ஈழத்தில் மாட்டிக்கொண்ட இந்தியப் பேரரசு……[12/10/1987 ‘தமிழ் நேசன்’(மலேசியா) இதழில் வெளியானது.

ஈழத்து நிகழ்ச்சிகள்:-                              “சர்வசித்தன்”

[ 1987 அக்டோபர் 09ல் எழுதப்பட்டு 12-10-1987 ’தமிழ் நேசன்’(மலேசியா) இதழில் வெளியான கட்டுரை]

ஈழத்தில் மாட்டிக்கொண்ட இந்தியப் பேரரசு!

சுமக்கப் போவது, பழியையா ? பாவத்தையா?

[இந்த வருட(1987) ஆகஸ்ட் மாத ஆரம்பம், ஈழத்தமிழர்கள் மத்தியில் சிறிதளவு நிம்மதியையும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையினையும் விதைத்தது என்றால்; இம்மாத (அக்டோபர் ’87) ஆரம்பமோ அதற்கு முற்றிலும் மாறாக அமைந்து விட்டிருக்கிறது!

தமிழ்ப் போராளிகளின் தற்கொலையும் அதனைத் தொடர்ந்து சினமுற்ற தமிழர்களின் வன் செயல்களும்- இந்தியப் படைகளின் நடவடிகைகளும் என;

நாம் கேள்விப்படும் எந்தச் செய்தியும் மனதுக்கு ஆறுதல் தருவதாய், சமாதானம் அந்த நாட்டில் துளிர்க்கும் என்பதற்கு உத்தரவாதம் அளிப்பவையாக அமையவில்லை என்பது, வேதனையோடு ஒப்புக்கொள்ளவேண்டிய உண்மையாகி விட்டது!]

சில மாதங்களுக்கு முன்னர்……

ஈழத் தமிழர்கள் மீது, இலங்கை ராணுவம் மிக மோசமான ‘இன அழிப்பினை’ அரங்கேற்றிக் கொண்டிருந்த சமயம்……..  பல நூறு அப்பாவித் தமிழர்கள்; பெண்களும் குழந்தைகளுமாய் கொலைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த வேளையில்…..

இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி, இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கு ஓர் மனிதாபிமான வேண்டுகோளினை விடுத்திருந்தார்….

‘வன் செயல்களை அடக்குவதற்காக அப்பாவித் தமிழ் மக்களைக் கொல்லாதீர்கள். இந்தியா அதனைப் பார்த்துக் கொண்டு ‘சும்மா ’ இருக்காது. எமது இந்தியப் பேரரசின் கீழ் ஒரு மாநிலமாக இருக்கும் தமிழகத்தில் வாழும் ஆறு கோடித் தமிழர்களது உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டி நேரிடலாம்…’ என்னும் தொனியில்,ஒரு வகையிலான எச்சரிக்கையை; ’இனிப்புத்தடவி மருந்து கொடுப்பது போல்’ அன்று இந்தியா- இலங்கைக்கு விடுத்திருந்தது!

அதற்குப் பதில் கூறுமாப் போன்று, பௌத்த தர்மத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறும் இலங்கையின் அதிபர்; “ இந்தியப் பிரதமர் தமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு வழி காணட்டும், அதன் பின்னர் அண்டை நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து அவர் ஆலோசனை கூறுவதுதான் விவேகமானது!” என்னும் சாயலில் தமது அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.

மேற்சொன்ன சம்பவங்கள் இடம் பெற்ற சில மாதங்களின் பின்னர், இதே ஜே.ஆரும்; அதே ராஜீவ் காந்தியும், ஈழத் தமிழர்களது விடயத்தில் ஓர் உடன்பாட்டுக்கு வந்தார்கள். அந் நேரம், ராஜீவ் காந்தி; இந்தியாவில் நிலவிவந்த உள் நாட்டுப் பிரச்னைகளைத் தீர்த்துவிட்டா வந்தார்?’ என்று கேட்டுவிடாதீர்கள்!

சொல்லப் போனால், அப்போது பஞ்சாப்பில் நடைபெற்றுக் கொண்டிருந்த பெரும்பானமை மாநில அரசினைக் கலைத்துவிட்டும்; மத்திய அரசில் அவரது நெருங்கிய சகாவாக இருந்த வி.பி.சிங்கினால் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையிலும் இருந்த இந்தியப் பிரதமரோடுதான் இலங்கை அதிபர் சமாதான உடன் பாட்டை ஏற்படுத்திக் கொண்டார்.

அரசியலில் உண்மையான நண்பனும் கிடையாது- விரோதியும் கிடையாது என்பார்கள்!  எனவே, வசை பாடியவர்களையே புகழ்ந்து பாடும் காலம் வரும்போது, இவற்றையெல்லாம் நாம் தூண்டித்துருவி ஆராய்வது உசிதமானதல்ல!

ஒருவகையில் இலங்கைப் படைகளின் குண்டுகளில் இருந்து ஈழத்தமிழர்களை இந்த ஒப்பந்தம் காப்பாற்றியதை நாம் பெருந்தன்மையோடு ஒப்புக்கொண்டேயாக வேண்டும். அது மட்டுமின்றிச் சமாதானம் என்று யார் கூறினாலும் அதற்குக் கட்டுப்பட வேண்டியது ‘மனிதப்பண்பு’. ஏனெனில் சமாதானத்தின் மூலமாக மட்டுமே வாழ்வு சிறக்கும் என்பதால், இரு அரசுகளும் செய்துகொண்ட உடன்படிக்கையின் பின்னணி எதுவாக இருப்பினும் அதனை ‘மனிதர்கள்’ ஏற்றுக்கொண்டார்கள்.

விடுதலைப் புலிகளும் மனிதர்களே ஆதலால் அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டார்கள்.

இந்த மனிதத்துவத்தின்கீழ் ‘இனமானம்’ என்னும் ஒன்றும் இருக்கிறதல்லவா?. அந்த இனமானம்-தனி நாட்டுக் கொள்கைக்காக ஆயுதம் ஏந்திய, விடுதலைப் புலிகளை சற்று இடக்குப் பண்ண வைத்தது. என்றாலும், செய்து கொண்ட ஒப்பந்தத்தையாவது முறைப்படி இந்திய அரசும்- இலங்கை அரசும் நிறைவேற்றட்டும் என்று, தம்மிடம் இருந்த ஆயுதங்களில் பெரும்பகுதியினை ஒப்படைத்து- சமாதானத்துக்குப் பச்சைக் கொடியும் காட்டியது விடுதலைப்புலிகளின் இயக்கம்.

ஒப்பந்தம் அமலாகிய விதம்?:-

ஈழத் தமிழர்களின் அரசியல், சமூக விடுதலைக்காகப் போராடியவர்கள் எவருமே பங்கு பற்றாத- அண்டை நாடு ஒன்றோடு இலங்கை அரசு சமரச உடன்படிக்கையினை ஏற்படுத்தி இருந்தாலும், அதனை மதிக்கும் பண்பு, விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எல்லாத் தமிழ் இயக்கங்களிடையேயும் உருவாகியிருந்தது. எனவே, தமிழர்களது பாதுகாப்பினையும்-அரசியல் நிலைத் தன்மையினையும் மூன்றாம் தரப்பான இந்திய அரசு பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும் என்னும் எதிர்பார்ப்பும்- அவ்வாறு அது பொறுப்பேற்கும் என்ற நம்பிக்கையும் தமிழர்கள் மத்தியில் இருந்தது.

ஆனால், நடந்தது என்ன ?

சமாதானத்தை நிலை  நாட்டுவதற்காக இலங்கைக்குச் சென்ற அமைதிப் படையினரில் பெருமளவினர், தமிழர்கள் மட்டும் மிகமிக அதிக எண்ணிக்கையில் வாழ்கின்ற வடபகுதியில், அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில்; தங்கள் முகாம்களை அமைத்தார்கள்!

அங்கிருந்தவாறே யாழ்ப்பாணத்து இளம் பெண்கள் எவ்வாறு சேலை அணிந்துகொள்ள வேண்டும் என்று அக்கறை காட்டினார்களோ அந்தளவுக்கு,கிழக்குப் பகுதியில், சிங்கள மக்களை மீண்டும் குடியமர்த்தும் பணியில், இலங்கை அரசு மேற்கொண்ட சில நடவடிக்கைகளில் பொதிந்து கிடந்த ‘அரசியலை’ ஆராயத் தவறிவிட்டதாகவே படுகிறது!

இதுகுறித்து, விடுதலைப்புலிகள் இயக்கம் பலதடவைகள், இந்திய அமைதிப் படையிடமும், இலங்கை அரசிடமும் கூறியிருந்தும், கிழக்கில் வாழும் தமிழர் பிரதேசங்களைப் பாதுகாப்பதில் அமைதிப்படை மிகமிகத் தாமதமாகவே நடவடிக்கைகளில் இறங்கியது.

மற்றொருபுறம், பூசா ராணுவ முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரக் கணக்கானவர்களில் பலர் விடுவிக்கப்படுவதிலும் இலங்கை அரசு தாமதம் காட்டியது.

இடைகால நிர்வாகம் ஒன்றினை ஏற்படுத்துவதில் உருவான தேக்க நிலை, யாழ்ப்பாணம் உட்படப் பல பகுதிகளில் சமூக விரோத சக்திகளுக்கு வாய்ப்பினை அளித்தது.

இத்தனையும் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில்; யாழ் மண்ணைச் சிங்கள ராணுவம் சுடுகாடக்குவதிலிருந்து மட்டுமல்ல- இன்று இந்தியப் பிரதமர் ‘சமாதானம்’ என்னும் பெயரில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வகை செய்யும் அளவுக்கு- இலங்கைப் படைகளோடு போரிட்டு வந்த விடுதலைப் புலிகளைப் பழிவாங்கவெனச் சில போட்டிக் குழுக்கள் எடுத்த முற்சிகளை; இந்திய அரசு முளையிலேயே கிள்ளி எறியாது காலந்தாழ்த்தியதும்; பிரச்னையைத் திசை திருப்பிவிடப் போதுமானவையாக இருந்தன!

இந்தச் சந்தர்ப்பத்தில் தான், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் செயலாளர் திலீபன் இந்திய அரசிடம், சில அரசியல் நெறிமுறைகளை வலியுறுத்தி, ’சாகும் வரை’ உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார்.

அவரோடு வேறு சில போராளிகளும் ‘அஹிம்சை’ப் போரில் குதித்தார்கள்.

எந்தவித உணவும் நீரும் இன்றி மனித உயிர் எத்தனை நாளைக்குத் தாக்குப்பிடிக்கும் என்பது இந்திய அரசுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை! அப்படியிருந்தும், பன்னிரெண்டு நாட்களின்பின் உயிர் நீத்த திலீபன்; வீணாக வீம்புக்காக இறந்ததாய் அறிக்கை விடுத்தது ‘சமாதான அரசு’!

அதுதான் போகட்டும் என்றால்…. அதன் பின்னர் நிகழ்ந்தவைகளோ தமிழர்களின் சினத்தை மேலும் தூண்டிவிடுபவையாகவே அமைந்திருந்தன.

நிதானம்- ஒருவருக்கு மட்டும் சொந்தமானதல்ல:

இந்த மாத(அக்டோபர் 1987) ஆரம்பத்தில் சுமார் பதினேழு விடுதலைப் போராளிகள் அடங்கிய படகு ஒன்றினை இலங்கைப் படை வழிமறித்து, அதில் இருந்த அனைவரையும் கைது செய்தது. அவர்கள் ஆயுதங்களைக் கடத்த முயன்றார்கள் எனக் குற்றம்சாட்டி விசாரணைக்காக அவர்களைக் கொழும்புக்குக் கொண்டுசெல்ல இலங்கை இராணுவம் முயன்ற சமயத்தில்- அவ்வாறு பிடிபட்ட தனது இயக்கத்தினரை இந்திய அமைதிப்படை பொறுப்பேற்க வேண்டும் அல்லது விடுவிக்க வேண்டும் என விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அந்தப் போராளிகள் அனைவரும் ‘சயனைட்’ அருந்தி அதில் பன்னிருவர் மாண்டதும்….

இந்திய அமைதிப்படை இலங்கை அரசின் கைப்பொம்மையாகச் செயல்படுகிறதோ என்னும் சந்தேகத்தை தமிழர்களிடையே ஏற்படுத்தியிருந்தது!

அதே சமயம், உயிரிழந்த தமது சகாக்களின் மரணத்துக்குப் பழிவாங்கும் வகையில் புலிகள், தாம் பிடித்து வைத்திருந்த எட்டுச் சிங்களப் படையினரைக் கொன்று, யாழ் பஸ் நிலையமொன்றில் வீசிவிட்டிருந்தனர்.

இது பயங்கரவதச் செயல் எனக் கண்டிக்கப்பட வேண்டியதே!

ஆனால், அவ்வாறு உயிரிழந்த எட்டுப் படையினருக்காக மனமிரங்கி அறிக்கை வெளியிட்ட இந்தியா; அதற்குக் காரணமான பன்னிரு தமிழ்ப் போராளிகளின் அநியாயச் சாவுக்கு   வருத்தம் தெரிவிக்கவில்லை.

மாறாக,அவர்கள் அவசரப்பட்டு விட்டார்கள் என்று ஓர் அறிக்கை-அதுவும் போராளிகளைத் தாக்கி வெளியாகியிருந்தது!

இத்தனை சம்பவங்களும்- ஏற்கனவே, ஆயுதம் மூலம் நியாயம் பேசினால்தான் சிலருக்குப் புரியும் போலும் என்னும் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு-அதற்குப் பழக்கப் பட்டுப்போன புலிகளை- மீண்டும் அதன் துணையை நாடத் தூண்டியிருக்கவேண்டும் என்றே படுகிறது!

கிழக்கிலங்கையில்,ஆயிரக்கணக்கில் குடியமர்த்தப்பட்டிருந்த சிங்களர்களை விரட்டுவதன் மூலம் மெத்தனப் போக்கினைக் கடைபிடிக்கும் அமைதிப் படைக்கு ‘வேலை கொடுக்க’ நினைத்தார்களோ என்னவோ…….. நூற்றுக்கணக்கில் சிங்களர்களைப் பழிவாங்கும் அளவுக்கு அவர்களது சினம் பெருகிவிட்டது!

இப்போது, அமைதி என்பது இந்திய அரசினால்கூட ஏற்படுத்த இயலாத ஒன்றா  என்று அவநம்பிக்கை கொள்ள வைக்கும் அளவுக்கு நிலமை மாறிக்கொண்டிருக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில்….. ‘நிதானம்’ விடுதலைப் புலிகளுக்கு மட்டும் அல்ல, இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் தேவையான ஒன்றே.

ஒருவகையில்….. சமரசம் செய்யும் எண்ணத்தோடு அங்கு சென்றுள்ள இந்தியா மிகமிக நிதானத்தோடு செயல்பட வேண்டிய தருணம் இது.

அது எடுக்கவிருக்கும் அடுத்த நடவடிக்கையில் இருந்துதான், அது சுமக்கப்போவது பழியையா இல்லைப் பாவத்தையா… ? இல்லை ‘மனிதாபிமான அரசு’ என்னும் பெயரையா…  ? என்பது புரிந்துபோகும்!

****************************************************************************************************************.

திலீபன், கலைஞர் ; வீரவன்ச….! [11-07-2010 ஈழ நேசனில் வெளியான கட்டுரை]

திலீபன்; ‘கலைஞர்’ ; வீரவன்ச !

