ஒரே அலைவரிசையில் இயங்கும்….. [ 10-02-2011ல் எழுதியது]

ஒரே ‘அலைவரிசை’யில் இயங்கும், இலங்கை-இந்திய அரசியல்!

”சர்வசித்தன்”

தலைப்பைப் பார்த்ததும் இதுவும் மற்றொரு ‘அலைக்கற்றை’ விவகாரம் என எண்ணிவிடாதீர்கள்!

இதற்கு, ஒரே ‘அலைஅதிர்’வில்-அதாவது ‘same frequency-யில் இயங்கும் அரசியல் என்று பொருள் கொள்ளவேண்டும்!

ஆரம்ப இயற்பியலில்…. ஒலி பற்றிப் படித்தபோது, அதில் ’ஒத்த அலையதிர்வு’(sympathetic vibration) குறித்துத் தெரிந்து கொண்டேன். இதில், ஒலியின் அதிர்வுபற்றி விளக்கும் போது எமது ஆசிரியர், “ஒரு செகண்ட்டுக்கு 256அதிர்வுகளை ஏற்படுத்தும் கம்பியொன்றினை நாம் அதிரச் செய்வோமாயின், அதே அலைவரிசையினைக் கொண்டுள்ள அதற்கு அண்மையில் உள்ள மற்றொன்றிலும் தன்னிச்சையாக அதிர்வுகள் உருவாகும்” என விளக்கிய சம்பவம், இன்றைய நமது இரு அண்டை நாடுகளின் அரசியல் விவகாரங்களிலும் எவ்வாறு பொருந்திவருகிறது என நினைக்கையில் ஆச்சரியமாகத்தானிருக்கிறது.

அதிலும் “ஊழல் அலை” இவ்விரு நாடுகளையும்  ‘அரசியல் ரீதியாக(!)’ மேலும் நெருங்கிவரச் செய்திருக்கிறது என்று கூறலாம்!

அதற்கு நல்ல தொரு எடுத்துக்காட்டாக; இலங்கையில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான ’த ஐலண்ட்’[The Island],  05-2-2011 சனிக்கிழமை இதழில், தமிழகத்தைச் சேர்ந்த, தி.மு.க வின் ‘பலியாடாக’ மாற்றப்பட்டிருக்கும், முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரான ராசாவைத் தங்கள் நாட்டிற்கு வந்து ‘பாதுகாப்பாக’ இருக்குமாறு தலையங்கம் தீட்டியிருக்கிறது!? அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் தான் இந்திய மத்திய புலனாய்வுத் துறையினரால் ‘ஒன்றேமுக்கால் லட்சம் கோடி’ ரூபாய் ஊழல் தொடர்பாக ராசா கைது செய்யப்பட்டிருந்தார்.

ராசாவுக்குப் பரிந்து பேசுவதுபோன்று, தனது நாட்டின் ஊழல்களைப் பட்டியலிட்டிருக்கும் அந்த ஏடு , இந்தியாவை விடவும் இலங்கை ‘ஊழல் சுதந்திரத்துக்கு’ ஏற்புடைய நாடு எனச் சான்று வழங்கியிருக்கிறது!

இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக, அசந்தா டி மெல் இருந்த சமயத்தில் அதன் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாகப் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டமடைய நெர்ந்ததையும், அதனால் நாட்டில் எண்ணெய் விலை தாறுமாறாக ஏற்றங்கண்டதையும் சுட்டிக் காட்டி அதற்காக இன்றுவரை அங்கு யாரும் கைதுசெய்யப்பட்டதாகவோ, தண்டனை பெற்றதாகவோ தெரியவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறது.

ஒரு அரச சார்பு அதிகாரியே இலங்கையில் இவ்வளவு பெரிய ஊழலைப் புரிந்துவிட்டுப் பயமின்றித் தமது உல்லாச வாழக்கையைத் தொடராலாம் என்றால், ராசாவைப் போன்ற மத்திய அமைச்சருக்கு இங்கு எத்தகைய ‘ஊழல்களைப் புரியவும், அவ்வாறு புரிந்து விட்டுக் கைதாகாது தப்பவும் வாய்ப்புகள் அதிகம்.எனவே ‘ராசாவே நீங்கள் இந்த நாட்டில் பிறந்திருந்தால் உங்களுக்கு இத்தகைய துன்பம் ஏற்பட்டிருக்காது’ எனப் பரிவு காட்டியிருக்கிறது’(?) அந்த ஏட்டின் ஆசிரியத் தலையங்கம்.

இது மட்டுமல்ல, சந்திரிகா ஆட்சியில் நடைபெற்ற ‘ரயில் பெட்டிக் கொள்வனவில்’ நடந்த ஊழல்; 2007ல் மந்திரியான மெர்வின் சில்வா ‘காசோலை’க் கையாடல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுப் பின்னர் மிகச் சொற்ப தொகையான ரூபாய் 2,500 ஐ மட்டும் செலுத்தித் தன்னைப் புனிதராக்கிக் கொண்ட நிகழ்ச்சி  என இலங்கையின் அரசியல் ‘மாண்பு’பற்றி விளக்கும் அத் தலையங்கத்தில், 2010 செப்டம்பரில் 13 வயதேயான ஓர் பாடசாலை மாணவி தன் தோழியிடமிருந்து ஐந்து ரூபாய்களைத் திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு ‘கோர்டில்’ நிறுத்தப்பட்ட சம்பவத்தையும் சுட்டிக் காட்டியிருக்கிறது!

சரி ஊழலை மறந்து விட்டு, அரசியல் ஒழுக்கத்துக்கு வருவோம்….. ‘கலைஞரின்’ வார்த்தையில் சொல்வதானால் “ கடமை-கண்ணியம்- கட்டுப்பாடு” என வைத்துக் கொள்ளுங்களேன்…

அண்மையில், இலங்கையின் ‘மஹரகம’ பகுதியில் நடைபெற்ற, உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான பிரசாரக் கூட்டமொன்றில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ‘கம்யூனிஸ்ட் கட்சி’யினது பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சருமான டி.யூ.குணசேகரா, ‘உள்ளூராட்சியில் அங்கம் வகிப்பவருக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 5000 மட்டுமே கிடைக்கிறது. அதற்காகவா இவர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து பதவிக்கு வருகிறார்கள் ?’ என்னும் ‘மில்லியன் டாலர்’ கேள்வியை எழுப்பி,  ” அதிகாரத்தைப் பெற்ற பின்னர் கொள்ளையடிக்கவே இவர்கள் திட்டமிடுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா?” எனப் பதிலையும் ‘பிட்டு’ வைத்திருக்கிறார்! ஆனால், அவ்வாறான பேர்வழிகளுக்கு மக்கள் இனிமேலாவது வாக்களிக்காதீர்கள் என்று அறிவுரையும் கூறியிருக்கிறார்.

இதே போன்று, உண்மையைக் கூறும் மற்றொரு இலங்கை அரசியல் வாதி, முன்னைய பாராளுமன்றச் செயலாளராயிருந்த சாம் விஜேசிங்க என்கிறார்கள்.

புதிதாகப் பாராளுமன்றத்துக்கு வந்திருக்கும் மக்களவை உறுப்பினர்களுக்கென நடாத்தப்படும் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் சாம் விஜேசிங்க, புதியவர்களிடம்,” நீங்கள் எதற்காகப் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளீர்கள்” எனக் கேட்பாராம். அதற்கு அவர்களிற் பலர், தாம் மக்களுக்குச் சேவை செய்வதற்காக வந்துள்ளோம் என்பார்கள். ஆனால் அவரோ, “ம் ஹூம்.. அப்படியெல்லாம்  கிடையாது…… நீங்கள் எல்லோரும் பணம் சம்பாதிப்பதற்கும், அளவுக்கு மீறிய சலுகைகளைப் பெறுவதற்கும், பெரிய பதவிகளை அடைவதற்குமே வந்திருக்கிறீர்கள்” என்பாராம்.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர், ஓர் ‘சைக்கிள்’  வண்டியைக் கூட வாங்குவதற்கு வசதியற்றிருந்த ஒருவரின் மனைவி, அவர் அமைச்சரான சில வருடங்களில் தமது இரு கைகள் நிறையத் தங்க நகைகள் அணிந்திருப்பதைச் சுட்டிக்காட்டிக் கண்டித்த முன்னாள் அதிபர் சந்திரிகா பற்றிய செய்திகள் முன்பு வெளியாகியதும் உண்டு.

இவை அனைத்தையும்  ஆசிரியத் தலையங்கங்களாக்கி மக்கள் முன் பார்வைக்கு வைக்கின்றன இன்றைய இலங்கையின் நாளிதழ்கள்.

இவற்றைப் பார்க்கும் போது, இவ்விரு நாடுகளின் அரசியலும் ஒரே அலைவரிசையில்தான் அதிர்ந்து கொண்டிருக்கின்றன என்னும் உண்மை புலப்படுகிறதல்லவா?

[10-02-2011 ‘www.keetru.com’ல் வெளியான கட்டுரை]

 

நடிகர்களும், நாடாளும் ஆசையும்! [ 03-02-2011ல் எழுதியது]

நடிகர்களும், நாடாளும் ஆசையும்!

சர்வசித்தன்”

இன்று நாடாள்பவர்களில் பலர் ‘கைதேர்ந்த’ ”நடிகர்”களாக மாறியிருக்கும் நிலையில் தொழிலால் நடிகர்களாயிருப்பவர்கள் நாடாளும் ஆசையினைக் கொண்டிருப்பது தவறானதா எனக் கேட்கலாம்….

அல்லது, சென்ற வருட ஆரம்பத்தில் ராகுல் காந்தி கூறியிருந்த நான்கு தகுதிகளில்  ஒன்றான ‘மக்கள் ஆதரவு பெற்றவர்கள் அரசியலுக்கு வரலாம்’ என்பதில் ஒன்றான மக்கள் ஆதரவு இந்த நடிகர்களுக்கும் இருக்கிறதே எனக் காரணம் கூறலாம்……..

ஆனால்…… உண்மையில் ‘அரசியல்’ என்பது ‘மக்கள் தொண்டே’ என்பவர்கள் அருகிவிட்ட காரணத்தால்; இன்று அரசியல் என்றாலே ‘போக்கிரிகளின் புகலிடம்’ என்னும் ‘புன்மொழி’  நிரூபணமாவதைக் கண்டு வெதும்பும் எந்தக் குடிமகனும், வெறும் பிரபல்யமும், வாரிசு உரிமையும் மட்டும் ஓர் தூய அரசியல்வாதியை- சமூகத்தொண்டனை-ஓர் ‘மகாத்ம’னை உருவாக்கிவிட முடியாது என்பதை ஒப்புக்கொள்வார்கள்.

அரசியலில் புக எண்ணும் ஒவ்வொருவருக்கும் சமூக நலன் குறித்த சிந்தனையும், அதனைச் செயலாக்கும் தொண்டுணர்வும் அவசியம். அவ்வாறு தம் மனதில் உள்ள சமூக நலத்திட்டங்களைத் தடங்கலின்றி நிறைவேற்றுவதற்கு அவர்களது கையில் ஆளும் அதிகாரம் இருந்தாக வேண்டும். இந்த ஆட்சி அதிகாரத்தினைத் தாமும் ,தம்மோடொத்த சிந்தனைப் போக்கும் கொண்ட ஓர் ‘குழு’ –அதாவது ‘கட்சி’ பெறுவதன் வழியாகத் தங்கள் சமூக- இன- தேச நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்லமுடியும் என்னும் ‘தொண்டுள்ளத் தேவையே’ அரசியலாக உருவெடுக்கிறது.

