத் தாம் இந்த உண்மையைக்(!) கண்டறிந்ததாயும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மற்றையது ஐ.நா சபையின் ஸ்ரீலங்கா தூதுவர் ‘பாலித்த கோஹன்ன’ கூறியதாக வந்துள்ள செய்தி. அதில், வன்னியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் தமிழர்களில் சுமார் 12,500 பேர் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று இனங்காணப்பட்டுள்ளார்கள் எனவும், மேலும் 10,000 பேர்வரை இன்னும் இனங்காணப்படாதிருக்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கும் இவர், இந்தப் புலித் தொடர்பாளர்களனைவரும் அழிக்கப்படவோ அல்லது  அகற்றப்படவோ கூடும் என்றும் கோடிகாட்டியுள்ளார். இருபத்தேழு ஆண்டுகளாக அந்நாட்டை ஆட்டிவைத்த பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்காவண்ணம் இவ்வாறு செயல்படுவது அவசியம் என்றும் கருத்துரைத்திருக்கிறார்.

பாலித்த கோஹன்னவின் கூற்றினைப் படித்தபோது எனக்கு, நான் சிறுவனாக இருந்தபோது படித்த ‘கண்ணன்’ கதைதான் ஞாபகத்துக்கு வந்தது.

‘மகா பாரத’ப் போரில் தர்மத்தின் பக்கம் துணைநின்ற ‘கண்ணன’து  பாலப்பருவத்து விளையாட்டுகளையும், வீரப்பிரதாபங்களையும் கூறும் அந்தக்கால ‘அற்புதக் கதைகள்’ இவை எனலாம்.

இதில், கண்ணன் தன் தாயினுக்கு எட்டாவது பிள்ளை எனவும், அந்த ‘எட்டாவது’ பிள்ளையால் ,தன் உயிருக்கும் அரசுக்கும் ஆபத்து ஏற்படும் என்று உணர்ந்த அதன் மாமனும், தேவகியின் அண்ணனுமான கம்ஸன் ; தன் தங்கையின் குடும்பத்தையே சிறையிலிட்டு அவளுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஒவ்வொன்றையும் கொன்றதாயும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு ஏழு குழந்தைகள் பிறந்ததும் கொல்லப்பட எட்டாவதான ‘கண்ணன்’ சேடிப் பெண் ஒருவரால் காப்பாற்றப்பட்டு அதற்குப்பதிலாக வேறொரு குழந்தை வைக்கப்படுகிறது. ஆனால், இதனை அறியாத ‘கம்ஸனின்’ ஆட்கள் அதனைக் கொன்று நிம்மதியடைகிறார்கள்.

ஆனால்,காலப்போகில் ‘கண்ணன்’ தப்பிவிட்டசெய்தி அறிந்து மீண்டும் ‘மரணபயம்’ தொற்றிக்கொள்ள, அந்நாட்டில்  கண்ணனது வயதுள்ள அத்தனை குழந்தைகளையும் கண்டுபிடித்துக் கொல்லுமாறு உத்தரவு இடப்படுகிறது. என்றாலும் இத்தனையையும் கடந்து, ‘கண்ணன்’ நந்தகோபனது இடத்தில் யசோதையால் வளர்க்கப்பட்டு முடிவில் கம்ஸனைக் கொன்றதாகவும், அவனே பின்னர் கீதையின் நாயகனாக, பாண்டவர்க்கு ‘அம்பின் முனை’ வைக்கும் இடங்கூடத தரமாட்டேன் எனக்கூறிய கௌரவர்களை வீழ்த்தவும் தர்மம் தழைக்கவும் ‘பார்த்த சாரதி’யாய் பணிசெய்ததாயும் மஹாபாரதம் குறிப்பிடுகிறது.

பாலித்த கோஹன்னவின் நிகழ்காலச் செய்திக்கும், கம்ஸனது இதிகாசச் செயல்களுக்கும் அதிகவேறுபாடில்லை என்பதைச் சிந்திக்கும் திறன்படைத்தவர்கள் அறிவார்கள்.

அதே சமயத்தில், அதே தினம் வெளியாகியிருந்த ஆருண் அளித்த தகவல்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

தீபாவளி நெருங்கியுள்ள இந்த நேரத்தில், இந்தியர்கள் யாவரும் ‘கண்ணனை’ப் போற்றி அவன் வழி நடக்க உறுதி பூணும் சமயமல்லவா ?

ஆனால் நடைமுறையோ வேறாகவல்லவோ இருக்கிறது.

ஒரு பக்கத்தில் கண்ணனைப் போற்றுகிறார்கள், மற்றொரு புறம் கம்ஸனுக்கு ஆதரவு தருகிறார்கள்.

வடிவேலு தன் நகைச்சுவையில் குறிப்பிடுவது போன்று இதுவும் ‘கண்ணைக்கட்டுகிற’ சமாச்சாரம் போலும்.

கலைஞரின் மற்றொரு நாடகமா?

இந்தியாவின் தூதுக்குழு என்னும் பேரில், தமிழக முதல்வரின் நெறியாள்கையில் இலங்கை சென்று அங்கு வாடும் தமிழீழ மக்களைப் பார்த்துவிட்டு வரச்சென்றவர்கள் இனி அடுத்து என்னசெய்யப் போகிறார்கள் என்பதுதான் கேள்வி .

சிங்கள அரசின் சீற்றத்துக்கு ஆளாகி, மனிதாபிமானமற்ற வகையில் அடிப்படை வசதிகளைத்தானும் நிறைவேற்ற முயலாத முகாம்கள் என்னும் ‘சிறைக் கூடங்களில்’ வாடும் மக்களைப் பார்த்துவிட்டு வந்ததால் தாம் உண்மையைப் புரிந்து கொண்டதாக அரசுக்குச் சார்பாக; ஆருண் அறிக்கை விடுகிறாரென்றால், இவரது அறிக்கையும், பாலித்தவின் பேச்சும் தற்செயலானதா அல்லது முன்பே திட்டமிட்டவாறு ‘காய்கள்’ நகர்த்தப்படுகின்றனவா என்னும் சந்தேகம் பிறர் உள்ளங்களில் ஏற்படுமாயின், அதில் தப்பேதுமில்லையே!

சென்றவருடப் பிற்பகுதியில்……

வன்னிப் பிரதேசத்தில் போர் தீவிரமடைந்திருந்த சமயத்தில், ‘தமிழினத் தலைவர்’ என்னும் பேரால் இறும்பூதெய்தும் தமிழக முதல்வர்… இலங்கையில் சிங்கள அரசு நிகழ்த்தும் மனிதாபிமானமற்ற போரை நிறுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதுவிடின், தமிழ் நாட்டின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி துறப்பார்கள் என்று ‘பராசக்தி’யாய் முழக்கமிட்டார்.

ஆனால், நடந்தது என்ன?

ஈழத்தில் தமிழர்களது கட்டுப்பாட்டில் இருந்த மாங்குளம், கிளிநொச்சி, பரந்தன், பூநகரி ஆகிய  பகுதிகள்யாவும்,  இந்திய அரசின் ஆதரவோடும், சர்வதேசங்களின் ஆயுதங்களோடும்;  மனித உயிர்களை மதியாத வெறியோடு முன்னேறிய சிங்களப் படைகளிடம் வீழ்ந்து கொண்டிருந்த சமயத்தில்,  தமிழகம் கொந்தளித்தது.

ஆனால் கருணாநிதியோ , தனது பெயரின் முதல் மூன்று எழுத்தில் தன் மூச்சை நிறுத்திச் செயல்பட உறுதி பூண்டார் !

இதனால், பிரணப் முகர்ஜி, மேனன்… போன்றோர் அடித்த ‘அந்தர் பல்டி’ களுக்கெல்லாம் ஆமாம் போட்டார். அவர்கள் கூறிய செயதிகளுக்கெல்லாம் ‘புதிய தொல்காப்பிய விளக்கம்’ போல் புதுமை விளக்கங்களை அளித்துக்கொண்டிருந்தார்.

ஈழத்தமிழர்களது இனமானப் போராட்டத்தின் குரல் வளையைச் சிங்கள ராணுவம் தனது  இரசயனக் குண்டுகளால் நெரித்துக் கொண்டிருந்த  நேரத்தில், மெரீனா கடற்கரையில், உலகமே அதுவரையில் கேட்டிராத மூன்று மணி நேர உண்ணா நிலையினைத் தனது குடும்பத்தொலைக் காட்சிகளின் துணையோடு அரங்கேற்றிக் கொண்டிருந்தார் !

அவர் அதனை நிறைவு செய்து தனது கோபாலபுரம் வீட்டில் ஓய்வெடுக்கச் சென்ற சமயத்தில்…. ஈழத்தின் பல்லாயிரம் உயிர்களுக்கு ஓய்வு அளித்துவிட்டிருந்தது  ‘கம்ஸ வம்ஸ’ப் படை !

இந்தக் கடந்த கால நிகழ்வுகளை மீண்டும்  அசைபோட்டுப் பார்க்கையில்….. இன்று, தமிழக முதல்வர், மத்திய அரசின் ஆசியோடு தமிழீழ மண்ணுக்கு அனுப்பிவைத்த தூதுக் குழு, உண்மையிலேயே ஈழத்தமிழர்களுக்கு உதவுவதற்காகத்தான் சென்றார்களா ?

வட திசை சென்று ‘கனக விசயர்’ தலைமீது கல் ஏற்றிக் கண்ணகிக்குக் கோவில் அமைத்த தமிழ் மன்னன் சேரலாதன் புகழ்பாடி……….  பண்டைத் தமிழர்தம் வீரத்திறன் மெச்சி……… இருபதாம் நூற்றாண்டில் கண்ணகிக்குச் சிலை எடுத்த ‘கலைஞர்’; தமது இன-மான உணர்வுகளுக்கும் ஓய்வு கொடுத்து விட்டு ‘வடதிசை’ நோக்கித் தலைவணங்கும் நிலைக்குத் தம்மைத் தாழ்த்திக்கொள்ளப் போகிறாரா ?

என்னும் ஐயம் தமிழுணர்வாளர்கள் மத்தியில் அரும்பியிருப்பதில் தப்பேதுமில்லை.

‘படிப்பது சிவ புராணம், இடிப்பது சிவன் கோவில்’ என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்,

அதுபோன்று, ‘கண்ணனைக் கொண்டாடும் இந்திய தேசம்,கம்ஸனைஆதரிப்பதென்பது எவ்வாறு சாத்தியம் ?

இதயமுள்ளவர்களால் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றல்லவா இது.#

தமிழரும் இலங்கையரும்/14-10-2009 ஈழநேசன்

தமிழரும் இலங்கையரும் (14-10-2009 ஈழநேசனில் வெளியாகியது)

சர்வசித்தன்”

”பிரபாகரன் என்ற மனிதர் உயிரோடு இருக்கிறார்.அவரால் கட்டியெழுப்பப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் கட்டுக்கோப்புடன் இருக்கிறது. சிங்களப் படைகளின் அராஜகங்களை எதிர்க்கவும், பதிலடி கொடுக்கவும் முடிந்த பலத்துடன் இன்றும் களத்தில் நிற்கிறது ……….” என்னும் நிலை ஈழ மண்ணில் நிலவி வந்தபோது, பதுங்கிக் கிடந்த சிலர்; இப்போது.. இவை எதுவுமே இல்லை ‘ஈழக் கனவு கலைக்கப்பட்டுவிட்டது- இனி இலங்கையர் மட்டுமே எஞ்சியிருப்பார்கள், ‘தமிழர்’கள் அல்ல என்று ராஜபக்‌ஷே அறைகூவல் விடுத்த பின்னர் – துணிந்து தங்கள் புற்றுகளிலிருந்து வெளியே வந்து….  “நாங்கள் தமிழரல்ல; இலங்கையர்கள்” என்று கூறத்தொடங்கியுள்ளார்கள்.

இதற்கு, இவர்கள் கூறும் காரணங்களோ, சிறு குழந்தை கூடக் கைகொட்டிச்சிரிக்கும் வகையில் உள்ளது!

இலங்கையில், அதிலும் தமிழர் பகுதிகளில் ‘தலித்துகள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்; ‘மேல் சாதி’த் தமிழர்கள் மட்டுமே அங்கு அரசியல் ‘பண்ணி’க்கொண்டிருந்தார்கள். ஏனையோரெல்லாம் அவர்களால் அடிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள். இதனையே புலிகள் இயக்கமும் தங்கள் ‘துப்பாக்கி’களின் வலிமையோடு தொடர்ந்து செய்து வந்தார்கள்.

இன்றோ, சிங்கள பௌத்த ‘தேவன்’ ராஜபக்‌ஷே; தமிழ் ”அரக்கனை?” வீழ்த்தி அந்நாட்டில் தர்மம் தலைதூக்குவதற்கு வழிசமைத்துவிட்டார்” என்று ‘பரணி’ பாடிக்கொண்டிருக்கிறது இந்தப் புதுமைப் புன்மைக் கூட்டம்!

