குட்டித்தீவில் குமுறல்கள் ஓயவில்லை! [ புதிய கட்டுரைத் தொடர்]

தொடரினுள் புகு முன் சில வார்த்தைகள்…..

[சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர், மலேசியாவின் முன்னணிப் பத்திரிகை ஒன்றில் “குட்டித்தீவைக் குலுக்கும் குமுறல்கள்” என்னும் தலைப்பில் ஈழத்  தமிழர்களது அரசியல்-ஆயுதப் போராட்டம் குறித்த எனது கட்டுரைத் தொடர் வெளியாகி இருந்தது.  1986 ஆம் ஆண்டு அது ,நூலாகவும் வெளியீடு கண்டது.

ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் எழுதப்பட்ட அக் கட்டுரைத்தொடரில் குறிப்பிடப் பட்டிருந்த ஈழத் தமிழர்களது எந்தவொரு உரிமைக் கோரிக்கையும் நிறைவேற்றப் படாமலேயே… அந் நீண்ட உரிமைப்போர் முடித்து வைக்கப்பட்டு மேலும், இரண்டு வருடங்கள் உருண்டோடியும் விட்டது!

ஆம், ஈழத்தமிழர்களது இதயக் குமுறல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் இந் நேரத்தில்…….. இந்தத் தலைப்பில் மற்றுமோர் தொடரினை எழுதுவது பொருத்தமானது என நினைக்கிறேன்]

மூன்றாயிரம் அமெரிக்கப் பொதுமக்களைப் பலி கொண்ட ஒசாமா-பின்-லாடனைக் கொன்று தனது நாட்டு மக்களுக்கு நீதியினை அளித்து விட்டதாகப் பெருமைப் பட்டுக் கொள்கிறது அமெரிக்கா! அதற்கு ஆதரவாக உலக நாடுகள் பலவும் தங்கள் மகிழ்ச்சியையும் பாராட்டுதல்களையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன……..

ஒசாமாவின் இயக்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் அதன் கூட்டணியில் செயலாற்றும் மேற்கு நாடுகளுக்கும் எதிராக; இஸ்லாமியப் புனிதப் போரினைப் பிரகடனஞ்செய்து அதனை நிறைவேற்றும் பொருட்டு வன்முறையினைத் தன் வழிமுறையாகக் கொண்டது!

அவ்வியக்கத்தின் பின்னணியில் ‘அமெரிக்க எதிர்ப்பு’ என்னும் உணர்வே மேலோங்கி இருந்தது. உலக நாடுகளின் உள் விவகாரங்களில் தன் மூக்கை நுழைத்துக் கொண்டு அதன் மூலம் தனது வர்த்தக மற்றும் ஏகாதிபத்திய விரிவாக்கத்துக்கு அடித்தளமிடும் அதன் போக்கினுக்குப் பதிலடி தரும் நோக்கத்தோடு செயல்பட்டது ஒசாமாவின் ‘அல்கைடா’.

அதுமட்டும் அன்றி, இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்கு ஆதரவாக இயங்குவதாக உலகின் இஸ்லாமிய அரசுகள் சிலவற்றாலும் புறந்தள்ளப்பட்ட இயக்கமாகவும் அது இருந்தது.

அவ் இயக்கத்தின் இலக்குகளாகப் பெரும்பாலும் பொதுமக்களே இடம் பெற்றிருந்தார்கள். பொது மக்கள் பயணம் செய்யும் விமானங்கள்; பொது மக்கள் வேலைபார்க்கும் இடமாகவும் வர்த்தக நிலையமாகவும் இருந்த உலக வர்த்தக மையம் இவ்வாறு அமெரிக்க/மேற்குலக நாடுகளின் இராணுவக் கட்டமைப்புகளைக் கைவிட்டுவிட்டு அப்பாவி மக்களின்மீது தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்த அந்த இயக்கமும் அதன் தலைவனும் பயங்கரவாத முத்திரை குத்தப்படுவதில் தவறேதும் கிடையாது.அவ்வாறு செயல்படும் இயக்கங்கள் அடக்கப்படவும்,அழிகப்படவும் வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள் எழுவதற்கும் இடமில்லை!