சர்வசித்தன்”

ஈழத் தமிழர்கள் தொடர்பில், கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் மேற் கொள்ளப்பட்ட/படும் ‘சாகும்வரை உண்ணா நோன்பு’ போராட்டங்கள் மூன்று ஆகும். இதில் முதலாவதாகவும் இதயத் தூய்மையுடனும் ஆரம்பிக்கப்பட்டு அதின் மூலம் உயிர் நீத்த பெருமை திலீபனையே சாரும்.

இவரது போராட்டத்தின் பின்னணியில், ராஜீவ் காந்தி தலைமையிலான அன்றைய இந்திய அரசும்- இலங்கையும் ;தமிழர் உரிமைகள் குறித்துச் செய்துகொண்ட ‘சமாதான ஒப்பந்தத்தை’ உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும் என்னும் கோரிக்கை இருந்தது.

இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனமான தமிழர்களது, உரிமைகள்;  ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவிலாவது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தித் தனது போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், அஹிம்சையால் சுதந்திரம் பெற்றதாகப் பெருமை பேசும் இந்திய அரசினாலேயே ‘கண்டுகொள்ளப் படாமல்’ உயிர் இழக்க நேர்ந்தது.

அதனை அடுத்து இரண்டாவதாக எமது மனக் கண்களில் நிழலாடுவது, தமிழகத்தின் முதல்வர் ‘கலைஞர்’ நிகழ்த்திய ஐந்து மணிநேர ‘மெரீனாக்’ கடற்கரைப் போராட்டம்.

காற்றோட்டம் நிறைந்த கடற்கரையிலேயே, குளிரூட்டிகள் சகிதம் ‘உலகப் புகழ்’மிக்க போராட்டத்தை நடாத்தியதன் மூலம் அவர் ‘முள்ளிவாய்க்கால் படு கொலைகளை’ தடுத்து நிறுத்த முடிந்ததா ? என்பது இன்றுவரை ‘மில்லியன் டாலர்’ கேள்வியாகவே தொக்கி நிற்கிறது.

இப்போது மூன்றாவதாக இடம் பெற்றிருப்பது, இலங்கை அமைச்சர் ஒருவரின் ‘போராட்டம்’.

சென்ற வருடம், நிகழ்ந்துவிட்ட மனிதப் படுகொலைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து, அதன் உண்மை நிலையினை உலகிற்குத் தெரிவிப்பதற்கென, ஐ.நா வின் தலைமைத்துவத்தால் அனுப்பிவைக்கப் படுவதுதான் இந்த மூவர் குழு.

இதனைக் கலைக்க வேண்டும், இல்லையேல் ‘ சாகும்வரை எனது போராட்டம் தொடரும், நான் இறந்து விட்டால் சிங்களத்தின் மைந்தர்கள் இதனைத் தொடர்வார்கள்’ என்று சூளுரைத்துவிட்டுக் களத்தில் குதித்திருக்கிறார் விமல் வீரவன்ச.

இந்த மூவரின் ‘போராட்டங்க’ளும் ஈழத் தமிழர்கள் தொடர்பானவை என்பதைத் தவிர, அவர்களது குறிக்கோள்கள் வேறுவேறானவையே!

திலீபன் ஓர் ‘ஆயுதப் போராளி’யாக இருந்தும்; அண்டை நாடொன்று தமிழருக்குச் சில உரிமைகளையாதல் பெற்றுத்தரும் பொருட்டுச் செய்து கொண்ட ஒப்பந்தததைக் காலம் தாழ்த்தாது நிறைவேற்றுங்கள் என்னும் வேண்டுகோளினை முன்வைத்து அதன் மூலம் உயிர் நீத்தார்.

ஓர் இனத்தின் அவல நிலைக்குப் பரிகாரம் வேண்டிப் போராடியவர் அவர். அதன் பின்னணியில் ‘பதவி ஆசையோ’. ‘நடிப்போ’ இருக்கவில்லை. ஆகையினால்தான் தனது ‘போராட்டத்தில்’ உறுதியோடிருந்து, அதனை உதாசீனம் செய்த ‘அரசுகளின் நடவடிக்கைகளால்’ தனதுயிரையும் இழக்க நேர்ந்தது.

அவர் ‘புலி’யாகவோ அல்லது ‘சிங்க’மாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்.ஆனால் அவரது கோரிக்கையில் நியாயம் இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது.

‘கலைஞ’ரின் ‘உண்ணா விரதப் போராட்டம்’ எத்தகையது என்பதை இங்கு விபரமாக எழுதவேண்டியதில்லை. அண்மையில், இலங்கை அரசினால் சுட்டுக் கொல்லப்படும் தமிழக மீனவர்கள் மீது திடீர்ப்  ‘பாசம்’ கொண்டு மீண்டும் ‘கடிதம்’ எழுத ஆரம்பித்ததில் மறைந்திருக்கும் ‘2011’ தமிழகத் தேர்தல் குறித்த அவரது ‘காய் நகர்த்தல்களை’   புரிந்துகொண்டவர்களுக்கு, அன்றைய அவரது ‘மெரீனா ஒத்திகை’பற்றிய பின்னணியையும் புரிந்துகொள்ளும் ஆற்றல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

’வீர வன்ச’ வின் போராடம் சற்று விசித்திரமானது !

இலங்கை உட்பட உலக நாடுகள் பலவும் உறுப்பினர்களாக இருக்கும், ஐ.நாவுக்கு, அண்மைக்காலங்களில் கிடைத்த, ‘2009 ம் ஆண்டின் தமிழினப் படு கொலைகள்’ பற்றிய உண்மைகளை அறியும் நிர்ப்பந்தம் அல்லது கடமை உருவாகியிருந்தது.

அதனை நிறைவேற்றுவதற்காக ஐ.நாவின் தலைமை மூவரை இலங்கைக்கு அனுப்பத் திட்டமிட்டது.

ஏற்கனவே எமது நாட்டில் அதனை விசாரிக்க ஆணைக்குழு அமைத்துவிட்டோம், இனி எதற்கு ஐ.நா வின் விசாரணை என்று ‘குதிக்கிறது’ இலங்கை.

அதன் நிலையை ஆதரித்துப் ‘போராட்டத்தில்’ இறங்கியிருக்கிறார் வீரவன்ச.

ஐ,நா வின் போக்கினை ரஷ்யா போன்றவை வெளிப்படையாகவே கண்டிக்கின்றன. ஒரு காலத்தில் ‘இரும்புத்திரை நாடு’ என்று பெயர் பெற்றிருந்த ரஷ்யா , செச்சென்யாவால் ‘தலை வலி’யை அனுபவிக்கும் ரஷ்யா ஐ.நாவைக் கண்டிக்காது விட்டிருந்தால்தான் ஆச்சரியம்!

‘முக்காடு’ போட்டுக் கொண்டிருக்கும் இந்தியா இன்னும் வாய் திறக்கவில்லை.

வீரவன்ச எதற்காகப் பயப்படுகிறார் என்பதை அவரது பேச்சே எதிரொலிக்கிறது!

இலங்கையின் தேசீயப் பத்திரிகைகளுள் ஒன்றான ‘வீர கேசரி’யின் சென்ற வெள்ளிக்கிழமை [09-07-2010] முகப்புச் செய்தியில் வீரவன்சவின் ‘வீர வசனங்கள்’ பதிவாகியிருக்கின்றன.

“வெள்ளைக் கொடியுடன் வந்த புலிகளைக் கொன்றதாகக் கூறி இலங்கை இராணுவத்தையும் அரச தலைவர்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தூக்கிலிட பான் கீ மூனின் நிபுணர் குழு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் சிலரது ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது…………………………………………………………

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐ.நா வின் நிபுணர் குழுவை குறைவாக கணிப்பிடக் கூடாது. ஏனெனில், இந் நிபுணர் குழு எதிர்வரும் நாட்களில் விசாரணைக் குழுவாக மாறலாம். பின்பு பல விசாரணைகளை நடத்தி பொய் குற்றச் சாட்டுகளை நிரூபித்து எமது நாட்டுத் தலைமைத்துவங்களை சர்வதேசம் தூக்கிலிட்டுவிடும்.”

இவ்வாறு பேசியிருக்கிறார் விமல் வீரவன்ச.

இத்தனைக்கும், ஐ.நா;  இலங்கையில் தமிழினப் படுகொலைகள் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில், நம்பியாரையும், மேனனையும் நம்பிக்  ‘கைகட்டி நின்ற’ ஓர் நிறுவனந்தான்!

இதற்குப் போய் வீரவன்ச இவ்வளவு தூரம் பயப்படுவதுதான் வியப்பாக உள்ளது.

ஒரு வேளை இதுவும் சர்வதேசம் ஆடும் மற்றொரு நாடகமோ ? யார் கண்டது…!

***********************************************************************************

மனித உரிமைகளை மதிக்காத நாடு…….. [25-06-2010 ஈழநேசனில் மீள் பிரசுரமான கட்டுரை]

[1987 ஜூன் 08 ல்; மலேசியாவின் “தினமணி” நாளிதழில் வெளியான கட்டுரை]

ஈழத்து நிகழ்ச்சிகள்:-சர்வசித்தன்”

மனித உரிமைகளை மதிக்காத நாடு, பிரதேச உரிமை பற்றிப் பேசுவது விநோதம்!

மூன்று மாத காலங்களுக்கு முன்னர், மார்ச் (1987) 12ம் தேதி, ஜெனீவாவில் நடைபெற்ற ஐ,நா வின் மனித உரிமைகளுக்கான கூட்டத்தில்; ‘இலங்கை அரசு, இலங்கைத் தமிழர் விடயத்தில் மனித உரிமைகளை மீறிச் செயல்படுகிறது’ என்பதை உறுதிசெய்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம், இந்தியாவின் தூண்டுதலினால், ஆர்ஜென்டீனாவால் கொண்டுவரப் பட்டதாயும்; அதனைக் கண்டு சீற்றமடைந்த இலங்கை அதிபர், “உங்கள் நாட்டு மனித உரிமைகளைப் பற்றி முதலில் நீங்கள் கவனியுங்கள், அதற்கப்புறம் அண்டை நாடுகள் குறித்துப் பேசலாம்” என்று ‘சூடு’ கொடுத்ததாகவும் செய்தி வெளியாகியிருந்தது!

இலங்கையோ அல்லது வேறு எந்த நாடோ- அவை மனித உரிமைகளை மீறும் அநாகரிகச் செயலைப் புரிந்தால் அது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும்.

உலக வல்லரசாக இருந்தாலென்ன , உள்ளங் கை அளவுள்ள குட்டி நாடாக இருந்தாலென்ன இதில் வேறுபாடு கிடையாது.

மனிதர்களது கௌரவம், உரிமை, சுதந்திரம் என்பன, இந்த மண்ணில் அனைவருக்கும் பொதுவான ஒன்றே என்னும் அடிப்படையில் வைத்தே தீர்மானிக்கப்படவேண்டும்.

இந்த வகையில், இலங்கையும், மனித உரிமைகளை மீறிப் பல நடவடிக்கைகளைத் தனது ராணுவத்தின் உதவியோடு செய்திருக்கிறது, செய்தும் வருகிறது என்பதை உலக நாடுகள் சில, அங்கீகாரம் செய்த நாள் தான் மார்ச் 12,1987!

மற்றும்படி, இது போன்ற மனித உரிமை மீறல்கள் அங்கு அதற்கு முன்பிருந்தே சில வருட காலமாக இடம்பெற்று வரும் ‘சாதாரணமான’ சங்கதிகள் தாம்!

அதுசரி……இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றி இப்போது எழுதவேண்டிய தேவை எதனால் ஏற்பட்டது ? அதுதான் உலகறிந்த விடயமாயிற்றே ?!   என்பீர்கள்…

ஆனால்….

இப்போது, இந்திய அரசின் விமானப் படை, யாழ்ப்பாண மக்களுக்காக மனிதாபிமான முறையில் மேற்கொண்ட நடவடிக்கையினைத் தனது நாட்டின் பிரதேச உரிமையினை மீறும் செயல் என்று, ஓலமிடும் ஸ்ரீலங்கா அரசு…. ; அந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல  லட்சம் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவது எந்த வகையில் நியாயம் ?

தனது பிரதேச உரிமை பற்றிப் பேசு முன்பாக…, மனித உரிமைகள் பற்றி யோசித்துப் பார்த்ததா அந் நாட்டு அரசு?

மனிதர்கள் வாழ்வது தானே பிரதேசம்.. அந்தப் பிரதேசத்துக்கான உரிமை, அந்த மனிதர்களுக்கான உரிமை அல்லவா ?

ஸ்ரீலங்காவின் கோபம் சற்று புதுமையாகத்தான் படுகிறது!

‘காடாயிருந்தாலும்; நாடாயிருந்தாலும்; மேடாயிருந்தாலும் ; பள்ளமாயிருந்தாலும் அங்கு வாழும் மக்களைக் கொண்டல்லவா அந்தப் பிரதேசத்தின் பண்பும், உரிமையும் பேசப்படுகிறது !

அவ்வாறிருக்கையில்….. தமிழ்ப் பகுதிகளில் வாழும் மக்களது தனி மனித மற்றும் ஜீவாதார உரிமைகளையே மதிக்காத நாடு- அங்கு முற்றுமுழுதான மனிதாபிமான எண்ணத்தோடு உணவுப் பொதிகளையும், மருந்துகளையும்  வான்வழியாகப் போட்டுவிட்டு வந்திருக்கும் இந்திய அரசினைக் கண்டிப்பது எந்த வகையில் நியாயம்  என்பதுதான் புரியவில்லை!

கவலை’ப் படும் நாடுகள்:-

செத்துக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவுப் பண்டங்களை வழங்க விடுமாறு ஏற்கனவே இந்தியா; இலங்கையிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. சில படகுகளில் சுமார் நாற்பது தொன் உணவுப் பொருட்களோடு, பாக்கு நீரிணையைக் கடந்து இலங்கைக்குச் சென்று, செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளின் உதவியோடு அவற்றைப் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு வழங்கும்படி கேட்டது!

ஆனால், இலங்கை அரசு அதனை மறுத்துவிட- மறு நாள் அதே பொருட்கள் விமானப் படையின் உதவியுடன், யாழ் மண்னில் போடப்பட்டன.

ஆம், முதல் நாள், மனிதாபிமான அடிப்படையில் இந்திய அரசினால் விடுக்கப்பட்ட ஓர் கோரிக்கையினைத் தட்டிக் கழித்து விட்ட ஸ்ரீலங்கா,  மறுநாள் அதே உதவியினைத் தமிழ்ப் பகுதிகளில் விமானமூலம் அனுப்பிவைத்த இந்தியாவின் செயல் அத்துமீறல் சம்பவம் என்று வர்ணித்தது.

எட்டு லட்சம் தமிழர்களது மனிதாபிமான உரிமைகளை மதியாது அவர்களைப் பட்டினிபோட்டுச் சாகடிப்பது மட்டுமல்லாமல், குண்டுகளை வீசியும் அழிப்பது நியாயம் என்று வாதிடும் ஸ்ரீலங்கா; உணவுப் பொதிகளை அந்த மக்களுக்கு வழங்குவது உரிமை மீறும் செயல் என்கிறது!

இது எப்படி இருக்கிறது, பார்த்தீர்களா?