ஆனால், இப்போது உள்ள அரசியல்வாதிகள் இப்படியேவா இருக்கிறார்கள்?.. அல்லது தாமும் அரசியல்வாதி ஆகவேண்டும், நாட்டின் ஆளும் அதிகாரத்தினைத் தாமும் பெறவேண்டும் என் ஆசைப்படுபவர்கள் யாவருமே இந்தத் ‘தூய’ தொண்டுள்ளத்தோடேயா இருக்கிறார்கள்? எனக் கேட்டால் அதற்குப் பதில் ‘மௌனம்’ மட்டுமே எஞ்சும்

ஒரு நல்ல பாடகராக வேண்டுமெனில் அதற்கு ஏற்ற குரல் வளம் அமையவேண்டும். அது மட்டும் அல்ல இசை பற்றிய தேர்ந்த அறிவும், பயிற்சியும் இருத்தல் வேண்டும். அதே போன்று நல்லதோர் மருத்துவருக்கு அது குறித்த படிப்பறிவும், தொண்டுள்ளமும் இருத்தல் அவசியமாகிறது. கவிஞனாயின் கற்பனை வளமும், மொழியின் மீது சிறந்த ஆளுமையும், பரந்த உலகப் பார்வையும் தேவை என்றாகிறது…. இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகச் செயல்பட அத் துறைகளுக்கே உரிய சில அடிப்படைத் தகுதிகள் தேவைப்படுகின்றன.

ஆனால் அரசியல்வாதி ஆவதற்கு, எந்த அடிப்படைத் தகுதிகளும் இங்கு தேவைப்படுவதில்லை என்பது ஆச்சரியமான உண்மை!

தொகுதிகளில் வேட்பாளர்களாக அறிமுகமாகி மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று; சட்டசபைக்கும், நாடாளுமன்றுக்கும் செல்லும் ஒருவருக்கு எவ்வித அடிப்படைத் தகுதியும் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதா ? சட்டசபை என்னும் பெயரிலேயே அது சமூக-நாட்டு நலத் திட்டங்களுக்குத் தேவையான சட்டங்களை- ஒழுக்காறுகளை உருவாக்கும் அவை என்னும் கருத்து வலியுறுத்தப்படுகிறது. அவ்வாறாயின் அங்கு பதவியில் அமரும் ஒவ்வொருவரும் ‘சட்டப்படி’ தூய்மையானவராக மட்டுமின்றிச் சட்டம் குறித்த அடிப்படை அறிவும் கொண்டவராக இருபது அவசியமல்லவா? ஆனால், இன்றோ ஊழல் வாதிகளும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரும் , ஏழைகள் மலிந்த ஓர் நாட்டில் இலவசங்களையும் , முடிந்தால் பணத்தையும் வழங்கும் வல்லமை பெற்றவர்களும், மாயத் தோற்றத்தால் மக்களை மயக்குபவர்களும் தேர்தல் மூலம் நாட்டை ஆளுபவர்களாக; நாட்டு மக்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்களாக மாறிவிடுகிறார்கள். அதன் பின்னர் அவர்களே நாட்டு மக்களின் தலைவிதியை நிர்ணயம் செய்பவர்களாகி விடுகிறார்கள்.

இவர்களிடையே உண்மையான சமூகத் தொண்டும், நல் ஒழுக்கமும் கொண்டவர்கள் மிகச் சிலராக இருப்பதனாலேயே இன்று, நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய முறையில் சீர்கேடுகள் மலியவும், அச்சீர் கேடுகள் மேலும் வளரவும் காரணமாகிறது.

இவற்றுள் இன்று தமிழ் நாட்டைப் பீடித்திருக்கும்மிகப் பெரும் அபாயம் நடிகர்களின் உருவில்வளர ஆரம்பித்திருக்கிறது.

இவ்வாறு எழுதுவதால் தமிழகத்தின் முன்னாள்முதல்வர் எம்.ஜி.ஆரையோ, ஜெயலலிதாவையோ குறிப்பிடுவதாக எண்ணவேண்டாம். அதே சமயம் நடிகர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது எனவும் பொருள் கொள்ளவும் வேண்டியதில்லை.

தான் செய்யப்போகும் செயல் (தொழில்) பற்றிய தெளிவும், திறமையும் இருப்பின் எவரும் எதிலும் முயன்று வெற்றி காணலாம். ஆனால், வெறும் கவர்ச்சி மாயையை மட்டும் நம்பி ஒருவர் தன்னால் எதனையும் செய்துவிட இயலும் என எண்ணுவது ஏற்புடையதல்ல. கையில் கத்தியை வைத்திருக்கும் ஒருவர்; மக்களின் ஆதரவு இருந்தால் நோயாளிக்கு ‘ஆபரேஷன்’ செய்துவிடலாம் என நினைப்பது போன்றதே, மக்கள் ஆதரவு இருந்தால்  நாட்டை ஆண்டுவிடலாம் என்பதும்!

தமிழகத்தின் முன்னாள் முதல்வருக்கு, திரையுலக கவர்ச்சி இருந்தது மட்டுமல்லாமல் அவர் அறிஞர் அண்ணாவின் ‘பாசறை’யில் அரசியல் அரிச்சுவடி கற்றவர் என்னும் தகுதியும், ஓர் சிறந்த மனிதாபிமானி என்னும் பண்பும் ஒருங்கே அமைந்திருந்தது. அது மட்டுமல்லாமல் தி.மு.க வின் பொருளாளர் பதவியினையும் அவர் வகித்திருந்தார். அண்ணாவுக்குப் பின், கலைஞர் புரிய ஆரம்பித்த நேர்மையீனங்களைத் தட்டிக் கேட்டதனால் கட்சியிலிருந்தும் வெளியேற்றப்பட்டவர் என்னும் ‘சிறப்புத் தகுதி’ யையும் அவர் பெற்றிருந்த காரணத்தினால் அவரால் அரசியலில் ஈடுபடவும் அதன் மூலம் நாட்டை நிர்வகிக்கவும் முடிந்தது. அவருக்கிருந்த தகுதிகளுள் மிக முக்கியமான தகுதி அவர் தன்னை ஓர் சிறந்த மனிதன் என நிலை நாட்டிக் கொண்டது எனலாம். இவற்றோடு கூடுதலாக  தோற்றக் கவர்ச்சியும், வெளிப்படையான செயல் பாடுகளும் அவரைச் சிறந்த தலைவர்களுள் ஒருவராக்கியது என்பதே உண்மை.

ஜெயலலிதாவுக்கு;  எம்.ஜி.ஆரின் ஆதரவும், அரசியலில் ஈடுபட அவரது வழிகாட்டுதலும் இருந்தது என்பதை யாரும் மறுப்பதில்லை. இவற்றோடு அவர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவர் என்னும் எண்ணமுமே; எம்.ஜி.ஆருக்குப் பின் அவரைத் தங்கள் தலைவியாக மக்கள் ஏற்றுக் கொள்ள வழி சமைத்தது.

ஆனால், அரசியல் அனுபவமோ, மக்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றலோ  அல்லது சமூக நலன்களில் தொடர்ச்சியான ஈடுபாடோ இன்றி வெறும் ‘ரசிகர்’களின் ஆதரவோடு ஆட்சியைப் பிடிப்பதும், நிர்வாகம் செயவதும் சாத்தியமான ஒன்றா ? ….   அல்லது அவ்வாறு அவர்கள் கையில் ‘தப்பித்தவறி’ ஆளும் அதிகாரம் கிடைக்குமேயாகில் அதனைச் சீரிய வகையில் நெறிப்படுத்த இயலுமா ?… இவை பற்றியெல்லாம் சிந்திக்கும் தேவை நாட்டின் குடிமகன்/மகள் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

ஆள்பவர்கள் மீதும்,முன்பு ஆண்டவர்கள் மீதும் மக்களுக்கிருந்த வெறுப்பும், அவ நம்பிக்கையும்  தான், நடிகர் விஜயகாந்துக்கு இப்போது இருக்கும் ஆதரவாகும். அ.தி.மு.க வுக்கும்; தி.மு.க வுக்கும் மாற்றாக ’49ஓ’ வுக்கு அளிக்கும் வாக்குகளே இன்று அவரின் வாக்கு வங்கியாக உயர்ந்திருக்கிறது.  உண்மையில் அவை யாவும் அவரது திறமைக்குக் கிடைத்தவை அல்ல. அவரது திரையுலக ‘வெளிச்சம்’ அவரை மக்களுக்குத் தெரிந்தவராக உருவாக்கியிருக்கிறது. அவ்வளவே… ! அவரும் இப்போதுள்ள இரு பெரும் கட்சிகளில் ஏதாவது ஒன்றில் ஐக்கியமாகிவிட்டால் அவருக்குக் கிடைத்த ‘49ஓ’ வாக்குகள் கூட இனி  எவருக்கும் கிடைக்காது போகலாம்.

திரையுலகம் சம்பந்தப்பட்ட வகையில், அன்றைய சிவாஜியில் ஆரம்பித்து, டி.ராஜேந்தர், கார்த்திக், விஜயகாந்த் இன்றைய விஜய் வரை அரசியல் ‘ஆசைப்’ பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது……….இடைக்கிடை ரஜனிகாந்தும் தமது அரசியல் பிரவேசம் பற்றிக் கூறி மிரட்டிக்கொண்டேயிருக்கிறார்!

ஆனால்   எமது ஊரில் வயதான பெரியவர்கள் சொல்வது போல் …

“காக்காய் ஓட்டத் தெரிந்தவரெல்லாம், குதிரை ஓட்ட முடியுமா?” என்று கூறும் வாக்கியந்தான்  மனதில் எழுகிறது!

[பெப் 04,2011 ‘கீற்று’வில் வெளியானது.www.keetru.com]

தமிழக மக்களை……. [25-01-2011ல் எழுதியது]

தமிழக மக்களை, ஊழல் உறுத்தாதது  ஏன்?

’சர்வசித்தன்”

“எங்கெங்கு காணினும் சக்தியடா…. “ என்னும் புரட்சிக் கவிஞனின் வரிகளுக்குப் போட்டியாக, இப்போது .

‘எங்கெங்கு காணினும் ஊழலடா –அது

எம தரசியலாளர்கை வண்ணமடா..’

எனப் பாடுமளவுக்கு இந்தியத் திரு நாட்டில் ‘மலிந்து’ கிடப்பது ஊழல் ஒன்றே!

ஆனால் இந்த ஊழல் குறித்து எதிர்க் கட்சி அரசியலாளர்களும், பொது ஊடகங்களும், அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சில அறிஞர்களும் அக்கறையுடன் பேசும் அளவுக்கு நாட்டு மக்களைப் பாதித்ததாகத் தெரியவில்லை.

இதற்கு என்ன காரணம்?

எமது தமிழ்ச் சினிமாவின் நகைச்சுவை நடிகர் வடிவேலு,எங்காவது ‘எக்குத்தப்பாக’ மாட்டிக்கொண்டு;  பின் அதிலிருந்து வெளியேறியதும், “ உட்கார்ந்து யோசிப்பாய்ங்களோ ?” என்பாரே, அது போன்று, நமது உடன்பிறப்புகளின் இந்த ‘அசமந்தப்’ போக்கிற்கான காரணத்தையும் நாம் உட்கார்ந்துதான் யோசிக்கவேண்டும் போலும்!

அவ்வாறு ‘உட்கார்ந்து யோசிக்கையில்’ என் எண்ணத்தில் எழுந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில், தமிழக வாக்காளர்கள் மிகவும் தெளிவாகவே இருப்பதாகப் படுகிறது.

இந்தத் தெளிவினை அவர்கள் எட்டுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்… அவற்றுள் தலையாயது…. ‘நமது அரசியல் வாதிகளையும், ஊழலையும் பிரித்தெடுப்பதென்பது ‘ரேஷன் கடை’  அரிசியையும்;அதில் கலந்திருக்கும்  வண்டுகளையும் பிரித்தெடுப்பதற்குச் சமம்’ என்னும் அவர்களது அனுபவம் எனலாம்.

அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு ‘இன உணர்வும்’ மிகமிக அதிகம் என்றே படுகிறது. இந்த விஷயத்தில் சீமான் போன்றவர்கள் உண்மையில் மகிழ்ச்சியடைய வேண்டும்!

இந்திய நாட்டின் மக்கள் தொகை 110 கோடி என வைத்துக் கொண்டால், அதில் சுமார் 7 கோடிப்பேர் தமிழர்கள். இது மொத்த மக்கட்தொகையில் 6.4 விழுக்காடு மட்டுமே.

இப்போது பரபரப்பாகப் பேசப்படும் 2ஜி-ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.75,000 கோடி ரூபாய்கள் என்னும் மிகப் பெரிய தொகை ’ராசா’வின் செயலால் ‘மடை மாற்றப்’ பட்டிருக்கிறது என்கிறார்கள். உண்மையில் ராசாவுக்கும் அவரது ‘உயர்மட்ட’ ஆலோசகர்களுக்கும் இவ்வாறான ஊழல் மூலம் ’கசிந்த தொகை’ எவ்வளவாக இருக்கும் ?