இலங்கையின் அரசியல் வரலாற்றில்-தமிழர்கள் எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்பட்டு வந்தார்கள் என்பதனையும்; அதனை எதிர்கொள்ளும் வகையிலும்-தட்டிக் கேட்டிடவும், அந் நாட்டில் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே முயற்சிகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன என்பதையும்…

அவை யாவும் ஆயுதக்கலாச்சாரத்தினை வழிமொழியவில்லை என்னும் உண்மையையும் இவர்கள் சுலபமாக மறந்துவிட்டு-அல்லது மறந்துவிட்டதுபோல் நடித்துத்  தங்கள் பிழைப்புக்காக;  தாம் புதிதாக வரித்துக்கொண்ட சிங்கள் எஜமானர்களுக்காகப் பரிந்துபேச முற்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் கூறுவது போன்று, வர்க்கபேதம்,சாதி பேதம் காரணமாக ஒடுக்கு முறைகளையும் அவமானங்களையும் சம்பந்தப்பட்ட பிரிவினர் எதிர்கொண்டிருந்ததை மறுக்கவில்லை. ஆனால், அவர்களது நியாயமான போராட்டங்களுக்கு, இன்று இவர்களால் குற்றம் சுமத்தப்படும் எல்லா உயர்சாதித் தமிழர்களும் எதிராகச் செயற்பட்டார்கள் என்றோ அவர்களது போராட்டங்களை முற்றாக ஆதரிக்கவில்லை என்றோ கூறிவிடமுடியாது.

இன்று சிங்கள அரசு செய்தது போன்று, ஐந்து மாத இடைவெளியில் ( இது 2009ம் ஆண்டின் ஆரம்பம் முதல் மே வரை) ஏறக்குறைய முப்பதாயிரம் உயிர்களை-அவையாவும் தமிழர்கள் என்னும் ஒரேயொரு காரணத்துக்காக- கொன்றொழித்த கொடூரத்துக்கு சமமாக இந்த ‘சமதைகோரிய’ சக இனத்தினரைப் பழிவாங்கியதாகவும் தகவல்கள் இல்லை.

காலங்காலமாகப் பேணப்பட்டுவந்த ஓர் சமூகவழக்கத்தினை ‘கால ஓட்டத்தி’னோடு சீராக்கும் முயற்சிகள் எல்லாத்தமிழர்களாலும் மேற்கொள்ளப்பட்டுவந்திருக்கிறது. இதனை எவரும் மறுக்கவும் முடியாது.

எனவே இதனை ஒரு காரணமாகக் கொண்டு இன்று தமிழர்களது விடுதலைப் போரினைக் கொச்சைப்படுத்தும் வகையில் இவர்கள் செயலாற்றுவது நியாயமல்ல!

இலங்கை அரசால் அண்மையில் நிகழ்த்தப்பட்டது, சர்வதேசங்களாலும் கண்டிக்கப்பட்ட ,மனிதபிமானமற்ற ‘தமிழினப் படுகொலை’.

ஈழத்தில் வாழுகின்ற தமிழர்கள்; அவர்கள் எந்தச் சாதியை, எந்த வர்க்கத்தை, தரத்தைக் கொண்டிருந்தாலும் அவர்கள் அனைவரும் ‘தமிழர்கள்’ என்பதால்,மனித விழுமியங்கள் அனைத்தையும் மதியாது சிங்கள அரசால் கொன்றொழிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த இனப் படுகொலையினை, தமிழ் தெரிந்திராத; தமிழ்க்கலாச்சாரம் பற்றிக் கேள்வியுற்றுமட்டும் இருக்கிற மேற்குலகமும், மனிதாபிமானிகளும் அங்கு அவதியுறும் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்ததும்-தம்மால் இயன்ற உதவிகளை அளிக்கமுன்வந்ததும்- சக மனிதன் வேதனைப்படும்போது எழுந்தோடிவந்து அரவணைக்கும் ‘மனித மாண்பை’ உலகறியப் புலப்படுத்திய செயலாகும்.

இந் நேரத்தில், தமிழராய்- அதுவும் ‘ஈழத்தமிழன்’ என்னும் காரணத்தால் வெளிநாடுகளில் புகலிட வாய்ப்பினைப்பெற்றிருக்கும் சிலர், சிங்களத்துக்கு ஆதரவாகக் குரல்தரும் ஈனத்தனம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இவர்கள் யாவரும் ஒருமித்த குரலில் கூறுவதெல்லாம், ‘புலிகள் பாஸிஸ்டுகள். அவர்களால் எதிராளிக் குழுக்களைச்சேர்ந்த தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எனவே, இந்தப் புலிகளை அழித்த ராஜபக்‌ஷே தமிழர்களின் ‘ஆபத்பாந்தவன்’ ‘தர்மிஷ்டன்’ என்றெல்லாம் புகழ்பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இதில் வேடிக்கை யாதெனில், இவர்கள் இவ்வாறு ‘ராஜபக்‌ஷே புகழ்’ பாடுவது தமிழால்.!( விதிவிலக்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆங்கிலத்திலும் உண்டு) இதற்கும் ஒருபடி மேலே சென்று,அவர்கள் தங்களை ‘இலங்கைத் தமிழர்” என்றும் சொல்லிக்கொள்வார்கள்.

தமிழின் ‘பெருமை’யும்; ‘இலங்கை’யின் சிறுமையும்

இந்த இலங்கை+தமிழர் என்னும் இன அடையாளந்தான், இவர்களைக் கடந்த இருபத்தைந்து வருடங்களாக இவர்களுக்குப் புகலிட வாய்ப்பினப் பெற்றுத்தந்தது.

தனியாகத் தமிழர்கள் என்னும் அடையாளம் மட்டும் போதுமானதல்ல. காரணம், இந்தியத் தமிழர்களுக்கும், மலேசியத் தமிழர்களுக்கும் வேறு நாடுகளில் வாழும் எந்தத் தமிழருக்கும் இல்லாத சலுகை ‘இலங்கைத் தமிழருக்கு’ வழங்கப்பட்டிருக்கிறது.

அதனைப் பயன் படுத்தி இவர்கள் தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டார்கள்.சுதந்திரமாக ‘வலைப் பூ’க்களை உருவாக்கி தங்கள் எண்ணங்களை எழுத ஆரம்பித்தார்கள்.சிலர் பிறந்த மண்ணில் கிட்டாத சொகுசு வாழ்க்கையையும்,கட்டற்ற கலாச்சாரப் பிறழ்வுகளையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டார்கள்.கூடவே தமது இனத்தைக் காட்டிகொடுக்கவும், எதிரிகளுக்கு ‘சாமரம் வீசவும்’ கற்றுகொண்டார்கள்.

இவர்கள், இத்தனையையும் பெற்றதற்கு , இவர்கள், இலங்கை மண்ணில் தமிழராகப் பிறந்து, சிங்கள அரசின் அடக்கு முறை மற்றும் உயிருக்கான மிரட்டல் ஆகியவற்றுக்கு உள்ளாகியதுதான் முக்கிய காரணம் என்பதை இவர்களே மறுக்கமாட்டார்கள்!

‘இலங்கை+ தமிழர்’ என்று குறிப்பிடுவதன் வழியாகத், தமிழராய்ப் பிறந்திருக்கும் பெருமைக்கும்;’இலங்கை’யின் அடக்கு முறைகளால் உயிர்-உடமை-மான இழப்புகளை எதிர்கொள்ளும் சாத்தியங்கள் அதிகம் என்னும் ‘சிறுமை’க்கும், அதன்வழி புகலிடந்தேடி ‘அகதி’களாய் வாழும் நிலையைப் பெறுவதற்கும் துணைசெய்த ஓர் ‘முரண் பட்ட’ அடையாளத்தை இது சுட்டிநிற்கிறது.

உண்மையில், ‘இலங்கை’ என்னும் முன் ஒட்டு, அந்நாட்டில், கடந்த முப்பது ஆண்டுகளாய் தமிழினம் பயமின்றி வாழ்வதற்கான சூழலை மறுக்கும் ஓர் நாடு எனத் தன்னை இனங்காட்டி நிற்கிறது.

1983 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இனக்கலவரம், இதற்கு வித்திட்டிருந்தாலும், அதனைத் தொடர்ந்து அந்நாட்டில் ‘அன்றாட நிகழ்வுகளாகிப் போன’ இனப் படுகொலைகளும், மனித உரிமை மீறல்களும்- அதற்குப் பதிலடியாக தமிழ் ஆயுதக்குழுக்களின் எதிர்த் தாக்குதல்களும் உட் பூசல்களும் இந்த ‘இலங்கைத் தமிழர்’ விடயத்தில் அவர்களை உலக ‘ஏதிலி’ இனமாக மாற்றி அதற்கு அங்கீகாரத்தையும் அளித்துவிட்டிருந்தது.

இன்று, தாம் ‘இலங்கையர்’ என்னும் அடையாளத்தை மட்டுமே நிலைநிறுத்திக் கொள்ள ஆசைபடுவதாகக் கூறும் இவர்கள் இந்த ‘இலங்கை’யின் பின்னே துருத்தி கொண்டிருக்கும் உட்பொருளைப் புரிந்து கொள்ளாமல் தமிழர் என்னும் இன அடையாளத்தைத் துறக்க முனைவது வியப்பாகவும் வேதனையாகவும் உள்ளது.

இன்று ‘வன்னி’ முட் கம்பி வேலிகளுக்குப் பின்னால்  தங்கள் நல் வாழ்வுக்காக மன்றாடி ஏங்கிக் கொண்டிருக்கும் உயிர்கள் அனைத்தும் ‘இலங்கையர்’ என்பதால் அவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருக்கவில்லை. அவர்கள் எல்லாரும் ‘தமிழர்கள்’ என்பதால் மட்டுமே அவர்களுக்கு இந்தக்கதி ஏற்பட்டிருக்கிறது.அவர்களோடு எந்தவொரு சிங்களரும் அங்கிருப்பதாகத் தகவல் இல்லை.சிங்களர்களெல்லோரும் தெருக்களில் கூடிக் கும்மாளமிட்டதாகத்தான் தொடர்புசாதனங்கள் சில வாரங்களுக்கு முன் செய்தி வெளியிட்டனவேயன்றி அந்த இனத்தின் ஒரு ‘பாதாள உலக தாதா’கூட இந்தத் திறந்த வெளிச் சிறைகளிலே இல்லை!

இலங்கைத் தமிழர்களது முன்னாள் தலைவர்களான, சேர் பொன்னம்பலம் இராமநாதன் தொடங்கி……….. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் வரையிலான மிதவாதத் தலைவர்கள் அனைவரும் அரசியல் ரீதியாகப் போராடியதெல்லாம்; இலங்கையில் வாழும் தமிழர்கள் தங்களது மண்ணில் அந்நாட்டில் வாழும் பெரும் பான்மை இனமான சிங்களருக்கு உள்ள உரிமைகளோடு  வாழவேண்டும் என்பதற்காகத்தான்.

அந்தத் தீவில் இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்னர் காற்றின் வேகத்தால் வழிமாறிவந்த வட இந்தியாவின் ‘அடங்காத’ அரச வம்சத்து வாரிசின் வழிவந்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் முன்னே, அந்நாட்டின் பூர்வ குடிகளெனப் பெயர்பெற்றிருந்த தமிழர்கள் மண்டியிட்டு அடங்கி அடிமைகளாய் மாறிவிடக்கூடாது என்பதற்காகவே இந்தத் தலைவர்கள் அனைவரும் போராடினார்கள்.அதனைத் தமிழினமும் ஆதரித்தே வந்தது.

அவர்களது அரசியல் போராட்டத்தின் அடுத்த கட்டமாகவே ஆயுதப் போராட்டம் தோற்றம் கண்டது.

புலிகளின் போராட்டம்

‘தடியெடுத்தவனெல்லாம் தண்டல் காரர்கள்’ என்ற ஆரம்பக் குழப்பங்கள் நீங்கி, தடியெடுத்த ஒருவனே தலைமையேற்ற வரலாறுதான்; பிரபாகரனது வருகையாக அமைந்தது.

இவ்வாறு குறிப்பிடுவதால், பிரபாகரன் செய்தவை அனைத்தும் சரியானவையே என்பதல்ல. சரியோ, தவறோ அதனைக் காலம் தீர்மானிக்கும். ஆனால், அவரின் பின்னால் நின்ற போராளிகள் யாவரும் தங்கள் சுகவாழ்வுக்காக அல்லது தமது மச்சான்,மாமன்,மருமகன்மார், அவர்களது குடும்பத்தார்,உறவினர்கள் எல்லோரும் பதவிகளையும்,பொருட்களையும் பெற்று உல்லாசமாக ‘உலகவலம்’ வரவேண்டும் என்னும் பேராசையால் உந்தப்பட்டுப் களமாடிப் பலியானார்கள் என்று எவராவது கூறினால் அவர்களை வள்ளுவன் சொன்ன, ‘மக்கட் பதடி’ என்னும் வார்த்தையால்தான் சுட்டவேண்டும்.

இந்தத் தன்னலமற்ற போராளிகளைத் தமிழினமே ஆதரித்து ‘மா வீரன்’ எனப்போற்றியது.

இவையனைத்திற்கும் மேலாக- உலகப் பந்தின் பல நாடுகளிலும் வாழும் பல்லின மக்கள் மத்தியில்; ஈழத்தமிழனின் உரிமை வேட்கையினையும், சிங்கள அடக்குமுறைகு எதிரான உறுதியையும்-சுமார் மூன்று ‘தசாப்த்தங்களா’க இன அழிப்பினின்றும் பாதுகாத்துவந்த திறனையும் இங்கு எவரும் குறைத்து மதிப்பிட்டுவிடவும் முடியாது.

பொதுவாக, ‘விடுதலைப் புலிகள்’ இயக்கம், சக போராளி இயக்கங்களை அழித்தன’ என்னும் குற்றச் சாட்டின் பின்னணியில் இன்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஈழப் போரின் வலிமையினை இது போன்ற நடவடிக்கைகள் நலிவடையச் செய்தன என்றாலும், அவ்வாறு மோதிக்கொண்ட ‘டெலோ, புளொட், இ.பி.ஆர்.எல்.எஃப்’ போன்ற இயக்கங்கள் இந்தியாவிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றுத் ,தமது அதிகாரத்தினை நிலைநாட்டியபின் அதன் செல்லப்பிள்ளையாகச் செயல்படும் எண்ணத்தோடு செயலாற்றின என்னும் தகவலும் உள்ளது.

