ஈழத்தமிழருக்கு, ராஜபக்‌ஷே வழங்கவிருப்பது—–

 

ஈழத் தமிழருக்கு, ராஜபக்‌ஷே வழங்கவிருப்பது……

‘கோழிக் கறி உணவா, ஒடியல் கூழா அல்லது……

“சர்வசித்தன்” [02-03-2011ல் எழுதியது]

அம்புலிமாமாவில் வெளியான ‘வேதாளம் சொன்ன கதை”யைப் படிக்காத சிறுவர்கள் சிலராகத்தான் இருப்பார்கள்! இப்போது, இந்தக் கட்டுரையை வாசிக்கும் பலர் சிறுவர்களாக இருந்த சமையத்தில் நிச்சயம் ‘அம்புலிமாமா’ படித்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். அவ்வாறு படித்திருக்காவிட்டாலும் பரவாயில்லை, இன்று இலங்கையில் மீண்டும் ஆரம்பித்திருக்கும் ‘தமிழர் உரிமைகளை வென்றெடுக்கும் பேச்சுவார்த்தை’ அதே போன்ற ‘வேதாளம் முருங்கை மரமேறும்’ காட்சியை விரைவில் அரங்கேற்றத்தான் போகிறது! அப்போது உங்களுக்கும் ‘21ம் நூற்றாண்டின் வேதாளக் கதை’ ஒன்று கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இன்றைய ‘கதை’யில் இளவரசன் விக்கிரமனாகத் தமிழ்க் கட்சிகள் ஒருங்கிணைப்பும்; வேதாளமாக அதிபர் ராஜபக்‌ஷேவும்  இடம் பெறுவார்கள்.

இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்தே, தமிழர்களது நியாயமான கோரிக்கைகளை முன் வைத்து எமது அரசியல் தலைவர்கள், சிங்கள அரசுகளுடன் பல தடவைகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். அவ்வாறு இடம் பெற்ற பேச்சுவார்த்தைகள் சிலவற்றின் முடிவில் ‘ஒப்பந்தங்கள்’ என்னும் பெயரில் சில தீர்வுகள் இரு தரப்பினரிடையேயும் உருவாகியும் இருக்கின்றன. பின்னர் அவை வழக்கம் போல்(!) கிழித்து வீசப்பட்டும் உள்ளன.

இனிச் சுரண்டுவதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில், பிரித்தானிய அரசு இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்து வெளியேறத் தீர்மானித்த நேரத்தில்; இந்தியாவும் இலங்கையும் ஒன்றன்பின் ஒன்றாக விடுதலை பெற்றன.அவ்வாறு, ஆங்கிலேயரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட இலங்கை மக்களில் சிறுபான்மையோராக இருந்த தமிழர்களுக்கு, விடுதலைக்குப் பதிலாக ‘எஜமானர் மாற்றமே’ ஏற்பட்டிருந்தது!

இதனால், ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டம், சுதந்திரத்திற்கு முன் (சு.மு); சுதந்திரத்துக்குப் பின் (சு.பி) என்னும் புதியதோர் பரிமாணத்தை எட்டியிருந்தது என்பதே உண்மை.

ஆரம்பத்தில் சுமார் முப்பது வருடங்கள் அமைதியான வழியில் தமிழர்களது வாழ்வாதார உரிமைகளுக்காகத் தமிழ்த் தலைமைகள் போராட நேரிட்டது.

1956 ல் சிங்களம் மட்டும் அரச மொழி என்பதை முன்னிறுத்தி இலங்கையின் ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற பண்டாரநாயக்கா, பின்னர் தந்தை செல்வாவுடன், தமிழர் பிரதேசங்களில் அவர்களது அபிலாசைகளை ஓரளவுக்கேனும் பூர்த்திசெய்யவல்ல “பண்டா-செல்வா” ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்.

ஆனால், இவ் வொப்பந்தம், அன்று எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஜே.ஆரின் (ஐ.தே.கட்சி) கண்டியாத்திரையின் பயனாய் ‘அற்ப ஆயுளில்’ முடிவுக்குவந்தது.

அதன் பின்னர் மேலும் பத்து வருடங்கள் கழித்து 1965 ல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவான அரசு  ‘தமிழ் மொழி விசேட விதிகள்’ மூலம் தமிழர்களுக்கு ‘பஞ்சு மிட்டாய்’ வழங்கித் தமிழ்த் தலைமைகளின் ‘அழுகையை’(?)க் கட்டுப்படுத்தி வைக்க முயன்றது.

என்றாலும் வயிற்றுப் பசிக்கு மிட்டாய் பரிகாரமாக இயலுமா?.. அதுவும் சிங்களத் தலைமைகளுக்கே உரிய வழிகளில் ஒப்பந்த மீறல்களை நாசூக்காகச் செய்வதைத் தமிழ்த் தலைவர்கள் எவ்வளவு காலந்தான் பொறுத்திருப்பார்கள்?…

அடுத்த பொதுத் தேர்தலில், ஐ.தே.கட்சி பதவியிலிருந்து நீக்கப்பட அந்த இடத்திற்கு; ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையிலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வந்தது.

‘தவிடு வழங்கும் அப்பன் போய், உமி வழங்கும் பிள்ளை’ அதிகாரத்துக்கு வந்ததுபோல், முன்னைய ஐ.தே.கவை விடவும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் ஆட்சியில் தமிழர்களது உயர்கல்வியைப் பாதிக்கும் ‘தரப்படுத்தல்’ சட்டம் தமிழுரிமைப் போரில் மாணவர்களையும் ஈடுபடுத்தும் புதிய வாசலினைத் திறந்து வைத்தது.