ஒரு பேச்சுக்காக நாம் ராசாவுக்கு 70 கோடி ‘தேறி’யிருக்கும் என்று வைத்துக்கொண்டாலும் அந்தத் தொகை தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனும்/மகளும் ஏறத்தாள ஆளுக்கு ரூபாய் 10 தினை இழந்திருக்கிறார்கள் அல்லது நாம் ஒவ்வொருவரிடமிருந்தும் ‘அவர்’ ரூபாய் பத்தினை முறையற்ற வழியில் எடுத்திருக்கிறார் என்றுதானே பொருள் !

ஆனால், இவ்வாறு எடுத்திருந்தாலும், தேர்தல் வரும் போது அவரைச் சார்ந்த கட்சி தலைக்கு 10,000 வரை அன்பளிப்பாக வழங்குவதற்கு முன்வருவதன் மூலம் எமக்கு இந்த ஊழல் அரசியலால் லாபமே என்பது இவர்களின் (பொது மக்களின்) எண்ணம். இதில் ‘இன உணர்வு’ எங்கே வருகிறது என்கிறீர்களா?

இந்த ‘ராசா’ யார் ? ஒரு தமிழர், அதுவும் கலைஞர் சொல்வது போல், ஓர் தலித் தலைவர்.  அவருக்கு ஊழல் செய்வதன் வழியாகக் கிடைத்த தொகை உண்மையில் நாட்டின் 110 கோடி மக்களும் வழங்கும் வரிப்பணத்தில் இருந்து வருவதுதானே…. ஏன் நமது அரசியல் வாதிகள் தேர்தல் அண்மித்ததும் நம் மீது அக்கறை கொண்டு அளிக்கும் ‘இலவசங்கள்’ கூட அவர்கள் பாடுபட்டு உழைத்த பணம் அல்ல. அனைத்தும் மக்களின் வரிப்பணமே…. என்றாலும், ஊழல் செய்யும் ஓர் அரசியல் வாதி சுருட்டும் தொகையில் ஒரு பகுதி மீண்டும்  ஓரளவு வசதி குறைந்த மக்கள் சிலரிடம், தேர்தல் அன்பளிப்பாக வந்து சேர்கிறது. இந்த ராசாவின் இடத்தில் வேறொருவர் ( அதாவது தமிழகத்தைச் சாராத ஒருவர்) இருந்திருப்பின் இந்தத் தொகை எப்படியும் அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் போயிருக்கும்! அவ்வாறு நடந்திருப்பின் அதில் ‘கணிசமான’ தொகை சம்பந்தப்பட்ட அமைச்சரின் மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் போது அங்குள்ள மக்களிற் சிலருக்கு ‘அன்பளிப்புகளாக’ வழங்கப்பட வாய்ப்பிருக்கிறது.

ஆனால், நமது ‘ராசா’ ஒரு தமிழராகையால் அவருக்குக் கிடைத்ததில் ஒரு பங்கினை மீண்டும் எமக்கே ‘பரிசாக’ அளிக்கும் நிலை ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் சாதாரண அமைச்சர் ஒருவர் இதன் மூலம் கோடீஸ்வரராகும் வாய்ப்பினையும் பெறுகிறார்.

எம்மைப் பொறுத்தவரையில் நாம் இழப்பது ஆளுக்குப் பத்து ரூபாயாக இருப்பினும் ஓர் தமிழ் அமைச்சரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் கோடீஸ்வரர்களாக்குகிறோம். தேர்தல் காலத்தில் இந்தத் தமிழ்க் கோடீஸ்வரர்கள் எமக்கு அளிக்கும் தொகைகளையும் பெறுகிறோம். இன உணர்வுடன் இதனை அணுகுபவர்கள் இதுபோன்ற ‘ஊழல்கள்’ ‘மாபாதகச்’ செயல் எனச் சொல்லமாட்டார்கள்!

இந்தப் புரிந்துணர்வும்(?), இனப் பற்றுந் தாம் எமது மக்களை இவ்வூழல் பேர்வழிகள்மீது கோபங் கொள்ளச் செய்யாது மன்னிக்கும் மனப்பாங்கினையும், மறக்கும் நிலையினையும் தோற்றுவிக்கிறது என் நினைக்கிறேன்.

நேர்மையற்றவர்களையும்; பாதகம் செய்பவர்களையும் பழிக்கவும் அவர்களுக்குப் பாடம் புகட்டவும் இன்றைய மக்கள் முன்வருவதில்லை. தங்களளவில் கிடைப்பது லாபம் என்னும்  எண்ணமே மேலோங்கி இருக்கிறதேயல்லாமல், சமூக அக்கறையுடன் தவறுகளைக் களையவும், தவறு செய்பவர்களைத் தண்டிக்கவும் துணியும் வரை;

‘ஊழல் அரசியல் வாதிகளின் உரிமை’ என்னும் நிலையே நீடிக்கும்.

[ 25-01-2011 “கீற்று’ இணைய இதழில் வெளியானது. www.keetru.com ]

 

 

ராகுல் காந்தியும், மாதன முத்தாவும்.[keetru.com ல் 25-12-2010ல் வெளியானது.]

ராகுல் காந்தியும், ‘மாதன முத்தாவும்

சர்வசித்தன்

இலங்கையின் பெரும்பான்மைச் சிங்களரிடையே பிரபலமாகவுள்ள நாடோடிக் கதைகளுள் ‘மாதன முத்தா’வின் கதையும் ஒன்றாகும். இது தமிழர்களிடையேயும் பிரசித்தமான ஒன்றுதான். என்றாலும், இக்கதையினையும் இந்திய தேசிய காங்கிரஸின் இளைஞர் அணிச் செயலாளர் ராகுல் காந்தியின் அண்மைய பேச்சொன்றினையும் ஒப்பிட்டு தமது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார் இலங்கையின் இடதுசாரிச் சிந்தனையாளரும், சிங்களர்களிடையேயும் ;தமிழர்கள் மீதும் அவர்களது உரிமைகள் மீதும் அக்கறைகொண்ட சிலரில்; ஒருவராக விளங்கும் , கலாநிதி விக்கிரமபாகு அவர்கள்.

முதலில், அவர் குறிப்பிட்ட ‘மாதன முத்தா’வின் கதையைப் பார்ப்போம்.

இந்த மாதனமுத்தா, ‘அனைத்தும் அறிந்தவ’னாக, பிறரால் தீர்க்கமுடியாதவற்றை எல்லாம் தீர்த்து வைப்பவனாக; உருவகம் செய்யப்பட்டுள்ள ஒருவன். அவன் தொழில் மட்பாண்டங்களைச் செய்வது.  ஒரு நாள் அவன் செய்த பானை ஒன்றினுள் அவனது ‘செல்ல’ ஆடொன்று தன் தலையை நுழைத்துக் கொண்டது. ஆட்டின் தலையில் இருந்த அதன் கொம்புகள் இரண்டும் பானையுள் வசமாக மாட்டிக் கொள்ளவே அது தன் தலையை வெளியே எடுக்க முடியாமல் போயிற்று. அனைத்திலும் வல்லவனான மாதன முத்தா; ஆட்டின் தலையை பானையைலிருந்து  மீட்கும் முயற்சியில் ஈடுபடலானான்… அப்போது அவனது மூளையில் அபூர்வமான எண்ணம் ஒன்று உதித்தது. ஆட்டின் தலையை வெட்டி, முதலில் அதன் உடலையும், பானையையும் காப்பாற்றி விடலாம் ,பின்னர் தலையை வெளியே எடுத்து அதன் உடலுடன் பொருத்திவிடலாம் என்னும் தனது சிந்தனைக்குச் செயலுருக் கொடுக்க முனைந்தான் அவன்!. விளைவு என்னவாயிருக்கும் என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்குமல்லவா?

கடைசியில் ஆட்டையும் இழந்து,பானையுள் அகப்பட்ட அதன் தலையை வெளியே எடுக்க இயலாமல் பானையையும் உடைத்தான் அந்த அதிபுத்திசாலி.

ராகுல் காந்தி அவர்கள், அண்மையில் தமிழகத்துக்கு வருகை தந்த சமயம், ஈழத்தமிழர்களது துயர் இன்னும் தீரவில்லை என்பதையிட்டுத் தாம் கவலைப் படுவதாகக் குறிப்பிட்டிருந்ததையும்; இந்த ‘மாதன முத்தா’வின் செயலையுமே கலாநிதி விக்கிரமபாகு ஒப்பிட்டிருந்தார்.

இலங்கைத் தமிழர்களது அரசியல் உரிமைகளைப் பேச்சுவார்த்தைகள் மூலமாகத் தீர்க்கும் வலிமை இந்திய அரசிடம் உண்டு, என்றாலும் அது ஏனோ அவ்வாறு செயல்பட முயன்றதில்லை. இந்திரா காந்தியின் காலத்திற்குப் பின்னர் அதன் அணுகு முறையில் பாரிய வேறுபாடு உருவாகிவிட்டது. உண்மையில் இலங்கையின் மிதவாதத் தமிழ்த் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து; அந்நாட்டின் இரு தேசிய இனங்களும் தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்காத வகையில்; இலங்கை அரசுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் வலிமையினை இந்திய அரசு பெற்றிருந்தது. அவ்வாறு  உருவாகும் ஒப்பந்தங்களை உரிய வகையில் செயல்படுத்துவதன் மூலமாக- எந்த உரிமைகளுகாக புலிகள் இயக்கம் ஆயுதம் ஏந்தினார்களோ அதனை வலுவற்றதாக்கி- அந் நாட்டில் இத்தனை கொடிய உயிரிழப்புகள் ஏற்படாவண்ணம் தடுத்திருக்க முடியும்.

ஆனால், இந்தியாவோ இலங்கை அரசின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காக அதற்கு ஆயுதங்களையும் ஆலோசனைகளையும் வழங்கியது. இலங்கை அரசுடனான உறவு என்னும் பானையைக் காப்பாற்றும் முயற்சியில் தமிழர்களான அப்பாவி ஆடுகளை அது ‘பலி’யாக்க முனைந்தது. ஆனால் இன்று அந்தப் பானையைக் கூடக் காப்பாற்றுவதற்கு அது திண்டாடிகொண்டிருக்கிறது என்பதே உண்மை!

இந்தச் சந்தர்ப்பத்தில்தான், ராகுல் காந்தி அவர்கள் ஈழத் தமிழர் துயர் கண்டு; ‘கலைஞர் பாணியில்’ கவலைப் பட்டிருக்கிறார்.

ஆனால், இன்னும்கூடக் காலம் கடந்துவிடவில்லை.

ராகுல் காந்தி கூறியது போல், அவர் உண்மையிலேயே ஈழத் தமிழர்களுக்காகக் கவலைப் படுபவராக இருந்தால்… தமது அன்னையும் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவியுமான சோனியாகாந்தியின் மூலம், இலங்கையின் மிதவாத அரசியலாளர்கள் 1977 க்கு முன்பிருந்தே கோரிவந்த ‘சமஷ்டி அரசியல்’ அமைப்பினை அந் நாட்டில் ஏற்படுத்தி; அங்கு வாழும் தமிழர்கள் தமது பிரதேசத்தில்-அதே சமையம் பிளவுபடாத ‘இலங்கை’யில் உரிமையுடன் வாழ அரசியல் ரீதியாக அழுத்தங்களை உருவாக்கமுடியும்.

1984 ம் ஆண்டின் ஆரம்பத்தில்,அன்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த அத்துலத்முதலி, இந்தியாவுக்கு வருகை தந்த சமயத்தில், அன்றைய பாரதப் பிரதமரும்,ராகுல் காந்தியின் பாட்டியுமான இந்திராகாந்தி அவர்கள், “ இன்று இலங்கையின் நாடாளுமன்றத்தில் உங்கள் கட்சியே [யு.என்.பி] அறுதிப் பெரும் பான்மையுடன் இருக்கிறது, அவாறிருக்கையில் நீங்கள் எமக்குத் தரும் வாக்குறுதிகளை உங்கள் அதிபரால் [ஜே.ஆர் ] எவ்வாறு  நிறைவேற்றமுடியாதிருக்கும் ?” எனக் கடிந்து கொண்டதாக அப்போது செய்தி வெளியாகியிருந்தது. ஜி.பார்த்தசாரதி  மூலம் முன்னெடுக்கப்பட்ட அன்றைய முயற்சிகள், ஒரு வேளை இந்திராகாந்தி கொல்லப்படாதிருந்தால் வெற்றி பெற்றிருக்கக் கூடும். இன்று ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ‘ஈன நிலை’யும் உருவாகாதிருந்திருக்கும்.