இந்தச் சகோதர யுத்தத்தின் பின்னணியில் ,’இந்திராவுக்கு’ப் பின் வந்த இந்திய அரசு ஊக்கம் அளித்திருக்கிறது! போதாதென்று, தமிழகத்திலும் கலைஞர் ஒருபக்கமும், எம்.ஜி.ஆர் மற்றொரு பக்கமுமாக நின்று இந்தப் போராளிகளுக்கு மறைமுகமாக ஆதரவு நல்கியிருக்கிறார்கள்.

உலகின் பல போராளி இயக்கங்களிடையே இதுபோன்ற உட்பகைகள், யார் பலவான் என்னும் போட்டி நிலவுவது சாதாரணமானதுதான். அவ்வாறான போட்டிகள் முற்றும் போது, ஆயுதங்களைக் கையில் வைத்திருக்கும் போராளிகள் ஒருவரை மற்றவர் சுட்டுக்கொண்டார்கள். சாதாரண அரசியல் வாதிகளெனில், ஒருவேளை தரக்குறைவாக ஒருவரை மற்றவர் தாக்கிப்பேசுவதோடு நின்றிருப்பார்கள். இங்கே பலப்பரீட்சை ஆயுத தாரிகளிடையே ஏற்பட்டகாரணத்தால், ஆயுதப் பிரயோக உத்தியிலும்,கட்டொழுங்கிலும் பெயர்பெற்ற ‘புலிகள் இயக்கம்’ ஏனைய இயக்கங்களை அடக்கி, ஈழத்தின் உண்மையான போராளிகள் தாமே என்பதை உலகிற்கு நிரூபித்திருந்தது. இதில் புலிகளை மட்டும் குற்றம் கூறுவது நடுநிலையாக அமைந்துவிடாது. ஏனெனில், ஆயுதங்களைக் கையிலேந்தியவர்கள் தம்மைத் தாக்கமுற்படுபவர்களைப் பதிலுக்குத் தாக்குவது என்பது தவிர்க்கமுடியாததே.புலிகளும் இதையேதான் செய்தார்கள்!

“ ஈழத் தமிழனுக்கு உரிமைகள் வேண்டியதில்லை ; அவன் அந்நாட்டிற்கு உரியவனல்ல.எனவே சிங்கள அரசிடம் சில சலுகைகளை மட்டும் பெற்று வாழப்பிறந்தவன். பெரும்பான்மைச் சிங்கள சமூகத்திடம் தமக்குத் தேவையானவற்றை யாசித்துப் பெறுவதற்கன்றி இவனுக்கு வேறெந்தத் தகுதியும் கிடையாது……” என்று கூறுவதும்;

முப்பது ஆண்டுகாலமாக ஓர் கட்டுக்கோப்பான இயக்கத்தினை வழிநடத்தி, சிங்கள அரசின் காட்டுமிராண்டித்தனமான கொலைவெறியினை ஓரளவுக்கேனும் தடுத்து நிறுத்துவதற்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த ஓர் போராளிக்குழுவை……… சுமார் இருபது நாடுகளின் ஆயுத உதவியோடும், நல்லாசியோடும் நசுக்கி அழித்ததைப் பெருமையாகப் பேசும் ஓர் நாட்டின் ‘உண்மைக் குடிமகன்’ என்று மார்தட்டிப் பேசுவதும் ஒன்றுதான்!

தங்களுக்கென்று பாரம்பரிய பிரதேசமும், பண்பாடும், மொழியும் கொண்ட ஓர் மக்கட்கூட்டம், தனிநாடு என்றும் தாயகம் என்றும் சிந்திக்கக்கூடாது என்று எவரும் கூறிவிடமுடியாது.

இதன் அடிப்படையில், தமிழ் மொழிக்காகவும், இனத்துக்காகவும் ஈழத்தின் மூத்த அரசியல் வாதிகள் ஆரம்பத்திலிருந்தே போராடியது குற்றமல்லவெனில். அடுத்தடுது நிகழ்ந்த பேரினவாத அடக்குமுறைகளாலும், வன்கொடுமைகளாலும் பாதிப்புற்றுத் தங்கள் பாதுகாப்புக்கென ஆயுதம் ஏந்திய இந்தப்போராளிகளின் செயல்களும் குற்றமற்றவையே! மற்றவர்கள் ஒருவேளை இதனைக் குற்றம் என்று சொன்னாலும் தமிழ் உணர்வுடையவர்கள் அவ்வாறான ஓர் நிலைப்பாட்டினை ஏற்றுக்கொள்வது கடினம்.

தனிமனித சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் வலியுறுத்தும் சர்வதேசச் சட்டங்கள் எதுவும், அந்தத் தனிமனிதர்கள் கூட்டாக இயங்குவதை; அது தனி இனமாக நாடாக இருப்பதைத் தடைசெய்யமுடியது என்பதே உண்மை.

ஆகவேதான்,

“ சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும்

என் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்

ஓடையிலே என் சாம்பல் கரையும் போது

ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்”

என்னும் பண்டிதர் சச்சிதானந்தனின் கவிதைவரிகளை இத்தனை விரைவில் மறந்து விட்டு, ”நாம் தமிழரல்ல; இலங்கையரே” என்று, முள்ளிவாய்க்கால் சாம்பல்மேட்டின் மேல் நின்று ஆனந்தக்கூத்தாடும் மனவக்கிரம் எந்தத் தமிழனுக்கும் வந்துவிடக்கூடாது என்று விரும்புகிறோம்.

==============================================================================

ஈழம் இந்தியம் சர்வதேசம்/ 26-09-2009 ஈழநேசன் வலை சஞ்சிகை

(26/09/2009 ந் தேதி ‘ஈழநேசன் ‘   வலைப்பக்கத்தில் வெளியாகியது)

ஈழம்இந்தியம்சர்வதேசம்!

சர்வசித்தன்

சுமார் இரண்டு தலைமுறைகளாக நீடித்த உரிமைப் போரொன்று, இந்தியத்தின் துணையோடும் , சர்வதேசத்தின் ஆசியோடும் தற்காலிகமாக அடக்கப்பட்டிருக்கிறது!

இலங்கை வரலாற்றில்- பெரும்பான்மை அரசு தனது அதிகாரத்தாலும், படைபலத்தாலும் புரிந்துவந்த அடக்குமுறைகளுக்கு எதிராக, அங்கு உருவான தமிழர்களது அரசியல் எதிர்ப்புணர்வுகள்; ஜனநாயக வழிகளில் அணுகப்படுவதற்குப் பதிலாக இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்ட காரணத்தால், ஆரம்பத்தில் வெறும் அரசியல் போராட்டங்களாக இருந்துவந்த ஈழத்தமிழர்களது உரிமைக்கான முன்னெடுப்புகள் காலப்போக்கில் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்திருந்தது.

இதற்கு இந்திராகாந்தியின் தலைமையில் இருந்த அன்றைய இந்திய அரசும் ‘பச்சைக் கொடி’காட்டிப் போராளி இயக்கங்களுக்குப் பயிற்சியும் வழங்கியது.

அதேசமயத்தில் இந்தியப் பேரரசின் தென்கோடியில் இருக்கும் தமிழகத்தின் அரசியல் தலைவர்களும், தங்களது அரசியல் போட்டிகள் காரணமாக- ஈழப் போராளிகளிடையே அப்போது நிலவிய வேறுபாடுகளை தமக்குச் சாதகமாக்கி அதில் ‘குளிர்காயத்’ தவறவில்லை. அது இன்றும் தொடர்கிறது என்றாலும் அன்று அந்தத் தலைமைகளது நடவடிக்கைகள் ஈழத்தின் போராட்டக்களத்தினைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை.

ஆனால், இன்று ஈழப்போராட்டம் மூர்க்கமாக நசுக்கப்பட்டு மூன்றுலட்சம் தமிழர்கள், சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக; வன்னிப்பெரு நிலத்தின் திறந்த வெளிச்சிறைகளில் அடைக்கப்பட்டும், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும் உள்ள ‘ராஜபக்‌ஷாசுர’ தாண்டவத்தின் பின்னரும்கூடத் தொடர்ந்துகொண்டிருப்பது வேறு விஷயம்! இதனைப் பிறிதொரு கட்டுரையில் பார்ப்போம்.

ஆனால், எந்த உரிமைகள் தமிழர்களுக்கு மறுக்கப்படுகின்றன என்று; இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து  ‘தந்தை செல்வா’ முதல் ‘பிரபாகரன்’ வரை போராடிவந்தார்களோ—– அந்த உரிமைகளில் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்பதும், மாறாக; மக்கள் ‘மாக்க’ளிலும் கீழாய்ச் சிங்கள அரசால் நடாத்தப்படும் நிலைதான் ஏற்பட்டிருக்கிறது என்பதே உண்மை.

இதனை இந்தியமும், சர்வதேசமும் நன்கு  அறியும்.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் —–

’இந்தியா ஈழத்தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தருவதில் அக்கறை செலுத்துகிறது’ என்றும்;  அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உட்பட மேற்கு நாடுகள் அனைத்தும் இலங்கையின் இனப்பிரச்னையைத் தீர்ப்பதில் நாட்டங் கொண்டுள்ளன என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்தச் சர்வதேசமும், இந்தியாவும் கடந்த இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக அந்நாட்டில் நடைபெற்று வந்த இனஒடுக்கல் பற்றியும் அதற்கு எதிராக ஈழத்தமிழர்கள் நடாத்திய போராட்டங்கள் குறித்தும் எதுவும் அறியாது இருந்தனவா?

அதிலும் குறிப்பாக, இந்தியாவுக்கு— இலங்கையின் இனப் பூசலும், சிங்கள ஆட்சியாளர்களின் அடக்கு முறைகளும் ஆரம்ப காலம் முதலே தெரிந்திருக்கிறது!

1964ல் சிறீமா-சாஸ்திரி ஒப்பந்தம் உருவான சமயத்தில் அது இந்தியவம்சாவழித் ‘தமிழர்கள்’ பற்றியது என்பது புரியாமல் இந்தியா அதனை அணுகியது என்று கூறிவிடமுடியாது. அதிகம் ஏன் ,1961ல் தமிழ் மாவட்டங்களில் ‘சிறீமாவோ’ அரசுக்கெதிரான அஹிம்சைப்போர் ‘தந்தை செல்வா’வால் வழிநடாத்தப் பட்டபோது அது தமிழகத்திலும் உணர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.  அதற்கு முன்பும் ‘நேரு-கொத்தலாவலை’ காலத்திலேயே இலங்கையில் தமிழர்களுக்கு உரிய அரசியல் பாதுகாப்பு அந்நாட்டின் ஆளும் வர்க்கத்தால் வழங்கப்படவில்லை என்பது தெரிந்தே இருக்கிறது.

1983ல் நிகழ்ந்த ‘கறுப்பு யூலை’ ஈழத்தமிழர்களது உயிர்களுக்கும் அந்நாட்டில் பாதுகாப்புக் கிடையாது என்பதை வெளி உலகுக்கு எடுத்துக்காட்டியதாகக் கூறலாமேயன்றி— அதற்கு முன்புவரை அவர்கள் அங்கு பூரணமான உரிமைகளை அனுபவித்து வந்தார்கள் என உலகம் நம்பியதாக பொருள்கொள்ள முடியாது.

இந்த உண்மையைப் புரிந்து கொண்டதால்தான், ’இந்திராவின் இந்தியா’-ஈழத் தமிழர்களை ஆயுத ரீதியில் பலப்படுத்த முன்வந்தது. அதனைச் சர்வதேசமும் ‘பார்வையாளர் நிலையில்’ ஏற்றுக்கொண்டுமிருந்தது!

இதில் வேடிக்கை யாதெனில்,இந்தியா தமிழ்ப் போராளிகளுக்குப் பயிற்சி வழங்கிய போதும், பின்னர் இன்று அதேபோராளிகளின் புதிய தலைமுறையினரோடு சேர்த்து அவர்களனைவரையும் சிங்கள அரசின் கரங்களால் அழிப்பதற்கு  முன்நின்ற போதும் இந்தச் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் ‘பார்வையாளர்களா’கவே செயற்பட்டுவந்திருக்கிறது என்பதுதான்!

இந்தியாவின் அணுகுமுறை

இந்தியாவைப் பொறுத்த மட்டில், 21ம் நூற்றாண்டின் மிகப் பெரிய மனிதப் படுகொலைகள், தனது காலடியில் நிகழ்ந்து கொண்டிருக்கையில், அவை அனைத்தையும் காணாதது போன்று செயல்பட்டது மட்டுமல்லாமல் அதனை நிகழ்த்துவதற்குரிய எல்லாவகையான தொழில் நுட்ப-ஆயுத உதவிகளையும் சிங்கள அரசுக்கு அது வழங்கியிருக்கிறது.

தென் தமிழகத்து மக்கள் தங்கள் உடன் பிறப்புகளையொத்த ஈழத்தவர்கள் கோரமாகக் கொத்துக்கொத்தாகக் கொல்லப்படுவதைப் பொறுக்காது ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டபோதும், உணர்வுக் கொந்தளிப்பால் சில இளைஞர்கள் தீக்குளித்து மாண்டபோதும் தமிழகத் தலைமை ஒப்புக்காக கண்ணீர் விடவும்,(செல்லாத ஊருக்கு) கடிதம் எழுதவும் முன்வந்ததோடு தனது அரசியல் நாடகத்தை முடித்துக் கொண்டது. இது வேதனையானது மட்டுமல்ல  வெட்கக்கேடானதுங்கூட..