‘தட்டிக் கேட்ட ஆளில்லாவிட்டால், தம்பி அண்டப் பிரசண்டன்’ என்பார்களே ; இதுவரை ஸ்ரீலங்காத் தம்பியின் அடாவடிதனங்களை, இந்திய அண்ணன் தட்டிக் கேட்காது காலன் தாழ்த்தியதால் வந்த வினை இது!

நடந்தது தான் போகட்டும்… ஆனால்…. இந்தியாவின் இந்தச் செயலைக் கண்டிப்பதுபோன்று அறிக்கை வெளியிடும் நாடுகள் அல்லது அந்  நாடுகளின் பத்திரிகைகளைப் பாருங்கள்……….

தென்னாபிரிக்க இன வெறி அரசுக்கு முண்டுகொடுக்கும் திருமதி தாடசரின் பிரிட்டன்; இந் நாடு வடக்கு அயர்லாந்தின் விடுதலைப் போராளிகளால் நூறு வருடங்களாக நிம்மதியற்றிருக்கிறது ! இதனால் தானோ என்னவோ, விடுதலைப் போராட்டம், போராளிகள் என்றாலே ‘அலர்ஜி’ உண்டாகிவிடுகிறது போலும்! அதே சமயத்தில் இது, இந்தியாவில் போராடும் சீக்கியர்களுக்கு ஓரளவு ஆதரவாகச் செயல்படுகிறது. இந் நாட்டின் பத்திரிகைகள் சிலவும், இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதை ஆதரிக்கவில்லை!

மற்றொரு நாடு அமெரிக்கா!- இது தன்னை ஆதரிக்காத நாடுகளில், தனது ரகசிய ஒற்றர்களை  அனுப்பி வைப்பதன் வழியாக, மிரட்டல்கள், அராஜக நடவடிக்கைகள், முடிந்தால் ஆட்சிக் கவிழ்ப்புவரை நடாத்துவதில் கைதேர்ந்த நாடு!

உலக வல்லரசுகளில் ஒன்று என்பதை விடவும், குட்டி நாடுகளை வளைத்துப் பிடித்து, அவற்றின் மூலமாகத் தானே உலகில் முதன்மை பெற்ற நாடாக இருக்கவேண்டும் என்பதில் கருத்தோடிருக்கும் நாடு இதுவாகும்!

இலங்கை அரசு, கிழக்கிலங்கைத் துறைமுகமான திருகோணமலையை இந்த நாட்டுக்குத் தாரை வார்க்கத் தயாராக இருப்பதாகப் பேசப்படுகிறது! இதன் தத்துப் பிள்ளை நாடான இஸ்ரேலின் ஆதரவினையும் இலங்கை பெற்றுவருவதும் குறிப்பிடத் தக்கதே.

எனவே, இந்தியாவின் எந்த நடவடிக்கையும் இலங்கையைச் சிறிதும் பாதித்துவிடக் கூடாது என்பதில் இந் நாடு அக்கறை செலுத்தி வருகிறது.

இது, இந்தியாவின் அண்மைய நடவடிக்கையினைக் கண்டிக்காவிடினும், ‘மதில் மேல் பூனையாய்’ ஒப்புக்கு ‘வருத்தம்’ தெரிவித்திருக்கிறது.

அடுத்தது, பாகிஸ்தான். இந் நாட்டின் விமானிகள் இலங்கையின் போர் விமானங்களை ஓட்டுவதாகவும்; அவர்களது உதவியோடுதான் தமிழர்களது வாழ்விடங்கள் மீது குண்டுகள் வீசப்படுகின்றன என்றும் பரவலாகச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இலங்கைப் படையினர், பாக்கிஸ்தானில் பயிற்சி பெற்றதை இலங்கை அரசே ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவுக்குத் தொல்லை தரும் எவரையும் ஆதரிப்பதன் மூலமாக, இந்தியாவை அரசியல் ரீதியாகப் பழிவாங்கக் காத்துக்கொண்டிருக்கும் நாடு இது…. எனவே, இது இந்தியாவின் செயலைக் கண்டிக்காது விட்டால்தான் ஆச்சரியமாய் இருந்திருக்கும்! ஆனால், அதற்கு இடந்தராமல், பாகிஸ்தான் தனது கண்டனத்தைத் தெரிவித்து விட்டது!

இந் நிலையில், இது ஐ.நா வரை எடுத்துச் செல்லப்படலாம் என்னும், ஆருடங்களும் உலாவருகின்றன.

அவ்வாறு எடுத்துச் செல்லப்படின் என்ன நடக்கும் ?

ஐ.நா ‘தலையாட்டிப் பொம்மை’யா?

1945 ஆம் ஆண்டின் இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து உருவாக்கப் பட்ட ஐ.நா சபை; உலக நாடுகளிடையே சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும், மனித உரிமைகளையும் நிலை நிறுத்தவெனத் தனது பணிகளை  மேற்கொள்கிறது..

நாற்பது வருடங்களுக்கும் மேலாக, இது உலகப் பிரச்னைகள் பலவற்றையும் கூடிப்பேசித் தீர்மானித்து, அவற்றில் ஓரளவு வெற்றிகளை எட்டியுமிருக்கிறது.

அதே சமயம், குறிப்பிட்ட நாலைந்து நாடுகளின் ரத்து அதிகாரத்தால் இதன் பணி முழுமையாக வெற்றியடைவதில் பின் தள்ளப்பட்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை.

தீவிர வலதுசாரி நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளது பிரேரணைகளுக்கு எதிராகத் தீவிர இடதுசாரி நாடான ரஷ்யா தனது ரத்து அதிகாரத்தின் மூலம்; தன்னை ஆதரிக்கும் அல்லது தன்னால் ஆதரவு வழங்கப்படும் நாடுகளின் மீது நடவடிகை எடுப்பதைத் தடை செய்திருக்கிறது.

அதே போன்று, அமெரிக்காவும் தனது அணியில் உள்ள நாடுகள் விடயத்தில் தனது ‘தலையை’ நுழைத்துக் கொள்வது இயல்பாகிவிட்டது!

இதனால், உலக அமைதிகாக ஏற்படுத்தப்பட்ட ஐ.நா, ஒரு குறிப்பிட்ட அளவே இந்தப் பாதையில் பயணிக்க முடிந்திருக்கிறது. சொல்லப்போனால், முற்றுமுழுதாக நடு நிலை வகிக்கும் நாடுகள் சம்பந்தப்பட்டவற்றில் இதன் அதிகாரம்- நடவடிக்கைகள் என்பன செல்லுபடியாகும் என்பதுதான் உண்மை.

எனவே, இலங்கை- இந்தியா; இவ்விரு நாடுகளையும் பொறுத்தவரையில், இலங்கையை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும், இந்தியாவை ரஷ்யாவும் ஆதரிக்கும் நிலை இருப்பதால், இந்தப் பிரச்னை ஐ,நா வரை கொண்டு செல்லப்படும் என்பது சந்தேகமே!

ஆனால்,மனித உரிமைகள் குறித்து ஐ.நா வலியுறுத்தும் வாய்ப்புகள் உள்ளன. நாடுகளின் எல்லைகள், அவற்றின் உரிமைகள் தொடர்பான விடயங்களில் காணப்படாத அல்லது காணமுடியாத தீர்வுகளை விடவும், மனித உரிமைகள் குறித்தவற்றில் அது தீர்வினை எட்டமுடியும் என்பதால், இலங்கையின் இனம் சார் பிரச்னையை, மனிதாபிமானத்துடன் ஐ.நா அணுகுமாயின் விரைவில் அதற்கொரு தீர்வு ஏற்படலாம்!

அதனை விட்டுவிட்டு, இலங்கை-இந்திய உரிமைகள் தொடர்பாக அது கவனம் செலுத்துமெனில், நோயை உணராது வைத்தியம் செய்யும் மருத்துவரின் நிலையை ஒத்ததாய் முடியும்.

இந்தியாவின் பணி இத்தனையுந்தானா?

யாழ்ப்பாண மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள் என்பதற்காக, இலங்கை அரசின் சொல்லையும் மீறி, இந்தியா 25 தொன் உணவு,எரிபொருள் மற்றும் மருந்துப் பொதிகளை அளித்துவிட்டு வந்துவிட்டது.

துன்புற்றிருக்கும் தமிழர்களுக்கு இந்தச் சிறு உதவி போதுமானதா? ஏற்கனவே, இந்தியத் தரப்பில் கூறப்பட்டது போன்று 800 தொன் அரிசி; 100 தொன் சீனி ; 50 தொன் பருப்பு என்பனவற்றோடு அங்கு மருத்துவ உதவியின்றித் தவிக்கும் மக்களுக்குச் சேவையாற்ற டாகடர்கள் என; புறப்பட்ட பயணத்தின் நூற்றில் ஒரு பங்குகூட இன்று யாழ்மக்களைச் சென்றடையவில்லை.

எனவே, இந்தியாவின் இந்த மனிதாபிமான உதவி முற்றுப்பெற்று விட்டதாகவோ, இனி மேலும் தொடர வேண்டிய அவசியமற்றதாகவோ தெரியவில்லை.

இந்தியாவும்-இலங்கையும் தங்கள் எல்லை உரிமைகள், இறைமை, சுதந்திரம் போன்றவற்றைப் பேசுவதென்பது வேறு; இந்த ‘வாய்ச் சண்டை’யில் அக்கரையில் இலங்கை அரசினால் கைவிடப்பட்ட நிலையில் பரிதவிக்கும் தமிழர்களது வாழ்வாதார உரிமைகளைப் புறக்கணிப்பது என்பது வேறு; என்பதை இவ்விரு நாடுகளில் தலைவர்களும் உணர்ந்தே இருப்பார்கள்!

வெறும் அரசியல் “ஸ்டண்ட்”டுக்காக, இந்தியா, ஒரு சில ‘டன்’ உணவுப்பொதிகளை விமான மூலம் வீசிவிட்டு ஓய்ந்துவிட்டது என்னும் அவப் பெயர் இந்தியாவுக்கு ஏற்படாமலிருக்கும்  அதே சமயம், அண்டை நாடான இந்தியா எமது மக்களான தமிழர்களுக்கு உணவு வழங்கும் நிலையை உருவாக்கிவிட்டோமே என்னும் வெட்க உணர்வு, சிங்கள் பௌத்த அரசுக்கு உருவாக வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்கு, அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண மக்களுக்கு, சிங்கள அரசு கடந்த ஆறு மாதங்களாக தடை செய்திருந்த உணவு,எரிபொருள்,மருந்து, மின் விநியோகம் என்பன அனைத்தும் அவர்களுக்குக் கிடைக்க வகை செய்வதுடன், அம் மக்களைத் துவம்சம் செய்துவந்த  படைகள் மீட்டுக்கொள்ளப்படவும் வேண்டும்!

இதற்கான உரிய முயற்சிகளில் இந்தியா அக்கறை செலுத்த வேண்டும் என்பதோடு; இலங்கை அரசுடன் நியாயமான வழிகளில் பேச்சுக்களை நடாத்தி தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்கவும் வேண்டும்.

ஆகையால், இந்தியா இப்போது எடுத்த நடவடிக்கை; இந்தியப் பேரரசு இலங்கைத் தமிழர்களை முற்றாகக் கைவிட்டுவிடவில்லை, விட்டுவிடவும் மாட்டாது என்பதைச் சிங்கள அரசியல் தலைமைக்கு உணர்த்தும் ‘சோற்றுப் பருக்கை’ எனலாமா?

இந்தப் பருக்கையினைப் பதம் பார்த்து அறியும் ஆற்றல் இலங்கைக்கு இருக்குமாயின்; பானையில் இருப்பது என்ன என்பது அதற்குப் புரிந்துவிடும்.

அதே போன்று, தமிழர்களுக்கு, இந்தியா இப்போது அளித்த உதவி, பருக்கையே அன்றி வேறில்லை1

அடங்காப் பசியுடன் காத்திருக்கும் ஈழத் தமிழர்களுக்கு பானை நிறைந்த சோற்றினை வழங்குவதும் இந்தியாவின் கைகளில்தான் உள்ளது.

பானை சோறு எப்போது கிட்டும், ஈழத் தமிழரின்  ”விடுதலை”ப் பசி என்று ஆறும் ?

( ஏறத்தாழ 23 வருடங்களுக்கு முன், இலங்கை அரசு; யாழ் மக்களைப் பட்டினி போட்டுப் பணிய வைக்கும் மனிதாபிமானம் அற்ற செயலைப் புரிந்த சமயத்தில், ராஜீவ் காந்தியின் தலைமையில் இருந்த இந்திய அரசு, அதிரடியாகச் செயல்பட்டு விமான மூலம் உணவு வழங்கிய சமயத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரை, மலேசியாவின்  நாளிதழ்களில் ஒன்றான ‘தினமணி’யில் வெளியாகியிருந்தது.

கால் நூற்றாண்டின் பின், ஏதோவொரு வகையில், இன்று ஈழத்தின் தமிழ்மக்கள் தொடர்பான ’அக்கறை’ இந்திய அரசுக்கும்,அதன் மாநில அரசான தமிழகத்துக்கும் ஏற்பட்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில், இக் கட்டுரை மூலம் வாசகர்களை அக்காலச் சூழலுக்கு இட்டுச் செல்லலாம் என நம்புகிறோம்.)

இந்தியா அத்துமீறியதா ? [ 19-06-2010 ஈழநேசன் இணைய இதழில் மீள்பிரசுரம் ஆன கட்டுரை]

ஈழ அரசியல் கண்ணோட்டம்:- “சர்வசித்தன்”

[ஜூலை 7,1987ல் எழுதி ஜூலை 11,1987 ‘தமிழ் நேசன்’(மலேசியா) இதழில் வெளியான கட்டுரை]

இந்தியா அத்து மீறியதா ?

ஏறத்தாள மூன்றரை வருட காலம்- சில சமயங்களில் மிகுந்த சினேக மனப் பாங்கோடும், வேறு சில சந்தர்ப்பங்களில் சற்று முரட்டுத்தனமான அணுகுமுறைகளோடு ’வாய்வீரம்’ பேசியும், சமயங்களில் பணிந்தும்; தொடர்ந்த இந்தியா-சிறீலங்கா உறவு , தீவிரமான கட்டத்தை எட்டியது சென்ற ஜூன் 4 ந் தேதியில் (1987) தான்!

ஆம், அன்று தான் இந்தியா, தனது விமானப் படையின் உதவியோடு, வட இலங்கையில் பாதிப்புற்றிருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு வான் வழியாக உணவு விநியோகம் செய்தது!

அந்த நாளில்தான் முதன்முதலாக, இந்தியா தனது அண்டை நாடொன்றினுள் அத்துமீறிப் பிரவேசித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது!

இலங்கை அரசோடு இணைந்து கொண்டு; பாகிஸ்தானும், சீனாவும் இந்தியாவின், இந்த விமான மூலமான உணவு உதவி நடவடிக்கையினைக் கண்டித்தன.

இது போன்று, ’அண்டை நாட்டின் சுதந்திரத்தில் தலையிடும் இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்னும் செய்தியினை; இலங்கையின் வெளியுறவு அமைச்சர், டெல்லியில் உள்ள இலங்கைத் தூதர் திரு திலகரட்ணா மூலம் இந்திய அரசுக்கு அனுப்பிவைத்தும் இருந்தார்!

இத்தனை தூரம் இந்திய அரசு, தனது அண்டை நாட்டின் பிரதேச உரிமையினையும் மீறி- நடவடிக்கைகளில் இறங்கும் அளவுக்கு, அதனைத் தூண்டியது எது?