இன்றும், இலங்கையின் ‘செல்வாக்கு மிக்க’ அதிபராக மீண்டும் தெரிவாகித் தமது அதிபர் பதவியின் இரண்டாவது ‘தவணை’யை ஆரம்பித்திருக்கும் மஹிந்தராஜபக்‌ஷ நினைத்தால் அங்கு வாழும் தமிழருக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றினை வழங்க முடியும்.

அன்று ஜே.ஆருகிருந்தது போன்ற அரசியல் நிலைத்தன்மை இன்றைய அதிபரிடமும் இருக்கிறது.

எனவே, தனது ‘பாட்டி’யின் எண்ணத்திற்கு இன்று ராகுல் காந்தியால் செயலுரு வழங்குவது அப்படி ஒன்றும் சிரமமான காரியமல்ல. ஆனால்,அதற்கு அவர்  ஈழத்தமிழர்களுக்காகக் கவலைப்படுவது உண்மையாக இருக்கவேண்டும்!

என்றாலும்….

அரசியல் ஆதாயங்களுக்காக இவ்வாறு பேசும் ‘மாதன் முத்தா’க்கள் இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும்…. ஏன்… இப் பூமிப்பந்தின் இன்னும் பல நாடுகளிலும் தலைவர்களாக  உலாவிக் கொண்டுதானிருக்கிறார்கள்!

மக்கள்; அரசியலில் விழிப்புணர்வு அடையும் வரை இவர்களது ஆட்டம் தொடரவே செய்யும் என்பது மட்டுமல்ல  மாதன்முத்த வாரிசுகளும் உருவாகவே செய்வார்கள். இதில் ராகுல் எந்த ரகம் ?!  *******************************

கொழும்புத் தமிழ் மாநாடும்… [ ‘கீற்று.கொம்’ இல் 15-12-2010 ல் வெளியானது]

 

கொழும்புத் தமிழ் மாநாடும்- ‘மசாலாப்’ படங்களும்!

“சர்வசித்தன்”

மலேசிய இலக்கிய வானில், துடிப்புமிக்க, அதே சமயம், தங்கள் மனதில் பட்டதைத் துணிவுடன் வெளிப்படுத்தும் நெஞ்சுரமும்,நேர்மையும் கொண்ட இளைஞர்களின் முயற்சியினால்; கடந்த சில வருடங்களாக வெளியாகிக் கொண்டிருக்கும் ‘கலை இலக்கிய இதழ்’ வல்லினம் ஆகும். இதன் 24வது இதழ் இம்மாதம் (டிசம்பர் 2010) வலையேற்றப்பட்டிருக்கிறது.

இதில் வரும்  தை மாதம்(2011) 6,7 மற்றும் 8 ந் தேதிகளில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இடம்பெறத் திட்டமிடப்பட்டிருக்கும் ‘அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு’ புகழ் திரு லெ.முருகபூபதி அவர்களது பேட்டி ஒன்றும் வெளியாகி உள்ளது.

அனைத்துலக அளவில் அல்லது குறிப்பிட்ட ஒரு நாட்டில், துறையில் பிரகாசிப்பவர்களைப் பேட்டி கண்டு வெளியிடுவது குற்றமான செயலல்ல.என்றாலும், பேட்டி அளிப்பவரது கருத்துகளை ஆதரிப்பது போன்று அதற்கு ஓர் முன்னுரையினை ‘வல்லினம்’போன்ற ‘முதுகெலும்புள்ள’ இலக்கிய வாதிகளிடமிருந்து; அவர்களை நன்கு அறிந்தவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

லெ.முருகபூபதி தம் பேட்டியில் என்னவெல்லாம் கூறினார் என்பதைப் பார்ப்பதற்கு முன்பாக, பேட்டி கண்டவரது கருத்தாக வெளியிடப்பட்டிருக்கும் ’முன் ஒட்டு’  இவ்வாறு அமைந்திருக்கிறது……..

கொழும்பில் இடம்பெறவுள்ள இந்த மாநாடு குறித்து ஏராளமான சர்ச்சைகள் இணையத்தில் இடம்பெற்று வருகின்றன.தமிழகப் பத்திரிகைகளும் உலக இணைய எழுத்தாளர்களும் வெறும் வாய்க்குக் கிடைத்த அவலாக இந்த மாநாடு அமைந்து விட்டது. இலங்கையின் தமிழ் வரலாறு என்ன, படைப்பிலக்கியப் பின்னணி என்ன, இன்று அங்கு வாழும் மக்களின் மனநிலை என்ன, இந்த மாநாட்டில் என்ன நடக்கப்போகிறது,அதன் பின் விளைவுகள் என்னவாக இருக்கும், போன்றவைபற்றி எதையுமே ஆழமாகத் தெரிந்துகொள்ளாமல், சில விஷயங்களை நுனிப்புல் மேய்ந்துவிட்டு,தனிப்பட்ட மனிதர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்குவதாகவும் அடிமுடி தெரியாது ஆர்ப்பாட்டம் செய்வதாகவுமே பெரும்பாலான எழுத்துகள் இடம்பெற்றுவருகின்றன.”

என்னும் அறிமுக உரையுடன் ஆரம்பிக்கும் இந்தப் பேட்டியில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு திரு முருகபூபதி அளித்த விளக்கங்களிடையே…….

இன்றைய சூழலில்-அதாவது ஓர் உரிமைப் போராட்டம், பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில் முள்ளி வாய்க்காலில் பல்லாயிரம் தமிழுயிர்கள் எவரது அதிகாரத்தின் கீழ்ப் பறிக்கப்பட்டதோ –எவர் மீது சர்வதேச நீதி மன்றில் மனித உரிமை மீறலுக்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மனித உரிமையாளர்களும், மனிதாபிமானிகளும் போராடிக்கொண்டிருக்கிறார்களோ- அவரது ஆட்சியில்; இத்தகைய மாநாடு ஏன் தேவை என நினைக்கிறீர்கள் ? என்னும் பேட்டியாளரின் இரண்டாவது கேள்விக்கு, முருகபூபதி அளித்த பதில்தான் விசித்திரமானது!

“இப்போது நடத்தாமல், இனி எப்போது நடத்துவது?

போரின் அவலத்தில் உழன்ற இலங்கை மக்களின் அன்றாட வாழ்வு தொடராமலா இருக்கிறது?

யாழ்ப்பாணத்தில் நல்லூரில் கந்தசுவாமி கோயில் வருடாந்த உற்சவம் நடக்காமலா இருக்கிறது?

கொழும்பில் பிரபலமான ஆடிவேல் விழா நடக்காமல் இருக்கிறதா ? இவ்வாறு அடுக்கிக்கொண்டே சென்றவர்….   “இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களில் கமல்ஹாசன்,ரஜினிகாந்,விஜய் போன்றோரின் மசாலாப் படங்கள் காண்பிக்கப்படாமலா இருக்கிறது? துக்கம் நடந்த வீட்டில் நல்ல காரியங்களே நடபதில்லையா ? எழுத்தாளர் விழா எடுப்பதில் மட்டும் என்ன குற்றமுள்ளது ?” எனப் ”பொங்கிப் பொரிந்”திருக்கிறார், ‘அனைத்துலகத் தமிழ் மாநாட்டின்” செயலாளர்.

”மாநாட்டைத் தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடக்கிலோ,கிழக்கிலோ ஏன் நடத்தவில்லை?” என்னும் கேள்விக்கு,

”யாழ்ப்பாணம்,வன்னி,மட்டக்களப்பில் நடத்தத்தான் எங்களுக்கு மிக விருப்பம், இடப்பிரச்சினைதான் மிகப்பெரிய பிரச்சினை. பல நூறுபேர் வந்து தங்க வசதிகள் இல்லை.அத்துடன் அரசாங்கம் நாளுக்குநாள் சட்டத்தை மாற்றுகிறது” என்றிருக்கிறார்.

அதாவது, நாளுக்குநாள் சட்டங்களை மாற்றும் ஓர் அரச நிர்வாகம் நடைபெற்றுகொண்டிருக்கும்  ஓர் நாட்டில், ரஜனி-விஜய் மசாலாப் படங்களுக்கு ஒப்பான ஓர் ‘அனைத்துலகத் தமிழ் மாநாட்டினை” நாம் நடத்துவதில் இவர்களுக்கு என்னதான் பொறாமையோ என்கிறாரா லெ.முருகபூபதி?

ஐயா, மக்கள் அன்றாடக் கடமைகளில் ஈடுபட்டே ஆகவேண்டும்.காலை எழுந்ததும் காலைக்கடன்களை ஆற்றியே தீரவேண்டும்,உணவு உண்ண வேண்டும், உடுத்தவேண்டும்…….. இவையின்றேல் ராஜபக்‌ஷவிடமிருந்து தப்பிப் பிழைத்திருக்கும் தமிழர்களின் உயிர் தானாகவே போய்விடும்!

தெய்வ நம்பிக்கை உடையவர்கள் கோவில்களுக்குச் செல்வதோ அல்லது அலகு குத்திக் காவடி எடுப்பதோ வெறும் ஆடம்பரத்துக்காகவல்ல. தங்களை ,தங்கள் சந்ததிகளை இனியாதல் எவ்வித துன்பங்களும் அண்டாமல் அந்தத் தெய்வங்கள் காப்பாற்றும் என்னும் அசைக்கமுடியாத நம்பிக்கைதான் எத்தகைய துன்பங்களுக்கிடையேயும் அவர்களைக் கோவில்களை நோக்கித் துரத்துகிறது. இசைவிழாக்களும், மசாலாப் படங்களின் பிரசன்னமும் அனைத்துலகத் தமிழ் இசைவிழா என்னும் பெயரில்-ஏதோவொரு உள்நோக்குடன் நடைபெறுவதில்லை. இசைப்பித்துக்கொண்டவர்கள் இசை விழாக்களில் பங்கு கொள்வது போல், சினிமாப்பித்து தலைக்கேறியவர்களால் ‘கட் அவுட்’களுக்குப் பாலாபிசேகங்களும் நடைபெறலாம்.

பக்தி,கேளிக்கை இவற்றுள் வகைப்படுத்தப்படும் மேற்குறிப்பிட்ட செயல்களும், எழுதாளர் கூடும் இலக்கிய மாநாடும் ஒன்றா ?

சமூக முன்னேற்றம், தன் மானம், இன உணர்வு இவையாவும் பின்னிப்பிணைந்து;அநீதிக்கு எதிராய்த்  தன் எழுதுகோலை ஆயுதமாக்குபவனே  எழுத்தாளன். உலக அரங்கில் தன்னினத்துக்கு நேர்ந்துவிட்ட அவலம் எவரால் நிகழ்த்தப்பட்டதோ அவரது ஆட்சியில், இங்கு நாமெல்லாம் மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறோம் என்று வேடமிடுவதில் எந்தச் சுயபிரக்ஞை உடைய எழுத்தாளனும் ஈடுபடமாட்டான்.

யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு போன்ற தமிழ்ப் பகுதிகளில் ஓர் மாநாட்டினை நடாத்துவதற்குரிய வசதிகளும்,அரசின் ஆதரவும் கிடையாது என்பதை ஒப்புக்கொள்ளும் இவர், அந்த வசதிகளையும், உரிமையையும் இந்த அரசு வழங்கும்வரை  காத்திருப்பதில் இவருக்கு என்ன அவசரம் என்றுதான் தெரியவில்லை. இத்தனைக்கும் மேல், 1974 ல் உலகத்தமிழ் மாநாட்டினையே நடாத்திப் பெருமை கொண்டது யாழ்-ஈழ மண் என்பதை இவர் மறந்துவிட்டாரா ? அரசியல் அனாதைகளாய், இருக்கும் உரிமைகளைக்கூடக் கொஞ்சங்கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழனுக்கு [ தமிழில் தேசிய கீதம் பாடத்தேவையில்லை என்னும் செய்தி உட்பட] உணர்வு மிக்க இனமான ‘எழுத்தாளர்’கள் ஆடம்பரமாக விழா எடுக்கத் துணியமாட்டார்கள்.

