மேற்குலக ‘மேட்டிமை’யின் மேய்ச்சல் நிலங்கள்!

சர்வசித்தன்”

இன்று, அரசியல்வாதிகள்; நேர்மை, ஊழல் மறுப்பு, யாவர்க்கும் சம வாய்ப்பு என்று மேடைகள் தோறும் நா வரளப் பேசிவிட்டுப் பதவிக்கு வந்ததும் அவற்றுள் ஒன்றினைத்தானும் செயல் படுத்த முன்வருவதில்லை. அதே போன்று, அரசுகளும்; மனித உரிமைகள், பயங்கரவாதத்தை ஒழித்தல், மக்களாட்சியை ஏற்படுத்துதல் என்னும் போர்வையில் வலிமை குன்றிய நாடுகளின் தலைமைகளை மிரட்டுவது வழக்கமாகிவிட்டது.

நாடாளுமன்றுகளும், சட்ட சபைகளும் அரசியலாளர்களின் சுய லாபங்களுக்கு ஏற்ப சட்ட ஒழுக்காறுகளை இயற்றுவது போன்று, வலிமை மிகுந்த நாடுகளின் ‘வர்த்தக’ லாபங்களுக்குத் துணைசெய்யும் அமைப்பாக உலக நாடுகளின் சபை மாறியிருக்கிறது.

இது போன்ற செயல்கள், சாதாரண மக்களைப் பாதிக்கும் அளவுக்கு, அரசியல்வாதிகளையும், அரசுகளையும் பாதிப்பதில்லை!

மாறாகச் சம்பந்தப்பட்ட அரசுகளையும், அரசியலாளர்களையும் மேன்மேலும் வலுவுடையதாக்கவும், வளங்களை வளைத்துப் போடும் வாய்ப்பினை அதிகரித்திடவுமே உதவுகின்றன.

அண்மையில் லிபிய நாட்டின்மீது மேற்குலக நாடுகள் தொடுத்திருக்கும் தாக்குதல்கள், அந் நாடுகள்; சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதிவரை உலகின் வறிய நாடுகளைத் தங்கள் பிடியுள் வைத்திருந்து சுரண்டிப் பிழைத்த வரலாற்றை நினைவூட்டுவதாக உள்ளது!

”ஊருக்குத்தான் உபதேசம், உனக்கல்லடி கண்ணே” என்னுமாப் போன்று, இந்த உலக நாடுகள் ஓயாது குறிப்பிடும்; மனிதாபிமானம், இறைமை, மனித உரிமைகள் என்பன எல்லாம்; அவற்றைப் பொறுத்த வரை வலிமை குன்றிய, வளரும் அல்லது வறிய நாடுகள் கடைப்பிடிக்க வேண்டிய கோட்பாடுகள் மட்டுமே போலும். இவையனைத்தையும் கடந்த ‘உயர்’நிலையினைத் தாம் எய்திவிட்டிருப்பதாக இவை எண்ணுகின்றனவோ என்னவோ?!

ஈராக்கின் முன்னைய அதிபர் சதாம் ஹுசெய்ன், குவெய்த்தின் மீது படையெடுத்ததைச் சாக்காகக் கொண்டு ஈராக்கைத் தனது எண்ணப்படி ஆட்டுவிக்கும் வாய்ப்பினை உருவாக்கிக் கொண்டது அமெரிக்கா. அதன் ‘உலக சண்டித்தனத்துக்கு’  அந்த வாய்ப்பினை வழங்கியவர் சதாமே ஆவர். அதற்குரிய தண்டனையினை அவர், இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெற்றும் விட்டார்.

அன்று, சதாமின் தவறு ஒன்றின் மூலமாக, மற்றொரு நாட்டின் மீது, முன் ஏற்பாட்டுத் தாக்குதலை மேற்கொள்ளும் [pre-emptive attack] அதிகாரத்தினை ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதலோடு பெற்றிருந்த அமெரிக்கா; அதிபர் சாதாமை வீழ்த்துவதற்கும்; அதனைப் பயன்படுத்தி ஈராக்கின் எண்ணெய் வளங்களை மேற்குலக வர்த்தக நிறுவனங்கள் பங்கு போட்டுக் கொள்ளவும் வழி ஏற்படுத்திக் கொடுத்தது.

உண்மையில், இரண்டாம் உலகப் போருக்குப் பின், உலக நாடுகளிடையே நிலவும் சமத்துவமின்மையைப் போக்கவும், ஓர் நாடு மற்றொரு நாட்டின் மீது- அதன் இறைமையை மதியாது- போர் தொடுப்பதைத் தவிர்க்கவும்; உலகின் மனுக்குல மேம்பாட்டுக்கான உத்திகளைக் கண்டறியவும் என உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் சபை, காலப் போக்கில் வல்லரசுகளின் ஆசைகளுக்குத் தீனிபோடும் அமைப்பாக மாறிவிட்டிருப்பது வேதனையானது!