இதன் பின்னணியைத் தெரிந்து கொள்வதற்கு, மீண்டும் இலங்கையின் அரசியல் சம்பவங்களை ஒரு தடவை அசைபோட்டுப் பார்க்கவேண்டிய தேவை ஏற்படவே செய்கிறது.

இலங்கைப் பிரச்னையில் இந்தியத் தலையீடு:

இலங்கையில் நடைபெற்ற அரசியல் பிரச்னைகளில், இந்திய அரசு தீவிர கவனம் செலுத்த நேர்ந்தது-  1983 அந் நாட்டில் இடம்பெற்ற மோசமான இனக் கலவரத்தின் பின்னரே ஆகும்.

1977ம் வருடம், கண்டி மலைப் பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களைப் பெரிதும் பாதித்த இனக் கலவரத்தினை ஒத்த ஒன்றினை, இலங்கையின் வட பகுதி- மற்றும் இந்திய வர்த்தகர்கள் அதிகமாக வாழும் கொழும்புப் பிரதேசத்தில் ஏற்படுத்தவென, ஆளும் கட்சியில் இருந்த சிலராலேயே திட்டம் தீட்டப் பட்டதாயும், அது கச்சிதமாக நிறவேற, யாழ்ப்பாணத்தில் 1983 ஜூலை 14 ல் நடைபெற்ர, தமிழ் இளைஞர்களின் தலைமறைவுத் தாகுதலில் மரணமுற்ற பதின்மூன்று சிங்கள ராணுவத்தினர் தொடர்பான சம்பவம் ஒரு ‘சாக்காக’ எடுத்துக் கொள்ளப் பட்டதாயும், அப்போது தகவல்கள் வெளியானதுண்டு!

அப்போது நிகழ்ந்த இனக் கலவரங்களின் போது, பல இந்திய வர்த்தக நிறுவனங்களும், தமிழர்களுக்குச் சொந்தமான மிகப் பெரும் தொழிற்சாலைகளும் அழிக்கப்பட்ட சம்பவமும்; வெலிக்கடை போன்ற சிறைச்சாலைகளில் கூட கைதிகள் ஈவிரக்கமின்றி அடித்துக் கொல்லப்பட்டதுவும் ; பல தமிழர்கள்- பெண்கள், குழந்தைகள் உட்பட கொன்று அழிக்கப்பட்டதும், அது ஓர் திட்டமிடப்பட்ட கலவரமாக இருக்கலாம் என்னும் சந்தேகத்தை வெளி உலகில் உருவாக்கியிருந்ததில் வியப்பேதுமில்லை.

அந்தக் கலவரங்களின் விளைவாக, ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள், இந்தியாவின் தென்பகுதி மாநிலமான தமிழகத்தை நோக்கி அகதிகளாக வந்தடைந்தார்கள்.

இந்த அகதிகளின் வருகை, இந்திய அரசினை இலங்கையின் இனப் பிரச்னையின் பக்கம் பார்வையைத் திருப்பிவிட உதவியது.

இந்திய மாநிலமான தமிழகத்தில், இத்தனை பெருந் தொகையிலான எண்ணிக்கையில் ஈழத் தமிழர்கள் அகதிகளாக வந்தது மட்டுமல்லாமல்; இலங்கை அரசு, அந்நிய நாடுகள் சிலவற்றின் ஆயுத உதவியினை நாட முற்பட்டது, இந்தியாவுக்குச் சங்கடமான நிலையினைத் தோற்றுவித்து விட்டது.

இவை காரணமாக , இந்திய அரசு, இலங்கைப் பிரச்னை குறித்து மேற்கொண்ட அணுகு முறைகளை நான்கு கட்டங்களாகப் பிரித்து விளக்க முடியும்!

இந் நான்குமே 1983ம் வருட இனக் கலவரங்களின் பின்னர் நிகழ்ந்த சம்பவங்களை ஒட்டியே கணிக்கப் படுகின்றது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

நான்கு கட்ட அணுகு முறைகள்:

இலங்கை, பூரண இறைமையும் சுதந்திரமும் கொண்ட ஓர் நாடு என்பதையும், அங்கு வாழும் இரு பெரும் இனங்களும் அந்த மண்ணில் சில ஆயிரம் வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றன என்பதையும் – உட் பூசல்கள் பல இருந்தாலும் அவ்விரு இனங்களும் சகோதரத்துவத்தோடு வாழ முயற்சி செய்ததையும் இந்தியா மறக்கவில்லை. எனவே, ஒருங்கிணைந்த இலங்கையின் அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட, ஆனால் அதே சமயம், பாதிப்புற்றிருக்கும் ஈழத் தமிழினத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வல்ல

அரசியல் தீர்வு ஒன்றினுக்கான முயற்சிகளை இந்திய அரசு முடுக்கிவிட்டிருந்தது.

அவ்வாறு காணப்படும் எந்தவொரு தீர்வும், அங்கு வாழும் இரு இனங்களினதும் ஒப்புதலைப் பெற்றிருக்கவேண்டும் என்பதிலும் இந்தியா கவனம் செலுத்தியது.

எந்தவொரு தீர்வும், நாட்டைப் பிரிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்பதில் பெரும் பான்மைச் சிங்கள அரசும் ; அவ்வாறு எட்டப்படும் தீர்வின் வழியாக மீண்டும் மீண்டும் தமிழர்கள், அரசின் அடக்குமுறைகளுக்கு ஆளாகுவார்களாயின், தாம் இதுவரை செய்த உயிர்த் தியாகங்களும், போராட்ட முயற்சிகளும் வெறும் கதைகளாய்ப் போய்விடும் என்பதில் சிறுபான்மையினரான தமிழர்களும், மிகவும் எச்சரிக்கையோடு இருக்கையில், இந்தியாவின் சமரச முயற்சிகள் ஆரம்பமாகி இருந்தன.

1983 ஜூலை இனக் கலவரத்தைத் தொடர்ந்து- இந்தியப் பிரதமராக அப்போது இருந்த இந்திரா காந்தியின் ஆலோசனையின் பேரில், இந்தியாவின் விசேஷ தூதுவரான ஜி.பார்த்தசாரதியின் தலைமையில் முதற்கட்டப் பேச்சுக்கள் நடைபெற்றிருந்தன. இவை 1984 டிசம்பர்  வரை நீண்டன….!

அப்போது, தமிழர் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், ஜி.பார்த்த சாரதியினால் முன்வைக்கப்பட்ட அனெக்ஸ்- சி [Annex- C] இலங்கையின் சர்வ கட்சி மாநாட்டினால் நிராகரிக்கப் பட்டபோது, இந்த முதல் கட்டப் பேச்சுகள் முறிவடைந்தன.

அதன் பின்னர், இந்திராவின் மரணமும், இந்தியப் பொதுத்தேர்தல்களும், ராஜீவ் காந்தியின் தலைமையும் இந்தியாவில் உருவாகியிருந்தது.

சிறிது காலம் தேக்கமுற்றிருந்த சமரச்ப் பேச்சுக்கள் 1985 முற்பகுதியில் மீண்டும் தொடங்கப்பட்டபோது; ஜி.பார்த்தசாரதிக்குப் பதிலாக, வெளியுறவுச் செயலகத்திலிருந்து ரொமேஷ் பண்டாரியும், மாநிலத்துறை அமைச்சர் சிதம்பரமும் இதில் பங்குபற்றினார்கள்.

இம்முயற்சிகளின் பயனாய், இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும் சந்தித்து, இருவருமாகப் பங்களாதேஷ் சென்று, அப்போது வெள்ளத்தால் பாதிப்புற்றிருந்த அந் நாட்டின் சில பகுதிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பியதும், அதன் பின்னர் திம்புப் பேச்சுகளின் ஆரம்பமும் இவற்றுள் அடங்கும்.

எனினும், போராளிகள்-இலங்கை அரசுப் படைகள் இரண்டிற்கும் இடையே கடைப்பிடிக்கப்பட்ட இடைக்காலப் போர் ஓய்வு; எவரது நடுநிலையான கண்காணிப்பும் இன்றி, பரஸ்பரம் ஒருவரை மற்றவர் குற்றம் சாட்டுவதில் கழிந்துபோய் இறுதியில் அது மீறப்படவும் செய்தது.

இந்தக் களேபரத்தினாலும் இலங்கையின் ஆலோசனைகள் தமிழர்களது அடிப்படை உரிமைகளை எந்தவகையிலும் தீர்த்துவைக்க மாட்டாது என்னும் தமிழர் தலைவர்களது மறுப்பினாலும் இந்த இரண்டாவது சமரச முயற்சியும் முறிந்து போயிற்று.

எனினும், 1985 ஆகஸ்ட்டில், இலங்கை அரசு தமிழர்களுக்குத் தாம் வழங்கவிருக்கும் அடிப்படை உரிமைகள் பற்ரிய விபரத்தினை இந்தியாவிடம் கையளித்தது.

அதனைப் பரிசீலனை செய்த தமிழ்த் தலைவர்கள் (தமிழர் கூட்டணியின் சார்பிலும்) சில கோரிக்கைகளை முன் வைத்திருந்தார்கள்.இதன் பின்னர், 1986 மே மாதம் திரு சிதம்பரத்தின் இலங்கைப் பயணம், மற்றொரு புதிய சமரசப் பேச்சுக்கு வழிகோலியது.

பஹாமாவில் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜே.ஆரும் நேரில் சந்தித்து உரையாடியதைத் தொடர்ந்து, இந்த மூன்றாவது சமரச  முயற்சிக்கான இடம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற ‘சார்க்’ மா நாடென உறுதியாயிற்று.

இம்மாநாட்டின் போது இடம் பெற்ற முயற்சி  எந்தவொரு திடமான தீர்வினையும் அளிக்கவில்லை எனினும், 1986 டிசம்பர் 19 க்கான அரசியல் ஆலோசனைகளுக்கு வித்திட்டது இந்தச் சார்க மாநாட்டுச் சந்திப்புகளேயாகும்.

1986 டிசம்பர் 19ல், திரு சிதம்பரமும்,திரு நட்வார் சிங்கும் இலங்கை அதிபரைச் சந்தித்து உரையாடிய பின்னர் ,அவர்களது ஆலோசனைகளை ஏற்காது, அதிலிருந்து பின்வாங்கிய இலங்கை, 1987ன் ஆரம்பத்தில் இருந்து தீவிரமான போர் நடவடிக்கைகளை, வட பகுதித் தமிழர்கள் மீது எடுக்கத் தொடங்கியது.

அரசின் நடவடிக்கைகள்:

இவ்வருட (1987)ஆரம்பத்தில், சுமார் ஒன்பது லட்சம் தமிழர்கள் வாழும் பிரதேசமான யழ்ப்பாணக் குடா நாட்டுக்கான எல்லா, உணவு மற்றும் எரி பொருள் விநியோகங்களை அரசு தடை செய்தது.

அப் பகுதிக்கான மின் விநியோகமும் இடைக்கிடை இடை நிறுத்தப்பட்டது.

சுமார் 3,500 சதுர மைல்கள் பரப்பளவை உடைய வட பகுதியில், யாழ் குடா நாடு மட்டும் ஏறத்தாள 900 சதுர மைல்களாகும்.

அந்தப் பிரதேசத்தில், படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளும்- அவற்றினோடு தொடர்ந்த ;தமிழ் மக்களைப் பட்டினிபோடும் திட்டமும் உச்ச கட்டத்தை எட்டியது சென்ற மே 1987ல் தான்.

பெப்ரவரியில் வடபகுதியின் சில நகரங்களான மன்னார், கிளி நொச்சி , முல்லைத்தீவு அகியவற்றில் மிகப் பெரும் தாக்குதல்களை நடாத்திய இலங்கை ராணுவம்; ‘ஆப்பரேசன் லிபரேசன்’ என்னும் பெயரில் யாழ்குடா நாட்டைத் தாக்கி- அங்கு நிலை கொண்டிருக்கும் தமிழ்ப் போராட்ட அணிகளான எல்.ரி.ரி.ஈ [LTTE], ஈரோஸ் [EROS] இரண்டினையும் நிர்மூலமாக்க ஆயத்தம் செய்தது.

இதற்கிடையில், ஏற்கனவே கிளிநொச்சி, மன்னார் போன்ற பகுதிகளில், இலங்கை அரசு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளால் உயிரிழந்த தமிழர்கள் குறித்தும், அது போன்ற நடவடிக்கைகளால் தொடர்ந்தும் இன்னலுக்கு ஆளாகும் மக்கள் பற்றியும் இந்தியா தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவிதுக் கொண்டாலும்-இவற்றைச் ஸ்ரீலங்கா அரசு, காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை!

அது, அந் நாட்டின் இனப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில், ராணுவ ரீதியிலான நடவடிக்கை ஒன்றினையே நம்பியிருப்பதாக இந்திய அரசியல் பார்வையாளர்கள் நம்பத் தொடங்கினார்கள்!

சுமார் ஐந்து மாதங்களுக்காவது யாழ்ப்பாண மக்களைப் பட்டினி போட்டுவிட்டு, பின்னர் பெரும் எடுப்பிலான ராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலமாக, அந்தப் பிரதேசத்தைத் தமிழ்ப் போராளிகளின் கட்டுப்பாட்டிலிருந்து முற்றாக விடுவித்து விடுவது என்று இலங்கை அரசு திட்டம் தீட்டி அதற்கேற்றாற்போல் செயலபட ஆரம்பித்தது!

ஏப்ரல்[1987] மாதத்தில் யாழ்ப்பாணப் பகுதிக்குச் சென்றுவந்த ஒருவர், அங்குள்ள மக்களில் கால் பங்கிற்கும் அதிகமானோர் [அதாவது சுமார் இரண்டரை லட்சம் பேராவது] நாளொன்றுக்கு ஒரு தடவை மட்டுமே உணவு உண்ணக்கூடிய நிலையில் வாழ்வதாக குறிப்பிட்டுள்ளார். அத்தனை தூரம், இலங்கை அரசு, தனது மக்கள் என்று சொல்லிக் கொள்ளும் தமிழர்களை பட்டினிச் சாவின் விளிம்புவரை இட்டுச் செல்வது நினோதமான செயல் தான்!

இத்தனைக்கும் பின்னரே, சென்ற மே மாதத்தின் இறுதியில், ‘ஆப்பரேசன் லிபரேசன்’ திட்டம் இலங்கை ராணுவத்தால் முடுக்கி விடப்பட்டது.

இது ஏற்படுத்திய மனிதப் படு கொலைகளே இந்திய அரசின் விமான உணவுத் திட்டமான, ‘ஆப்பரேசன் பூ மாலை’யினை,  ஜூன் 4,1987 பிற்பகலில் நடாத்துவதற்கு வித்திட்டது எனலாம்.

*******************************************************************************************

.

குணவாயில் கோட்டத் தெய்வம்!…[ 1998 பங்-சித் ‘பூவரசு’-ஜெர்மனி இதழில் வெளியானது]

கவிதையில் சிலம்பு..

சர்வசித்தன்”

[ பட உதவி- அமர் சித்திர கதா]

‘அரசவையில் அமர்ந்திருந்தான் தந்தை, ஆங்கு அண்ணனொடு தம்பியுமே வீற்றி ருந்தார்,

பரவுதமிழ்ச் சான்றோர்கள் நிறைந்த மன்றில்;பழஞ்சுவடி பார்க்கின்ற ‘பார்ப்பான்’ வந்தான்,

நரைகண்ட தலைகொண்ட சேர மன்னன்;நல்வாக்குக் கூறென்று அவனை நோக்க(த்)

தரைதொட்டுக் கண்ணொற்றிச் சபை வணங்கித்,தன் ‘கலையை’ வாய்வழியே அவிழ்த்து விட்டான்…..