எண்ணும் எழுத்தும் நமது இரு கண்கள் என்பது, தமிழ் மூதுரை!

இதில் எழுத்தை ஆள்பவர்கள் எழுத்தாளர்கள். எனவே எழுத்தாளர்களும் நமது கண்போன்றவர்களே. அதில் ‘காமாலை’  ஏற்பட்டுவிட்டால் காண்பது அனைத்தும் கோளாறாக அமைந்துவிடும்.

முள்ளிவாய்க்காலின் சாம்பல் மணம் மறையும் முன்பாகவே,செம்மொழி மாநாடு என்னும் பெயரில்-அதுவும் அண்டை நாடொன்றில்- கலைஞர் நடாத்திய விழாவையே புறக்கணிக்க வேண்டும் எனக்குரல் எழுப்பிய தமிழுணர்வாளர்கள்; தமிழர்களின் உயிர்களை மாத்திரமல்ல எஞ்சியிருப்பவர்களின் தன் மானத்தையும் சீண்டிப்பார்க்கும் ஓர் ஆட்சியின் கீழ்- மனித உரிமை மீறல்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என உலகெங்கும் ‘மனிதர்கள்’ பிரார்த்தனை செய்யும் பேற்றினைப்(?) பெற்ற ஓர் அதிபரின் ஆட்சியின் கீழ்- தமிழ் மாநாட்டை நடாத்தியே தீருவோம் என்று ‘கங்கணம் கட்டும்’ முருகபூபதியின் செயலைக் கண்டனம் செய்யாதிருப்பின், அதுதான் குற்றமேயன்றி அதனைக் கண்டித்துக் கருத்துரைப்பது அல்ல.

வாள் முனைக்கில்லாத ஆற்றல், எழுதுகோலை ஆயுதமாகப் பெற்றிருப்பவர்களுக்கு உண்டு என்பார்கள். இவர்களில் சிலர் ‘வால்பிடி’க் கூட்டமாவதை எந்த  உணர்வாளர்களும் ஏற்றுக்கொள்வதில்லை.**************

 

ஊழலில் ஊறி………[ 14-12-2010 ல் எழுதியது]

ஊழலில் ஊறித் திளைக்கும் நாடுகள்! [ டிசம்பர் 14, 2010ல் எழுதியது]

“சர்வசித்தன்”

மனித உரிமைகள் எவ்வாறு மனிதருக்கு அவசியமோ,அது போன்று அரசியல் வாதிகளுக்கு  ‘ஊழல்’ என்றாகிவருகிறது!

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத முற்பகுதியில், உலக நாடுகள் சங்கமமாகும் நிறுவனமான ஐ.நா; ‘உலக ஊழல் ஒழிப்பு தின’த்தினை நினைவு கூர்கிறது. இதில்  அக்கறை கொண்ட இரு அமைப்புகள் பி.பி.ஸி என அழைக்கப்படும் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும், ட்ரான்ஸ் பெரன்ஸி இன்ரர் நாஷனலும் (Transperancy Inter National) ஆகும்.

இவ்விரு அமைப்புகளும் உலக நாடுகளில் நடைமுறையிலிருக்கும்(!?) ஊழல் விபரங்களைத் தனித்தனியாக ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

இம்முயற்சியில், பி.பி.சி சுமார் 26 நாடுகளைச் சேர்ந்த 13 ஆயிரம் பேரிடமும், ட்ராஸ்பெரன்ஸி இன்ரர் நாஷனல்  சுமார் 86 நாடுகளைச் சேர்ந்த 90ஆயிரம் பேரிடமும் வாக்கெடுப்புகளை நடாத்தியிருந்தன.

இவ் வாக்கெடுப்புகளின் வழியாக, ட்ரான்ஸ் பெரன்ஸி இனரர் நாஷனல்; ஆப்கானிஸ்தான், நைஜீரியா, இந்தியா இம்மூன்று நாடுகளையும் உலகின் ஊழல் மலிந்த நாடுகள் எனக் ‘கிரீடம்’ சூட்டியிருக்கிறது. இவற்றைத் தொடர்ந்து சீனா, ரஷ்யா, மத்திய கிழக்கைச் சேர்ந்த சில நாடுகள் எனப் பட்டியல் நீள்கிறது.

இதில் வேதனை தரும் செய்தி யாதெனில், இவ் ஊழல் தனது கரங்களை ‘எய்ட்ஸை விடவும் பயங்கரமாக அகல விரித்துக் கொண்டிருக்கிறது எனபதுதான். இது தணிவதற்கான அறிகுறிகளே தென்படவில்லை என வாக்கெடுப்பில் கலந்து கொண்ட பலர் கருத்துத் தெரிவித்துமிருக்கிறார்கள்.

அதிலும் ஊழலில் முதலிடம் வகிப்பன நமது(!) அரசியல் கட்சிகளே. ஆறுவருடங்களுக்கு முன்னர்(2004ல்) 71 சதவீதமாக இருந்த இச் சாதனை இவ்வருடம் 80 ஐ எட்டிவிட்டது என்கிறது ‘ட்ரான்ஸ்பெரன்ஸி இன்ரர் நாஷனலி’ன் அறிக்கை.

அதிகாரிகளுக்கும்,அரசியல் வாதிகளுக்கும் லஞ்சம் வழங்குவதனால் அதிகம் பாதிக்கப்படும் மக்கள், ஆப்கானிஸ்தானிலும்,னைஜீரியாவிலும், ஈராக்கிலும், இந்தியாவிலும் வாழ்வதாக இப்புள்ளி விவரங்கள் சுட்டுகின்றன.

அரசியலை அடுத்து மத நிறுவனங்களும் இவ் ஊழல் போட்டியில் தொடர்ந்து முன்னேறிவருவது அதிர்ச்சி அளிக்கும் உண்மை. 2004 ல் 28 சதவீதமாக இருந்த மத நிறுவனங்கள் தொடர்பான ஊழல் இப்போது 53 சதவீதத்தை எட்டியிருக்கிறது.

அதே சமயம் பொதுத் துறை சம்பந்தப்பட்டவகையில் காவலர்கள் 29 சதவீதமும், பதிவு அலுவலகங்கள் 20 சதவீதமும், நீதித் துறை(?) 14 சதவீதமும் லஞ்சம் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

லஞ்சம் வழங்கியவர்கள் நிறைந்த நாடாக, சுமார் 89 சதவீதத்துடன்; லைபீரியாவும்,அதனை அடுத்து 84 சதவீதத்துடன் கம்போடியாவும் இடம்பிடித்துள்ளன.

லஞ்சம் வழங்காத நாடு டென்மார்க் எனவும் ஓர் அற்ப சந்தோஷத்தை இந்த அறிக்கைகள் நமக்கு அளித்திருக்கின்றன.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தலின்போது, கலைஞர் கருணாநிதி அவர்கள், “ கம்போடியாவைப் பாரீர் அங்கு 84 வீதம் பேர் லஞ்சம் கொடுத்தே காரியம் சாதித்திருக்கிறார்கள், லைபீரியாவைப் பாருங்கள் ஐயகோ அங்கே லஞ்சம் வழங்கியோர் பட்டியல் 89 என்கிறார்கள்.தமிழகத்தில் இப்படியா இருக்கிறது?” என்று பேச ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம்,வறுமை, இயற்கை அனர்த்தங்கள் இவைபற்றிக் கவலைப்படுவதை விடவும்  மக்கள் அதிகம் பேசிக்கொள்வது ஊழல் பற்றியே என்கிறது இவ்வமைப்புகள் எடுத்த புள்ளி விபரங்கள்.  ************************************

வடக்கும் கிழக்குமல்ல….. [ 02-02-1987 ‘தினமணி’(மலேசியா)யில் வெளியானது

[ஈழத்து நிகழ்ச்சிகள்:-      ‘தினமணி’ 1987 பெப் 02ல் வெளியானது].

’வடக்கும் கிழக்குமல்ல முழு இலங்கையும் தமிழர் தாயகமே!’

என்கிறார் இலங்கை அதிபர்.

சர்வசித்தன்”

இது என்ன ? எங்காவது படுத்துறங்கி ‘கனாக் கண்டு’விட்டு எழுதுகிறேனோ.. என்று ‘விழி’க்கவேண்டாம்.

“தமிழர்கள் இலங்கைக்குச் சொந்தமானவர்கள் அலல, அவர்கள் வந்தேறு குடியினர், இலங்கயில் சிங்கள மக்களுக்கு இருக்கும் பாத்தியதை தமிழர்களுக்குக் கிடையாது. இப்போது சிங்களர்கள் தமிழர்களுக்கு அளித்திருக்கும் சலுகைகளே அதிகபட்சமானது!” என்னும் பொருள்படச் சுமார் இரண்டுவருடங்களுக்கு முன்னர் (1985ல்) வெளிநாட்டுப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி கொடுத்திருந்தார் ஓர் பௌத்த பிக்கு.

ஏறத்தாள முப்பது வருடங்களாக-தமிழ் அரசியல் வாதிகள், இலங்கையில் வாழும் தமிழ் மக்களது நிலைப்பாட்டிற்காக-அவர்களது உரிமைகள் காலத்துக்குக் காலம் இலங்கையின் ‘பெரும்பான்மை இன’ அரசினால்; சிறிது சிறிதாகப் பறிக்கப்பட்டுவரும் போதிலெல்லாம், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முயற்சி செய்ததை- ’சுமார் அறுபது வருட கால அரசியல் வாழ்க்கையினை உடையவன் நான்’ என்று மார்தட்டும் அதிபர் ஜே.ஆர்; தெரியாதவராய் இருக்கமுடியாது!

என்றாலும், இன வாதம் கக்கும் சில சிங்கள இயக்கங்கள் போன்று, தமிழர்களும் பதிலுக்கு, “சிங்களர்கள் இலங்கைக்கு உரித்தில்லாதவர்கள், அவர்கள் வட இந்தியாவின் கலிங்கப்பகுதியில் இருந்து; தன் தந்தையினால் விரட்டப்பட்ட ஓர் இளவரசனின் வழித்தோன்றல்கள்- அவன் இலங்கயின் மேற்குக் கரையில் வந்திறங்கிய போது இலங்கையில் இந்து மதம் தழைத்திருந்தது! இந்துக்கள் தமிழர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஏன், முதல் சிங்கள அரசனான விஜயனே இந்துக் கோவில்களைச் சீராட்டி இருக்கிறான்!. யாழ்ப்பாணத்தின் வட முனையில் உள்ள நகுலேஸ்வரத்துக்கும்(கீரிமலை); மேற்குப் பகுதி நகரான மாதோட்டத்திற்கும் அவன் சென்றிருக்கிறான். அப்போதெல்லாம் அங்கு சிவ ஆலயங்கள் சிறப்புடன் இருந்திருக்கின்றன.எனவே தமிழர்களே அங்கு வாழ்ந்திருக்கிறார்கள். ஆகையால், பிந்தி வந்தவர்கள் சிங்களர்களே.இவ்வாறிருக்கையில் சிங்களர்களை விடவும் தமிழர்களுக்கே இலங்கை உரித்துடையது !” என்றெல்லாம் எந்தத் தமிழ்த் தலைவரும் பேசியதில்லை. இனியும் பேசப்போவதும் இல்லை.

இது இலங்கையின் அதிபருக்கு நிச்சயம் நன்கு தெரிந்தே இருக்கும்.

ஏனெனில், இலங்கையின் அரசியலில் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே ‘பெயர் போட்டு’ வரும் ஜே.ஆர், அப்படியொன்றும் ‘மூளை கெட்ட’ பேர்வழியுமல்ல! மிகச் சிறந்த இராஜ தந்திரி ! அவரது அரசியல் சாணக்கியத்துக்கு- இன்று, இலங்கையின் ராணுவத்தைப் பலப் படுத்துவதற்காக இஸ்ரேலியர்களது உதவியையும்- அதே நேரத்தில், யூதர்கள் என்றாலே காதுகளைப் பொத்திக்கொள்ளும் அரபு உலகையும்; தமது இரு கரங்களிலும் வைத்துக்கொண்டிருப்பதில் இருந்தே இது புரிந்து போயிருக்கும்!