உலக மானுடத்தின் காவலர்கள் தாமே என்னும் மேற்குலக நாடுகளின் ‘மேட்டிமைத் தனம்’ அவர்களது முன்னைய நான்கு நூற்றாண்டுகாலக் ‘குடியேற்ற நாட்டுக் கொள்கையின்’ எச்சமே என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதனை இன்றும், தமது பொருளாதார வளங்களைப் பெருக்கவும், தமக்கு அடங்காத அரசுகளை மிரட்டவும் எனக் குறுகிய எண்ணத்துடன் கையாள்வது, நாகரீக முதிர்ச்சி பெற்றுவிட்டோம் என வீம்பு பேசும் செயலுக்கு முரண்பாடானதல்லவா?

அரசுகளினால் அடக்கி ஒடுக்கப் படும் மக்கட்கூட்டம், எண்ணெய வளம் மிக்க இஸ்லாமிய நாடுகளிலோ; அல்லது  முன்பு சோவியத் ஆதரவு நாடுகளாக விளங்கிய சில கம்யூனிஸ நாடுகளிலும் மட்டுந்தானா ?

அமெரிக்கவிற்குப் போட்டியாக ‘வல்லரசு’ப் பட்டத்தைப் பெற்றிருந்த சோவியத் ஒன்றியம் சிதறுண்டு பல நாடுகளாகப் பிளவுற்றதில் இருந்து, கடந்த இருபது வருடங்களில் மேற்கு நாடுகளின் ஆதரவோடு அல்லது தூண்டுதலால் விடுதலை அடைந்த நாடுகளின் பட்டியலை எடுத்துப் பார்த்தால், அவை ஏற்கனவே சோவியத் ஆதரவு நாடுகளாகவோ, அல்லது எண்ணெய் வளம் மிக்க இஸ்லாமிய நாடாகவோ இருப்பதைக் காணலாம்.

சோவியத்தின் ஆதரவு நாடாயிருந்த யூகோஸ்லேவியா; இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் இடம் பெற்றிருந்த கிழக்குத் தீமோர்; அதன் பின்னர் ஈராக் படையெடுப்பு,  இந் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டதன் எதிரொலியாக ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்னும் போர்வையில் சதாமின் அதிகாரத்தில் இருந்த  எண்ணெய் வளம் மிக்க இஸ்லாமிய நாடான ஈராக் மீதான போர்; இப்போது மற்றொரு எண்ணெய் வள நாடான லிபியா?!

இதில் வேடிக்கை யாதெனில்; சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து அரசியல் போராட்டமாகவும்,பின்னர் முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆயுதப் போராட்டமாகவும் தொடர்ந்து கொண்டிருந்த ஈழத் தமிழரின் போராட்டங்களை நசுக்குவதற்கு இலங்கை அரசுக்குப் பெருமளவிலான ஆயுதங்களையும், ஆலோசனைகளையும் இந்த மேற்கு நாடுகள்தாம் பல வருடங்களாக வழங்கிக்கொண்டிருந்தன!

இந்தியா, இறுதிக் காலத்தில் இலங்கை அரசின் இன அழிப்புக்குத் துணை நின்றது உண்மையாயினும், அந் நாட்டில் பல ‘தசாப்த’ங்களாகத் தொடர்ந்த ஓர் தேசியச் சிறுபான்மை இனத்தின் உரிமைக் குரல் இந்த நாடுகளின் செவிகளில் விழாமல் போனதற்கு; இலங்கை ஓர் எண்ணெய வளம் மிக்க இஸ்லாமிய நாடாகவோ, சோவியத் ஒன்றியத்தின் முழு ஆதரவைப் பெற்ற கம்யூனிச நாடாகவோ இல்லாதிருந்தது காரணமாயிருக்கலாம். இப்போது, மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கை அரசினை அவை மிரட்டுவதுபோல் பாசாங்கு செய்வது கூட அந் நாட்டின் தலைமையைத் தமது வழிக்குக் கொண்டு வரும் ‘ராஜதந்திர’ நடவடிக்கையே அன்றி வேறில்லை.

மேற்குலகும், அதன் ‘ஊதுகுழல்’ போல் செயல்படும் ஐ.நாவும் மானுட விழுமியங்களுக்கு அளிக்கும் மதிப்பினை விடவும், ‘சுயலாபங்களுக்கு’த் தரும் முக்கியத்துவமே இன்று லிபியாவின் மீதான தாக்குதல்களின் பின்னணி எனலாம்.

இவ்வாறு கருத்துரைப்பது, லிபியாவின் தலைமையின் செயல்பாடுகளை ஆதரிப்பது என்பதல்ல. மாறாக, லிபியாவும், மேற்குலகின் மேய்ச்சல் நிலமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை வலியுறுத்துவதே ஆகும்.