’ஆண்டாண்டு காலமதாய்த் தமிழ மண்ணில்,…ஆளுகைக்கு உரியவர்கள், குடியில் மூத்த

ஆண்பிள்ளை என்றவொரு மரபு உண்டு;அதைமீற எச்சபையும் துணிவதில்லை,

வேண்டாமே என்வாக்கு,அதனைச் சொன்னால்;வேண்டாத பகையன்றோ வந்து சேரும்!

தாண்டுதற்கு இயலாத ‘தர்மக் கோட்டைத் தமியேன் சொல் தவிடுபொடி யாக்கலாமோ?’

‘சொலல்வல்ல சோதிடன் சொல்; சபையிலுள்ளோர்   உள்ளத்தில் ஊசியெனப் புகுந்து தைக்க(ப்)

பலகற்றும் பதற்ற முறும் பேடிபோல   பதைபதைத்து(ப்) பார்வேந்தன் முகத்தைப் பார்த்தார்,

அலைமோதும் நெஞ்சத்தின் அவலந்தன்னை அடக்கியவன், ‘உண்மைதனைச் சொல்க’ வென்று;

நிலையற்ற மனத்தோனாயச் சபையோர் முன்னே நிற்கின்ற ‘கோள் ஞானி’ தனைப் பணித்தான்.’

’வேந்தன் சொல் கேட்டதுமே ‘எதிர்வு சொல்வோன்’ எண்ணமதில் எழுந்தவற்றைச் சபையின் முன்னே;

சாந்தமுடன் சன்ன மொழி தன்னில் அன்று ;சரித்திரத்தை மாற்றியவோர் வார்த்தை சொன்னான்!

”ஏந்தலே, இவ்வுலகு உய்யச் செங்கோலேந்த ஏற்புடையோன் இளையோனே, என்று வானில்

நீந்துகின்ற கோள்களெல்லாம் குறிப்பால் சொல்ல நேர்ந்ததை யான் ஈங்குரைப்ப தெவ்வா”றென்று?’

‘ஆங்கிருந்த இளையவனோ ஆர்த்தெ ழுந்து; அருந்தமிழர் மரபதனில் அழுக்கைச் சேர்க்கும்

ஆங்கார மொழியிதென்று இகழ்ந்து ரைத்து; அண்ணனேயிவ் வுலகாழ்வான் என்றும் சொல்லி,,

ஆங்குள்ளோர் அசையாது சிலையாய் நிற்க ;அரசணிகள் அரசாடை தாம் துறந்து;

தீங்கில்லாத் தவவாழ்வே மேலாம் என்னும் தீர்ப்பெழுதிக் கொண்டன்றே ‘இளங்கோ’ வானான்!…’

’குணவாயி கோட்டத்தின் துறவி யாகி ;குணமென்னும் குன்றேறி நின்றார் முன்னே;

மணவாளன்தனை; மதுரைக் கொலைக் களத்தில் மடிந்தவனை, நீதியெனும் அறத்தின் பேரால்,

பிணமாக்கித் தென்மதுரை தானும் தீய்த்து(ப்) பின்னோர்நாள் விண்ணுலகு போந்த செய்தி

வணங்கிமலைக் குறவர்கள் சொல்லக் கேட்டு; மன்பதையில் சிலம்பதனை ஒலிக்கச் செய்தான்!’

’சாத்தனெனும் தமிழ்ப் புலவன் தன்னோடன்பு ;சமமாகப் பகிர்ந்திருந்த போதில் முன்பு

ஆத்திப்பூச் சூடிய நற் சோழனாண்ட அழகுநகர் புகார்வாழ்ந்த கோவ லன்தன்

மூத்தோரின் ஆசியுடன் கைப்பி டித்த முக்கனியை ஒத்த உயிர் மனையாள் தன்னைக்

காத்திருக்க வைத்துஒரு கணிகை யோடு காலத்தைப் போக்கிய அக்கதை யறிந்தார்…. ‘

‘மாதவியால் மாண்புயர்தன் குடிப் பிறப்பும் மனையாட்டி தான்கொணர்ந்த பொருட் சிறப்பும்;

ஆதவனைக் கண்டொழியும் இருளே போல அலறியவை வெகுண்டோட வெறுங்கை யோடு’

தாதவிழ் பூந்தாரணியும் மனையாள் முன்னே ;தவிப்புடனே தான்வந்து நிற்கக் கண்டு;

பேதையவள், காற்சிலம்பைக் கையில் வைத்து ”காசாக்கி வருவீர்! நாம் வாழ்வோம்”, என்றாள்’

‘புகழ்மதுரை நகர்சேர்ந்து பொருளை விற்கப் பொற்கொல்லன் சூழ்ச்சியினால் கள்வன் ஆகி

இகவாழ்வைக் கொலைக்களத்தில் நீக்க,மங்கை ;இனியெதற்கு வாழ்வு? அறம் கொன்றமன்னன்;

புகவேண்டும் எரிநரகு, இந்த மண்ணும் பூண்டற்றுப் போகட்டும் என்றெ ழுந்து

மிகவூழித் தீயெனவே புயலாய்ச் சீறி மீனவனை ஒறுத்தறத்தின் தாயாய் நின்றாள்.’

‘காவிரியின் தாலாட்டில் வளர்ந்த பேதை காதலனை வைகைவள நாட்டின் மன்னன்

ஆவிபறித் தபலையளாய் ஆக்க ஊழ்தான் ஆற்றியது பெரும்பங்கு, அந்தோ; பின்னாள்

பூவிரியும் குணவாயில் கோட்டஞ் சேர்ந்து புதுமகளாய்,புகழ்சேர்க்கும் தெய்வம் ஆகிச்

சாவினையே வென்றதமிழ் நங்கை காதை சாற்றுவதே இளங்கோவின் சிலம்பு காணீர்!’

******************************************************************

மானுடம் மாண்ட மாதம்… [ 2010/05/14 ஈழநேசனில் வெளியானது]

மானுடம் மாண்ட மாதம்!

“சர்வசித்தன்”

’சுதந்திர’ இலங்கையின்  அரசியல் வரலாறு, சற்று விசித்திரமானது!

அது, காலத்துக்குக் காலம், அங்கு வாழும் சிறுபான்மை இனத்தின் மீது நடாத்தும், வன் கொடுமைகளால் நிரம்பியது என்றால் மிகையல்ல!

1948 ல் அந் நாடு தன்னை, ஆங்கிலேயர்களது அரசியல் ஆதிக்கத்தில் இருந்து விடுவித்துக் கொண்டது! அதுவரை, ஆங்கில அரசின் அடிமைகளாக வாழ்ந்த ஈழத் தமிழர்கள், தங்கள் எஜமானர்களை அப்போது மாற்றிக் கொண்டார்கள். வெள்ளைத் தோல் ஆங்கிலேயர்களுக்குப் பதிலாக தம்மைப் போன்று நிறமும்,தோற்றமும் கொண்ட; ஆனால் மொழியால் (இனத்தால்)  வேறுபாடு கொண்ட சிங்களர்கள் அவர்களது புதிய எஜமானர்களாக மாறிவிட்டிருந்தார்கள்.

அதற்கு; ஜனநாயகம் என்னும் பெயரில்;நவீன உலகு ‘கண்டுபிடித்த’– பெரும்பான்மை மக்களின் உரிமைகளையும், கலாச்சாரத்தையும் சிறுபான்மையாக உள்ளவர்கள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும் என்னும்- ‘சித்தாந்தம்’ வழிகோலியிருந்தது.

இந்தப் புதிய அரசியல் கோட்பாட்டின்படி, அறிவியலின் பிரமாண்டமான வளர்ச்சியினால், இன்று ஓர் கிராமம் போன்று குறுகி விட்டிருக்கும்  உலகிற்குப் புதிய  எஜமானர்களாக, உலகில் மிக அதிக மக்கள் தொகையினைக் கொண்ட சீனாவின் மொழியும்,காலச்சாரமுந்தான் இருக்கவேண்டும் என்றாகிறது! அதனையே, ஏனைய மொழிபேசுபவர்களும், இனங்களும் மனமுவந்து ஏற்றுக் கொண்டு அடங்கிப்போக வேண்டும்! அதுதான் உலக ஜனநாயகத்துக்கு உதாரணம் என்று நான் கூறினால் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்!

எனவே, அடிப்படையில் முரண்பாடுகளைக் கொண்டிருக்கும், பெரும்பானமைக்கே முன்னுரிமை என்னும் அரசியல் கோட்பாட்டினால், ஈழத் தமிழர்கள் வஞ்சிக்கப் பட்டார்கள் என்பதுதான் உண்மை.

அந்த உண்மை, இலங்கை சுதந்திரம் பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்ட அடுத்த வருடமே, இலங்கையின் நாடாளுமன்றத்தில் ‘ஜனநாயக’ ரீதியில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் மூலம்.வெளிச்சத்துக்கு வந்தது! 1840 ம் ஆண்டு முதல் அந் நாட்டின் மலையகத்தை வளப்படுத்தி அதன் பொருளாதாரத்தின் முதுகெலும்பாய் இருந்த ‘இந்திய வம்சாவழித் தமிழர்கள்’ சுமார் ஒரு நூற்றாண்டின் பின்னர் 1949ல்,அந்த மண்ணிற்கு உரிமையற்றவர்களாய் ஆக்கப்பட்டார்கள். அவர்கள் ‘தமிழர்கள்’ ஆக இருந்ததே அதற்குக் காரணமாகும்.

ஆனால், இலங்கை சுதந்திரம் பெற்றுச் சுமார் ஒன்பது வருடங்களின் பின்னர், 1957 ல்;  ஆங்கில அரசிடமிருந்து விடுதலை பெற்ற மலேசியாவில், சுதந்திரத்துக்கு முன் அந்த மண்ணில் பிறந்த அனைவருமே குடியுரிமை பெற்றார்கள். சிங்கப்பூரிலும் இதே நிலைதான்!

இன்று இந்த நாடுகளின் வளமும், அவற்றின் நாணயங்களுக்கு ஈடாக இலங்கை நாணயம் கொண்டிருக்கும் மதிப்பும்; எத்தகையது என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

1958ல் ,1960ல்,1977ல்.1983ல் மிகப்பெரிய அளவில் தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரங்கள் அந் நாட்டில் இடம்பெற்றிருக்கின்றன.

1981 ஜூனில், யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்ட நிகழ்வு, ஆட்சியாளர்கள் எவ்வளவு தூரம் தமிழர்கள் மீது காழ்ப்புணர்வுடன் செயற்பட்டார்கள் என்பதை வெளியுலகுக்கு எடுத்துக் காட்டிய சம்பவம் எனலாம்.

அதனைத் தொடர்ந்து 1983ல் இடம்பெற்றதுதான் ,கறுப்பு யூலை என அழைக்கப்படும் பாரிய இன அழிப்பு நடவடிக்கைகள்.

இதன் காரணமாகத்தான் ‘இந்திரா காந்தியின் அரசு’ ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிட்டவேண்டுமாயின், அங்கு தமிழர்கள் அரச அடக்குமுறைகளுக்குப் பலியாகும் நிலையைத் தவிர்ப்பதற்கு அவர்களும் ஓரளவு ‘பலத்துடன்’ இருப்பது அவசியம் என்பதை உணர்ந்தது. அதன் தொடர்ச்சியாகவே பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சியை வழங்க முன்வந்தது.

ஆனால், அதே இந்தியா இன்றைய சோனியாவின் தலைமையில், சென்ற வருடம் மே மாதம் இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைகளைச் சர்வதேசம் கண்டித்தபோது, அதற்கு எதிராக, தனது தோழமை நாடுகள் சிலவற்றின் உதவியோடு, குற்றமிழைத்த ஸ்ரீலங்கா அரசின் செயல்களுக்கு முட்டுக்கொடுத்தது!

காந்தியின் தேசம் என்னும் பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்திய இந்தச்செயல் மனிதாபிமானம் மிக்க எவராலும் இலகுவில் ஜீரணிக்க இயலாதது.

இதில், மிகப்பெரும் முரண்பாடு யாதெனில், அரசியலில் அன்புடமை(அஹிம்சை)த்தத்துவத்தைக் கடைப்பிடித்து இந்தியாவுக்குச் சுதந்திரத்தினைப் பெற்றுக்கொடுத்தவர் மகாத்மா காந்தி என்றால்;   ஏறத்தாள இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே உலகினுக்கு அஹிம்சா தத்துவத்தைப் போதித்த புத்தரைப் போற்றும் நாடு இலங்கை! அந்த அஹிம்சாமூர்த்தியின் நினைவைப் போற்றும் விசாக தினம் ( வெசாக் பண்டிகை) கொண்டாடப்படும் மே மாதத்தில்,அந் நாட்டின் அரசு  நடாத்திய ‘நர வேட்டைக்கு எல்லாவகையிலும் உதவி செய்து அதற்கான ‘புகழை’த் தன தாக்கிக் கொண்டது இன்றைய இந்தியத் தலைமை!

உயிர்கள் அனைத்திற்கும் அன்பே தெய்வீகத்தைத் தரும் என்னும் மானுட நேயத்தைப் போதித்த புத்தரைப் போற்றும் நாடு, பல்லாயிரம் (தமிழ்) உயிர்களை வெந்தீக் குண்டுகளால் எரியூட்டி அழிக்க, அரசியலில் அன்புடமையால் வெற்றிகண்ட காந்தியின் தேசம் அக்கொடூரத்துக்குத் துணைபோன அவலம் ;மானுட வரலாறு காலந்தோறும் நாகரீக முதிர்ச்சி பெற்றுவருகிறது எனத் ‘தம்பட்டம்’ அடித்துக்கொள்ளும் . இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தத்தில் நடைபெற்றிருக்கிறது!

முதல் முப்பது வருடங்கள் அறவழி அரசியல் போராட்டங்களில் ஈடுபட்ட ஈழத்தமிழர்கள், காலப் போக்கில் ஆயுதப் போராட்டத்தில் இறங்கிய சமயத்தில், இந்தியா உட்பட உலக நாடுகள் யாவும்’அரசுகளிடையே’ வர்த்தக நோக்கில் மட்டும் செயலாற்றுவதைப் புறந்தள்ளிவிட்டு; மனித உரிமைகள்; இன உணர்வுகள் ; இன ஒதுக்கல்கள்  குறித்துக் கவனம் செலுத்தியிருப்பின் இப்போது நிகழ்ந்த இன அழிவையும். மனித அவலங்களையும் தவிர்த்திருக்கலாம்.

ஏன், இன்றுங்கூட ஈழமண்ணில். புத்த ஆலயங்களும்; அரச படைப்பயிற்சி நிலையங்களும் உருவாகும் வேகத்தில். வீடிழந்து;தமது உறவுகளைப் பறிகொடுத்து; எதிர்காலம் குறித்த கவலைகளோடும். பயத்தோடும் வாடும் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு உரிய உதவிகள் கிட்டவில்லை என்பது வேதனையானது.

இம் மனிதாபிமானத் தேவைகள் குறித்துச் சிறிதும் கவலை கொள்ளாது, இன்றைய ஸ்ரீலங்காவின் தென்பகுதியினைச் சீனாவும் ; வட பகுதியினை இந்தியாவும் தங்கள் அரசியல் தளங்களாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதை; இலங்கையின் அரசியலைக் கூர்ந்து கவனித்து வருபவர்கள் புரிந்து கொள்ளமுடியும்.