சென்ற வருடத்தில்தான், ” இஸ்ரேலியர்களை- உயிருள்ளவரை எதிர்த்தே தீருவோம் – அவர்கள் எமது மண்ணான பாலஸ்தீனத்தைப் பறித்துக் கொண்ட வேட்டை நாய்கள்…” என்று சற்றுக் காரமாகவே சூழுரைத்த பாலஸ்தீன விடுதலை முன்னணிக்குச; ’சிறீலங்கா அரசு. என்றும் தார்மீக ஆதரவினை வழங்கும்’ என்று இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஜே.ஆர்  பேசியிருக்கிறார்.

அதாவது, வெளி நாட்டு அரசியலில் இஸ்ரேலியர்களையும், அரபுக்களையும் ஒரே சமயத்தில் சமாளித்துத் தமக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ளும் அதே இராஜ தந்திரத்தை; இந்தியாவின் விடயத்திலும் அவர் கடைப்பிடிக்கத் தவறவில்லை.

இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி பதவியேற்றதும்- அவரிடம் வலிதில் சென்று, ‘இலங்கைப் பிரச்னையை தீர்த்து வையுங்கள்.அதற்குச் சரியான ஆள் நீங்கள் தாம்’ என்றதில் ஆரம்பித்து; மறந்த பிரதமர் இந்திராகாந்தியின் தூதுவராக இருந்த ஜி.பார்த்தசாரதியினை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக ரொமேஷ் பண்டாரியை நியமித்து…… தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் பேசிப்பேசியே நாட்களைக் கடத்தி- அதே சமயத்தில்… சீனா, பாக்கிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து ஆயுதங்கள், போர்க் கப்பல்கள், கவச வண்டிகள், குண்டுவீச்சு விமானங்கள் இவ்வாறு ஓர் முழு அளவிலான போருக்கு உரிய தளவாடங்கள் அனைத்தையும் சேர்த்துக் கொண்டது வரை- அவரது ராஜ தந்திரம் உலகின் கண்களில் மிகப் பிரசித்தமாகி விட்டிருக்கிறது!

இத்தனை சாதுர்யம் மிக்க இலங்கையின் அதிபரை – பத்திரிகை உலகைச் சேர்ந்த பலர் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார்கள். அதிலும், இந்தியப் பத்திரிகையாளர்கள் பலர் பலதடவைகள் பேட்டிகண்டு எழுதி வருகிறார்கள். அது போன்ற ஒன்று இவ்வருட ஆரம்பத்தில் எடுக்கப்பட்டு பிரசுரமாகியிருந்தது.

அந்தப் பேட்டியின் போது- ஜே.ஆர் கூறிய சில கருத்துகள் சிறிது வித்தியாசமாக அமைந்திருந்தன. இதுவரை அவர் வழக்கமாகக் கூறிவரும் ‘கொளகொள’ப்பான மழுப்பல் பதில்களை இந்தப் பேட்டியில் காணமுடியவில்லை. இதிலிருந்து, அவர் அடுத்த கட்ட நடவடிக்கை ஒன்றிற்குத் தயாராகி விட்டார் என்பதாகவும் எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

‘தமிழ்ப் போராளிகள்,இலங்கையின் சிறுபான்மை இனமான தமிழர்கள் அனைவரையும் பிரதி நிதிப்பவர்கள் அல்ல. அவர்கள் ஆயுதம் ஏந்திய கும்பல்கள் (?)’ என்று கூறிய அவர்; இந்திய அரசின் ஏற்பாட்டால் தாம் அவர்களோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாகக் கூறியிக்கிறார்.

ஜே.ஆரின் கருத்துப்படி- ’தமிழ்ப் போராளிகள், இலங்கையின் ஒரு பகுதியினைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது; விமானக் கடத்தலைப் போன்றது!? அங்கு உள்ள மக்களைப் பாதுகாப்பதற்காக இந்தப் பயங்கரவாதிகளுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும்’ என்றிருக்கிறார். ஆனால், அதே சமயம் இன்றுவரை இலங்கை அரசுப்படைகள்- ஜே.ஆரின் கூற்றுப்படி இந்தப் போராளிகள் என்னும் ‘பயங்கரவாதிகளை’ விடவும் பணயம் வைக்கப் பட்டிருக்கும் அப்பாவி மக்களை அல்லவா கொன்று தீர்த்துக் கொண்டிருக்கின்றன என்னும் செய்திகளைப் பற்றி  அவர் எந்தக் கருத்தினையுமே கூறவில்லை1 ஒரு வேளை பேட்டி கண்டவர் இதனை கேட்க மறந்தாரோ என்னவோ ?!

இப்பேட்டியின் போதுதான் ஓரிடத்தில்……

“தமிழர்கள் வடக்கும் கிழக்கும் தமது தாயகம் என்றும் அவற்றை இணைத்து வழங்கும்படியும் கேட்கிறார்களே.. இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?’ எனக் கேட்டதற்கு….

‘வடக்கு கிழக்கு மட்டும் அல்ல, முழு இலங்கையுமே அவர்களுக்குச் சொந்தமானது தான். இதற்குமேல் நான் அவர்களுக்கு என்ன கொடுத்துவிட முடியும் ?’ என்று கூறியிருக்கிறார்.

இது மட்டுமல்லாமல்…’ இன்று இந்தியாவின் முயற்சியால் தொடர்ந்துகொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடையும் பட்சத்தில், ராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலம் தமிழ்ப் போராளிகளை அழித்து விடுவது அல்லது அவர்கள் எண்ணப்படியே கைவிட்டு விடுவது…..   இவை இரண்டுக்கும் நடுவே அகிம்சை முறையிலான மற்றொரு ஆலோசனையும் கருத்தில் உள்ளது ‘ என்றும் கூறியிருக்கிறார்.

1972 வரை தமிழர்கள் அரச நிறுவனங்களின் முன்பாக சத்தியாக்கிரகம் இருந்ததை இலங்கை மக்கள் அறிவார்கள். இப்போது அதிபர் ஜே.ஆர் கூறும் புதிய அகிம்சைத் திட்டம்… ஒரு வேளை விடுதலைப் புலிகளின் முகாம்களின் முன்னால் அரசுப் படையினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போகிறார்ககளா என்ன ? என்று கேலியாகச் சொன்னார்… அண்மையில் யாழ்ப்பாணப் பகுதியிலிருந்து தப்பிவந்து கனடாவுக்குக் கப்பலேறிய யாழ் தமிழர் ஒருவர்.

ஆனால், ஜே.ஆர் கூறும் அந்த அகிம்சைத் திட்டம்; விஜே குமாரதுங்கா போன்ற இளைய தலைமுறையினர் மூலம் செயல்படுத்தப்படவும் வாய்ப்புகள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

என்றாலும், இன்று இலங்கையில் நடைபெற்று வரும் சம்பவங்கள், தமிழ்ப் பகுதிகளில் அரசுப் படைகள் மேற்கொள்ளும் திடீர் நடவடிக்கைகள் யாவும்- எல்லாவற்றுக்கும் முன்பாக ஓர் யுத்த நிலை உருவாகி வருவதையே புலப்படுத்துகின்றன.  ***************

 

விடுதலைப் போராளிகளை அழித்துவிட்டால்…..[ 29-11-2010 ‘நம் நாடு’-கனடா இதழில் மீள் பிரசுரமானது.

ஈழத்து நிகழ்ச்சிகள்”                             ‘சர்வசித்தன்’

[ ஒக்ரோபர் 22,1987 ல் எழுதிய இக்கட்டுரை; ‘மலேசிய’ நாளிதழான ‘தமிழ் நேசனி’ல் 25-10-1987ல் வெளியாகியது]

விடுதலைப் போராளிகளை அழித்துவிட்டால், சமாதானம் தானே வருமா?

பாரதப் பிரதமர் தமது எண்ணத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும்!

{ சென்ற ஜூன் (1987) மாதமளவில், இலங்கைப் படைகளின் மிக மூர்க்கமான தாக்குதல்கள் யாழ்ப்பாணத்தின் மீது நடைபெற்றுக் கொண்டிருக்கையில்; விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு இணைந்து நின்று-சிங்கள ராணுவத்தோடு போரிட்ட ‘ஈரோஸ்’ இயக்கத்தின் தலைவர் பாலகுமார், இந்திய அரசிடம் ஒரு வேண்டுகோளினை விடுத்திருந்தார்.

அவரது அந்த வேண்டுகோள் பின்வருமாறு இருந்தது.

“இந்தியா எமக்கு எல்லாவகையிலும் ஆதரவு வழங்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்காக இந்தியா தனது படையை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அனுப்ப வேண்டும் என்பதில்லை. விடுதலைப் போராளிகளான எமக்குத் தேவையான ஆயுதங்களை அது வழங்கினாலே போதுமானது!”

என்றிருந்தது அவ் வேண்டுகோள்.

அப்போது எதுவும் செய்யாமல் இருந்த இந்தியா, பின்னர் தன் படையை அனுப்பியது.அவ்வாறு அது அனுப்பியது தமிழ்ப் போராளிகளுக்கு உதவவா என்றால்…அதுதான் இல்லை! எந்தத் தமிழர்களை இலங்கைப் படைகள் ‘துவம்சம்’ செய்தனவோ… அந்தத் தமிழர்களைக் கடைசிவரை காப்பாற்றி நின்ற விடுதலைப் போராளிகளை ஒழிக்க, சிங்கள அரசுக்குத் துணையாக படை நடத்தியது இந்திய அரசு!

பாலஸ்தீனர்களை ஒடுக்க- இஸ்ரேலுக்கு படை உதவி அளிப்பது போலவும்; தென்னாபிரிக்க மக்களை அடக்க இனவெறி பிடித்த ‘போத்தா’வின் அரசுக்கு ராணுவ உதவி வழங்குவது போலவும்; அமைந்த இந்தத் ‘தலைகீழ்’ மாற்றம் எப்படி ஏற்பட்டது?. இதற்கு என்ன காரணம் ? அப்பாவி ஈழத் தமிழர்களது தலைவிதி தான் காரணமோ ?! }

வாழ்விக்கச் சென்ற’ படைகள் பற்றிய வானொலிச் செய்திகள்…

ஈழத் தமிழ் மண்ணில், அமைதியை நிலைநாட்டவெனச் சென்ற ‘அமைதி’ப் படைகள், அதனை முன்பிருந்ததை விடவும் இரத்தக் காடாக்க ஆரம்பித்து இரண்டு வாரங்களாகிவிட்டன!

இதற்கு முன்னர் ,’மனிதாபிமானமற்ற’ படைகள் என்று சர்வதேச முத்திரை பதித்துக் கொண்ட(?) இலங்கைப் படைகளின் தாக்குதல்கள்கூட ஆறு நாட்களுக்கு மேலாக நீடித்ததில்லை. தாக்குதலுக்குள்ளாகும் இடத்தில் உள்ள மக்கள் பட்டினியாலும்,நோயாலும் ஏன் பயத்தாலும் பாதிக்கப்பட்டு விடுவார்கள் என்னும் இரக்கம்(!) ஓரளவாவது இலங்கைப் படைகளுக்கு இருந்ததால் அவை இடைவெளி விட்டே தங்கள் தாக்குதல்களை நடாத்தி வந்தன. தாம் தாக்குவது தமது நாட்டு மக்களையே என்னும் (நாட்டு)உணர்வு இலங்கைப் படைகளுக்கு இருந்திருக்கிறதோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது!விடுதலைப் போராளிகளை வேட்டையாடிவிட்டே ஓய்வது என்னுமாப்போல் ‘கங்கணம்’ கட்டிக் கொண்டு செயல்படும் இந்தியப் படைகளின் நடவடிக்கைகளைப் பார்க்கையில், இவ்வாறான எண்ணம் மூளையுள்ள எந்த மனிதனுக்கும் எழுவது இயல்பானதே.

தமிழர்கள் மீதும், தமிழ்ப் போராளிகள் மீதும் இந்திய ‘அமைதிப்’ படைகள் நடாத்தும் தாகுதல்கள் ஒருபுறம் இருக்க, இந்தத் தாக்குதல்கள் பற்றியும், விடுதலைப் போராளிகள் பற்றியும், இலங்கை-இந்திய அரசுகள் வெளியிடும் வானொலிச் செய்திகளோ மிகமிக விநோதமானவையாக இருக்கின்றன!