[http://www.keetru.com ல் 23-03-2011 அன்று வெளியானது]

மானமிகு வைகோ அவர்களுக்கு……

மானமிகு வைகோ அவர்களுக்கு, ஓர் அவசர வேண்டுகோள்!

“சர்வசித்தன்” [21-03-2011 ல் எழுதியது]

தன்மானமும், தனது இனத்தின் மீது உண்மையான பற்றும், தளராத மன உறுதியும், அரசியல் நேர்மையும் கொண்ட வைகோ அவர்களுக்கு;

தமிழகத்தின் நல்ல தலைவர்களில் ஒருவராக விளங்கும் உங்களுக்கு ஏற்பட்ட அவமானம் காரணமாக; உங்கள் கட்சி இந்தத் தடவை தமிழகம்-புதுவை இரண்டிலும் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளீர்கள்.

தி.மு.கவில் இருந்து நீங்கள் வெளியேறிய சமையத்தில், “ஓர் உறையில் இரண்டு போர் வாள்கள் இருப்பது சாத்தியமானதல்ல” என்னும் பேச்சுப் பரவியிருந்தது. அதில் ஒரு வாள் ஏற்கனவே ‘ஆரிய’த்தின் முன்னால் மண்டியிட்டுத் தன் கூர்மையை இழந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன! அவ்விரண்டில் எஞ்சி இருப்பது உங்கள் தலைமையில் உள்ள ம.தி.மு.கவும் அதன் ‘விலைபோகாத’ தொண்டர்களுந்தான்.

இந் நிலையில் தாங்களும் ’அரசியல் துறவறம்’ என ஆரம்பித்தால்,  இன்றில்லாவிடினும் என்றாவது ஊழலும், சுரண்டலும், உண்மை இன உணவும் கொண்ட அரசினைத் தமிழகதில் உருவாக்கும் பணி மேலும் தேக்கமடைந்து விடாதா?

ஒவ்வொரு தேர்தல்களின் போதும் நடிகர் ரஜனிகாந்த் இமையமலைக்குச் செல்வது போன்று, நீங்களும் இந்தத் தேர்தலில் பங்கு கொள்ளாமல் விலகி இருப்பது எந்த வகையில் நியாயம்?

ரஜனி காந்த் ஓர் நடிகர் மட்டுமே, ஆனால் நீங்களோ தமிழக அரசியலில் நேர்மை மிக்க ஓர் தலைவர். நீதிக்காகப் போரிடும் ஓர் மன்னன் தான் தோற்றுவிட்டால் களத்திலிருந்து தப்பி ஓடி ஒளிவதற்கு எண்ணுவதில்லை.மாறாக, மீண்டும் படை திரட்டிப் போரிடவே துணிவான்.

ஆனால், நீங்களோ, உங்களைப் பிறர் புரிந்து கொள்ளவில்லை என்னும் ஆதங்கத்தில், உங்கள் ‘கடமை’யைத் துறக்க முயல்வது ஏற்புடையதாகப் படவில்லை.

உங்கள் கட்சிக்கு எனக் கொள்கை அதனை அடைவதற்கு உரிய செயல் திட்டம், அவற்றைச் செயல்படுத்தும் அடுத்த கட்டத் தலைவர்கள், தொண்டர்கள் என ஓர் அமைப்பே இருக்கும் போது, வருடம் முழுவதும் கண் துஞ்சாது படித்த மாணவன் ஒருவன் ஆசிரியர் கோபித்துக் கொண்டதற்காகப் பரீட்சை எழுத மறுப்பது போன்று,  தேர்தலைப் புறக்கணித்துவிட்டு அஞ்ஞாதவாசம் செய்யப் போகிறேன் என்றால் எப்படி ?

போர்க்களத்துக்கு அஞ்சும் கோழையல்ல நீங்கள் என்பது உண்மையானால், இந்தத் தேர்தலின் போது; அ.தி.மு.க விடம் கேட்டிருந்த 35 தொகுதிகளிலும் உங்கள் கட்சி தனித்துப் போட்டியிட ஆவன செய்யுங்கள். முடிந்தால் அத்தனையும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளாக இருப்பின் சிறப்பானது. இறுதி நேர சலசலப்பின் பின்னர் தங்களுக்கு, வேண்டாவிருப்பாக அளிக்கப்பட்ட சில தொகுதிகளை ஏற்றுக்கொண்டு, இப்போது உங்களை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரும் இந்திய கம்யூனிஸ்ட்டுகளும், மார்க்ஸிஸ்ட்டுகளும் உங்களுடன் இணைந்து  காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் போட்டியிடலாமே? இதன் மூலம் நீங்களும் அவர்களும் தங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதோடு, தமிழகத்தின் முதல் எதிரியான காங்கிரஸை அத்தனை தொகுதிகளிலும் தோல்வியுறச் செய்ய இயலாவிடினும், அதன் பலத்தைப் பெருமளவு குறைப்பதில் வெற்றி காணாமுடியும் அல்லவா?

