தமிழக அரசியலில், மானமுள்ள தலைவர்களின் மாற்று அணி தேவை!

“சர்வசித்தன்”

’நேர்மையும், அரசியலில் நாணயமும், மக்கள் தொண்டில் உறுதியும் கொண்ட புதிய அணி ஒன்று தமிழகத்தில் உருவாகும்வரை, மக்கள் தொடர்ந்து ஏமாற்றங்களையே எதிர்கொள்ள நேரும்.’

நேற்றைய தினம்(16-03-2011) ‘கீற்று’வில் வெளியான எனது கட்டுரையின் முடிவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.

அது வெளியாகிய சில மணி நேரங்களுக்குள் தமிழக அரசியலில் இடம் பெற்றுவரும் சம்பவங்கள் மகிழ்ச்சி தருவதாய் இல்லை!

தமிழகத்தினை இதுவரை ஆண்ட/ஆளும் இரு திராவிடக் கட்சிகளின் தலைமைகளது நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்கள், இது இன்றைய காலகட்டத்தின் உடனடித் தேவை என்பதை மறுக்க மாட்டார்கள்.

தன் குடும்பம்,தன் பதவி,தன்னைச் சேர்ந்தவர்களின் சொகுசான வாழ்க்கை என்பதில் அதிக நாட்டங்கொண்ட ஓர் தலைமை!

தன்னை மதிப்பவர்களை மதித்துச் செயல்படாமை, தான் தோன்றித்தனமாக முடிவுகளை மேற்கொள்ளல்; என்னை விட்டால் நாட்டை வழி நடத்த ஏற்ற தலைமை இல்லை என்னும் எண்ணம் கொண்டது மற்றொன்று!. இவையனைத்தையும் விடவும், இவ்விரு தலைமைகளின் கீழ் அரங்கேறிய ‘ஊழல்’ வரலாறுகள்!

இவற்றிற்கு மாற்றாக, மானமுள்ள தலைவர்கள் இனியாதல் ஒன்றிணைந்து செயல்பட முன் வரவேண்டும்.

அறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர்; இவர்கள் இருவராலும்; ஆரம்பிக்கப்பட்ட; தமிழகத்தின் இரு முக்கிய கட்சிகளும்; அவை ஆரம்பிக்கப்பட்ட சமையத்தில்   எதனை அடைவதற்காக ஆரம்பிக்கப்பட்டனவோ அவற்றிலிருந்தும் விலகி வெகுதூரம் வந்துவிட்டன.

திராவிட மற்றும் தமிழின விடுதலையும், மேம்பாடும் குறித்துக் கனவு கண்டு, அதன் விளைவாய் திராவிட முன்னேற்றக் கழகத்தினை உருவாக்கியவர் அறிஞர் அண்ணா. அரசியல் ரீதியில் மாநில அரசு, நடுவண் அரசுக்குக் கட்டுப்பட்டது ஆயினும் இவ்விரு தலைமைகளும் ஒன்றினுக்கு மற்றொன்று அடிமைப்பட்டதல்ல என்னும் சுய உணர்வோடும்,தன் மானத்தோடும் செயல் படுவது அவசியம் என் வலியுறுத்தி அதன் வழி நடந்தவர் அண்ணா! ஆனால் இன்றைய தலைமை, சுய லாபத்துக்காகவும்; செய்த தவறுகளை மறைப்பதற்காகவும் நடுவண் அரசிடம் மண்டியிடுவதற்கும்; இன நலன்களைப் புறந்தள்ளுவதற்கும் தயங்குவதில்லை என்பதை அண்மைய நிகழ்வுகள் மீண்டும் உறுதி செய்திருக்கின்றன.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினை எம்.ஜி.ஆர் ,ஆரம்பித்ததன் பின்னணியில், அன்று ‘கலைஞர்’ புரிந்த ஊழல்களும்- அதனைத் தட்டிக் கேட்டதால் அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதும் காரணங்களாக அமைந்திருந்தன.

நேர்மையான அரசொன்றினை-அதே சமையம் ‘அண்ணா’வின் எண்ணங்களைச் செயல்படுத்தவல்ல அரசினை ஏற்படுத்துவதே அவரது குறிக்கோளாக இருந்தது.

மனித நேயமும், பாதிப்புற்றவர்களுக்கு உதவும் பண்பும் கொண்டவராக அவர் இருந்த காரணத்தால் மிகக் குறுகிய காலத்திலேயே அவரால் தமிழக அரசின் தலைமை அமைச்சராக வரமுடிந்தது.

ஆனால், அவருக்குப் பின் அ.தி.மு.க வும்; தி.மு.க வின் வழியில் ஊழல்; அதிகார துஷ்பிரயோகம்; குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சலுகைகள் எனத் தடம் மாற…..  அடுத்துவரும் தேர்தல்களில்…… தமிழகம் அனுபவித்தது  ‘மியூசிக்கல் சேர்’ விளையாட்டினைத்தான்!

இவர்களை விட்டால் ஆளுவதற்கு எவரும் கிட்டவில்லை என்னும் நிலையில்- அவ்வாறு ஓர் மாற்றுத் தலைமையினை, நேர்மையாளர்கள் உருவாக்காத நிலையில்- தமிழக மக்கள் இவர்களில் யாராவது ஒரு தலைமையிடம் அகப்பட்டேயாக வேண்டியவர்கள் ஆனார்கள்!

எனினும், இன்றைய நிலையில்;…….. இரு கழகங்களிலும் நம்பிகை இழந்த மக்களின் வாக்குகளைத் தனது பலமாக நினைக்கும் விஜயகாந்த்; சிறந்த பேச்சாளரும், அரசியல் நேர்மையும் கொண்ட வைக்கோ ; மனித நேயம் விரும்பும் கம்யூனிஸ்ட்டுகள்; (முடிந்தால்?) இன,சமூக உணர்வாளரான மருத்துவர் ராமதாஸ் இவர்கள் அனைவரும் ஓரணியில் இணைந்து – தமிழர் மற்றும் தமிழக வளர்ச்சி என்னும் பொதுவான செயல் திட்டத்தின் அடிப்படையில்-செயல்படின் தமிழகம் சிறப்புறும்.தமிழர் பெருமை அடைவர்.

தமிழகத்தின் நடு நிலையாளர்களும், கல்விமான்களும், சமூக ஆர்வலர்களும் இதில் அக்கறை செலுத்தினால் இதனை நிறைவேற்றுவது சாத்தியமே.

காலம் இன்னும் கடந்து விடவில்லை.

[ http://www.keetru.com ல் 17-03-2011 இல் வெளியானது ]