“வெற்றியின் விளிம்பில் நிற்கும் இந்தியப் படைகள் இப்போது யாழ்நகரின் புறநகர்ப் பிரதேசங்களைக் கைப்பற்றிவிட்டன!” என்று ‘எக்காள’மிடுகிறது ஒரு செய்தி!

அதுசரி…., இந்தியப் படைகள் இப்போது எந்த நாட்டுடன் போரிட்டு வருகின்றன ?  சீனாவுடனா.. இல்லை பாக்கிஸ்தானுடனா.. அதுவும் இல்லை… சின்ன நாடான பங்களா தேசத்துடனா… ? எந்த வெற்றியை எண்ணி இன்றைய ராஜீவ் அரசு குதூகலிக்கிறது ?

கேவலம்…’அமைதி காப்பதற்காகச் சென்றோம்’ என்று இன்னமும் வாய்கிழியக் கூறிக்கொண்டு, முறியடித்து விட்டோம், கைப்பற்றி விட்டோம்….. நிலைகளை அழித்து விட்டோம், கொன்று விட்டோம் என்று சொல்வது வெட்கமாக இல்லையா…  என்றெல்லாம்  நீங்கள் கேட்டுவிடக் கூடாது.

இன்றைய இந்தியத் தலைமையின் ‘அகராதி’யில் ‘அமைதி’ என்பது மேற்சொன்ன மாதிரியான ,அழித்தல்,கொல்லுதல்,கைப்பற்றுதல்.. என்பதாகத்தான் இருக்கும் போலும்!

‘பாஸிஸம்’-இந்திய அரசு-தமிழ்ப் போராளிகள்:-

’பாஸிசம்’ என்றால் என்ன… ?

இது….’அடியாள்’ முறை எனச் சொல்லப்படும் ஒரு வகை அடக்குமுறை எனறு சொல்லலாம்!

இதில், ஒன்று சம்பந்தப்பட்டவர்களை அடித்து நொறுக்கிப் பணியவைப்பது, இல்லையேல் ஆளே இல்லாமல் செய்துவிடும் ‘செயல் முறை’ பின்பற்றப்படுவது!

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை பாஸிஸ்டுகள் என்று குற்றம் சாட்டியவாறு, இந்திய அரசு தனது ‘சமாதான’ப் படைகளை ஏவி, அவர்களை அடக்கி ஒடுக்க- அல்லது அழித்தொழிக்க முற்படுவதைப் பார்த்தால்…. யார் பாஸிஸ்டுகள் என்பது விளங்கிவிடும்.

இத்தனைக்கும் நடுவில், இந்திய வானொலி மூலம் ஈழத்தமிழ்ப் போராளிகளுக்கு எதிராக நடாத்தப்படும் விஷமத்தனமான பிரச்சாரங்கள்- அது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்துமே சமாதானத்தை நோக்கி எடுக்கப்படும் தூய்மையான செயல்களே எனறு நம்பவைக்கப் பாடுபடுவதாகத் தெரிகிறது!

மாதிரிக்கு, இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டெல்லி வானொலி நிலையம், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கென வழங்கும் ஒலிபரப்பில் வெளியாகும் செய்திகளைக் கேட்டுப் பாருங்கள்….

யாழ்ப்பாண மக்களுக்கு இந்திய அரசின் அமைதிப்படையினர் விடுக்கும் வேண்டுகோள் என்னும் பெயரில் சென்ற 21ந் தேதி[ 21-10-1987] வெளியான செய்தி இதுவாகும்…

“அதிகார மோகம் கொண்ட, தீய குறிக்கோள் கொண்ட எல்.டி.டி.ஈ யினர், உங்களுக்கு அமைதியையும், மாமூல் வாழ்க்கையையும் மீண்டும் நாங்கள் கொண்டுவர; பல தடைகளை ஏற்படுத்துகிறார்கள். அதன் உயர் மட்டத் தலைவர்கள் கடைப்பிடிக்கும் கொடூரமான போக்கு அவர்களது சொந்த லாபத்தைக் கருதி வரையப்பட்டதாகும். அமைதிகாக்கும் படை அவர்களை மீண்டும் அமைதிப்பணிக்குக் கொண்டுவர எடுத்த எல்லா நடவடிக்கைகளையும் அவர்கள் நிராகரித்து விட்டார்கள்.

மக்கள் பாதிப்புற்றாலும் பரவாயில்லை என்று தாங்கள் தப்புவதற்காக பொதுமக்களைக் கேடயமாக உபயோகிக்கிறார்கள்.

சாதாரண பொதுமக்களுக்கு எந்தவித காயம்கூட ஏற்படாதவாறு இந்திய அமைதிப்படையினர் மிகுந்த கவனத்துடன், எசசரிக்கையுடன் தங்களது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உங்களுக்கு ஏக்கத்தையும்,துக்கத்தையும் தவிர வேறெதையுமே அளிக்காத விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்காக உங்களதும், உங்கள் குழந்தைகளதும் எதிர்கால வாழ்க்கையினைச் சீரழிப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை. எனவே எல்.டி.டி.ஈ யின் தலைமையுடன் தொடர்பை அறுத்துக் கொண்டு நாங்கள் குறிப்பிட்டுள்ள சோதனைச் சாவடிக்கு வாருங்கள்.”  இப்படிச் செல்கிறது அந்த வானொலி அறிக்கை…

இதில் வேடிக்கை என்னவெனில்….

கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக, சிங்கள தீவிரவாத அரசின் அடக்குமுறைக்கு ஈடுகொடுத்துப் பல இளைஞர்களைப் பலிகொடுத்திருக்கும் விடுதலைப் போராளிகள், அதிகார வெறிபிடித்தவர்கள்-தீய நோக்கம் கொண்டவர்கள் என்று, இன்று இந்திய அரசினால் சித்தரிக்கப் படுவதும்; இலங்கை அரசின் அறிக்கைகளின் படி, சுமார் நூறு விடுதலைப் புலிகளே கொல்லப்பட்டிருப்பார்கள் என்று தெரிவிக்கையில், மொத்தம் 670 பேரை கொன்றுவிட்டோம்- அத்தனைபேரும் விடுதலைப் புலிகளே என வீர கோஷமிடுவதன் மூலம்- அவர்களால் கொல்லப்பட்ட   500 ற்றுக்கும் மேலானவர்கள் அப்பாவிப் பொதுமக்களாக இருக்கையில், நாங்கள் சாதாரணமக்களுக்கு எந்தக் காயமும் ஏற்படாதவாறு மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறோம் என்று சொல்வதும்….

எந்த விடுதலை போராளிகளோடு தாமும் இணைந்துகொண்டு ஆயுதங்களைச் செய்து, இந்திய மைதிப்படையினை எதிர்க்கத் துணியும் யாழ்மக்களிடம் [ தகவல்- மலேசிய தொலைக்காட்சி செய்தி] விடுதலைப் புலித்தலைமையினை உதறிவிட்டு நம்மிடம் வாருங்கள் என்று வேண்டுகோள் விடுப்பதும்… இந்திய அரசின் அறியாமையா.. அல்லது பாஸிஸ சித்தாந்தம் அதன் மீது கொஞ்சம்கொஞ்சமாகப் படிவதன் வெளிப்பாடா என்பது புரியவில்லை!

அண்மையில் கிடைத்த வெளிநாட்டுச் செய்திகளின்படி, தமிழ் மண்ணில் இந்தியப்படைகளுக்கு எதிரான மனப்பாங்கே குடிகொண்டிருப்பதாகவும், பல சிவிலியன்களது உயிரிழப்புக்கு இந்தியப்படைகளே காரணமாக அமைகின்றன என்பதும் தெரியவந்துள்ளது!

செய்திகளைத் தருவதிலும், இந்திய தகவல் நிறுவனங்களுக்கிடையே மிகப்பெரும் ‘குழறுபடிகள்’, மாறுபாடுகள் தெரிகின்றன..

இலங்கையில் உள்ள இந்தியத் தூதர் தீட்சித், யாழ்மாவட்டத்தில் பொதுமக்கள் உயிரிழப்பு பற்றிக் கேட்டதற்கு, பலர் கொல்லப்பட்டிருக்கலாம்… ஆனால் விபரம்(எண்ணிக்கை) தெரியவில்லை என்கிறார்.

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியோ, ”எந்தவொரு குடிமகனும் கொல்லப்படவே இல்லை” என்று அடித்துச் சொல்கிறார். இது போன்ற அவரது பேச்சுக்கள் வெறும் ‘போர்போஸ்’விவகாரம் என்று கைவிட்டுவிடலாமா ? என்ன !? மக்களின் உயிர்களாச்சே  …!

இந்திய வானொலிகள் கூறுவதை மட்டும் தெரிந்து கொண்டால் எப்படி? இதோ வெளி நாட்டு நிருபர்கள் தரும் தகவல்களையும் சிறிது கேட்டுப் பாருங்களேன்….

“ஏறத்தாழ எழு நூறு தமிழ்ப் பொதுமக்கள் இந்திய ராணுவத்தின் தாகுதல்களின்போது கொல்லப்பட்டதாக யாழ்ப்பாணப் பொதுமக்கள் குழு கூறியுள்ளது. உணவு,உடை,உறையுள் இன்றி மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடந்த பதினைந்து நாள்களுக்கும் மேலாக அவதியுறுகின்றனர். இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் தமிழர் விரோதப் போக்கினை வெளிப்படுத்தியதாயும் அகதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இலங்கை ராணுவத்தின் கொடூரத்தன்மையை விட இந்திய ராணுவ நடவடிக்கைகள் மிகக் கொடூரமாக அமைந்ததாக அகதிகள் கூறுவதாய் இலண்டன் பி.பி.சியின் செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.

இந்திய ராணுவம் வெற்றிகரமாக முன்னேறிச் செல்வதாகக் கூறுவது முற்றிலும் உண்மை அல்ல என்று படுவதாகவும் அந்த நிறுவன அறிக்கை கூறியிருக்கிறது.

இந்தச் செய்திகளில் இருந்து என்ன தெரிகிறது ?

தமிழர்களுக்குப் பாதுகாப்பளிப்பதாகக் கூறிக்கொண்டு தமிழ்ப் பகுதியினுள் நுழைந்த இந்திய அமைதிப்படையின் நோக்கம், தமிழர்களைக் காப்பாற்றுவது என்பதைவிடவும், விடுதலைப் போராளிகளை ஒழித்துக்கட்டுவது என்பதாகத்தான் இருக்கிறது என்று புரிகிறதல்லவா ?

இல்லையாயின் இத்தனை லட்சம் மக்களை துன்புறுத்தி, பல நூறு தமிழர்களைக் கொன்று அதன் மூலம் தான் அமைதியை ஏற்படுத்தமுடியும் என்றால்… இது விநோதமாகவல்லவா இருக்கிறது !

இந்திய மாநிலங்களில் கூட மேற்கொள்ளாத இத்தகைய கடுமையான நடவடிக்கையினை பிரதமர் ராஜீவ்காந்தி ஈழத் தமிழர் மீது எடுக்கக் காரணம் யாது… ? அதுதான் புரியாத புதிராக உள்ளது!

முன்பொரு தடவை, இலங்கையின் அதிபர் { ஜே.ஆர்} “ நான் அரசியலில் நுழைந்த காலத்தில் இன்றைய இந்தியப் பிரதமர் ‘ஜட்டி’ கூட அணியாத சிறு பையன்… அவரா எனக்கு அரசியல் பாடம் கற்றுத்தர நினைக்கிறார்” என்று குறிப்பிட்டிருந்ததைப் போல்; இலங்கை அதிபரின் அரசியல் முதிர்ச்சிக்கு முன்னால், இந்தியப் பிரதமரின் அரசியல் விவேகமும், மதிநுட்பமும் வெறும் ‘ஜட்டிப் பையத்தனம்’ தானா ?

இந் நிலை நீடிக்குமாயின்… நேரு வின் காலத்தில் இருந்தே இந்தியப் பேரரசு கட்டிக்காத்துவந்த பெருமையும், மதிப்பும் வெகுவிரைவில் சிறுபிள்ளைத் தனமாகிச் சிரிப்புக்கிடமாகி விடும்.