ஏற்கனவே, காங்கிரஸின் செயல்களால் மனம் புண்பட்டிருக்கும் தி.மு.க வின் தன்மானம் மிக்க சில தலைவர்களும் தொண்டர்களும் நிச்சயம் உங்களுக்கு மறை முகமாகவேனும் ஆதரவு அளிக்கவே செய்வார்கள். கலைஞரோடு, தங்கள் அரசியல் லாபங்களுக்காக ஒட்டிக் கொண்டிருக்கும் இவர்கள்;சந்தர்ப்பம் கிட்டிய போது தங்கள் கண்களில் விரலை விட்டாட்டும்

காங்கிரஸுக்குப் பாடம் புகட்டவாவது உங்களை ஆதரிக்கவே செய்வார்கள்! இவை அனைத்துக்கும் மேலாக உங்களை மதிக்கும் பலர் இன்றும் தி.மு.கவிலும்… ஏன்…அ.தி.மு.கவிலும் இருக்கவே செய்கிறார்கள்.

தி.மு.க; அ.தி.மு.க இவ்விரண்டு கட்சிகளிலும் நம்பிக்கை இழந்த பலர் விஜயகாந்தின் கட்சியை நாடியது போல், இப்போது உங்களை நாடும் வாய்ப்பும் உள்ளது.

எனவே, தன்னம்பிக்கையுடன் உங்கள் தொண்டர்களோடு களமிறங்குங்கள்.

நெடுமாறன் ஐயா, சீமான் போன்றவர்களையும் அரவணைத்துக் கொண்டு செயலாற்றுங்கள்.

பூனை இல்லா வீட்டில் எலிகளுக்குக் கொண்டாட்டம் என்பது போன்று, நேர்மையான அரசியல் வாதிகள் போட்டியில் இருந்து விலகி விட்டால், ’ஊழல் பெருச்சாளி’களுக்கே கொண்டாட்டமாகிப் போகும். இது வீட்டிற்கோ, நாட்டிற்கோ நன்மை தராது.

புதியதோர் விடியலுக்கு உங்கள் முயற்சிகள் ஆரம்பமாக அமையட்டும்.

முறைகேடுகள், குடும்ப அரசியல், மக்களின் தன் மானத்தை விலை பேசுதல்,கபடத்தனம் இவை அனைத்தும் ஓர் நாளில் மறைந்துவிடாது. தொடர்ச்சியான போராடங்களின் மூலமே இது சாத்தியமாகும்.

அரசியல் நேர்மையின் முதற் ’பொறி’யினை மூட்டும் கைகள் உங்களதாக இருக்கட்டுமே. காலப் போக்கில் பல கைகள் இதில் ஈடுபடும் என்பது திண்ணம்.

[2011-03-21 ஆ.விகடன் ‘கருத்துக்களம்’ பகுதியில் வெளியானது]]

தமிழக அரசியலில், மானமுள்ள தலைவர்களின் மாற்று அணி தேவை!

“சர்வசித்தன்”

’நேர்மையும், அரசியலில் நாணயமும், மக்கள் தொண்டில் உறுதியும் கொண்ட புதிய அணி ஒன்று தமிழகத்தில் உருவாகும்வரை, மக்கள் தொடர்ந்து ஏமாற்றங்களையே எதிர்கொள்ள நேரும்.’

நேற்றைய தினம்(16-03-2011) ‘கீற்று’வில் வெளியான எனது கட்டுரையின் முடிவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.

அது வெளியாகிய சில மணி நேரங்களுக்குள் தமிழக அரசியலில் இடம் பெற்றுவரும் சம்பவங்கள் மகிழ்ச்சி தருவதாய் இல்லை!

தமிழகத்தினை இதுவரை ஆண்ட/ஆளும் இரு திராவிடக் கட்சிகளின் தலைமைகளது நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்கள், இது இன்றைய காலகட்டத்தின் உடனடித் தேவை என்பதை மறுக்க மாட்டார்கள்.

தன் குடும்பம்,தன் பதவி,தன்னைச் சேர்ந்தவர்களின் சொகுசான வாழ்க்கை என்பதில் அதிக நாட்டங்கொண்ட ஓர் தலைமை!

தன்னை மதிப்பவர்களை மதித்துச் செயல்படாமை, தான் தோன்றித்தனமாக முடிவுகளை மேற்கொள்ளல்; என்னை விட்டால் நாட்டை வழி நடத்த ஏற்ற தலைமை இல்லை என்னும் எண்ணம் கொண்டது மற்றொன்று!. இவையனைத்தையும் விடவும், இவ்விரு தலைமைகளின் கீழ் அரங்கேறிய ‘ஊழல்’ வரலாறுகள்!