ஒற்றுமைக்கான வழிகளா?

இன்று இலங்கையின் அதிபர் தொடங்கி அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசியல் வாதிகள்வரை,’தமிழ்ப் பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி இலங்கையரான நாம் பேதங்களை மறந்து ஒற்றுமையாக இருப்போம்’ என்றே சொல்கிறார்கள்.

உண்மையான ஒற்றுமை ஏற்படுவதற்கான வழிகளை அவர்கள் மேற்கொள்கிறார்களா என்றால்…. அது தான் இல்லை!

ஒருவர் உணர்வினை மற்றவர் புரிந்துகொண்டு செயல்படும் பண்பு இருந்துவிட்டால் அங்கு, பேதங்கள் படிப்படியாக மறைந்துவிடும். அதிலும், ஆளும் வாய்ப்பினைப் பெற்றிருப்போர், குடிமக்களது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதன் மூலமகவே ‘நல்லாட்சியை’ வழங்க முடியும்.

ஆனால், இலங்கையில், இன்று நடப்பது என்ன ?

சென்றவருடம், உலக நாடுகளின் நேரடி-மற்றும் மறைமுக உதவியுடன், ஓர் விடுதலைப் போராட்டத்தினைப் ‘பயங்கரவாத முத்திரை’ குத்தி அடக்கி அழித்தாயிற்று!

அதற்கான ‘வெற்றி விழா’க்களும் ஏக விமரிசையுடன் கொண்டாடப்பட்டன.

அடுத்து இடம்பெறவிருந்த தேர்தல் திருவிழாவில் வெற்றிக்கனியைப் பறிப்பதற்கு இவை அவசியமானவையாக இருந்திருக்கலாம்.

அதன் பின், வெற்றியைத் தனதாக்கிக் கொண்ட ராஜபக்‌ஷேயும் அவரது கட்சியும், நாட்டின் மக்கள் எல்லோரும் ஒன்றே என்னும் சம நோக்கினை தாம் மட்டுமல்ல ஏனையோரும் உணரும் வண்ணம் செயல்படுவதுதானே, அரசுக்கு அழகு !

ஆனால் ,இந்த அரசோ, சென்றவருடப் போரில் சீரழிந்து கிடக்கும் தமிழர்களது உள்ளங்களைக் கவர்வதற்குப் பதிலாக, இந்த மே மாத மூன்றாம் வாரத்தை ‘வெற்றி வாரம்’ எனக் கொண்டாடுகிறது.

பெரும் பான்மையான தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழர் கூட்டணி மே 18 ஐ தமிழரது துயர நாளாக அறிவிக்கிறது!

அவ்வாறாயின், சிங்கள அரசு உண்மையில் வெற்றி கொண்டது ;தமிழரின் அரசினையா என்னும் கேள்வி, அரசியல் வரலாறு புரியாத குடிமகனின் உள்ளத்தில் கூட எழுவதைத் தவிர்க்க முடியாது.

அவ்வாறிருப்பினும், மகாவம்சம் போற்றும், சிங்கள அரசனான துட்டகெமுனு; தன்னால் வெற்றிகொள்ளப்பட்ட தமிழ் மன்னன் எல்லாளனுக்கு உரிய மதிப்பளித்து, அம்மன்னனின் சமாதியைக் கடக்கும் போதெல்லாம் அதற்குரிய மரியாதையை வழங்கியதாகவன்றோ குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போதுள்ள, அரசோ, போராளிகளின் நினைவிடங்களையெல்லாம் இடித்தழிக்கிறது.இவ்வாறு அழிக்கப்படும் இடங்களில், இப்போது அரசோடு ஒட்டிக்கொண்டிருக்கும் சில தமிழ்த் தலைவர்களோடு சேர்ந்து முன்பு அரச படைகளுக்கு எதிராகப் போராடியவர்களது ’வித்துடல்’ நிறந்த ‘பேழைகளும் அடக்கம் என்பதுதான் வேதனையிலும் வேதனை!

இதனை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில், ஈழ நேசனில், பஞ்சாங்கம் பற்றிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஓர் விளக்கம் மனதில் எழுகிறது. அதில் ஓரிடத்தில், ‘மாதங்களின் பெயர்களுக்கும், நட்சத்திரங்களுக்கும் இடையிலான தொடர்பு பற்றிய விபரம் உள்ளது.

அதே போன்று, இலங்கை அரசின் தமிழின விரோத நடவடிக்கை களுக்கும், மாதங்களுக்கும் இடையேயும் தொடர்பினைக் காணமுடியும் என்றே படுகிறது!

மே மாதம்- வலிசுமந்த (மானுடம் மாண்ட) மாதம்;

ஜூன் மாதம்- நூலக எரிப்பு மாதம்;

ஜூலை மாதம்-கறுப்பு (ஜூலை)மாதம்;

ஓகஸ்ட் மாதம்- (ஆவணி) அமளி மாதம்;

ஏனைய மாதங்களை நிரப்பும் வாய்ப்பினை வாசகர்களிடம் விட்டுவிடுகிறேனே!

=======================================================

அறுபத்திரண்டு ஆண்டுகளும்……. [ஏப்ரல் 11,2010 ஈழநேசனில் வெளியாகியது]

அறுபத்திரண்டு ஆண்டுகளும்; அப்பாவி(ஈழ)த் தமிழர்களும்!

“சர்வசித்தன்”

இலங்கை என்னும் சின்னஞ் சிறு தீவு நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்து அறுபத்திரண்டு வருடங்கள் கடந்து போய்விட்டன என்பதைக் கொண்டாடும் வகையில், இந்த வருட முற்பகுதியில் தென்னிலங்கையில் மிகவும் குதூகலமான முறையில் விழாக்கள் நடந்தேறியிருக்கின்றன.

நாட்டின் அதிபர் ‘புதிய துட்ட கெமுனு’வாக மீண்டும் அவதரித்திருக்கிறார்!

கி.மு இரண்டாம் நூற்றாண்டில், தமிழ் மன்னன் எல்லாளனை வீழ்த்தி அனுரதபுர நகரினைச் சிங்களருக்கே மீண்டும் பெற்றுத்தந்த இளவரசன் துட்டகெமுனுவைப் போன்று, பிரபாகரன் தலைமையில் தமிழுரிமைக்காகப் போராடியவர்கள் அத்தனைபேரையும்- போராளிகள்,பொதுமக்கள் என்ற பேதமின்றி- அழித்த இருபத்தோராம் நூற்றாண்டின் ‘சிங்கள அரசனை’ப் பாராட்டி மகிழ்ந்தார்கள் அவ்வினத்தைச் சேர்ந்த பலர்! கூடவே, வரலாற்றில் எப்போதும் இடம்பெறும் ‘விபீஷணக்’கும்பல்களும்; தாம் வெற்றி அடைந்துவிட்ட இறுமாப்பில் நெஞ்சை நிமிர்த்திப் பீறுநடை போட்டன.

சிங்கள இனம், அண்மையில் அடைந்த ‘வெற்றி’யின் நாயகர்களில் ஒருவரான அதன் படைத் ‘தளபதி’ இப்போது தனது எதிர்காலம் பற்றிய கவலைகளுடன் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறார் என்பது ஒரு புறமிருக்க, ஒரே இலங்கை; ஒரே மக்கள் என்று ‘கவர்ச்சி சுலோ’கங்களை முழங்கும் அரசு, முப்பதாண்டுப் போரில் தாம் முறியடித்துவிட்ட ‘எதிரி நாடொன்றில்’கூட அரங்கேற்றமுனையாத செயல்களைப் ,’போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறோம்’ என்னும் போர்வையில், அண்டை நாடுகள் சிலவற்றின் பொருளுதவியோடு வெகு துரிதமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது!

இவையனைத்தையும் அறிந்திருந்தும், சென்ற ஆண்டு முற்பகுதியில் வடபுலத்தில் அரங்கேறிய படுகொலைகளைக் ‘கண்டும் காணாதிருந்ததை’ப் போன்று சர்வதேசம் ‘கள்ள மௌனம்’ சாதிக்கிறது!

படுகொலைகளின் தடயங்கள் அனைத்தும் அழிக்கப்படும்வரை ‘பொறுமை காத்த’ ஐ.நா வின் தலைவர்,திடீரென ‘ஞானோதயம்’ பெற்றுவிட்டவர் போன்று இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.

ஆயிரக்கணக்கில் தமிழர்கள் எரிகுண்டுகளுக்கும்,தடைசெய்யப்பட்ட கனரக ஆயுதங்களுக்கும் பலியாகி உயிப்பிச்சை கேட்டு மன்றாடிக்கொண்டிருந்த சமயத்தில்; மெரீனா கடற்கரையில் ‘குளிரூட்டிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்’ சகிதம் ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க மூன்று மணி நேர’ உண்ணாவிரதத்தை மேற்கொண்ட ‘தலைவர்’ இப்போது ‘ஈழத் தமிழர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படாவிடில், நாம் சும்மா இருக்கமாட்டோம்’ என்று புதிதாக எதையோ ‘சுமந்து கொண்டு’ அறிக்கை விடுகிறார்.

தமிழர்கள் அழிந்தாலும் பரவாயில்லை அவர்களது நிழல்களுக்கு ஆடைகட்டி அழகு பார்க்கும் கலையில் வல்ல கலைஞர் இப்போது ‘செம் மொழி’ ஆடையுடன் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இதோ இப்போது, இலங்கையின் பொதுத் தேர்தலும் முடிந்துவிட்டது.

தேர்தல் முடிவுகள், பலரும் எதிர்பார்த்திருந்தது போன்று, அதிபரது கட்சி அறுதிப் பெரும் பான்மையுடன் மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது.

தகுதி பெற்ற வாக்காளர்களில் சுமார் அறுபது விழுக்காட்டினர் இந்தத் தேர்தலில் வாக்களித்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.என்றாலும், இலங்கை, சுதந்திரம் அடைந்ததில் இருந்து அங்கு நடைபெற்றுவந்த பொதுத் தேர்தல்கள் யாவற்றினையும் விடவும், இந்தத் தடவை வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்றும், செய்தி வெளியாகி இருக்கிறது.

சிங்களப் பகுதிகளில் அரசு அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்றும்; எதிர்க் கட்சியினர் பல குழுக்களாக்ப் பிரிந்து நின்று போட்டியிட்டதால் அரசுக்கு எதிரான வாக்குகள் சிதறிப்போய் விட்டன எனவும்; மக்கள் இவ்வாறான தேர்தல் ‘விளையாட்டுகளில்’ நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்றும் இதற்குப் பலவாறான காரணங்களை; அவரவர் சார்பு நிலைகளுக்குத் தக்கவாறு பேசிக்கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள்.

ஆட்சி அதிகாரத்துக்காகப் போட்டியிட்ட சிங்களக் கட்சிகளுக்குச் சிங்களர்களது உரிமைக்காகப் போராடும் நிர்ப்பந்தம் ஏதும் கிடையாது.

ஆங்கிலேயர் மூன்று நூற்றாண்டுகளாகச் சுரண்டிக் கொழுத்த இலங்கையை விட்டு , மூட்டைமுடிச்சுகளுடன் தங்கள் நாட்டுக்குத் திரும்பிய போது, ஜனநாயகத்தின் பேரால் தீவின் ஆட்சி அதிகாரத்தினை, ‘தலை’ எண்ணிக்கையில் அதிகமாயிருந்த சிங்களரிடம் விட்டுவிட்டுச் சென்றார்கள்.

எனவே, ஒரு நாட்டின் அரசியல் அதிகாரத்தின் வழியாகக் கிடைக்கவேண்டிய அத்தனை நலன்களையும், தீவின் பெரும்பான்மை இனம் பெற்றுக்கொள்வதில் எவ்வித தடைகளும் அதற்கு இருக்கவில்லை.

ஆனால் ஆளப்படும் இனமாக மாறியிருந்த தமிழ்த் தேசிய இனம்; அந் நாடு எதிர் கொண்ட ஒவ்வொரு ஆட்சி அதிகாரத்துக்கான தேர்தல்களின் போதும், படிப்படியாகத் தனது வாழ்வுரிமைக்கான இருப்பினைப் பறிகொடுத்தே வந்துள்ளது.

ஆட்சி அதிகாரத்துக்காகப் போராடிய பெரும் பான்மை இனத் தலைவர்கள், தாம் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக நாட்டுக்கு எவ்வாறான நல்ல திட்டங்களை அளிப்போம் என்று கூறி வாக்குக் கேட்பதை மறந்து, தமிழர்களிடமிருந்து எவற்றை எல்லாம் பறிப்போம் என்னுமாப்போல் பேசிவந்ததும் ,தேர்தல் முடிவுற்ற பின்னர் செயல்பட்டதும் , அந்நாட்டின் முதல் முப்பது வருடங்களைச் சிறுபான்மை இனத்தினை அரசியல் போராட்டங்களிலும்; அதனைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபடவைத்தது.

இப்போது முடிவடைந்துள்ள தேர்தலின் பயனாய்,அந் நாட்டில் உண்மையான அமைதியும், அதன் அதிபர் தமது வாயால் கூறும் தமிழர்-சிங்களர் என்ற பேதமற்ற சம உணர்வும் இனியாதல் நிலைபெறவேண்டுமானால்……….

சில வருடங்களுக்கு முன்னால் ஓர் மனித உரிமைப் போராளியாகத் தன்னை இனங்காட்டிக் கொண்ட இலங்கையின் இன்றைய அதிபர், இப்போது தமக்குக் கிடைத்திருக்கும் ‘அசுரத்தனமான’ வெற்றியை நன்கு பயன்படுத்தி இனப்பூசலுக்கு ஏற்ற ஓர் தீர்வினை எட்ட இயலும்.

இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்த இரு இனங்களும் ‘நாம் இலங்கையரே’ என்று மார்தட்டிச் சொல்லும் நிலையை உருவாக்குவது ஆளுபவர்களது கைகளில்தான் தங்கியிருக்கிறது.

நியாயத்துக்காகக் கூடப் போராடும் திராணியற்றுக்கிடக்கும் ஈழத்தமிழினத்தின் தன்மானத்துக்கும், சுக வாழ்வுக்கும் பாதுகாப்பளிக்கும் அரசியல் கடமை ஆளும் பெரும்பான்மை இனத்துக்கே உண்டு.

இதனை மறுப்பதும், அந்த இனத்தையே ஒறுப்பதும் மானுட விழுமியங்களை அழிப்பதற்கு ஒப்பானதாகும். இவற்றை இனியும் பார்த்துக் கொண்டிருக்கும் சர்வதேசமும், அண்டை நாடுகளும்கூட ஒருவகையில் குற்றவாளிகளே.

************************************************************************************************************************

கடுங்கோட்பாடும், கால் பிடி…. ( 08/02/2010 ஈழநேசன் இணைய இதழில் வெளியானது)

கடுங்கோட்பாடும் ‘கால் பிடி’ வைத்தியமும் !

சர்வசித்தன்”

சென்ற பெப் 4 ந் தேதிக்குப்பின், இலங்கையில் இருந்து வெளியாகிய எல்லாப் பத்திரிகைகளிலும் அந்நாட்டின் அதிபர்; கண்டி மாநகரில் ஆற்றியிருந்த உரை குறித்த விபரங்களும்,அதுபற்றிய ஆசிரியத் தலையங்கங்களும் வெளியாகியிருந்தன.

