மானமிகு வைகோ அவர்களுக்கு……

மானமிகு வைகோ அவர்களுக்கு, ஓர் அவசர வேண்டுகோள்!

“சர்வசித்தன்” [21-03-2011 ல் எழுதியது]

தன்மானமும், தனது இனத்தின் மீது உண்மையான பற்றும், தளராத மன உறுதியும், அரசியல் நேர்மையும் கொண்ட வைகோ அவர்களுக்கு;

தமிழகத்தின் நல்ல தலைவர்களில் ஒருவராக விளங்கும் உங்களுக்கு ஏற்பட்ட அவமானம் காரணமாக; உங்கள் கட்சி இந்தத் தடவை தமிழகம்-புதுவை இரண்டிலும் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளீர்கள்.

தி.மு.கவில் இருந்து நீங்கள் வெளியேறிய சமையத்தில், “ஓர் உறையில் இரண்டு போர் வாள்கள் இருப்பது சாத்தியமானதல்ல” என்னும் பேச்சுப் பரவியிருந்தது. அதில் ஒரு வாள் ஏற்கனவே ‘ஆரிய’த்தின் முன்னால் மண்டியிட்டுத் தன் கூர்மையை இழந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன! அவ்விரண்டில் எஞ்சி இருப்பது உங்கள் தலைமையில் உள்ள ம.தி.மு.கவும் அதன் ‘விலைபோகாத’ தொண்டர்களுந்தான்.

இந் நிலையில் தாங்களும் ’அரசியல் துறவறம்’ என ஆரம்பித்தால்,  இன்றில்லாவிடினும் என்றாவது ஊழலும், சுரண்டலும், உண்மை இன உணவும் கொண்ட அரசினைத் தமிழகதில் உருவாக்கும் பணி மேலும் தேக்கமடைந்து விடாதா?

ஒவ்வொரு தேர்தல்களின் போதும் நடிகர் ரஜனிகாந்த் இமையமலைக்குச் செல்வது போன்று, நீங்களும் இந்தத் தேர்தலில் பங்கு கொள்ளாமல் விலகி இருப்பது எந்த வகையில் நியாயம்?

ரஜனி காந்த் ஓர் நடிகர் மட்டுமே, ஆனால் நீங்களோ தமிழக அரசியலில் நேர்மை மிக்க ஓர் தலைவர். நீதிக்காகப் போரிடும் ஓர் மன்னன் தான் தோற்றுவிட்டால் களத்திலிருந்து தப்பி ஓடி ஒளிவதற்கு எண்ணுவதில்லை.மாறாக, மீண்டும் படை திரட்டிப் போரிடவே துணிவான்.

ஆனால், நீங்களோ, உங்களைப் பிறர் புரிந்து கொள்ளவில்லை என்னும் ஆதங்கத்தில், உங்கள் ‘கடமை’யைத் துறக்க முயல்வது ஏற்புடையதாகப் படவில்லை.

உங்கள் கட்சிக்கு எனக் கொள்கை அதனை அடைவதற்கு உரிய செயல் திட்டம், அவற்றைச் செயல்படுத்தும் அடுத்த கட்டத் தலைவர்கள், தொண்டர்கள் என ஓர் அமைப்பே இருக்கும் போது, வருடம் முழுவதும் கண் துஞ்சாது படித்த மாணவன் ஒருவன் ஆசிரியர் கோபித்துக் கொண்டதற்காகப் பரீட்சை எழுத மறுப்பது போன்று,  தேர்தலைப் புறக்கணித்துவிட்டு அஞ்ஞாதவாசம் செய்யப் போகிறேன் என்றால் எப்படி ?

போர்க்களத்துக்கு அஞ்சும் கோழையல்ல நீங்கள் என்பது உண்மையானால், இந்தத் தேர்தலின் போது; அ.தி.மு.க விடம் கேட்டிருந்த 35 தொகுதிகளிலும் உங்கள் கட்சி தனித்துப் போட்டியிட ஆவன செய்யுங்கள். முடிந்தால் அத்தனையும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளாக இருப்பின் சிறப்பானது. இறுதி நேர சலசலப்பின் பின்னர் தங்களுக்கு, வேண்டாவிருப்பாக அளிக்கப்பட்ட சில தொகுதிகளை ஏற்றுக்கொண்டு, இப்போது உங்களை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரும் இந்திய கம்யூனிஸ்ட்டுகளும், மார்க்ஸிஸ்ட்டுகளும் உங்களுடன் இணைந்து  காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் போட்டியிடலாமே? இதன் மூலம் நீங்களும் அவர்களும் தங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதோடு, தமிழகத்தின் முதல் எதிரியான காங்கிரஸை அத்தனை தொகுதிகளிலும் தோல்வியுறச் செய்ய இயலாவிடினும், அதன் பலத்தைப் பெருமளவு குறைப்பதில் வெற்றி காணாமுடியும் அல்லவா?