இவற்றிற்கு மாற்றாக, மானமுள்ள தலைவர்கள் இனியாதல் ஒன்றிணைந்து செயல்பட முன் வரவேண்டும்.

அறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர்; இவர்கள் இருவராலும்; ஆரம்பிக்கப்பட்ட; தமிழகத்தின் இரு முக்கிய கட்சிகளும்; அவை ஆரம்பிக்கப்பட்ட சமையத்தில்   எதனை அடைவதற்காக ஆரம்பிக்கப்பட்டனவோ அவற்றிலிருந்தும் விலகி வெகுதூரம் வந்துவிட்டன.

திராவிட மற்றும் தமிழின விடுதலையும், மேம்பாடும் குறித்துக் கனவு கண்டு, அதன் விளைவாய் திராவிட முன்னேற்றக் கழகத்தினை உருவாக்கியவர் அறிஞர் அண்ணா. அரசியல் ரீதியில் மாநில அரசு, நடுவண் அரசுக்குக் கட்டுப்பட்டது ஆயினும் இவ்விரு தலைமைகளும் ஒன்றினுக்கு மற்றொன்று அடிமைப்பட்டதல்ல என்னும் சுய உணர்வோடும்,தன் மானத்தோடும் செயல் படுவது அவசியம் என் வலியுறுத்தி அதன் வழி நடந்தவர் அண்ணா! ஆனால் இன்றைய தலைமை, சுய லாபத்துக்காகவும்; செய்த தவறுகளை மறைப்பதற்காகவும் நடுவண் அரசிடம் மண்டியிடுவதற்கும்; இன நலன்களைப் புறந்தள்ளுவதற்கும் தயங்குவதில்லை என்பதை அண்மைய நிகழ்வுகள் மீண்டும் உறுதி செய்திருக்கின்றன.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினை எம்.ஜி.ஆர் ,ஆரம்பித்ததன் பின்னணியில், அன்று ‘கலைஞர்’ புரிந்த ஊழல்களும்- அதனைத் தட்டிக் கேட்டதால் அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதும் காரணங்களாக அமைந்திருந்தன.

நேர்மையான அரசொன்றினை-அதே சமையம் ‘அண்ணா’வின் எண்ணங்களைச் செயல்படுத்தவல்ல அரசினை ஏற்படுத்துவதே அவரது குறிக்கோளாக இருந்தது.

மனித நேயமும், பாதிப்புற்றவர்களுக்கு உதவும் பண்பும் கொண்டவராக அவர் இருந்த காரணத்தால் மிகக் குறுகிய காலத்திலேயே அவரால் தமிழக அரசின் தலைமை அமைச்சராக வரமுடிந்தது.

ஆனால், அவருக்குப் பின் அ.தி.மு.க வும்; தி.மு.க வின் வழியில் ஊழல்; அதிகார துஷ்பிரயோகம்; குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சலுகைகள் எனத் தடம் மாற…..  அடுத்துவரும் தேர்தல்களில்…… தமிழகம் அனுபவித்தது  ‘மியூசிக்கல் சேர்’ விளையாட்டினைத்தான்!

இவர்களை விட்டால் ஆளுவதற்கு எவரும் கிட்டவில்லை என்னும் நிலையில்- அவ்வாறு ஓர் மாற்றுத் தலைமையினை, நேர்மையாளர்கள் உருவாக்காத நிலையில்- தமிழக மக்கள் இவர்களில் யாராவது ஒரு தலைமையிடம் அகப்பட்டேயாக வேண்டியவர்கள் ஆனார்கள்!

எனினும், இன்றைய நிலையில்;…….. இரு கழகங்களிலும் நம்பிகை இழந்த மக்களின் வாக்குகளைத் தனது பலமாக நினைக்கும் விஜயகாந்த்; சிறந்த பேச்சாளரும், அரசியல் நேர்மையும் கொண்ட வைக்கோ ; மனித நேயம் விரும்பும் கம்யூனிஸ்ட்டுகள்; (முடிந்தால்?) இன,சமூக உணர்வாளரான மருத்துவர் ராமதாஸ் இவர்கள் அனைவரும் ஓரணியில் இணைந்து – தமிழர் மற்றும் தமிழக வளர்ச்சி என்னும் பொதுவான செயல் திட்டத்தின் அடிப்படையில்-செயல்படின் தமிழகம் சிறப்புறும்.தமிழர் பெருமை அடைவர்.

தமிழகத்தின் நடு நிலையாளர்களும், கல்விமான்களும், சமூக ஆர்வலர்களும் இதில் அக்கறை செலுத்தினால் இதனை நிறைவேற்றுவது சாத்தியமே.

காலம் இன்னும் கடந்து விடவில்லை.