அதே காலப் பகுதியில் இலங்கையில் ஆரம்பித்திருந்த ஜாதிக விமுக்திப் பெரமுன (ஜே.வி.பி) கிளர்ச்சிகளும்; தமிழ் மாணவர் பேரவையின் தோற்றமும் இலங்கை அரசியல் வரலாற்றில்; அரசியல் போராட்டங்களின் பக்கம்; அதிக அளவில் இளைஞர்களைத் திசை திருப்பிய நிகழ்ச்சிகள் எனலாம்.

1976 ல், தமிழர்களது மூன்று முக்கிய கட்சிகளும் இணைந்து உருவான தமிழர் விடுதலை கூட்டணியும், அதன் பெறுபேறாய் ஏற்பட்ட ‘வட்டுக் கோட்டைத் தீர்மானமும்’ தமிழ் அரசியல் போராட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருந்தன.

1977 ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், அப்போதைய ஆளும் சுதந்திராக்கட்சியின் அணி தோல்வியைத் தழுவ, அரசியல் அதிகாரம் ஐ.தே.கட்சிக்குக் கிடைத்தது. எதிர்க் கட்சியாக  அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழர் கூட்டணியும்; எதிர்க் கட்சித் தலைவராக அமிர்தலிங்கமும் தெரிவானார்கள்.

இலங்கை வரலாற்றில் தமிழர்கட்சி ஒன்று எதிர்க் கட்சியாகவும், தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த-முதலும்,முடிவுமான- சந்தர்ப்பம் அதுவே எனலாம்!

[ கருத்துப் படம்; நன்றி ‘The Island'(Sri Lanka)]

எதிரணி அந்தஸ்த்தையே இழந்துவிட்ட வகுப்புவாதக் கட்சியான ஸ்ரீ.ல.சு.கட்சியின் கீழ் மட்டத் தலைவர்கள் சிலரால் தூண்டிவிடப்பட்டதாக நம்பப்படும் 1977 ஆகஸ்ட் கலவரம், மலையகத் தமிழர்களைக் குறியாகக் கொண்டிருந்தது.இதனால் நானூறுக்கும் அதிகமான மலையகத் தமிழர்கள் உயிரிழக்கவும், பல ஆயிரம் பேர் உடமைகளை இழக்கவும் நேரிட்டது.

1978 ல், இலங்கை குடியரசாகப் பிரகடனஞ் செய்யப்பட்டு, அதற்கான புதிய அரசியலமைப்பும் உருவாக்கப்பட்டது. அன்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பன்மையைப் பெற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சி; புதிய அரசியலமைப்பில் தமிழர்களது பாதுகாப்பு,உரிமை இவைகளை உறுதி செய்யும் எதனையும் வழங்கியிருக்கவில்லை.

இதனை கண்டித்து நாடாளுமன்றத்திற்குச் செல்லாது புறக்கணித்த தமிழர் கூட்டணி, முடிவில் தமது எதிர்க் கட்சி அந்தஸ்த்தையும் இழக்க நேர்ந்தது.

இவையனைத்தும், தமிழுரிமைப் போராட்டத்தினை அதன் அதன் கட்டத்திற்கு நகர்த்திற்று.

தன்னிலும் சிறியவனான தன் தம்பியை அரவணைத்துச் செல்லும் உணர்வினை மறந்து, அவனையே எதிரியாகப் பார்க்கும் அண்ணனைப் போல் நடந்து கொள்ளும் சிங்களப் பெரும்பான்மை இனத் தலைவர்களது இது போன்ற செயல்கள்…………..

“அக்கா அக்கா என நீ அழைத்தால்…

அக்கா தரவென்ன சுக்கா? மிளகா? சுதந்திரம் கிளியே”

என்னும் புரட்சிக் கவிஞனின் கவிதை வரிகளின் பொருளுக்கு உருவம் கொடுக்க முனையும் வேட்கையினைத் தமிழ் இளைஞர்களது எண்ணங்களில் ஏற்படுத்தியது என்பதே பொருத்தமானது. இதற்குரிய முழுப் பெருமையும்(!?) சிங்களத் தலைமைகளுக்கே உரியது.

1983 இனக் கலவரமும், அதனைத் தொடர்ந்து வேகமடைந்த ஆயுதப் போராட்டமும்…….. அதனால் ஈழத்தமிழர்களில் சரி பாதிப்பேர் ஏதிலிகளாய் உலக நாடுகள் பலவற்றிலும் அடைக்கலம் நாடியதும்…..   முடிவில்…. இரக்கமற்ற வகையில் அது அடக்கப்பட்டதும் நாமனைவரும் அறிந்ததே.

இப்போது, மீண்டும், விட்ட இடத்திலிருந்து சமாதானப் பேச்சுகள் ஆரம்பமாகியிருக்கின்றன.

தமிழ் அரசியல் கூட்டரங்கு ‘கோழிக் கறியோடு’ உணவு கிடைக்கும் என்னும் ‘கனவோடு’ காத்திருக்கிறது! ராஜபக்‌ஷே ‘பானை’யில் துழாவிக் கொண்டிருப்பது வெறும் ஒடியல் கூழா அல்லது ‘வெற்றுப்’ பானையே தானா என்பது விரைவில் தெரிந்து விடும்.

எது எப்படியோ, முடிவில் பானையை எடுத்துத் தமிழ் அரசியல் வாதிகள் தலைமீது கவிழ்த்து விடாமல் இருந்தாலே போதும்!

[ 2011 மார்ச் 02 ‘ஈழநேசன்’ இணைய இதழில் வெளியான கட்டுரை]

********************************************************************************