இலங்கையில் எந்தக் கட்சி அரசு அமைத்தாலும்-அந்த அரசுக்குச் சாதகமான செய்திகளையும், அதன் திட்டங்களை ஆதரித்து தலையங்கங்களைத் தீட்டுவதிலும் ‘லேக் ஹவுஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான தமிழ்-ஆங்கில-சிங்கள ஏடுகள் என்றும் பின்னிற்பதில்லை. ஒருவகையில் அரசின் ‘ஊதுகுழல்’களாகச் செயல்படும் இப்பத்திரிகைகள் இந்த முறையும் தங்கள் கடமையினைச்(?) செவ்வனே நிறைவேற்றியிருக்கின்றன.

இக் குழுமத்தில் இருந்து வெளியாகும் தமிழ் நாளிதழான ‘தினகரனு’ம் தன் பங்குக்கு ஆசிரியத் தலையங்கமும், செய்திகளும் வெளியிடத் தவறவில்லை.

தமிழ் நாட்டின் தினகரன் எவ்வாறு தி.மு.க வின் ‘புகழ் பாடுவதில்’ அதிக சிரத்தையுடன் செயல்படுகிறதோ அந்தளவு சிரத்தையுடன் இலங்கை அரசு செய்யும் அத்தனை செயல்களையும் ‘கண்ணை மூடிக் கொண்டு’ ஆதரிப்பது இந்தத் ‘தினகர’னின் கடமைகளில் ஒன்று!

இலங்கையின் பொருளாதாரம், சமூகச் சட்டங்கள், வெளியுலகத் தொடர்புகள் அல்லது நிர்வாக அலகுகள்  தொடர்பான பிரச்னைகளை எழுதும்போது, அவை அங்கு வாழும் இரு தேசீய இனங்களான தமிழ்-சிங்கள மக்களது பொதுவான எண்ணங்களைப் பிரதிபலிப்பனவாக அமைந்திருப்பதில் தப்பேதும் கிடையாது. அவை அவ்வாறு அமைவது தேவையானதுங்கூட.

ஆனால், ஓர் இனம் சம்பந்தப்பட்ட- அதுவும், ‘சிறு பான்மை’ இனம் எனச்சொல்லப்படும் ‘தமிழ்த் தேசிய இனம்’ பற்றிய சர்ச்சைகள் உருவாகும் சமயங்களில், ஒரு தமிழ் நாளிதழ் தனது தலையங்கத்தில், அரசினைத் துதிபாடுவதும், பாதிப்புற்றுக் கிடப்பவர்களுக்கு மட்டும் ஒற்றுமை குறித்து ஆலோசனைகளை வழங்குவதும் வேடிக்கையாக இருக்கிறது

பெப் 5 தேதியிட்ட தினகரனின் தலையங்கம்- மகிந்த ராஜபக்‌ஷவின் ‘சுதந்திர தின’ உரையினை… ஆஹா…ஓஹோ.. எனப் புகழ்ந்திருக்கிறது ! நாட்டின் அதிபரது பேச்சினைப் புகழ்ந்து எழுதும் கடமை ஓர் இதழுக்குக் கிடையாதா என்று நீங்கள் கேட்கலாம் ……..  தாராளமாக எழுதலாம்… அவரது உரையில் உள்ள நியாயமான கருத்துகளை வலியுறுத்தி எழுதுவது தவறல்ல. ஆனால், அவர் தமது உரையின்போது தெரிவித்த தமிழ்த்தேசிய இனம் குறித்த தகவல்களை, ஓர் தமிழ்ப்பத்திரிகை- அதுவும் தமிழர்களால் வாசிக்கப்படுவதற்காக அச்சிடப்படும் ‘தமிழ்ப் பத்திரிகை’ – அவரது உரையினை நேரடியாகக் கண்டித்து எழுதாவிடினும், அதனை மறைமுகமாகவேனும், சம்பந்தப்பட்டவருக்கும் அவரது இனத்தினருக்கும் உணர்த்தும் வகையில் எழுதுவதை யாரும் ஜனநாயக விரோதம் என்று கூறிவிடப் போவதில்லை.

இலங்கையின் பௌத்தமத பீடம் என வர்ணிக்கப்படும், தலதா மாளிகை இடம்பெற்றிருக்கும், கண்டியில்  இலங்கையின் 62 வது சுதந்திர தினத்தினைக் கொண்டாடிய அதிபர் தமது உரையின்போது… இடையே தமிழிலும் உரையாற்றியதன் மூலம், தாம் தமிழருக்கு விரோதியல்ல(!) என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் எனக் குதூகலிக்கும் சிலர்.. அவர் சொன்னவற்றில் பொதிந்துள்ள உட்பொருளை ஆராயவோ அல்லது அது பற்றிக் கருத்துரைக்கவோ முன்வரவில்லை.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘உதயன்’ இதற்கு விதிவிலக்காகத் தனது தலையங்கத்தில், அதிபரது பேச்சு குறித்த வேதனையைத் தெரிவித்திருக்கிறது.

தனக்கெனத் தனி நாடு கேட்டுப் போராடிய ஓர் தேசிய இனத்துக்கு,’கிராம’ அபிவிருத்திமூலம் உரிமைகளை அளிக்கப்போவதாகக் கூறும் ஓர் நாட்டின் அதிபரால், அங்கு நிலவும் இனப்பிரச்னக்குத் தீர்வுகாண இயலுமா என்னும் சந்தேகத்தை அவ்வேடு வெளியிட்டிருக்கிறது!

இலங்கை அதிபர் தமது உரையில் – அந்நாட்டில் பல வருடங்களாக  தமிழ் மற்றும் சிங்கள தேசிய இனங்களுக்கிடையில் நிலவிவரும் இன-அரசியல் முரண்பாடுகள் குறித்தோ அதனைத் தாம் எவ்வாறு தீர்த்துவைக்கப் போகிறார் என்பது பற்றியோ எந்தக் கருத்தினையும் கூறவில்லை.

மாறாக- அங்கு ‘சிறுபான்மை இனம்’ என்று ஓரினம் இல்லை என்றும் , அனைவரும் ‘இலங்கையரே’ என்றும்; முப்பது வருட காலமாக அந்நாட்டில் நிலவிவந்த ‘பயங்கரவாதத்தை’ ஒழித்து ( இதில் சரத் பொன்சேகாவுக்கும் கணிசமான பங்கிருக்கிறது என்பதை ஏனோ சொல்லாமல் விட்டுவிட்டார்) நாட்டை ஒற்றுமைப் படுத்திவிட்டதாகவும் கூறியவர், இனிமேல் கிராமங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கி அதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்பப் போவதாகவும் பிரகடனஞ் செய்திருக்கிறார்.

இலங்கையில் சிறுபான்மையினர் என்று எவருமே கிடையாது என அடித்துக் கூறும் ராஜபக்‌ஷே ; அங்கு சிங்களமும் பௌத்தமும் அரசின் அங்கீகாரம் பெற்றுள்ள மொழியும், மதமும் என்பதை வசதியாக மறந்துவிட்டு அல்லது மறைத்துக் கொண்டு- இலங்கை ஒரேநாடு எனபதன் அர்த்தம்தான் புரியவில்லை.

அங்கு மூவாயிரம் வருடங்களாக- சிங்கள வம்சம் அந்நாட்டில் துளிர்விடுவதற்கு முன்பாகவே- அங்கு தனக்கெனப் பிரதேசத்தையும், மொழியினையும், பண்பாட்டினையும் கொண்டிருக்கும் ஓர் தேசிய இனம்; ஒன்றுபட்ட இலங்கை என்னும் பேரால்—     சிங்கள மொழியையும், பௌத்த மதத்தையும் ஏற்றுக்கொண்டு சிங்கள-பௌத்தர்களாக மாறிவிடுவதே இனப்பிரச்னைக்குத் தாம் வைத்திருக்கும் தீர்வு என்கிறாரா அதிபர்?

இவற்றையெல்லாம்….. வெளிப்படையாக உரத்துக் கேட்டுவிட்டால், சிங்களப் பெரும்பான்மை இனம் தமிழர்கள்மீது சீற்றம் கொண்டுவிடும், எனவே ‘அடக்கி வாசியுங்கள்’ என்று ஆலோசனை வழங்குகிறது அரசின் ‘ஊது குழ’லான தமிழ்ப் பத்திரிகை ஒன்று.

கடந்த முப்பது வருடங்களாகப் பயங்கரவாதம் இருந்தது என்று ஒரு பேச்சுக்காக ஒப்புக்கொண்டாலும் அதற்கு முன்னர், சுதந்திரம் பெற்றதிலிருந்து முப்பத்திரண்டு வருடங்களாக அங்கு ஜனநாயக வழிகளில்தானே தமிழர்கள் போராடிவந்தார்கள். அப்போதும், இன்று போலவே வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் யாவரும் ஓரணியில் நின்று, எமது அரசியல் உரிமைகள் சிங்கள அரசால் மறுக்கப்படுகின்றன- அவற்றுக்கு உரிய தீர்வினை ஆளும் பெரும்பான்மை அரசு வழங்கவேண்டும் என அரசியல் ரீதியாகப் போராடிக் கொண்டிருந்த சமயத்தில்; இன்று சிங்களத்தை ஆள்வதற்கு முட்டிமோதிக் கொண்டிருக்கும்; யூ.என்.பி யும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுமே மாறிமாறி ஆட்சியில் இருந்தன.

அவை ஆட்சி பீடம் ஏறிய சமயங்களிலெல்லாம் தமிழ் அரசியல் தலைவர்களுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதும், பின்னர் அவற்றைக் கிழித்து வீசுவதும் என்றுதானே காலத்தைக்  கடத்திக்கொண்டிருந்தார்கள்?

அதனால் ஏற்பட்ட ஏமாற்றங்கள் அளித்த வேதனையாலும், மறுபக்கம் தமிழர்களது வாழ்வாதார உரிமைகள் படிப்படியாக மறுக்கப்பட்டு; காலத்துக்குக் காலம் நிகழ்ந்த இனக்கலவரங்களால் தமிழன் என்றாலே அஞ்சிவாழும் நிலையத் தவிர வேறு வழியேகிடையாது என்னும் நிலை உருவாகிய போது பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களால் வளர்த்தெடுக்கப் பட்டதே ஆயுதப் போராட்டம்.உண்மையில், தமிழ்த்தேசிய இனத்தினை ஆயுதப் போராட்டத்தில் உந்தித்தள்ளியதில் பெரும்பான்மைச் சிங்கள  அரசுகளுக்குச் சம்பந்தம் கிடையாதா?

தமிழ்ப் பயங்கரவாதம் இருந்த சமயத்திலா…1956ல் உருவான . ‘பண்டா-செல்வா’ ஒப்பந்தம் கிழித்து வீசப்பட்டு அதன் தொடர்ச்சியாக சிங்கள-தமிழ் இனக் கலவரம் வெடித்தது ?

1977 ல் மலையகத்தமிழர்கள் பல நூற்றுவர் கொல்லப்படக் காரணமாக விளங்கிய இனக் கலவரம்,தமிழ்ப் பயங்கரவாதத்தினாலா நிகழ்ந்தது ?

1981ல் தமிழர்களது அரிய பொக்கிஷமான யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்டதற்குத் தமிழ்ப் பயங்கரவாதந்தான் காரணமா?

அதிகம் ஏன், 1983 ல் உலகமே அதிர்ச்சியடையும் இனக்கலவரத்தின் சூத்திரதாரிகள் தமிழ்ப்பயங்கரவாதிகளா ?

இவற்றையெல்லாம் கேட்டுவிட்டால், சிங்களப் பெரும்பான்மையினம் தமிழர்களுக்கு எந்த உரிமைகளையும் வழங்க முன்வரமாட்டாதாம்.எனவே ‘கடுங்கோட்பாட்டாளர்களைப் பொருட்படுத்தாமல் அரசாங்கம் தீர்வு முயற்சியை முன்னெடுக்க வேண்டுமாம்!

”சிறுபானமை இனங்களின் உரிமைக் கோரிக்கைகள் யதார்த்தத்துக்கு அமைவாக இல்லாதிருக்கும் பட்சத்தில் அவை பலனளிப்பது சாத்தியமில்லை.கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்கள் இதனை உணர்த்தி நிற்கின்றன” என்னும் பொருள்பட எழுதப்படும் தலையங்கங்கள் தமிழர்களிடம் எஞ்சியிருக்கும் தன்மானத்துக்கு விடும் சவாலாகவே தோன்றுகின்றன.

இலங்கையில் இப்போது அரங்கேறிவரும் அரசியல் காட்சிகளைப் பார்க்கும் போது, சில வருடங்களுக்கு முன்னால், நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் அவர் மருத்துவ ரீதியாகக் கூறும் “கட்டிப்புடி” வைத்தியம் போன்று….. இலங்கை அரசியலிலும் இனப்பிரச்னைக்குத் தீர்வுகாண்பதற்கு, அங்குள்ள சில அரசுசார்புத் தமிழ்  அரசியல்வாதிகள் சொல்ல ஆரம்பித்திருப்பது போன்று “கால் பிடி” மருத்துவம் ஒருவேளை சரிப்பட்டு வருமோ தெரியவில்லை!

படத்தில் கமலஹாசனுக்கு ‘கட்டிப்புடி’ காட்சிகள் நடிப்பதற்குச் சுலபமாயும் அவருக்கு விருப்பமானதாயும்(?) இருந்திருக்கும்.

ஆனால், ஈழத்தமிழர்களுக்கு ‘கால் பிடி’பதென்பது இலகுவில் சாத்தியமாகுமா ?அதற்கு அவர்களது தன்மானம் இடந்தருமா ?

காலந்தான் பதில் கூறவேண்டும்.

( 8/2/2010  ‘ஈழநேசன்’ இணைய சஞ்சிகையில் வெளியானது)

இன முரண்பாட்டை…[ 30/01/2010. ‘நம் நாடு’-கனடா; இதழில் வெளியானது]

இன முரண்பாட்டினை ஆழமாக்கிய அதிபர் தேர்தல்!

சர்வசித்தன்”

இலங்கையின் அதிபருக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. மீண்டும் மஹிந்த ராஜபக்‌ஷ பெரும்பான்மைச் சிங்களரின் மிகப்பெரிய ஆதரவோடு , சிங்களர் மற்றும் தமிழர்களுக்குச் சொந்தமான இலங்கையின் ஆட்சிப்பொறுப்பினைத் தொடருவதற்கான ஆணையைப் பெற்றுவிட்டார். முழு இலங்கையிலும் அளிக்கப்பட்ட வாக்குகளில் சுமார் 57.88 வீதம் ராஜபக்‌ஷவுக்கும், 40.15 வீதம் எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கும் கிடைத்துள்ளன.

ஈழத்தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசமான வடக்கு-கிழக்கு மாகாணங்களில் எதிரணியைச் சேர்ந்த பொன்சேகா சுமார் 57.9 வீதமான வாக்குகளைப் பெற்றிருக்கும்போது, ராஜபக்‌ஷாவுக்கு 35.34 வீதமே கிட்டியுள்ளது.

அதாவது, ஈழத்தமிழர்களைப் பொறுத்தமட்டில்  இன்றைய அதிபர் மேலும் தொடர்ந்து தங்களை ஆளுவதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை, எதிரணி வேட்பாளரான பொன்சேகாவுக்குத் தங்கள் ஆதரவினை வெளிப்படுத்தியதன் மூலம் உலகிற்கு உணர்த்தியுள்ளனர்.