[ http://www.keetru.com ல் 17-03-2011 இல் வெளியானது ]

நடிகர்கள் ஒரு புறம்; நடிப்பவர்கள் மறு புறம்!

“சர்வசித்தன்”

தமிழகத் தேர்தல் வரலாற்றில், நடிகர்கள் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் நடிகர்கள் தங்களுக்கெனக் கட்சிகளை ஆரம்பித்து அதன் அடிப்படையில் தொகுதிப் பங்கீடுகளையும் முடித்துக் கொண்டு ஓரணியாகத் திரண்டிருப்பது இது தான் முதல் தடவை!.

அதிலும் குறிப்பாக முன்னாள் நடிகையான அ.தி.மு.க வின் தலைவி ஜெயலலிதாவின் தலைமையில் நடிகர்களது கட்சிகள் அனைத்தும் இணைந்து தேர்தலை எதிர் கொள்வது வியப்பாக உள்ளது.

ஆனால் இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவின் எண்ணம் கைகூடுமா என்பது வாக்காளர்களின் கைகளில்தான் இருக்கிறது.

தி.மு.க கூட்டணியில், ‘நெல்லிக்காய் மூட்டை’க் காங்கிரஸோடு, ‘தாவல் திலகம்’ மருத்துவர் அய்யா, திருமாவளவன் கட்சி என்று; சுயநலமே முதல் நலமாகக் கொண்டவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். இதில் தி.மு.க- காங்கிரஸ் இரண்டுக்கும் இடையே இறுதிக் காலம் வரை நீடித்த ‘பனிப் போர்’, நிர்ப்பந்தம் காரணமாக ‘முக நக நட்பும்’ நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது அடிமட்டத் தொண்டன் முதல் உயர்மட்டத் தலைவர்கள் வரை யாவரும் அறிந்த செய்தி.

எனவே, இவ்விரு கட்சிகளின் தலைமைகளும் ‘கை குலுக்கி’க் கொண்டாலும் அதன்  தொண்டர்கள், உண்மையான விசுவாசிகள் என்போர் இந்தத் தேர்தலில் மனம் ஒன்றிச் செயல் படுவார்களா என்பது ஐயத்துக் கிடமானது.

அதிலும், தேர்தல் முடிந்த பின்னர் (வெற்றி பெற்றால்) கூட்டாட்சி என்னும் நிலைதான் தி.மு.க வுக்குக் காத்திருக்கிறது! அது இம்முறை போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலன்றி  தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை. எனவே தி.மு.க வின் தலைமையில் அமையப் போகும் ஆட்சியில் நிச்சயம் காங்கிரஸுக்கும் பங்கு கொடுத்தே ஆகவேண்டும்.

ஒருவகையில் , காங்கிரஸைத் தமிழகத்தில் இருந்து முற்றாக அகற்றும் நோக்கோடு கட்சியை ஆரம்பித்த முன்னாள் முதல்வர் ‘அண்ணா’வின் கனவுகளை, அவர் இறந்து 52 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் ‘கனவாகவே’ ஆக்கிய பெருமையினைக் கலைஞர்; தனது அறுபதாண்டு அரசியல் வாழ்க்கையின் மூலம் சாதித்திருக்கிறார்(?) என்றும் சொல்லலாம்.

வடக்கு வளர்வதற்கும், தெற்குத் தேய்வதற்கும் ஆரிய-திராவிட இன வேறுபாடே அடிப்படை என்பதால், தெற்கை வாழவைக்க வேண்டுமாயின் திராவிடர்களான நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்னும் உந்துதலால் திராவிடர் கழகமாக உருவெடுத்துப் பின் அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகமாகப் பரிணமித்த தி.மு.க இன்று தனித்துத் தமிழகத்தை ஆள்வதற்கு வழியற்று நிற்கும் நிலை ஏற்பட்டிருப்பது வேதனையானது! இந் நிலை உருவாக வழி ஏற்படுத்தியவர் கலைஞர் கருணாநிதியே என்பதைத் திராவிட உணர்வு கொண்ட எவரும் மறுக்கமாட்டார்கள்.

இந் நிலைக்கு அவரையும் அவரது கட்சியையும் இட்டுச் சென்றது அவரது பேராசையும், குடும்ப பாசமுமேயாகும்.

ஆசை கொண்டவர்கள் தங்கள் ஆற்றலுக்கும் அதிகமான செயல்களில் ஈடுபட்டு அதன் மூலம் தம்மைச் சிக்கலுக்குள் ஆழ்த்திவிடுவார்கள். ஆனால் பேராசை கொண்டவர்கள் தாம், பிறருக்குச் சேரவேண்டியதைத் தாமே அனுபவிக்க ஆசைப்படுவார்கள்.அந்த ஆசையின் மற்றொரு வடிவம் ஊழலாக வெளிப்படுகிறது.