இவ்வாறு இந்திய நடுவண் அரசோ, தமிழ் மாநில அரசோ சிறிதுகூட மனச்சாட்சியின்றிச் செயல்பட்டதை ஒவ்வொரு தமிழனும் அறிவான்.உலகும் அறியும்.

பின்னர், மேற்கு நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து , இறுதிப் போரின்போது மனிதப் படுகொலைகளை நிகழ்த்திய ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராகப் பன்னாட்டு அவையில் எழுப்பமுயன்ற ‘மனித உரிமை மீறல்’ குற்றச் சாட்டிலிருந்து ஸ்ரீலங்கா அரசினைப் பாதுகாப்பதற்காக இந்தியா செயற்பட்டதையும், தனது கூட்டாளிகளான வேறு சில வளரும் நாடுகளையும் இந்த அநீதிக்குத் துணைபோக வைத்ததையும் எவரும் மறந்துவிடவில்லை.

இந் நிலையில்தான் இந்தியா ஈழத் தமிழர்களது அரசியல் பிரச்னையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடவுள்ளது என்னும் பேச்சு கிளம்பியிருக்கிறது.

இந்தியா, உண்மையாகவே தமிழர்களின் உணர்வுகளையும் அவர்களது நீண்ட நெடிய போராட்டத்தின் பொருளையும் உணர்ந்து, அதற்கேற்ப ஓர் அரசியல் தீர்வினை அந் நாட்டில் ஏற்படுத்தித்தருமா ? அவ்வாறு அது எண்ணினாலும் அந்நாட்டின் சிங்கள அரசு இந்தியாவின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி செயல்படுமா? என்பது கேள்விக்குரியதே.

உண்மையில், இந்தியா; ஈழத்தமிழர்களது உணர்வுகளையோ அன்றித் தமிழகத்தின் சகோதரத் தமிழர்களது ஆதங்கத்தையோ புரிந்துகொண்டு செயல்படும் என்பது சந்தேகந்தான்!

ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த சமயத்திலும், அதன் பின்னர் இலட்சக்கணக்கான தமிழர்கள் முகாம்கள் என்னும் பெயரில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத ‘மந்தைத் திடல்’களில்    அடைத்து வைக்கப்பட்டு அவர்களது தன்மானத்தையும், அவர்களுக்கான மனித உரிமைகளையும் சிறுமைப்படுத்தும் செயலினைச் சிங்க்ள அரசு  செய்கின்றபோதும் அதனை மாற்றுவதற்கான முயற்சிகளில்  இந்தியா ஈடுபட்டதாகத் தெரியவில்லை. ஸ்ரீலங்கா அரசினால் ‘போர் முடிந்துவிட்டது’ என்று அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தமது பதவிகளையும்-வாரிசுகளின் வசதியான வாழ்க்கையினையும் மட்டுமே பெரிதாக நினைத்து, இனமானத்தையும்  மனிதாபிமானத்தையும் அடகு வைத்துவிட்டு வெறும் வாய்ப் பேச்சில் தேனாய்-பாகாய் கசிந்துருகும் தமிழகத் தலைமையும் அதன் தோழமை நடுவண் அரசும் திடீரென தமது ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு திறந்த மனதுடன் நியாயமான தீர்வொன்றினை ஏற்படுத்தித் தருவார்கள் என்று எவராவது கூறினால் அதனை நம்புவது கடினமாகத்தான்  உள்ளது.

சர்வதேசத்தின் சாதனை

, மற்றொரு பக்கத்தில்; விடுதலைப் புலிகளது ஆயுதப் போராட்டம் எதனால் ஆரம்பிக்கப்பட்டது—– அதன் அரசியல் பின்னணி என்ன  என்பதை ஆராயாமல், ஆளுவோர்-ஆளப்படுவோர் என்னும் இருவித கண்ணோட்டத்தினை மட்டுமே கருத்தில்கொண்டு-  ஆளும் வர்க்கத்துக்கு மற்றொரு ஆளும்  வர்க்கம் உதவுவதே ‘உலக தர்மம்’ என்னும் சித்தாந்தத்தில்  ஊறிப்போய்  கண்முன் நிகழும் அநீதிகளையும் அடக்குமுறைகளையும் கண்டுங்காணாதார் போன்று செயலாற்றுவதில்; சர்வதேசம் வல்லமை மிக்கதாக உருப்பெற்றிருக்கிறது.

அந்த வகையில் இலங்கை அரசின் எல்லாவகையான மனித உரிமை மீறல்களுக்கும் மறைமுகமாகத் துணைசென்றவையும், செல்பவையும் இந்தச் சர்வதேசங்கள்தாம்.

தமது நாட்டின் அரசியல்-பொருளாதார மேம்பாட்டிற்கு எது துணைசெய்வதாக அமைகின்றதோ –அது நியாயமற்றது ஆயினும் அதற்கு ஒத்தூதும் ‘நவீன சித்தாந்தத்திற்கு அடிமைப் பட்டுப்போன இந்தச் சர்வதேசங்கள்தாம் இவ் வருட முற்பாதியில் இலட்சக்கணக்கான மனித உயிர்கள் சிறிய கால இடைவெளியில் கொன்றழிக்கப்பட ஏதுவாக ஸ்ரீலங்காவுக்கு( முன் கூட்டியே) ஆயுதங்களை வழங்கியிருந்தன.

ஒருபுறம் அடக்குமுறை அரசுக்கு ஆயுதங்களையும், போர் நிபுணத்துவத்தையும் “நாடுகளுக்கிடையேயான புரிந்துணர்வு” என்னும் பெயரில் வழங்கிவரும் இந்நாடுகள், இது போன்ற “புரிந்துணர்வின்” பின்னால்  மிதிபடும் மனித உரிமைகளையும், அதனால் ஏற்படும் மனித அவலங்களையும் பற்றிச் சிறிதுகூடச் சிந்திப்பதில்லை.

மாறாகத் தமது செயல்களுக்கு ஆதரவு தேடும் முகமாக, உரிமைகளுக்காகப் போராடும் இயக்கங்களுக்கு ‘பயங்கரவாத’ முத்திரை குத்தி அவற்றைத் தனிமைப்படுத்தும் செயலிலும் முனைப்புக் காட்டுகின்றன.

விடுதலைப் போராட்டம்- பயங்கரவாதம்- தீவிர வாதம்- இவை யாவும் உருவாவதற்கான பின்னணியே, சமூகத்தினதும்-ஆளும் வர்க்கத்தினதும் ‘அடிப்படை உரிமை மீறல்களே’ என்னும் அரிச்சுவடியினைப் புரிந்து கொள்ளாது- அல்லது புரிந்து கொள்ள மறுத்து, மேம்போக்காகத் தமக்குப் பிடிக்காத அல்லது அடங்காத இயக்கங்களுக்கு ‘பயங்கரவாத’ அடையாளம் இடும் அநீதியான அணுகுமுறை, இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவாகிவிட்டிருக்கிறது.

ரஷ்ய-அமெரிக்கப் பனிப்போர் முடிவுற்று, தனக்குச் சவாலாக இருந்த “ரஷ்ய’ கட்டமைப்பு குலைந்து விட, அடுத்தடுத்து சோவியத் சார்பு கம்யூனிஸ நாடுகள் அனைத்தையும் ஏதோவொரு வகையில் சிதறடிப்பதன் மூலமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆற்றலை “நீண்ட கால நோக்கில்” உறுதிப்படுத்திய பின்னர், அமெரிக்காவின்  கவனம் மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தின் மீது படிந்தது.

போரிடும் வலிமை பெற்ற, அதே சமயம் தனது ஆற்றலுக்குச் சவாலாகவிருந்த சோவியத் ஒன்றியத்தையும் அதன் சித்தாந்தத்தில் ஊறிய நாடுகளையும் வலியழித்தாகி விட்டது. அடுத்து உலகப் பொருளாதார வளங்களைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க வல்லரசு தனது கையில் எடுத்த ஆயுதந்தான் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்பது.

அதன் இந்தத் திட்டத்துக்கு வலுசேர்ப்பது போன்று ‘இரட்டைக் கோபுரத் தகர்ப்பும்’ ‘அல்கெய்டா’ நடவடிக்கைகளும் அமைந்து விட்டன.

தொடர்ந்து, அதிபர் ‘புஷ்’ நிகழ்த்திய ; ‘சதாம் ஹுசெய்னின் இரசாயன ஆயுதங்கள்’ குறித்த மிக்குயர் தொழில் நுட்ப உத்திகளுடன் கூடிய ‘நாடகம்’ சதாமுக்கு எதிரான போரிற்கு ஐ.நா வின் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.

உலகில் மற்றொரு ‘சண்டிய’ராக உருவாகிவந்த சதாமை அடக்கவும், போரிடுவதன் காரணத்தால் அவ்வாறு போரிடும் அணிகளது வளங்கள் நலிவடையும் என்னும் கணிப்பினாலும்- அமெரிக்கா-ஈராக் இவை இரண்டினையும் மோதவிடுவதில் (மறைமுகமாக) விருப்புக்கொண்ட வளரும் நாடுகளிற் சிலவும் அதிபர் ‘புஷ்’ஷின் இம் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடாமல் விலகி நின்றன.

இதன் பயனாக விளைந்ததுதான் ‘சதாம் வதம்’!

அதனைத் தொடர்ந்து, வளர்ச்சியடைந்த அமெரிக்க-மேற்குலகிற்கு மாற்றாக, கிழக்கில் ‘சோவிய’த்தின் இடத்தைப் பிடிப்பதில் சீனாவும்-இந்தியாவும் போட்டியிட ஆரம்பித்தன.

இலங்கையின் இனப் பூசலில் இவ்விரு நாடுகளும் மூக்கை நுழைத்துக் கொண்டதும், ஈழத் தமிழரது விடுதலையினை செயலற்றுப் போகச்செய்ததையும், இந்தக் கோணத்தில்தான் ஆராயவேண்டும்

மேற்கு நாடுகள் பலவற்றில் ஸ்ரீலங்காவின் இனப் படுகொலைகளைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களும்- அதனைத் தொடர்ந்து ‘ஸ்ரீலங்காவைக் கண்டித்து மேற்குலகம் .பன்னாட்டுச் சபை வரை இலங்கை அரசின் ‘மனித உரிமை மீறல்களை’ எடுத்துச் சென்றதும், இந்தக் கிழக்கு-மேற்கு அரசியல் பலப் பரீட்சைக்கு களம் அமைத்துத் தந்தன.

இதில் ’பலிக் கடா’ ஆக்கப்பட்டது ஈழத் தமிழினந்தான்!

மனித உரிமை- மக்களாட்சிப் பண்பு- தனிமனித் சுதந்திரம்- பேச்சுரிமை- உயர்ந்த வாழ்க்கைத் தரம் என்று பல வகைகளிலும், கிழக்கை விடவும் பலபடிகள் முன்னேற்றம் பெற்றவையாக மேற்குலகம் உள்ளது!

பணத்துக்காக அல்லது அற்ப சலுகைகளுக்காக தனது உரிமையை விற்பது- பணத்தின் மூலம் பதவிகளை அடைவது-மனித விழுமியங்களைக் மதிக்காதிருப்பது- காலை வாருதல்- மத இன துவேஷம் போன்றவற்றில் இருந்து  இன்னும் விடுபடாத நிலையே கிழக்கில் அதிகம் காணப்படுகிறது.

எனவே ஈழத்தமிழர்களைப் பொறுத்த மட்டில் அவர்களது அடிப்படை உரிமைகளை நியாயமான வகையில் பெற்றுத்தரும் நிலை இந்தியாவை விடவும், மேற்குலகத்திடமே அதிகம் உள்ளது.

இதற்குச் செயலுருக் கொடுக்கும் ஆற்றலும் ,இன்று புலம் பெயர் தமிழர்களிடமே தங்கியிருப்பதை மறுப்பதற்கில்லை.

இக்கட்டுரையை நிறைவு செய்வதற்கு முன், ஈழத்தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான பழ மொழி ஒன்று என் ஞாபகத்துக்கு வருகிறது.

“அழுதாலும், பிள்ளை(யை) அவளே பெறவேண்டும்” என்பது அந்தப் பழமொழி!

ஆகையால், எமது ‘ஈழக் குழந்தை’யை நாம் பெற்றெடுக்க வேண்டுமாயின் நாம் தான் அதனை அழுதழுது பெற்றெடுக்கவேண்டும். பிறர் எமக்காக அதனைப் பெற்றுத் தருவர் என நினைப்பது அறிவுடமையாகாது.

======================================================

ஈழக் கனவு நனவாக…../24-05-2009 ‘கீற்று’ இணைய சஞ்சிகை.

(keetru இணைய தளத்தில் மே 24, 2009ல் வெளியானது)

ஈழக் கனவு, நனவாக——-

சர்வசித்தன்”

சென்ற ‘மே’ மாத ஆரம்பம் முதல், ஈழத்தின் ‘வன்னி’க் களமுனையிலிருந்து கிடைத்துவந்த செய்திகள் யாவும் தமிழுணர்வு கொண்டவர்களுக்கு மகிழ்ச்சிதருவதாய் அமைந்திருக்கவில்லை.

மாறாக மிகுந்த துயரையும், உலக நாடுகளின் செயற்பாடுகள்மீது நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியிருந்தன.

வாய்ப்பும், வசதியும் இருந்தும் தம்மால் முடிந்ததைக்கூடச் செய்யாது அரசியல் லாபத்துக்காக அடங்கிக் கிடந்த தமிழகத்தலைமைமீது சீற்றத்தையும் உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறது.