தமிழர் கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் கூறியவற்றிற்கு ஈழத்தமிழர்கள் தங்கள் ஆதரவினைத் தெரிவித்துள்ளார்கள் என்றும் இதனைக் குறிப்பிடலாம்.

அதுமட்டுமல்லாமல், 1956ல் அன்றைய இலங்கையின் பிரதமராகவிருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்காவினால் கொண்டுவரப்பட்ட  தனிச் சிங்களச் சட்டத்தினை எதிர்த்ததிலிருந்து, இன்றுவரை தொடர்ந்து 53 வருடங்களாகத் தமிழர்களில் பெரும்பானமையானவர்கள் ஓரணியில், தங்களது உரிமைகளுக்காக குரல்கொடுத்துவருவதையும் அவதானிக்க முடிகிறது.

அதே போன்று, அன்று பண்டார நாயக்கா, சிங்களர்களது வாக்குகளைப் பெறுவதற்காக, ”சிங்களம் மட்டும்” என்னும் சுலோகத்தினை முன்வைத்து தமது வெற்றியினைப் பெற்றதுபோன்று, இன்றும், ராஜபக்‌ஷே , எதிரணி வேட்பாளர், தமிழர்கட்சிகளுடன் ரகசிய ஒப்பந்தத்தினை ஏற்படுத்தியுள்ளார் எனவே தமிழர்கள் அவரை ஆதரிக்கப்போகிறார்கள், சிங்களர்களான நீங்கள் என்னை ஆதரிப்பதன் மூலமாகவே, தமிழர்களுக்கெதிரான போரில் நாம் பெற்ற வெற்றியினைத் தக்க வைத்துக் கொள்ளமுடியும் என்னும் பொருள்படத் தமது பிரச்சாரத்தை முன்னெடுத்து, இப்போதைய வெற்றியைப் பெற்றுள்ளார்.

ஆனால், இதன் பின்னணியில், சிங்களத் தலைமைகள் தாங்கள் கூறும் ‘ஒன்றுபட்ட இலங்கை’ என்னும் கொள்கைக்கு எதிராக மீண்டும் ‘சிங்கள-தமிழ்’ இன முரண்பாட்டினை வலுப்படுத்தவே உதவியிருக்கிறார்கள்.

இந்தத் தேர்தல் முடிவு, சிங்கள அரசு, சிங்களர்களது ஆதரவினைப் பெற்றிருப்பதை உறுதிசெய்திருக்கிறது. ஆனால் தமிழர்கள், தங்கள் அரசியல் உரிமைகளை மறுக்கும் அரசுக்குத் தங்கள் எதிர்ப்பினை உணர்த்தும் ஒன்றாகவே இதனை வெளி உலகிற்கு அறிவித்திருக்கிறார்கள்.

பதவியினைக் கைப்பற்றவும், அதன் மூலம் தங்களையும் தங்களைச் சேர்ந்தவர்களையும் மேன்மேலும் வசதிபடைத்தவர்களாயும், அதிகாரபலம் மிக்கவர்களாயும் ஆக்கும் பொருட்டும்; சில தலைவர்களால் உருவாக்கப்பட்டு, காலத்துக்குக் காலம் ‘ஊதி வளர்க்கப்படும்’ இன பேதத்தினைப், பின்னர் அந்தத் தலைவர்களே அணைக்க இயலாமல் திணறுவதை இலங்கையில் மட்டுமல்ல, வளரும் நாடுகள் பலவற்றிலும் நாம் இன்று பார்க்கமுடிகிறது.

இன முரண்பாடுகளையும், சாதி வேறுபாடுகளையும் ஆயுதங்களாக்கித் தங்கள் அரசியல் வாழ்வை நிலைப்படுத்திக்கொள்ளும் இவர்களின் பின்னால், தங்கள் சுயநலம் சார்ந்து ஆதரவளிக்கும் சில மாவட்ட/வட்டாரச் சிறு தலைமைகள் இந்த முரண்பாடுகளுக்கு மேலும் வலுச்சேர்த்து, நாட்டின் ஒற்றுமைக்கே வேட்டுவைத்து விடுகிறார்கள். இவை மட்டுமின்றி, உரிமைக்கும்-சலுகைக்கும் வேறுபாடு தெரியாத சிலரும், அரசியலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதால் ஓர் இனத்தின் ‘போராட்டம்’ அர்த்தமற்றதாகி விடுவதற்கு இன்றைய ஈழத்தமிழர்களது அவல நிலையே சாட்சியமாகி நிற்கிறது.

தேர்தல் முடிவடைந்து தங்கள் கருத்துகளை வெளியிட்ட தலைவர்கள், தாம் எடுத்த-தாம் சார்ந்து நின்ற கருத்துகளை வலியுறுத்தி; இப்போது மக்கள் அளித்த தீர்ப்பினுக்கான தங்களது எண்ணங்களை முன்வைத்திருக்கிறார்கள்.

சிங்களத் தலைவர்களைப் பொறுத்தவரையில், இது ஓர் அதிகாரப் போட்டி மட்டுமே. ஆனால், தமிழர்களுக்கோ இது, வாழ்வாதாரங்களுடன் தொடர்புடைய ஒன்று.

போரினால் சீரழிந்துபோயிருக்கும் தமிழர்களுக்குத் தேவையான மனிதாபிமான நடவடிக்கைகள் தொடரப்படவேண்டும். அதேசமயத்தில், உணவும்,உறையுளும்,பாதுகாப்பும் அளித்துவிடுவதோடு தமிழர்களது பிரச்னைகள் தீர்ந்து விட்டதாக எடுத்துக்கொள்ள முடியாது.

இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து அடுத்த 30 வருடங்கள் ,1978 வரை, தமிழர்கள் தங்கள் உரிமைகளை முன்னிறுத்திப் போராடி வந்தார்களேயன்றி, வசதிகளைக் கேட்டுச் செல்லவில்லை.அப்போது அவர்கள் ஓரளவு அமைதியான வாழ்க்கையினையும், இலங்கையின் எந்தப் பகுதிக்கும் சென்றுவரும் வாய்ப்பினையும்,அதற்குரிய போக்குவரத்து வசதிகளையும் பெற்றேயிருந்தார்கள். எனவே, இவையனைத்தையும் பெற்றுக் கொடுப்பதுதான் ‘தமிழுரிமை’ என்னுமாப்போல் சிலர் பேசுவது வேடிக்கையானது. இவையனைத்துக்கும் மேலாக, தமிழர்களது பிரதேச, மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகள் எப்போது அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவை அரசியல் சட்டங்கள் மூலம் நிறைவேற்றப் படுகிறதோ அப்போதுதான், ஈழத்தமிழர்கள், இலங்கையில் வாழும் சிங்களப் பெரும்பானமையுடன் மனமொத்து வாழும் சூழல் உருவாகும்.

இப்போது, மீண்டும் வெற்றிபெற்றுள்ள மஹிந்த ராஜபக்‌ஷ , தமிழர்களது நீண்ட நாள் வேட்கையினை எவ்வாறு தணிக்கப்போகிறார் ? அதற்கு, அவருக்கு முட்டுக் கொடுப்பதில் பெருமைகொள்ளும்,சில தமிழ்த் தலைவர்கள் எவ்வகையில் அவருக்கும்-அதன் மூலம் தமது இனத்துக்கும் உதவப்போகிறார்கள்?

இந்தத் தேர்தலிலும், தமிழ் மக்கள் தங்கள் கருத்தினை உரிய வகையில், வாக்குச் சீட்டு என்னும் ‘ஆயுதம்’ மூலமாகத் தெரிவித்துவிட்டார்கள்.

இனி இதற்கான பதிலைத் தெரிவுசெய்யப்பட்ட தலைமையும் அவரது தமிழ் ஆதரவாளர்களுமே அளிக்கவேண்டும்.

********************************************************************************************************

எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி ? ( 24/01/2010 ஈழநேசனில் வெளியானது)

எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜனவரி 2010 23:50 சர்வசித்தன்

வரும் 26 ஆம் நாள் (26/01/2010) இலங்கையில் இடம்பெற இருக்கும் அதிபருக்கான தேர்தல் நேர்மையாகவும் ஜனநாயகப் பண்புகளுக்கு அமையவும் நடைபெறுமா என்னும் கேள்வி இப்போது எழுந்துள்ளது.

சென்ற 19/01/2010ல் இலங்கையின் தேர்தல் ஆணையாளரான தயானந்த திசாநாயக்கா வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில், எதிர்வரும் ஜனாதிபதிக்கான தேர்தலில் வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் பெருமளவில் தேர்தல் விதிகளை மீறிச்செயல்படுவதாகவும், இந்நிலையில் தாம் 26ந் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலின்போது, தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணுதல் போன்றவற்றுக்கு மட்டுமே பொறுப்பேற்கவிருப்பதாகவும் ஏனைய தேர்தல் நடைமுறைகளைச் செயல்படுத்த இயலாதிருப்பதாயும் குறிப்பிட்டிருக்கிறார்.

சுதந்திர இலங்கையின் 62 வருடகால அரசியல் வரலாற்றில், அங்கு தேர்தலை நடாத்துவதற்குப் பொறுபாகவிருக்கும் தேர்தல் ஆணையாளர் ஒருவர், இவ்வாறு ‘நொந்து போய்’ அறிக்கைவெளியிட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இங்கு தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டிருப்பது போன்றே, வெளியுலகப் பார்வையாளர்களும்; இம்முறை இலங்கையில் இடம்பெறவிருக்கும் ‘அதிபருக்’கான தேர்தல் குறித்துக் கவலை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த வெளியுலகப் பார்வையாளர்கள், சென்ற வருட முற்பகுதியில் ‘முள்ளி வாய்க்கா’லில் நிகழ்ந்துகொண்டிருந்த ‘இனப் படுகொலை’களின் போதும் இவ்வாறு ‘கவலை’ தெரிவித்துக் கொண்டுதானிருந்தார்கள் என்பது வேறுவிஷயம். எனவே, இவர்கள் அங்கு தேர்தல் முடிவடைந்து யார் வெற்றிபெற்றுள்ளார் என அறிவித்ததும் உடனடியாக அவ்வெற்றியாளருக்கு வாழ்த்துச் சொல்ல முந்தி நிற்கப்போகிறார்கள் என்பதுவும் நாம் அறிந்தவை தாம்!

இந்த ‘லட்சணத்தில் தான்’ இனி இடம்பெறப்போகும் தேர்தலில், ஈழத்தமிழர்கள் யாருக்கு ஆதரவாக வாக்களிக்கப்போகிறார்கள் அல்லது வாக்களிக்க வேண்டும் என்னும் வினா உலகத் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதில் வேடிக்கை யாதெனில்……, தமிழர்களுக்கான உரிமைப்போராட்டத்தில்…….  அது அரசியல் போராட்டமாயினுஞ்சரி அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆயுதப்போராட்டத்திலும்சரி ‘பிரிந்து நின்றே’ செயற்பட்ட ‘தமிழ்ப்பண்பு’ இப்போதும் மூன்று- நான்கு பிரிவுகளாகப் பிரிந்தே கிடக்கிறது!

ஈழத்தமிழினத்தின் கொலை நாயகர்கள் இருவருக்கிடையிலான போட்டியில் எமக்கென்ன வேலையிருக்கிறது என்று எண்ணித் தேர்தலில் எவருக்கும் ஆதரவாகச் செயல்படாது ஒதுங்கியிருக்க விரும்புபவர்கள்; இனக்கொலையின் சூத்திரதாரி மஹிந்தவேயன்றி பொன்சேகாவல்ல எனவே அவரை ஆதரிப்பதன்மூலம் ராஜபக்‌ஷேவுக்குப் பாடம் புகட்டுவோம் என நினைப்பவர்கள்; இப்போதுள்ள அதிபர் மேலும் ஆறுவருடங்களுக்குப் பதவியில் இருந்தால் தங்கள்பாடு கொண்டாட்டம் என்று எண்ணுபவர்களை ஆதரிப்பவர்கள் என மூன்றுபிரிவுகளாகப் பிளவுண்டுகிடக்கும் இந்த ஈழத்து அபலைகளிடையே நான்காவதாக சிவாஜிலிங்கம் என்னும் பெயரிலும் ஒரு தனிப்பிரிவு(?) கண்களில் தெரிகிறது!

தமிழர்கள்தான் இவ்வாறு பிரிந்துகிடக்கிறார்கள் என்பதல்ல. பெரும்பான்மைச் சிங்களர்களும் இப்போது ‘உண்மையான ஜனநாயம்’ பற்றிப்பேச ஆரம்பித்து விட்டார்கள்.அதிலும், முன்னாள் ராணுவத்தலைவரான சரத் பொன்சேகாவே, இந்நாள் ஜனாதிபதி அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் எனக் குற்றம் சுமத்துவதோடு மட்டும் நின்றுவிடாமல், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைகொண்ட சர்வதேச நாடுகள்; ராஜபக்‌ஷேயின் அரசியல் அடாவடித்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் துணைசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

‘வன்னிப் பகுதியில்’ எரிகுண்டுகளுக்கு மத்தியில் அல்லாடிக்கொண்டிருந்த தமிழர்களைக் காப்பாற்ற மனிதாபிமானம் மிக்க சர்வதேச நாடுகளிடம் உலகத் தமிழினம் மன்றாடிக்கொண்டிருந்த சமயத்தில் அதனை மறுத்து அறிக்கை வெளியிட்ட பொன்சேகா, இன்று அதே சர்வதேச நாடுகளைத் தமது பதவி வேட்டைக்குத் துணைக்கழைப்பது வேடிக்கையாகத்தானிருக்கிறது. என்றாலும், இப்போதாவது சர்வதேசமும், ஏன் பொன்சேகாவுங்கூட இலங்கையின் அதிகாரவர்க்கம் புரியும் நியாயமற்ற செயல்களை உணர்ந்து செயற்பட்டால் இனிவரும் காலங்களாவது மனிதவிழுமியங்கள் அந்நாட்டில் காப்பாற்றப்பட உதவலாம்.

எது எவ்வாறாயினும், இலங்கையின் அடுத்த அதிபர் ராஜபக்‌ஷ அல்லது பொன்சேகா இவர்கள் இருவரில் ஒருவராகத்தானிருக்க வாய்ப்புண்டு. ஏனையவர்கள் யாவரும் தாமும் அதிபர் தேர்தலில் பங்குபற்றினோம் என்னும் ‘மன நிறைவை’ அல்லது தம்மைத் தேர்தலில் நிற்குமாறு தூண்டியவர்களது கட்டளையை நிறவுசெய்த திருப்பதியை அடைவார்களேயன்றி, இலங்கையை ஆளும் வாய்ப்பினைப் பெறப்போவதில்லை.

இந்த இருவருமே தமிழினத்தின் பாதுகாவலர்களாக இருப்பார்கள் என்பதுவும் நிச்சயமற்ற ஒன்று. ஆனால், இலங்கையின் குடிமகனாக இருக்கும் வரை, ஒவ்வொரு தமிழனும் தனது ஜனநாயகக் கடமையினை வழுவாது கடைப்பிடித்தல் அவசியம்.

தேர்தலில் வாக்களிப்பது என்பதுவும் இது போன்ற கடமைகளுள் ஒன்றாகையால், இருக்கும்கொள்ளிகளுள் எது நல்ல கொள்ளிஎனச்சிந்தித்துச் செயல்படுவதைத்தவிர ஈழத்தமிழினத்துக்கு நம்பிக்கைதரும் வேறு வழியெதுவும் இப்போது தென்படவில்லை.

vvvvvvvv