எழுபதுகளில் தி.மு.கவின் இந்தப் பேரசையைக் கண்டித்து, அண்ணாவின் பெயரில் தனிக் கட்சி ஆரம்பித்தவர் எம்.ஜி.ஆர். அவர் உயிருடன் இருக்கும் வரை கலைஞரால் மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர இயலவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர் மறைந்த பின்னர்- ஊழலை எதிர்த்து அவரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சியின் பேரால்- ஆட்சி நடாத்தியவர்களே தங்கள் மீதும் அதே ஊழல் சேற்றைப் பூசிக் கொள்ள ஆரம்பித்த காரணத்தால், கலைஞர் மீண்டும் தமிழகத்தினை ஆளும் வாய்ப்பினைப் பெறமுடிந்தது.

எனினும், அவரது குருதியில் படிந்திருந்த குடும்ப பாசமும், ஊழல் அபிமானமும் அவரைவிட்டு அழியாத காரணத்தால், அடுத்திருக்கும் ஈழத்தில் தன்னினம் படு கொலை செய்யப்பட்ட போதும், தமிழக மீனவர்கள் சிங்களரால் வேட்டையாடப் பட்டபோதும், ஒப்புக்குச் சில ‘நாடகங்களை’ அரங்கேற்றித் தன்னை ‘இன உணர்வாளன்’ எனக் காட்டிக் கொண்டதன்றி; மறுபுறம், தன்னால் ‘பதவி’யில் அமர்த்தப் பட்டவர்களது நேர்மையற்ற நடவடிக்கைகளை மூடிமறைக்கும் ‘யுக்தி’களுக்கே முதலிடம் அளித்துவந்தார். ஆனால், ”திருடனை வெளியே விட்டு வேவு பார்க்கும் காவலர்கள் போன்று” மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு, கலைஞரின் ‘காலை வாருவதற்கு’க் காலம் பார்த்திருந்தது!

2ஜி-உயர் அலைவரிசை ஊழலில் கலைஞரின் சீடர்களில் ஒருவரும்; அதனைத் தொடர்ந்து கலைஞர் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களும் சிக்கிக் கொள்ள, காங்கிரஸ் தனது பிடியை இறுக்க ஆரம்பித்தது.

விளைவு, எண்பதுகளின் ஆரம்பத்தில், ‘விஞ்ஞான பூர்வமாக’ ஊழல் புரிந்து விட்டு, அதிலிருந்தும் தப்புவதற்காக இந்திரா காந்தியிடம் மண்டியிட்டது போன்று, இப்போது அவரது மருமகளிடம், கலைஞர் ‘அண்ணாவின் திராவிட ஜீவனை’ப் பணயம் வைத்திருக்கிறார்.

அதாவது, மக்களின் உணர்வுகளைச் சீண்டுவதற்காகத் திராவிடம் பேசும் இந்த அரசியலாளர்கள், தங்களையும் தங்கள் பதவிகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காக மத்திய அரசிடம், இவர்களது வார்த்தைகளில் கூறுவதானால், ‘ஆரியத்திடம்’ மண்டியிடத் தயங்குவதில்லை! உண்மையில் இவர்கள் யாவரும் அரசியலில் தங்கள் விருப்புகளையும், எண்ணங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்காக நடிப்பவர்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

இவர்கள் தாம் இவ்வாறெனில், இவர்களை எதிர்த்து நிற்பவர்கள் மட்டும் ‘ஆரிய’த்தைப் புறந்தள்ளும் ‘திராவிட அபிமானம்’ உள்ளவர்கள் என எண்ணுவதற்கில்லை. தங்கள் கட்சிகளின் பெயர்களில் ‘திராவிட’ அடைமொழியைக் கொண்டிருக்கும், தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் ‘திராவிடத்’தைத் தொலைத்துப் பல வருடங்களாகி விட்டன!

இன்று எதிரணியில் நிற்பது  ‘நடிகர்களின் கட்சி’ என்னும் தோற்றமே உருவாகி இருக்கிறது. ஜெயலலிதாவில் ஆரம்பித்து.. விஜயகாந் ,சரத் குமார்,விஜய் என ஓர் நடிகர் பட்டாளமே தங்களுக்கென கட்சிகளை ஆரம்பித்து அவையனைத்தையும் இணைத்து பிறிதொரு ‘திராவிடக்’கட்சியாய் எழுந்து நிற்கின்றது!

இவற்றுள், விஜயகாந்த்தின் கட்சி கடந்த காலங்களில் பெற்ற ஆதரவு, அவர் ஏற்கனவே, ஊழல் மற்றும் நேர்மையற்ற அதிகாரப் பிரயோகம், தங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் வாழவைக்கும் திட்டங்கள் என வரையறையின்றி ‘அரசியல் புற்று நோயாய்’ வளர்ச்சி கண்டிருந்த இரு கழகங்களின் செயல்பாடுகள் மீது வெறுப்புற்றிருந்த மக்கள் வழங்கியதே ஆகும்.