இந்திய அறிஞர்களும், நீதி உணர்ந்த பொதுமக்களும் சற்று கவனிப்பார்களாக!

****************************************************************************************************************

 

 

 

”ஊழல்”- புதுக் ‘குறள்’கள்

.   ஊழல்- புதுக் குறள்கள்

”சர்வசித்தன்”

 

’வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ் நாடு’

எனப் பெருமிதம் பொங்கப் பாடினான் ‘முண்டாசுக் கவி’ பாரதி !

அவனது போற்றுதலுக்கு ஆளான வள்ளுவனும் தனது குறட்பாவில் ‘ஊழல்’ என்னும் தலைப்பில் எந்தவொரு அத்தியாயத்தையும் உடன் இணைக்கவில்லை! களவு, சூது, கள் என்று மாந்தர் புறந்தள்ள வேண்டுவன பற்றியெல்லாம் எழுதி வைத்துவிட்டுப் போனவன், இன்று நமது அரசியலார் புதுமையாய்(?) புகலிடந்தேடியிருக்கும் இவ் ஊழலைப் பாடாமல் விட்டது பெருங் குறையல்லவா?

அதுவும், வள்ளுவனை ஈந்து புகழ்கொண்ட தமிழகத்தில் மக்களின் தொண்டர்களாய் முகமூடி அணிந்திருக்கும் ‘மக்கள் பிரதிநிதி’களான அமைச்சர் ஒருவரே; அந்த வானையும் மிஞ்சும் வகையில் ஊழல் புரிந்திருப்பதாக உலகமே பேசிக்கொண்டிருக்கும் போது, அந்த ஊழலின் ‘மகிமை’ பற்றி எழுதாமல் இருப்பது ‘ஊழலை’ அவமதிப்பதாகாதா?

எனவே, எனது சிற்றறிவுக்கு எட்டியவாறு சில ‘குறள்’களை உங்கள் முன் வைக்கலாம் என நினைக்கிறேன்.

ஊழலை விடவும் இக் குறட்பாக்கள் மோசமானவையாக இருக்காது என்பது என் நம்பிக்கை.

01. ”அமைச்சர்க் கணிகலன் அதி ஊழல்-அதுவின்றி

இமை மூடி ஆழ் உறக்கம் இல்”

02. ”ஊழல் எனப்படுவது யாதெனில், தம்சுற்றம்

வாழ வகைசெய்யும் ஆறு”

03.” எப்பொருள் எவர்வழியாய்க் கிட்டினும்,அனைத்துமவர்

கைப் பொருளாய் மாற்றும் மருந்து”

04. “ஊழல் புரிந்தார்க்கு உய்வுண்டு, அவ்வூழல்

ஆளும் இனமாயின் இங்கு”

05. ”பொருளாசை,பொய்வேடம்,போலித் தன்மானம்

போற்றுபவர்க் குளதிந்த நோய்”

06. ”மக்கள் வரிப்பணத்தை மடக்கித் தம்பையுள்

வைப்பதே ஊழிற் கழகு”

07. ”எல்லா இடத்தும் நீக்கமற நிறைந்திருக்கும்

வல்லமை ஊழற்(கு) உண்டு”

08. ”ஊழல் எனவொன்று உலகத் திருக்கையில்

உழைப தமைச்சுக் கிழுக்கு”

09. ”மேலிருந்து கீழ்ப்பாயும் நீரருவி; பதவிக்

கீழிருந்து மேலேறும் ஊழல்”

10. ”எத்திப் பிழைப்பவரும் மேலாவார்; ஊழலதை

நத்திப் பிழைப்பவரி லிங்கு.”

 

*******************************************************

 

 

’கலைஞரி’ன் சீடருக்கு …..[ 30-08-2010 “ஈழநேசன்” இணைய இதழில் வெளியானது]

கலைஞ”ரின்  சீடருக்கு ஓர் கனிவான விண்ணப்பம்!

‘சர்வசித்தன்’

29 ஓகஸ்ட் 2010 வீரகேசரி ஞாயிறு பதிப்பில்; முன்னாள் இலங்கை இராணுவத் தளபதியும்- இன்னாள் ‘தேசத் துரோகி’யு(?)மான சரத் பொன்சேகாவினால் ; ‘அரசியல் கோமாளிகள்’ என்று பட்டம் சூட்டப்பட்ட தமிழகத் தலைவர்களுள் ஒருவரும்- கருணாநிதி அவர்களின் சீடருமான ரி.ஆர்.பாலு அவர்கள் அளித் பேட்டி ஒன்று வெளியாகியிருக்கிறது.

இந்தப் ‘பெருமகன்’ முன்னர் இந்தியா அனுப்பிவைத்த குழுவில் முக்கிய அங்கம் வகித்து, இலங்கையின் ‘மனிதாபிமானம் மிக்க’ செயல்பாடுகளைப் புகழ்ந்து கூறியவர் என்பதையும் தமிழர்கள் இன்னும் மறந்துவிடவில்லை.

தமிழர் பிரதேசங்களில் ராணுவக் குடியிருப்புகள் அமைக்கப் படுவது தொடர்பான கேள்வி ஒன்றுக்குக்குப் பதில் அளித்த அவர், அவ்வாறு தமிழர் கூட்டமைப்பினர் உட்படப் பலரும் கூறுகிறார்கள் என்றாலும் அதனை நாம் நேரடியாகப் பார்வையிட்ட பின்னரே கருத்துத் தெரிவிக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் பசில் ராஜபக்சவிடம் இது பற்றித் தாம் பேசிய போது, அவர் அவ்வாறு எதுவும் இல்லை என்று கூறியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதே பசில் ராஜபக்ச, இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே தடுப்பு முகாம்களில் இன்னும் 35,000 பேர் இருப்பதாகக் கூறிய போது, அப்படி ஏதும் இல்லை இன்னும் சிலரே இருக்கிறார்கள் என அறிவித்திருந்தார். கலைஞரின் சீடர், ஐ.நா பிரதி நிதியின் கூற்றை நம்பாது, இந்தியாவின் நட்பு நாடான இலங்கையின் ’பொருளாதார மேம்பாட்டு’ அமைச்சரின் சொல்லை ஏற்றுக்கொள்கிறார் போலும்.

நல்ல வேளை முள்ளிவாய்க்காலில் முப்பதாயிரம் தமிழர்கள் மூன்றே நாட்களில் பலியானதற்கும் ஆதாரம் தேவை என்று சொல்லாமல் விட்ட அவரது ‘தமிழ் உணர்வை’ப் பாராட்டத்தான் வேண்டும்!

இந்தியா இலங்கைக்கு உதவி செய்யத்தான் முடியும் அங்கு ‘பொலீஸ்காரன்’ வேலை பார்க்க முடியாது என்றும் திருவாய் மலர்ந்திருக்கிறார். அப்படி ஒரு வேளை ‘பொலீஸ் வேலை’ பார்த்தாலும் ஆகப் போவது எதுவும் இல்லை என்பது தெரிந்ததே. சிவசங்கர் மேனனும்,பிரணாப் முகர்ஜியும், கலைஞரின் ‘சிறப்பு’ உண்ணா நோன்பும் சாதிக்காத வித்தையையா ‘பொலீஸ்காரன் வேலை’ நிகழ்த்திவிடும் ?

இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் நடக்கவிருக்கும் மாநிலப் பொதுத் தேர்தல்; மீண்டும் உங்கள் அரசையும், மத்திய அரசையும் ஈழத் தமிழர்களுக்காகக் ‘கண்ணீர் உகுக்கும்’ நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது என்பதை  ‘தமிழக அரசியல்’ பற்றிய ஆரம்ப அறிவு படைத்தவர்கள் புரிந்துகொள்ளாமல் இல்லை!

என்றாலும், நீங்கள் பேசுவதும்,செய்வதும் உங்களுக்கே ‘நியாயமாக’ப் படுகிறதா ?

அண்டை மாநிலம் ஒன்றில், அதுவும் ஒரே இனத்தினராய் வாழும் உங்களுக்கே, உங்கள் சகோதரர்களது உணர்வினையும், அவர்கள் படும் துயரினையும் புரிந்து கொள்ள இயலாமல்; அவர்கள் அடையும் அத்தனை அவமானங்களுக்கும் , உயிர்-உடமை இழப்புகளுக்கும் சாட்சிகள் தேவை என்று சொல்வீர்களேயானால் உங்களிடம்போய் தமிழினத்தின் அவல நிலையைக் கூறுவதே அவமானம் அல்லவா?

’தானாடா விட்டாலும் தன் சதை ஆடும்’ என்பதெல்லாம் சாதாரண மக்களுக்கு மட்டும் தானா? ‘பதவிகளில், அதிகாரத்தில் உள்ளவர்களுக்குப் பொருந்தாதா ?

இதோ உங்களது பேட்டி வெளியான அதே ‘வீர கேசரி’யின் 29 ஆம் பக்கத்தில், சரணடைந்த தமிழ்ப் பெண்களுக்கு நேரும் அவலம் பற்றிய செய்திக் கட்டுரை ஒன்றும் வெளியாகி இருக்கிறது.

சென்றவாரம் வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் அரசின் பொலீசாரும்,சிறை அதிகாரிகளும் அங்கிருந்த தமிழ்ப் பெண்கள் மீது மேற்கொண்ட சோதனை மிலேச்சத்தனமாக இருந்ததாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆண்கள் சுற்றியிருக்க பெண்களின் உள்ளாடைகளைத் தளர்த்திவிட்டுப் போதைப் பொருள், ‘சிம் கார்ட்’ இவைகளைத் தேடும் போர்வையில் அவ்வதிகாரிகள் செயல்பட்டிருக்கிறார்கள். தமது இன உறுப்புகளின் மீது நடத்தப்பட்ட இவ் வக்கிரத்தைப் பொறுக்க முடியாமல், அப் பெண்களில் சிலர்,” நாம் திருமணம் ஆகாதவர்கள். இப்படியான மோசமான பரிசோதனைகளை எமக்குச் செய்யாதீர்கள்” எனக் கூறிய போது, ஓர் தமிழ் பேசும் அரச அதிகாரி …” நான் இன்று எதுவும் செய்யக்கூடாது சமய ரீதியான முக்கிய நாள் இது” என்று ‘நக்கலாக’ப் பதில் உரைத்திருக்கிறார்.

கலைஞரின் சீடருக்கு, இவை போன்ற சம்பவங்களுக்கும் சாட்சியங்கள் தேவைப்பட்டால் நாம் என்ன செயவது?

ஓர் அரசியல் வாதியாக, ஆளும் கட்சி ஒன்றின் முதிர்ந்த தலைவராக இருக்கும் ரி.ஆர். பாலு அவர்களே, நீங்கள் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு விசுவாசமாக இருங்கள்.அதுதான உங்களுக்கும் பாதுகாப்பு. ஆனால், அதற்காக ஈழத்தில் வாடும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்க்கை உங்கள் அரசியல் சதுரங்கத்தின் துருப்புச் சீட்டு என எண்ணிச் செயல்படுவது ‘மானிட விழுமியங்களுக்கு’ எதிரானதாகும் என்பதை உணருங்கள். ஈழத்தின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘கலைஞ’ரிடம் எடுத்துச் சொன்னவற்றை விடவும் உங்களுக்கு, பசில் ராஜ பக்சே கூறியது வேதவாக்காக இருக்கலாம். ஆனால் ஈழத்தில் கடந்த அறுபது வருடங்களாக அரசியல் முகவரியைச் சிறிது சிறிதாகச் சிங்களப் பெரும்பான்மையிடம் பறிகொடுத்து, இன்று மானத்தையும் இழந்து நிற்கும் உங்கள் சகோதரர்களுக்கு நீங்கள் கூறுவன யாவும் ஓர் ‘மூன்றாந்தர அரசியல் வாதியின் தந்திரப் பேச்சாகவே’ தோன்றும்.

ஈழத்தமிழனின் அரசியல் வரலாறு, உங்கள் தலைவர் ‘கலைஞ’ருக்கு நன்றாகவே தெரியும். தெரிந்தும், அவர் ஆரம்பகாலத்தில் எழுதிய வீர வசனங்களையே மறந்துவிட்டு ‘எட்டிய மட்டும்கூடப் பாயத்துணியாத’ வர்களாய் இருப்பது தமிழினத்தின் சாபக் கேடே!