இவை யாவற்றுக்கும் மேலாக, இந்தியப் பொதுத்தேர்தலின் வாக்கெடுப்பு முடிந்த நிலையில், ஈழத்தின் வன்னிப் பகுதியில் சுமார் ஐந்து சதுர கி.மீ க்குள் முடக்கப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேலான தமிழர்கள்மீது, சிங்கள அரசின் முப்படைகளும் ஆரம்பித்திருந்த மூர்க்கத்தனமான வான் ;தரை மற்றும் கடல் வழித்தாக்குதல்கள் இரண்டு நாட்களுக்குள் இருபதாயிரம் தமிழர்களது உயிர்களைக் குடித்ததும்—–

தொடர்ந்து, இந்திய நடுவண் அரசின் ஆட்சி அதிகாரம் மீண்டும் ‘சோனியா’காங்கிரஸின் கைகளில் கிடைத்துவிடும் என்னும் நிலை உருவான சமயத்தில் விடுதலைப் புலிகளின் தலைவரும் அவரது தளபதிகளும் போர்முனையில் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்களும், ஈழப்போரின் போக்கினைத் தலைகீழாக மாற்றிவிட்டிருக்கிறது.

புலித்தலைவரது இறப்பு பற்றிய செய்திகளில் நிலவும் குளறுபடிகள் இன்னும் தொடர்ந்தவண்ணம் இருப்பினும், அந் நாட்டில் கடந்த கால் நூற்றாண்டாகத் தொடர்ந்துவந்த ஆயுதப் போர் தற்காலிகமாகவேனும் முடிவுக்கு வந்துள்ளதை ஒப்புக் கொண்டேயாகவேண்டும்!

இந் நிலையில் அங்குள்ள தமிழர்களுக்கு எஞ்சியிருப்பது, 1) அடிமைகளாக வாழ்வது  2) அரசியல்ரீதியாக சம உரிமைக்கான தீர்வை எட்ட முயல்வது 3) மீண்டும் பழையபடி சிறுகச் சிறுகத் தமது ஆயுதப்போரினை வலுப்படுத்தி உலகின் கவனத்தை ஈர்ப்பது ஆகிய இம் மூன்றில் ஏதாவதொன்றினைத் தெரிவு செய்வதுவேயாகும்.

அடிமைகளாகத் தொடர்ந்தும் வாழ்வது என்பது தமிழர்களது வரலாற்றில் காணப்படவில்லை என்றாலும் குறிப்பிட்ட காலம் வரை ஆக்கிரமிப்பாளர்களது அடக்குமுறைகளால் நசுக்கப்பட்டு அடங்கிக் கிடக்க நேரிடலாம்.ஆனால், இது நீண்ட காலம் தொடர வாய்ப்பில்லை.

இரண்டாவதாகக் குறிப்பிட்ட ‘அரசியல் ரீதியிலான நல்ல தீர்வு’ என்பது முற்று முழுதாகச் சிங்கள அரசின் கைகளிலும், சர்வதேச நாடுகளின் நீதியான அணுகுமுறைகளிலுமே தங்கியுள்ளது.

இதில், சிங்கள அரசு தானாகவே முன்வந்து தமிழர்களுக்கு உரிய உரிமைகளை அளிக்கும் என்பது,கடந்த அறுபதுஆண்டுகாலச் சுதந்திர இலங்கையின் வரலாற்றில் காணப்படாத ஒன்று! ஏதோ ஒப்புக்காக சில உரிமைகளை வழங்குவதாக ‘ஒப்பந்தங்களை’ உருவக்கிவிட்டுப் பின்னர் அவற்றைக் குப்பைக்கூடைக்குத் தீனியாக்குவதைச் சிங்களத் தலைவர்களுக்குச் சொல்லித்தர வேண்டியதில்லை.

இதற்கு 1956 ஆம் ஆண்டிலிருந்தே சாட்சியங்கள் உண்டு.

பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் எனத்தொடங்கி ‘ராஜீவ்-ஜெயவர்த்தனா’ ஒப்பந்தம் வரை, சிங்கள ஆளும் வர்க்கத்தின் அரசியல் நேர்மை உலகப் பிரசித்தம்!

ஆனால், சிங்கள அரசுக்கு முண்டுகொடுத்து, ஓர் இன விடுதலைப் போரை நசுக்குவதற்குத் துணைபோயிருக்கிறது இந்திய நடுவண் அரசு!

அதேசமயம் சுயநலனுக்காகவும், குடும்ப அரசியலின் காரணமாகவும் இனநலன்களை  விட்டுக்கொடுத்து பதவிகளுக்காகப் பேரம் பேசும் தலைமை, இந்தியாவின் தென் மாநி,லமான தமிழகத்தில் ஆட்சியிலிருந்தது, ஈழத்தமிழன் செய்த தவறல்ல! தெய்வப் புலவன் ஐயன் வள்ளுவன் கூறியது போல் இதனை ” ஊழிற் பெருவலி” என்றுதான் சொல்லவேண்டும்.

இத்தகைய தமிழக அரசோ அல்லது சிங்களத்துக்கு உதவிய நடுவண் அரசோ, ஸ்ரீலங்காவின் தலைமையிடம் ஈழத்தமிழரது அரசியல்-பொருளாதார-சமூக உரிமைகளுக்காக வலியுறுத்தும் என நம்பினால், அதைவிட முட்டாள்த்தனம் வேறில்லை.

உலக நாடுகளோவெனில், அவை தங்கள் மேலாண்மைக்காகவும், பொருளாதார நலன்களின் பொருட்டும் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற வகையில் செயல்படுவதைத் தொழிலாகக் கொண்டவை. வெளியே மனித உரிமைகள், மனிதாபிமானம் என்று பேசினாலும், தங்கள் அரசியல்-பொருளாதார நடைமுறைகளைப் பாதிக்கும் எனில் அவற்றைக்  கைவிடுவதற்குப் பின்னிற்பதில்லை.வன்னிப் பெருநிலத்தில் இறுதிக்கட்டப் போரின் போது இந்நாடுகள் காட்டிய மனிதாபிமானம்(?) உலகறிந்த ஒன்று.

எனவேதான் தங்கள் பொருட்களை வாங்கவும், விற்கவும் அதே சமயம் மலிவான உடலுழைப்பு மற்றும் மூளை உழைப்பினைப் பெறக்கூடிய இந்தியா போன்ற மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாட்டினது விருப்பத்துக்கு எதிராக எதனையும் செய்யாமல் வாளாவிருந்தன.மீறிச் செயல்படின் தங்களது பொருளாதார வளங்கள் வறட்சி கண்டுவிடும் என்பது இவற்றின் எண்ணம்.

இந் நாடுகள் உண்மையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டிருப்பின், ஏற்கனவே 1990 களில் அங்கு நிகழ்ந்த இன நெருக்கடிகளின்போது தலையிட்டு ஏதாவது ஓர் தீர்வினை எட்டியிருக்கலாம்.

இவை வாய்ப்பேச்சில் காட்டும் அக்கறையைச் செயலில் காட்டுவதில்லை.

உலகின் மிகப் பெரும் ஆயுத வியாபாரியான அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் போன்றவை சிறிய இனங்களின் நியாயமான உரிமைகளுக்காகத் தங்கள் வர்த்தக வாய்ப்புகளை விட்டுக்கொடுக்க முன்வருவதில்லை.

அவை சிறிய நாடுகளின் பேரில் காட்டுகின்ற ‘கரிசனம்’, ‘கசாப்புக்கடைக்காரர் ஆடுகளின்பால் காட்டுகிற அன்புக்கும்,அக்கறைக்கும் ஒப்பானதாகும்.

எனவே, இந் நாடுகள் ஈழத்தமிழர்களது உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரும் என்பது நிச்சயமற்ற ஒன்று.

மற்றொருபுறம், சிங்கள அரசுக்கு விசுவாசமாகச் செயற்பட்டுவரும் முன்னாள் போராட்டக் குழுக்கள்- இன நலன்களைக் காட்டிலும் தங்கள் நலன்களிலேயே அதிக சிரத்தையுடன் இயங்குபவர்கள்.  அவர்களுக்கிடையே நிலவும் போட்டி மனப்பான்மையையும், உட்பகையையும் வைத்தே அவர்களைத் தமது கையில் ”பெட்டிப் பாம்புகளாக” ஆட்டிவைக்கும் திறன் சிங்களத்திடம் உள்ளது.

அண்மையில் நடைபெற்ற மாபெரும் இன அழிப்பின்போது வாய்மூடிக் கிடந்த இவர்களிடம் – ஒருவகையில், இன உணர்வு மரத்துப் போய்விட்ட இவர்களிடம், தமிழரது “சுயாட்சி” வேட்கைக்கு ஈடான தீர்வினை சிங்கள அரசிடமிருந்து பெற்றுத்தரும் வல்லமை கிடையாது.

ஒரு வகையில் இவர்கள் அனைவரும் “காயடிக்கப்பட்ட காளைகள்” தாம்.

அப்படியாயின், இனி ஈழத்தமிழனுக்காகப் பரிந்து பேசவும் போராடவும் யாரிருக்கிறார்கள்?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, உலகப் பந்தின் பல பகுதிகளில் நாடற்றவர்களாய் சிதறிக்  கிடந்த யூத மக்களுக்கு ”இஸ்ரேல்” என்றொரு நாட்டினைப் பெற்றுத்தந்ததில் கொடுங்கோலன் ‘ஹிட்லரு’க்குப் பெரும் பங்குண்டு!

அவனது ‘யூத இன அழிப்பின் உச்சந்தான்’ அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வியாபரி நாடுகளைக்கூட அவ்வினத்துக்கு என ஓர் நாட்டினை உருவாக்கித்தரும் எண்ணத்தை விதைத்தது.

ஒரு புறம் ‘ஹிட்ல’ரது யூத இன அழிப்புக்கு எதிராக உலக யூதர்கள் ஒன்றிணைந்தார்கள். குறிப்பாக அமெரிக்காவிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் ‘நாஜி’க்கொடுமைக்கு அஞ்சி அடைக்கலம் புகுந்த யூதர்கள் ;இஸ்ரேல்’ நாட்டினை உருவாக்கியதில் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள் என்பது வரலாறு தரும் படிப்பினை.

அவர்களது போராட்டங்களும் பொருளாதார வளங்களுமே யூத நாட்டினை உலக வரைபடத்தில் இடம்பெறவைத்தது.

இன்று, ஈழத்தில் நடந்து முடிந்த தமிழின அழிப்புக்கும், அன்று ‘ஹிட்லர்’ நிகழ்த்திய யூத அழிப்பிற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

அன்று ‘ஹிட்லருக்குத் துணை நின்றவன் இத்தாலிய ‘முசேலினி’. இன்றும் ‘ராஜபக்‌ஷே’க்குத் துணை நின்றது இந்தியா.( இங்கும் ஒரு இத்தாலிய சம்பந்தம்! என்ன ஒற்றுமை பாருங்கள்?) இந்தியாவோடு சேர்ந்து மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் சீனா, பாகிஸ்தான் போன்றவையும் இந்த ‘மனிதாபிமான’ச் செயலில் சிங்களத்துக்கு உதவின என்பதும், ஏனைய மேற்குலக நாடுகள் சில ‘வாயால் கூச்சலிட்டவாறு’ வேடிக்கை பார்த்தன என்பதுந்தான் இதிலுள்ள சிறிய மாறுதல். அவ்வளவே!

நிலமை இப்படியிருக்க, இன்று சிலர் ‘பிரபாகரன் இன்னும் உயிரோடு இருக்கிறாரா ? இல்லையா ? ‘ என்னும் தேவையற்ற விவாதங்களில் தங்கள் நேரத்தையும், ஆற்றலையும் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள்.அகப் பக்கங்களெங்கும் இந்த விவாதம் நிறைந்து வழிகிறது.

வன்னியில் முட்கம்பி வேலிகளுக்குள்ளே விடிவுக்காக ஏங்கும் அப்பாவித் தமிழர்களுக்கு எவ்வாறு நாம் உதவமுடியும் என்பதில் எமது சிந்தையைச் செலுத்துவோம்.எஞ்சியிருக்கும் ஈழத்தமிழரையாவது காப்பாற்றினால் மட்டுமே தமிழ்மண்ணில் வாழவும் அதனை ஒரு நாள் ஆளவும் எமது சந்ததிக்கு வாய்ப்புக்கிட்டும். அதனையும் அழிய விட்டுவிட்டு வெளிநாட்டில் ”தமிழ் ஈழம்” அமைத்து. அதை எவர்கையில் கொடுப்பதாம்.?

நாளைப் பொழுது நல்ல பொழுதாய் விடியட்டும், நாளை மறு நாள் தானாகவே நல்ல நாளாக விடியும்.

விதியே விதியே தமிழ்ச்சாதியை…(கீற்று- மே 19,2009)

விதியே விதியே தமிழ்ச் சாதியை……...