ஏற்கனவே, காங்கிரஸின் செயல்களால் மனம் புண்பட்டிருக்கும் தி.மு.க வின் தன்மானம் மிக்க சில தலைவர்களும் தொண்டர்களும் நிச்சயம் உங்களுக்கு மறை முகமாகவேனும் ஆதரவு அளிக்கவே செய்வார்கள். கலைஞரோடு, தங்கள் அரசியல் லாபங்களுக்காக ஒட்டிக் கொண்டிருக்கும் இவர்கள்;சந்தர்ப்பம் கிட்டிய போது தங்கள் கண்களில் விரலை விட்டாட்டும்

காங்கிரஸுக்குப் பாடம் புகட்டவாவது உங்களை ஆதரிக்கவே செய்வார்கள்! இவை அனைத்துக்கும் மேலாக உங்களை மதிக்கும் பலர் இன்றும் தி.மு.கவிலும்… ஏன்…அ.தி.மு.கவிலும் இருக்கவே செய்கிறார்கள்.

தி.மு.க; அ.தி.மு.க இவ்விரண்டு கட்சிகளிலும் நம்பிக்கை இழந்த பலர் விஜயகாந்தின் கட்சியை நாடியது போல், இப்போது உங்களை நாடும் வாய்ப்பும் உள்ளது.

எனவே, தன்னம்பிக்கையுடன் உங்கள் தொண்டர்களோடு களமிறங்குங்கள்.

நெடுமாறன் ஐயா, சீமான் போன்றவர்களையும் அரவணைத்துக் கொண்டு செயலாற்றுங்கள்.

பூனை இல்லா வீட்டில் எலிகளுக்குக் கொண்டாட்டம் என்பது போன்று, நேர்மையான அரசியல் வாதிகள் போட்டியில் இருந்து விலகி விட்டால், ’ஊழல் பெருச்சாளி’களுக்கே கொண்டாட்டமாகிப் போகும். இது வீட்டிற்கோ, நாட்டிற்கோ நன்மை தராது.

புதியதோர் விடியலுக்கு உங்கள் முயற்சிகள் ஆரம்பமாக அமையட்டும்.

முறைகேடுகள், குடும்ப அரசியல், மக்களின் தன் மானத்தை விலை பேசுதல்,கபடத்தனம் இவை அனைத்தும் ஓர் நாளில் மறைந்துவிடாது. தொடர்ச்சியான போராடங்களின் மூலமே இது சாத்தியமாகும்.

அரசியல் நேர்மையின் முதற் ’பொறி’யினை மூட்டும் கைகள் உங்களதாக இருக்கட்டுமே. காலப் போக்கில் பல கைகள் இதில் ஈடுபடும் என்பது திண்ணம்.

[2011-03-21 ஆ.விகடன் ‘கருத்துக்களம்’ பகுதியில் வெளியானது]]

2 thoughts on “மானமிகு வைகோ அவர்களுக்கு……

  1. ஐயா, அரசியல் நிலவரத்தை எழுதுங்கள். அது நல்லது. கூடவே ஆரியம் பாரியம் என்றெல்லாம் தேவையில்லாமல் எழுதுகிறீர்களே? அது என்ன ஆரியம்? உங்களை அந்த ஆரியம் எந்த இடத்தில் தடுத்து நிறுத்துகிறது. வெள்ளைக் கிறிஸ்த்துவ பன்றிகள் தங்கள் பிரித்தாளும் சூதுமதி சூழ்ச்சியாக கையாண்ட பல யுக்திகளுள் ஒன்றான இந்த திராவிட ஆரிய கட்டுக்கதையையும் அடங்கும். அவன் செயல் அவனது சுயநலத்தை முன்னிட்டது. ஆனால் நாம் ஒருவருக்கு ஒருவர் இப்படி பாகுபாடுகளின் விஷ வித்துக்களை விதைத்துக்கொண்டிருந்தோமானால் நமது தேசம் மீண்டும் ஒரு முறை சிதறுண்டு அன்னியருக்கு அடிமையாகும் என்பதை உணரந்து அறிவு ஆராய்ச்சியுடன் நடந்துகொள்ளுங்கள். சர்வசித்தன் உண்மையில் சர்வசித்தனாக இருக்கவேண்டும்.

    • //ஒரு வாள் ஏற்கனவே ‘ஆரிய’த்தின் முன்னால் மண்டியிட்டுத் தன் கூர்மையை இழந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன! // தாங்கள் மேலே குறிப்பிட்டிருப்பது இதனைத்தான் என நினைக்கிறேன். இதில் ‘ஆரியம்’ என்பதைப் பிறர் சொல்லாகவே – அதாவது கலைஞர் சொல்வது என்னும் பொருளில்- குறிப்பிட்டுள்ளேன். என்னைப் பொறுத்த வரையில் ஆரிய-திராவிட வேறு பாடுகளை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.ஒரு வகையில் தூய திராவிடமோ, தூய ஆரியமோ எங்கும் கிடையாது. உலக வரலாற்றில் இனக் கலப்புகள் சர்வ சாதாரணம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s