ஆனால், ஓர் அரசினால் தொடர்ந்து முதல் முப்பது வருடங்கள் அரசியல் ரீதியாயும்; அதன் பின்னர் இராணுவ நடவடிக்கைகளாலும் பழிவாங்கப் பட்ட ஓர் இனத்தின் விடுதலைக்காக, நிர்ப்பந்தம் காரணமாக ஆயுதம் ஏந்திய தமிழர்களுக்கு எதிராக உலக நாடுகள் யாவும் அதனைப் பயங்கரவாத முத்திரை குத்தி அழித்துவிட்டு…….. இப்போது  அவ்வாறு அழிதொழித்த அரசு மீது மனித உரிமை மீறல்கள் என்னும் போர்வையில் அறிக்கைப் போர் ஒன்றினை ஆரம்பித்து விட்டிருக்கின்றன.

உண்மையில் இந்த உலக அரசுகளுக்குப் பயங்கரவாதத்துக்கும், விடுதலைப் போராட்டத்துக்கும் உள்ள வேறுபாடு தெரியாதா ? அல்லது, இப்போது சுதந்திர நாடுகளாக இருக்கும் தேசங்கள் ; தாம் சுதந்திரம் பெற எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது ஆயுதத்தின் உதவியினை நாடவில்லையா..?

பாலஸ்தீன மண்ணில் அறுபத்தி மூன்று வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேல் என்னும் ஓர் நாட்டினை உருவாக்கிய அமெரிக்கா, அப்போது அகிம்சைப் போரில் ஈடுபட்டிருந்த யூத மக்களுக்காகவா, அங்கு ஓர் நாட்டினை உருவாக்கிக் கொடுத்தது?

இதே வரலாறு தானே இன்றைய தென் சூடான் வரை தொடர்ந்து வருகிறது……?

இது இவ்வாறிருக்கையில்……. ஈழத் தமிழர்கள் விடயத்தில் மட்டும், சர்வதேசம்  முரணான போக்கினைக் கடைப்பிடிப்பதுதான் ஏனென்று புரியவில்லை.

ஓர் இனத்தையே திட்டமிட்டு அழிக்கும் அரசின் செயல்பாடுகளை மூடிமறைத்து, நடை பெற்றிருப்பது ‘மனித உரிமை மீறல்கள்’ என்று ஒப்புக்கு ஓர் அறிகையை வெளியிடுவதால், அந் நாட்டில் தொடர்ந்தும் தமிழினம் பாதுகாப்புடனும், அதற்குரிய உரிமையுடனும் வாழ வழி கிட்டும் எனச் சர்வதேசம் நம்பினால்…அது வெறும் பகல் கனவே!

ஆங்கிலேயர்களிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் முதல் அங்கு இடம்பெற்று வந்த அரசியல்/சமூக நடைமுறைகளை ஊன்றிக் கவனிப்பவர்கள் , அந் நாட்டின் இரு தேசிய இனங்களும் உரசல்கள் ஏதுமின்றி வாழ வேண்டுமாயின் அவர்கள் தங்கள் தங்கள் பிரதேசங்களில் தங்களுக்கான அரசியல்/சமூக நிர்வாக உரிமையினைப் பெற்றிருத்தல் அவசியம் என்பதைப் புரிந்து கொள்வர்.

இதற்கு, அந் நாட்டில் வாழும் தமிழர்-சிங்களர் இவ்விரு இனத்தினதும் வரலாறு, மனோபாவம், அதன் தலைவர்களால் தூண்டப்படும் இன பேதம் என்பன பற்றிய அடிப்படை அறிவு அவசியமாகிறது.

இவ் விபரங்களோடு, சிங்களப் பெரும்பான்மை இனம் பெற்ற சுதந்திரத்தை ஈழத் தமிழினமும் அனுபவிப்பதற்காய் அவ்வினம் மேற்கொண்ட முயற்சிகள்;  ஆறு தசாப்தங்களாகக் [ 60 வருடங்களாய்] கானல் நீராய்த்  தொடர்வதை ஓர் ”பறவைப் பார்வை”யில் அளிக்கும் தொடர் இதுவாகும்.

சர்வசித்தன்.

[மே 06; 2011 “ஈழ நேசன்” இணைய இதழில் வெளியானது]

(மீதி அடுத்த வாரம்………..)