“சர்வசித்தன்

ஈழப் பிரச்னையில் மேற்குலக நாடுகளின் அக்கறை எந்தளவுக்கு உணர்வுப்பூர்வமானது என்று தெரியவில்லை. ஆயினும் அண்மைக் காலங்களில் அந்நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவையே!. அதிலும் குறிப்பாகச் சென்ற மாத (ஏப்ரல் 2009) இறுதியில் பொதுநலவாய அமைப்பின் (common wealth) செயலாளரும், பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சருமான டேவிட் மில்லிபாண்ட் தமது சகாவான பிரெஞ்சு நாட்டவரான பெர்னாட் கோச்னருடன் இலங்கைத் தலைநகருக்கும், பின்னர் அங்கிருந்து வவுனியாவுக்கும் சென்று வந்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது!
ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு இவர்களோடு இணைந்து சென்றிருக்கவேண்டிய சுவீடிஷ் நாட்டவரான கார்ல் பில்ட்டுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்திருந்ததால் இந்த இருவரும் மட்டுமே அந் நாட்டிற்குச் சென்று திரும்பியிருந்தார்கள். இவர்களது பயணம், தமிழக முதல்வரும்- ‘தமிழினக் காவலருமான’ கலைஞரின் ‘ஆறு மணி நேர உண்ணாவிரத நாடகம் அரங்கேறிச் சரியாக மூன்று நாட்களின் பின்னர் நடைபெற்றிருக்கிறது. அந்த நேரத்திலும் அங்கு வன்னிப் பெரு நிலத்தின் ஓர் மூலையில் முடக்கப் பட்டிருக்கும் பல்லாயிரம் தமிழர்கள் மீது, இலங்கை இராணுவம் தனது மூர்க்கமான தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டிருந்தது!.

திருவாளர் சிதம்பரம் கூறியதுபோல், சிங்களத்தின் ராணுவம் தனது ‘கனரக ஆயுதப் பிரயோகத்தை நிறுத்திவிடவில்லை. இது வெறும் பேச்சளவில் நின்றுவிட, பதிலுக்கு இலங்கையின் ராணுவப் பேச்சாளரும், வெளியுறவுத்துறை அமைச்சர் தமது பங்குக்கு, “நாம் போர் நிறுத்தம் அறிவிக்கவேயில்லை” என்று உரத்துக் கூறிக்கொண்டிருந்தார். இச் சந்தர்ப்பத்தில்தான் மேலே குறிப்பிட்ட ராஜதந்திரிகளின் இலங்கைப் பயணம் நடைபெற்றிருந்தது. தங்கள் பயணத்தினை முடித்துக்கொண்டு திரும்பியதும், திரு மில்லி பாண்ட் 30/04/2009 ல் வெளியிட்டிருந்த அறிக்கையில் தமது பயணத்தின் குறிக்கோள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

ஈழப் பிரச்னையில் சர்வதேசத்தின் கடமைகள் என இரண்டு முக்கிய விடயங்கள் அவரால் இனங் காணப்பட்டிருந்தது. அவற்றுள் ஒன்று, விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிடுவது எனத் தீர்மானித்து கொடூரமான போர் ஒன்றினை நடாத்திக் கொண்டிருக்கும் இலங்கை அரசின் கனரக ஆயுதங்களால் இறக்கும் அல்லது அங்கவீனமுறும் தமிழர்களது நிலை பற்றி ஆராய்வது, மற்றையது ஏற்கனவே ராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் தமிழர்களது நிலையைத் தெரிந்துகொள்வது ஆகியவை இடம் பெற்றிருந்தன.

இவ்விரண்டினையும் தவிர தங்களது பயணத்தின் கடமைகள் என மேலும் மூன்று விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

1) பொதுமக்களின் இழப்பினைக் குறைக்கும் வகையில் இரு பகுதியினருக்கும் இடையே போர் நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்துதல்;
2) ஐரோப்பிய ஒன்றியம்; ஐ.நா இவற்றின் வேண்டுகோளுக்கு ஏற்ப மனிதாபிமான உதவிகளை முடுக்கி விடுதல்,
3) இலங்கையின் இரு பெரும் இனங்களினதும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அங்கு ஒரு நிரந்தர தீர்வினை எட்டுதல்.

இம் மூன்றினோடும், கடந்த ஆறு மாதங்களாக வன்னிப் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் மனித அவலங்களையும், இடப் பெயர்வுகளையும், தமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தொகுத்து அளித்திருந்தார். அதில் “இலங்கை அரசு அந்நாட்டின் வட பகுதியில், சாட்சியங்கள் ஏதுமற்ற போரொன்றினை நடாத்தி வருகிறது எனவும், விடுதலைப் புலிகளது அச்சுறுத்தல்களிலிருந்து தப்பி வந்தாலும் அவ்வாறு வரும் தமிழர்களுக்கு (சிங்கள) அரச படைகளின் கைகளில் சிக்கிச் சீரழியும் நிலைதான் ஏற்படுமோ என்னும் பயமே மேலோங்கி இருக்கிறது” என்பதைச் சுட்டிக்காட்டியிருப்பதோடு சிங்கள அரசு சர்வதேசங்களிடம் வழங்கியிருக்கும் வாக்குறுதிகளையும் காப்பாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

மேற்குறிப்பிட்ட அறிக்கையும், மில்லி பாண்ட்டின் உரையும் வெளியான பின்னர், சிறீ லங்கா அரசின் அதிபர் உட்பட , அந்நாட்டின் ஊடகங்கள் யாவும் மேற்குலகின் இந்தப் புதிய ‘தமிழர் ஆதரவு’ நிலையினைக் காட்டமாகக் கண்டித்து அறிக்கைகளையும், ஆசிரியத் தலையங்கங்களையும் வெளியிடத்தொடங்கின. இவை யாவும் சிங்கள மேலாதிக்கத்தையும், தமிழர் நலன்களில் அக்கறையற்ற நிலையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவனவாக அமைந்திருந்தன.

அன்புடமைத் தத்துவத்தை உலகினுக்குப் போதித்த ‘கௌதம புத்தர’து நாளான விசாக தினத்தன்று (3/5/2009) இலங்கையிலிருந்து வெளியான சிங்களப் பத்திரிக்கைகளில் இடம்பெற்ற செய்திகளும், கருத்துகளும்; சிறுபான்மை இனமான தமிழர்களுக்குப் பரிந்துபேச முற்பட்டிருக்கும் மேற்குலகை வன்மையாகக் கண்டித்திருந்தன. வெளிப் பார்வைக்கு பௌத்த முலாம் பூசப்பட்டு, உள்ளே நச்சு எண்ணங் கொண்ட சிங்கள ஏகாதிபத்திய சிந்தனையை, இன்றைய தமிழின அழிப்பின் இறுதிக் கட்டத்திலும் வெளிப்படுத்தியிருப்பது- இலங்கையின் கடந்தகால வரலாற்றில் தமிழர்களுக்கு எதிராக அவை மேற்கொண்டிருக்கும் இன ஒடுக்கல்களுக்குச் சிகரம் வைத்தாற்போன்று அமைந்திருந்தன.

இது போன்ற தமிழின விரோதக் கருத்துகளை முன்வைக்கும் பணியில், ராஜபக்ஷவின் அரசினால் பழிவாங்கப்பட்ட ‘ த சன்டே லீடரும்’ இணைந்து கொண்டிருக்கிறது. மனித உரிமை, பத்திரிகைச் சுதந்திரம், ஊழல் எதிர்ப்பு என்னும் நியாயமான கொள்கைகளின் அடிப்படையில் தனது கருத்தினை வெளிப்படுத்திவரும் ‘த சன்டே லீட’ரும் தமிழின உரிமைகள் விடயத்தில் மட்டும், அதுவும் ஓர் ‘சிங்கள’த் தலைமையில் செயல்படும் ஏடு என நிரூபித்திருக்கிறது!

இந்தப் பத்திரிகைகள் யாவும் ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடுவது, “மேற்கு நாடுகளின் இன்றைய தலையீடு, விடுதலைப் புலிகளின் தலைவர்களை காப்பாற்றுவதற்காகவே” என்பதாகும். அவர்கள் தமது வாதத்துக்கு ஆதரவாக, கையிலெடுத்திருப்பது இதே மேற்கு நாடுகள் விடுதலைப் புலிகளை ஓர் பயங்கரவாத இயக்கம் என தடைசெய்திருப்பதை! அதாவது, “அந் நாடுகளால் தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பின் தலைமையினைக் காப்பாற்றி மீண்டும் அதே தலைமையுடன், இலங்கை அரசு பேச்சுவார்த்தைகளை நடாத்த வேண்டும் என வற்புறுத்தப் போகின்றன. இது எந்த வகையில் நியாயம்” என்கின்றன சிங்கள இனவாதத்தில் ஊறிக்கிடக்கும் அந்த ஏடுகள்.

ஒரு பேச்சுக்காகவேனும்- உண்மையில் மேற்கு நாடுகள்,பிரபாகரனையும் ஏனைய முக்கிய தலைவர்களையும் காப்பாற்றவே இப்போது இலங்கை விடயத்தில் தங்கள் மூக்கினை நுழைக்கின்றன என்று வைத்துக் கொண்டாலும்- அதில் தப்பேதும் இல்லையே? மேற்குலகும், இந்தியாவும் தங்கள் பிரதேச நலன் மற்றும் அரசியல் காரணங்களுக்காக சில விடுதலை இயக்கங்களைப் பயங்கரவாத முத்திரை குத்தி ஒதுக்கிவைத்திருக்கின்றன.

தென்னாபிரிக்காவின் விடுதலைப் போராளியாக விளங்கிய சமையத்தில், பின்னாளில் அந்நாட்டின் முதல் அதிபராக தெரிவு செய்யப்பட்டவரான, நெல்சன் மண்டெலாவைக் கூடப், பயங்கரவாதி என அறிவித்து அவரை கால் நூற்றாண்டு காலம் சிறையில் அடைத்திருந்ததை உலகம் அத்தனை விரைவில் மறந்துவிடவில்லையே? எனவே ஒரு இயக்கத்தினையோ அதன் தலைமையையோ, குறிப்பிட்ட ஒரு நாடோ அன்றிப் பலவோ ‘பயங்கரவாத முத்திரை’ இடுவது அந்தந்த நாடுகளின் ‘பார்வையினை’ ஒட்டிய விடயமேயன்றி அதுவே நிரந்தரமானது அல்ல. அவ்வாறு ஒரு நாட்டினால் ‘முத்திரை’யிடப்பட்ட ஓர் இயக்கம் மற்றோர் நாட்டினால் ‘விடுதலை இயக்கம்’ என்று அழைக்கப்படுவதும் உண்டு.

காலனிய நாட்களில் பிரிட்டிஷ் அரசால் தீவிரவாதிகளாயும், பயங்கரவாதிகளாயும் இனங்காணப்பட்ட பலர், பின்னாளில் சுதந்திர நாடுகளின் தலைமைப் பதவிகளை அடைந்திருக்கின்றனர். இது வரலாறு!

ஈழப் புலிகள் பயங்கரவாதிகளா, தீவிரவாதிகளா, வன்முறையாளர்களா அல்லது விடுதலைப் போராளிகளா என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அந்நாட்டின் தமிழர்களுக்கே உரியது. ராஜபக்ஷே அரசின் பார்வையில், டக்ளஸ தேவானந்தாவும், கருணாவும், ஆனந்த சங்கரியும் ஒருவேளை தமிழினக் காவலர்களாயும், விடுதலை வீரர்களாயும் தெரியலாம். அதற்காக அவர்களைப் போன்ற ‘அடிமை’களுடன் ஓர் இனத்தின் ‘ உரிமை’ பற்றிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என்னுமாப்போல்- இந்தச் சிங்கள சார்பு ஏடுகள் வாய்கிழி¢யக் (தாள் கிழிய எழுதுவது!) கூச்சலிடுவது வேடிக்கையானது.

இந்த வேடிக்கையின் உச்ச கட்டம் யாதெனில்…… “இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களையும், அடங்காத போர் வெறியினையும் கண்டிக்கும் மேற்குலக ராஜதந்திரிகள் தமது அறிக்கையில்…… விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதை ஒப்புக் கொள்கிறோம்…. ஆனால் நாம் இதில் தலையிடுவதற்கான காரணம், இனப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஒன்றினை எட்டுவதற்காகவே” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதன் மூலம், இலங்கையில் இனப் பிரச்னை என ஒன்று உள்ளது என்பதை இவர்கள் ஒப்புக்கொள்கிறார்களாம்!

அதுவும் கடந்த அரை நூற்றாண்டுகளாக, ஆரம்பத்தில் அரசியல் போராட்டமாகவும் பின்னர் கால் நூற்றாண்டு காலம் ஆயுதப்போராயும் பரிணமித்திருக்கும் ஈழத்தமிழர்களது அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் நிரந்தர தீர்வு காணப்படவேண்டுமாம்! அப்படியாயின் இந்த விடுதலைப் புலிகள் யார்? இவர்கள் இத்தனை காலமும் போராடியது எதற்காக அல்லது யாருக்காக ?

பிரபாகரனும் அவருடன் இணைந்து ஏனைய போராளிகளும் காடுகளில், அடர்ந்த மரங்களின் மத்தியில், பாம்புகளுக்கும் விஷப் பூச்சிகளுக்கும் நடுவே வாழ்ந்து கொண்டு எப்போதும் சாவை எதிர்கொண்டவாறு போராடுகிறார்களே அதற்கான விடையை இந்தச் சர்வதேசங்களும், இன வெறிச் சிங்கள அரசும் எப்போது, எவரிடம் வழங்கப்போகிறார்கள்?

1983 ல் நிகழ்ந்த மிகவும் மோசமான இனக்கலவரங்களைத் தொடர்ந்து, அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் உதவியோடு புதிய தோற்றம் கண்ட ஈழத்தமிழரது ஆயுதப் போராட்டத்தை இன்றுவரை முன்னெடுத்துச் செல்லும் ஒரே இயக்கமான விடுதலைப் புலிகள், பல தடவைகள் இலங்கை அரசுடன் – இதே வெளி நாடுகளின் அனுசரணையுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த வரலாற்றை மேற்குலகும் ஏனைய சம்பந்தப்பட்ட நாடுகளும் மறந்துவிட்டனவா? அல்லது, இன்று புலிகளை அழித்துவிட்டோம் என்று தப்புக் கணக்குப் போட்டு எக்காளமிடும் சிங்கள ஆளும் வர்க்கமும் அதற்கு ஒத்தூதும் பத்திரிகைகளும் மறந்துவிட்டனவா?

துணிந்து நின்று உரிமைகளுக்காக களமாடியவர்களை ‘பயங்கரவாத’ முத்திரைகுத்திச் சிதறடித்து விட்டோம், இனிப் பேச்சுவார்த்தை என்னும் பெயரில் ‘எடுபிடிகளை’ வைத்தே ஈழத்தமிழர்களது விடுதலை வேட்கையினை, வெறும் மந்திரிப் பதவிகளுக்கும், சுகபோக வாழ்க்கைக்கும் பேரம் பேசிவிடலாம் என்னும் நப்பாசையா இந்த ஜனநாயகத்தின் பாதுகாவலர்களுக்கு? எதனைச் சாதிப்பதற்காக இவர்கள் இத்தனை தூரம் நாடகமாடுகிறார்கள் ?

ஒரு புறத்தில் மேற்குலகின் ராஜதந்திரிகள், மறு புறம் இலங்கைத் தலைமயும் அதற்கு ஒத்தூதும் பத்திரிகைகளும்……. இவர்களுக்கு ஆதரவாக இந்தியாவும், இந்திய அரசுக்கு முட்டுக்கொடுக்கும் தமிழகத் தலைமையும்…………!

பாரதி வேதனையுற்றுச் சபித்துவிட்டுச் சென்றது போன்று… “விதியே விதியே தமிழ்ச் சாதியை என் செய நினைத்தாய் எனக்குரையயோ ?” என்று நாமும் சேர்ந்து குமுறுவதைத் தவிர வேறு வழியே இல்லையா!

உரிமப் போருக்குப் ‘பயங்கரவாதம்’ என்று பேர் சூட்டிவிட்டு, பயங்கரவாத அரசுக்கு எல்லா உதவிகளையும் செய்துகொண்டு- இன்று ‘விழுப்புண்’ பட்டு வீழ்ந்து கிடக்கும் தமிழினத்தைச் சுற்றி நின்று ஒப்பாரிவைக்கும் மேற்குலகமும், வேடிக்கை பார்க்கும் இந்தியாவும், கும்மாளமிடும் சிங்களமும் அடுத்து என்ன செய்யத் திட்டமிடுகின்றன என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

இலங்கை இந்திய அமைதி ஒப்பந்தம்…./17-08-1987 தமிழ்நேசன்-மலேசியா

ஈழ அரசியல் கண்ணோட்டம்:-

( மலேசியாவின் “தமிழ் நேசன்” நாளிதழில், ஆகஸ்ட் 17,1987 அன்று வெளியானது)

இலங்கை இந்திய அமைதி ஒப்பந்தம் இந்திய அரசுக்கு வெற்றியே ! ஆனால், ஈழத் தமிழருக்கு ?

சர்வசித்தன்

இன்றிலிருந்து சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர், 29-07-1987 புதன் கிழமை……

ஓர் அதிசயம் நிகழ்ந்தது!

ஆம், இலங்கையின் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன்; ஈழத் தமிழர்களது முப்பதாண்டுகளுக்கும் மேலான அரசியல் கிளர்ச்சிகளை முடிவுக்குக் கொண்டுவரும் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்!

ஒரு வகையில் இது போன்றதோர் ஒப்பந்தத்தில் அவர் (ஜே.ஆர்) கையெழுத்திட நேர்ந்ததற்கு இந்திய அரசே காரணம் என்றும் சொல்லலாம்.

ஒப்பந்தம் கைச்சாத்தான மறு விநாடியே தென்னிலங்கையின் பெரும்பான்மை இனத் தலைவர்கள், இலங்கையின் ஒரு பகுதியை ஈழத்தமிழர்களிடம் விட்டுக் கொடுக்கும் செயலை அதிபர் புரிந்துவிட்டார் என்று கூக்குரலிட ஆரம்பித்தார்கள். அதே சமயம், தென் தமிழ் நாட்டில் தங்கியிருக்கும் மிதவாதத் தலைவர்களும் ,போர்க்களத்தில் கால் பதியாத சில தீவிரவாத அணிகளும் “,இந்த ஒப்பந்தம் தமிழர்களது அபிலாசைகளைப் பூரணமாக நிறைவு செய்யவில்லை என்றாலும், இந்திய அரசு இதனை முன்னின்று செய்வதால் நாம் ஒப்புக்கொள்கிறோம்” எனக் கூறித் தமது நன்றியை இந்திய அரசுக்கு வெளிப்படுத்தியதன் மூலம் திருப்தி அடைந்தன.

இவர்களிடையே, உணர்ச்சிக் கவிஞர் காசி.ஆனந்தன், “ சிங்கள அரசு அரசியல் நாணயம் இல்லாத பரம்பரை. அதனோடு இலங்கையின் இனப் பிரச்னையைத் தீர்க்கும் சமாதான உடன்படிக்கையினை ஏற்படுத்திக்கொள்வது எத்தனை தூரம் நடைமுறைச் சாத்தியமாகப் போகிறதோ தெரியவில்லை!” எனத் தன் அவ நம்பிக்கையினை வெளியிட்டிருக்கிறார்.

‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை

ஆள நினைப் பதில் என்ன குறை ?’  என்று, தமிழினம் மீண்டும் ஒரு தடவை தலை நிமிர்ந்து தனக்கென உரிய மண்ணைத்  தானே ஆள வேண்டும்’ எனக் கனவு கண்டவர் இந்தக் காசி.ஆனந்தன். ஏற்கனவே சிங்கள அரசினால் பல தடவைகள் கைது செய்யப்பட்டு சிறையிலிடப்பட்டவர். இலங்கையின் அரசியல் வரலாற்றில் எழுதப்பட்ட ஒப்பந்தங்களின் எண்ணிக்கையும், பின்னர் கிழித்து வீசப்பட்டவற்றின் எண்ணிக்கையும் இவருக்கு அத்துப்படி! அவர்தாம் தமது மன ஓட்டத்தை அவ்வாறு வெளியிட்டிருந்தார்.

மற்றொரு புறம்-யாழ்ப்பாண மக்களை சிங்கள ராணுவத்தின் பிடியிலிருந்து காப்பாற்றி வந்த விடுதலைப் புலிகள் இயக்கம், இவ் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளத் தயங்கியது. இந்தத் தயக்கத்தின் காரணமாக அது அந்த ஒப்பந்த நகலில் குறிப்பிடப்பட்டிருந்தவாறு ஆயுதங்களை ஒப்படைக்கும் திட்டத்தையும் மனநிறைவுடன் செயல் படுத்த விரும்பவில்லை.

இந்தியாவில் வெற்றி விழா-

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அவர் தலைமையில் அவரது சொந்த முயற்சியின் பேரில் உள் நாட்டில் சில சமாதான உடன்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன.

பஞ்சாப், அஸ்ஸாம்,திரிபுரா மாநிலங்களில் எரிந்து கொண்டிருந்த வன்செயல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர இது போன்ற உடன்பாடுகள் உதவியிருப்பினும், இவை யாவும் முற்று முழுதான வெற்றியை அளித்திருப்பதாகச் சொல்ல முடியாது. இதற்கு, இன்றுவரை பஞ்சாபில் அதிகரித்துவரும் படுகொலைச் சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

எனினும், இந்தியாவின் அண்டை நாடொன்றோடு, அந் நாட்டின் இனப் பிரச்னை தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றில், இந்தியா கையெழுத்திடுவது இதுவே முதல் தடவையாகும்.

அதுவும்,” பாண்டவர்களுக்கு ஒரு குண்டூசித் தலையளவு இடங்கூடத் தரமாட்டேன் என்று சொன்ன அரவக் கொடியோன் போன்று- தமிழர்கள், இலங்கையில் அவர்களுக்கென்று சொந்த மண்ணைப் பெற்றிருக்கவில்லை ; அதனை நான் ஒரு போதும் அங்கீகரிக்கப்போவதும் இல்லை’ என்று சூள் கொட்டிய இலங்கையின் அதிபரோடு, சமரச உடன்பாடொன்றினை ஏற்படுத்திக் கொண்டதில் ராஜீவ் காந்தி பெற்ற வெற்றி மிகப் பெரியதுதான். சரித்திர முக்யத்துவம் வாய்ந்ததுதான்!

இதனால், பாரத நாடு இந்த உடன்பாட்டின் வெற்றியை பெரும் விழாவாகவே கொண்டாடியது. தமிழகம், இதனை மிகமிக ஆடம்பரமாகத் “தமிழ் ஈழம்” பெற்றுவிட்ட விழாவைப் போலக் கொண்டாடியது!

பிரதமர் ராஜீவ் காந்தியும், முதல்வர் எம்.ஜி.ஆரும் ஒரே மேடையில், லட்சக்கணக்கான பொதுமக்கள் முன்னே தோன்றி, கையெழுத்தான உடன்பாட்டின் வெற்றியினை; தமிழர்களது விடிவுகாலத்தின் ஆரம்பம் என்றார்கள்.

இரு நாடுகளுக்கும் இடையே உருவான ஒப்பந்தத்தின் முழு விபரங்களும் யாவை? அதில் கூறப்பட்டிருப்பவை யாவுமே இலங்கைத் தமிழர்களது நாற்பதாண்டுகால கோரிக்கைகளை எந்தளவுக்கு நிறைவு செய்கிறது? அவை சட்டமாக்கப் பட்டு நிறைவேற்றப் படும்போது எத்தகைய பிரச்னைகள் எழ வாய்ப்புண்டு ? என்பன குறித்து சிரத்தை எடுத்துக் கொள்ளாமல், ஏதோ சமாதானம் என்னும் பெயரால் இரு நாட்டுத் தலைவர்களும் ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுவிட்டதே பெருவிழாவாகக் கொண்டாடுவதற்கு ஏற்ற விடயம் என்னுமாப்போல் நடந்து கொண்டது-குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே ‘பிறந்த நாள்’ கொண்டாடியதைப் போன்ற ஒன்றே. ஆயினும், எதற்கும் அசையாத இலங்கையின் அதிபரை; ராஜீவ் காந்தியின் மன உறுதி இந்த அளவுக்காவது மனம் மாறச் செய்ததை பாராட்டிவைக்கலாம்!

இந்த வகையில் இவ்வொப்பந்தம் இந்திய அரசின் ராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றியாகவும் கொள்ளலாம்.

இந்தியத் தலைமையின் வெற்றி;

சமரச உடன்பாட்டின் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு கிட்டப்போவது என்ன? என்பதை ஆராயும் முன்பாக இதன் மூலம் இந்தியாவுக்கு கிட்டியது யாது என்று சிறிது சிந்தித்துப் பார்ப்போம்.

இவ்வொப்பந்தம் இந்திய அரசின் ராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றி என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். இதில் முக்கியமான விடயம்; அதற்கு முந்திய நாள் வரை; ’இந்தியாதான் இலங்கையின் முதல் எதிரி’ என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டிவந்த இலங்கை அரசு, ஒப்பந்தம் கையெழுத்தானதும், இலங்கையின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல தெற்காசியப் பிராந்தியத்தில் நிரந்தர அமைதி ஏற்படவும் இந்தியாவே மூலகாரணமாக விளங்குகிறது. அதன் தலைமைத்துவத்திலும்-நேர்மையிலும், சமாதானத்தின் மீது அது கொண்டுள்ள உறுதிப்பாட்டிலும் எமக்குப் பூரண நம்பிகையுண்டு; என்னுமாப்போல் பேசமுற்பட்டதைக் குறிப்பிடலாம்.

மேற்கு நாடுகளான, அமெரிக்கா; பிரிட்டன் மற்றும் இஸ்ரேலிய கூலிப் படைகளின் உதவியோடு, தமிழர்களை அடக்கிவிட நினைத்த இலங்கை அரசு, திடீரெனத் தனது ஆபத்பாந்தவன் இந்தியாவே எனக் கூறிக்கொண்டு அதன் காலை…… மன்னிக்கவும் ..கையைக் குலுக்கிக் கொண்டது இந்திய ராஜ தந்திரத்துக்குக் கிடைத்த வெற்றியல்லாமல் வேறென்னவாம்?

எந்த வல்லரசுகளின் தலையீடும் இல்லாமலேயே நமது அண்டை நாட்டுப் பிரச்னைகளை நம்மால் தீர்த்துக் கொள்ள முடியும் என்பதில் இந்தியாவுக்கிருந்த நம்பிக்கை இந்த ஒப்பந்தம் மூலமாக நிரூபணமாகி இருப்பது மற்றொரு குறிப்பிடத்தகுந்த விடயமாகும்!

இதனைப் பிரதமர் ராஜீவ்காந்தி, அடுத்த வாரம் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் கூட்டத்தில் குறிப்பிட்டுப் பேசியுமிருக்கிறார்.

இவை மட்டுமல்லாமல் இந்தியாவின் ஆலோசனையின்றி வேறெந்தவொரு நாட்டுடனும் இலங்கை ராணுவரீதியான தொடர்புகளைக் கொண்டிருக்காது என்பதும்; அதிலும் குறிப்பாக, இலங்கையின் துறைமுகங்களையோ விமானதளங்களையோ வேறொரு நாடு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்பதும் இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் வரையறை செய்யப்பட்டிருந்தன. எனவேதான்,  எதிர்பார்த்த திட்டங்கள் இதில் இல்லாமல் போய்விட்டாலும் வட்டார அமைதிக்கு மட்டும் இது பேருதவி புரிவதை மனந்திறந்து ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.

சிங்கள மக்களின் ஆவேசம்;

அது சரி, இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தை இலங்கையின் பெரும்பான்மைச் சமூகம் இத்தனை மூர்க்கமாக எதிர்ப்பதன் காரணம் யாது?

பொதுவாகச் சிங்கள மக்கள் தமிழர்களை எதிர்த்ததாக வரலாறு கிடையாது. அவ்வாறு ஏற்பட்டிருப்பின், அவை அரசியல்வாதிகளின் தூண்டுதல்களின் பேரிலேயே மக்கள் ஒருவரோடொருவர் மோதிக்கொள்கிறார்கள் என்பதை வரலாறு தெரிந்தவர்கள் ஒப்புக்கொள்வர்.

முப்பது வருடங்களுக்குமுன்னர் பண்டா-செல்வா ஒப்பந்தம் ஏற்பட்டபோது , அன்றைய பிரதமர் பண்டாரநாயகா இலங்கையின் பெரும்பான்மை இனத்தை தமிழர்களிடம் அடகுவைத்துவிட்டார் என்று கூச்சலிட்டார் அன்று எதிர்க் கட்சியிலிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா. இன்று ஜே.ஆர் தமிழர் நலன்களில் ஓரளவு விட்டுக்கொடுத்து இறங்கி வரும்போது, எதிர்க் கட்சியினரான சிங்கள அரசியல் வாதிகள்; ஜே.ஆர் சிங்களரை விற்றுவிட்டதாக கூப்பாடு போடுகிறார்கள்.

இத்தகைய எதிர்ப்புகள், கிளர்ச்சிகள் இல்லாவிடின் தாமும், தமது கட்சியும் பிழைக்கமுடியாது என்னும் நினைவில், சம்பந்தப்பட்ட தலைவர்கள் இவ்வாறு நடந்துகொள்வது இருபெரும் சமூகங்களையும் மீண்டும் மீண்டும் எதிரிகளாக மாற்றிவிடுகிறது. இதில், சில பௌத்த சமாஜங்களும் துணைநிற்பது வேதனைக்குரியது!

‘இவர்’ அளித்தால் ‘அவர்’ தட்டிப்பறிக்க நினைப்பதும், ‘அவர்’ அளிக்க முயன்றால் ‘இவர்’ தட்டிப்பறிப்பதும் இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் சதாரணமாக இடம்பெறும் சம்பவங்களே! ஆகையால்தான்……..

’அவர்’ தருவார், ‘இவர்’ தருவார் என்றெல்லாம் எதிர்பார்த்திருந்து ஏமாற்றம் அடைவதே வரலாறாக அமைந்து விடாமல், எமது உரிமைகளை நாமே எடுத்துக்கொள்வோம்; அதுவே முறையானதும் என்று சிந்தித்த தமிழர்கள், தனி நாட்டுக்கான போராட்டத்தை ஆரம்பித்தார்கள் என்பதே பொருந்தும்!

ஆனால், இந்தத் தடவை, ஜே.ஆர் சம்மதமளித்த திட்டத்துக்கு அவரது ஆட்சியின் உள்ளேயே சிலர் தீவிரமாக எதிர்க்க முனைந்தது சற்று வித்தியாசமானதுதான்.

பிரதமர் பிரேமதாச இந்த எதிர்ப்பாளர் அணியில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இராணுவ அமைச்சர் அத்துலத்முதலியும் மதில் மேல் பூனையாக இருக்கிறார்! இந்த உட்கட்சிப் பூசலை சாதகமாக்கிக்கொண்டு, எதிக்கட்சியினர் நாட்டில் சிங்கள வன்முறைக்குத் தூபமிட்டுக்  கொண்டிருக்கிறார்கள்:

‘இலங்கையின் வட பகுதி அமைதியாகி விட்டது, இலங்கையின் நிலைத்தன்மைக்கு இப்போ மிரட்டலாக இருப்பது சிங்கள பயங்கரவாதமே’ என்று அதிபர் ஜே.ஆர் திருவாய் மலர்ந்தருளும் வகையில் தென்னிலங்கையில் இந்த உடன்பாட்டுக்கு எதிர்ப்பு வலுவாகியிருக்கிறது.

தமிழர்களின் குறைபாடு;

பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு கண்டு- இலங்கையை சுபீட்சப் பாதையில் வழிநடத்தும் பொறுப்பு இலங்கையின் பெரும்பான்மைச் சிங்கள அரசின் கைகளில் இத்தனை காலமும் இருக்கையில்- அதற்கு ஓர் சுமுகமான தீர்வினைக் காண முயற்சி செய்யாமல், எஸ்.எல்.எவ்ப்.பி அரசு (S.L.F.P) தர முனைவதை யு.என்.பி (U.N.P) தடுப்பதும்; யு.என்.பி செய்ய நினைப்பதை எஸ்.எல்.எவ்ப்.பி தடுக்க முனைவதும் என- ஈழத்தமிழர்களை என்றும்  இரண்டாந்தரக் குடிமக்களாக, தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் இனமாக மாற்றிவிட்ட பழைய வரலாற்றை இன்று மீண்டும் புரட்டிப்பார்க்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள்! அவ்வாறு பார்க்கையில் அவர்களுக்கு எஞ்சியது ஏமாற்றமே.

ஆம், ”தமிழ் ஈழம்” என்னும் தனி நாட்டுக்காக ஆயுதம் ஏந்தியவர்கள்- அவ்வாறு ஓர் தனி நாட்டினைப் பெறுவதன் மூலமே, தமிழர்களது உரிமைகளைப் பாதுகாத்திட முடியும் என்னும் அசையாத நம்பிக்கையோடு, பல உயிர்களைத் தியாகம் செய்த தமிழர்கள்———

‘தமிழர்கள் அனைவரையுமே அழித்தொழித்து விட்டே மறு காரியம் பார்ப்பதாகத் தோள்தட்டி வீரம் பேசிய ராணுவத்தின் எரி குண்டுகளுக்கு தங்கள் உயிர்களை மட்டுமல்ல , உடமைகளையும்  , ஏன் சில தமிழச்சிகளின் கற்புகளையும் பறிகொடுத்த தமிழர்கள்———-

தங்கள் இழப்புகளுக்கு விலையாக சுதந்திரத் தமிழ் ஈழம் மட்டுமே ஈடாக அமைந்துவிடமுடியும் என்னும் நம்பிக்கையோடு உரிமைபோர் வேள்வியில் குதித்த தமிழர்கள்——–

இன்று, வெறும் பேச்சு வார்த்தைகள் மூலம் எப்போதோ பெற்றிருக்க வேண்டிய குறைந்தபட்சத் தீர்வினை – அவர்களது தியாகங்களுக்கு விலையாகப் பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தப் பட்டிருக்கிறார்கள். இந்த உணர்வு அவர்களது மனங்களில் ஆதங்கமாகப் படிந்துபோய் கிடப்பதை யாரும் மறுக்க இயலாது.

ஆனால், சமரசம் பேச வந்தது இந்தியப் பேரரசு என்பதாலும் – அது வழங்கிய ஆன்ம பலத்தோடுதான் தங்கள் எதிகால அரசியல் வாழ்வு நல்ல வகையில் அமைதல் சாத்தியம் என்னும் எண்ணத்தாலும், இன்றைய அமைதி ஒப்பந்தத்தை தமிழர்கள் ஒருவாறு ஏற்றுக்கொள்ள முன்வந்ததாகத் தெரிகிறது.

முன்னணிப் போராட்ட அணியான விடுதலைப் புலிகள் இயக்கம், சென்ற வாரம் தமிழ் மண்ணில் நடாத்திய விளக்கக் கூட்டத்தின்போது- “இந்திய ராணுவத்தோடு போரிடவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தமிழர்களை இவ் ஒப்பந்தம் இட்டுச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக நாம் எமது ஆயுதங்களை இந்தியப் படைகளிடம் ஒப்படைக்கிறோம்’ என்றுதான் கூறியிருக்கிறது!

அந்த வகையில் இந்த ஒப்பந்தம் இடைக்கால ஆறுதலாக இருக்கலாமேயன்றி நிரந்தர தீர்வாக அமைய இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும் என்றே படுகிறது!

இலங்கை அரசுக்கு வெற்றியா?

என்னதான் முயன்றாலும்- இலங்கைத் தமிழர்களுக்கு இந்த நாட்டில் சம உரிமை வழங்கப் போவதில்லை. இலங்கை சிங்களருக்கு மட்டுமே சொந்தமானது”

என்னும் இலங்கையின் முன்னைய கொள்கையினை எண்ணிப்பார்க்கையில், இந்த அமைதி ஒப்பந்தம் அதற்கும் தோல்வியே!

ஏனெனில், இலங்கையின் மூன்றில் ஒரு பங்குப் பிரதேசமான வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழருடைய பாரம்பரியமான பிரதேசம் என்பதை இந்த ஒப்பந்தம் மூலமாக அது ஒப்புக்கொண்டிருகிறது. அது மட்டும் அல்லாமல், சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளோடு தமிழும் ஆட்சி மொழியாக விளங்கும் என்பதையும், இலங்கையின் எந்தப் பகுதியிலும் வாழும் உரிமை தமிழர்க்கும் உண்டு என்பதையும் இந்த ஒப்பந்தம் வாயிலாக அது ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆனால், சரிந்து வரும் இலங்கையின் பொருளாதரத்தை  மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடவும், நாடு பிளவு படுவதிலிருந்து தவிர்க்கவும் இது துணை செய்வதால் பிறிதொரு வகையில் இலங்கை அரசு வெற்றி பெற்றிருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

யாரால் வன் செயல்கள் ஆரம்பிக்கப்பட்டன என்று ஆராய்ந்து கொண்டிருப்பது ஒருபுறமிருக்க , அந்த வன்செயல்களை முடிவுக்குக் கொண்டுவருவது என்பது பாராட்டப் படவேண்டியதே!

இந்த வகையில் சுமார் ஆறாயிரத்துக்கும் அதிகமான உயிர்களைப் பலி கொண்டு, பல கோடி ரூபாய்கள் பெறுமதிமிக்க சொத்துக்களைஅழித்துக் கொண்டிருந்த நான்காண்டு கால வன்செயல்கள்- இந்த ஒப்பந்தம் மூலமாக முடிவுக்கு வருவது, அரசின் மற்றொரு வெற்றியாகச் சொல்லலாம்.

ஆனால், இத்தனை வெற்றிகளும் அது இவ் ஒப்பந்தம் எந்தளவு நேர்மையுடனும் துரிதமாகவும் செயல்படுத்தப் படுகிறது என்பதில்தான் தங்கியிருக்கிறது என்பதை மறக்கக்கூடாது!

ஏனெனில் பெரும்பாலும், இது போன்ற உடன்பாடுகள் காலப் போக்கில் ‘பிசுபிசு’த்துப் போனதை இலங்கை அரசு மட்டுமல்ல , இந்திய அரசும் தெரிந்து வைத்திருக்கும் என்றே நம்புகிறோம்.

போராட்டம் தொடருமா?

ஈழத் தமிழர்கள் தனி ஈழக் கோரிக்கையை முன்வைத்ததற்கு, அவர்களது உரிமைகள் ஆட்சியாளர்களால் பறிக்கப் பட்டதும், காலத்துக்குக் காலம் செய்து கொண்ட அரசியல் உடன்பாடுகள் மீறப்பட்டதுமே காரணங்களாகும் என்பதை இலங்கையின் வரலாற்றை ஒரு தடவை புரட்டிப் பார்ப்பவர்களுக்குப் புரிந்துவிடும்.

உண்மையில், ஈழத் தமிழர்கள் தங்கள் பிரதேசமான வடக்கிலும், கிழக்கிலும் சுதந்திரமாகச் செயற்படவும்- அதே சமயம் சிங்களப் பெரும்பான்மையினரோடு சகோதர உறவுடனும் வாழவே விரும்பினார்கள். இதற்காக ‘ இணைப்பாட்சி” அரசியலுக்காகவே முன்னைய தமிழ்த் தலைவர்களது போராட்டங்கள் விளங்கி வந்தன. ஆனால், இதனைக்கூட ஏற்றுக்கொள்ளாத அல்லது மதியாத ஆட்சியாளர்களது நடவடிக்கைகளே, தனி நாட்டுக் கோரிக்கைக்கு வித்திட்டது என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் கூறித்தானாகவேண்டும்.

இன்று இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலம், ஓர் கூட்டு அரசியல் அமைப்பின் கீழ், தமிழர்கள் தங்கள் பாரம்பரியமான பிரதேசத்தில் பாதுகாப்புடனும், அமைதியாகவும் வாழ வழியேற்படின், காலப் போக்கில் தனி நாட்டு எண்ணம் தீவிரமிழந்து போய்விட வாய்ப்பிருக்கிறது!

அதை விட்டுவிட்டு,” பழைய குருடி கதவைத் திறடி” என்னுமாப்போன்று, மீண்டும் மீண்டும் தமிழர்கள், தாம் ஏமாற்றப்படுவதாக உணர்வார்களேயாயின் போராட்டம் தொடரவே செய்யும்.

அவ்வாறு ஓர் நிலை ஏற்படுமாயின், இந்தியாவென்ன- வேறெந்தப் பலம் வாய்ந்த நாட்டினையும் எதிர்த்து நிற்கும் துணிவு மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடவும் கூடும்.

ஆனால் அது போன்ற ஓர் நிலை உருவாகாமல் தடுப்பது இந்தியாவின் கைகளில்தான் உள்ளது.அதனை அது பூரணமாக நிறைவேற்றும் என்று நம்புவோம்.

==============================================================