அவருக்கு முன்பு கிடைத்த ஆதரவு அனைத்தும் இன்று, தமது கூட்டணிக்குக் கிட்டும் என ஜெயலலிதா நினைப்பதும், அதனை ஒட்டி ஏற்கனவே அவரது கட்சிக்கு ஆதரவளித்தவர்களை அவரது பாணியில் நடாத்துவதும் நம்பிக்கை தருவதாயில்லை.

அதே சமையம், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், தனிப் பெரும்பான்மை பலம் பெறும் வகையில் தனது வேட்பாளர்களைக் களமிறக்கும் அ.தி.மு.க தேவையான தொகுதிகளில் (சுமார் 120ல் ஆவது) வெற்றி பெற்றால் மட்டுமே தனிக் கட்சி ஒன்றின் ஆட்சி தமிழகத்தில் தொடர வாய்ப்பு உள்ளது. இல்லையேல் பல கட்சிகள் இணைந்த ஓர் அரசே சாத்தியமாகும். அதுவும், தி.மு.க- காங்கிரஸ் அணிக்கு ஆட்சி அமைக்கும் பலம் கிட்டாவிடில், வெற்றி பெற்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆட்சியில் பங்கு கேட்டு அ.தி.மு.க வுடன் இணையவும் வாய்ப்பு உண்டு.

அவ்வாறு ஏற்படின், தி.மு.க வின் ஆதரவின்றி, மத்தியில் அ.தி.மு.க வின் ஆதரவோடு நடுவண் அரசு தொடரவும், அதில் அ.தி.மு.க அமைச்சர்கள் இடம் பெறவும்……    அடுத்த ஐந்து வருடங்களுக்கு தி.மு.கவும் அதன் சில தலைவர்களும் ஊழல் வழக்குகளின் பேரில் தம் வாழ்நாளை விரயம் செய்யவும் வழி ஏற்படலாம்.

எவ்வாறு  இருப்பினும், தமிழகத்தில் நடை பெறவிருப்பது மக்களுக்கு வேண்டிய நல்லாட்சிக்கான அரசியல் தேர்தல் என்பதை விடவும், நடிகர்களும், நடிப்பவர்களும்  மோதிக் கொள்ளும் ’அதிகாரத்துக்கான விளையாட்டு’ எனச் சொல்வதே பொருத்தமாக அமையும்.

நேர்மையும், அரசியலில் நாணயமும், மக்கள் தொண்டில் உறுதியும் கொண்ட புதிய அணி ஒன்று தமிழகத்தில் உருவாகும்வரை, மக்கள் தொடர்ந்து ஏமாற்றங்களையே எதிர்கொள்ள நேரும்.

[www.keetru.com ல் 16-03-2011 அன்று வெளியானது]

ஈழத்தமிழருக்கு, ராஜபக்‌ஷே வழங்கவிருப்பது—–

 

ஈழத் தமிழருக்கு, ராஜபக்‌ஷே வழங்கவிருப்பது……

‘கோழிக் கறி உணவா, ஒடியல் கூழா அல்லது……

“சர்வசித்தன்” [02-03-2011ல் எழுதியது]

அம்புலிமாமாவில் வெளியான ‘வேதாளம் சொன்ன கதை”யைப் படிக்காத சிறுவர்கள் சிலராகத்தான் இருப்பார்கள்! இப்போது, இந்தக் கட்டுரையை வாசிக்கும் பலர் சிறுவர்களாக இருந்த சமையத்தில் நிச்சயம் ‘அம்புலிமாமா’ படித்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். அவ்வாறு படித்திருக்காவிட்டாலும் பரவாயில்லை, இன்று இலங்கையில் மீண்டும் ஆரம்பித்திருக்கும் ‘தமிழர் உரிமைகளை வென்றெடுக்கும் பேச்சுவார்த்தை’ அதே போன்ற ‘வேதாளம் முருங்கை மரமேறும்’ காட்சியை விரைவில் அரங்கேற்றத்தான் போகிறது! அப்போது உங்களுக்கும் ‘21ம் நூற்றாண்டின் வேதாளக் கதை’ ஒன்று கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இன்றைய ‘கதை’யில் இளவரசன் விக்கிரமனாகத் தமிழ்க் கட்சிகள் ஒருங்கிணைப்பும்; வேதாளமாக அதிபர் ராஜபக்‌ஷேவும்  இடம் பெறுவார்கள்.

இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்தே, தமிழர்களது நியாயமான கோரிக்கைகளை முன் வைத்து எமது அரசியல் தலைவர்கள், சிங்கள அரசுகளுடன் பல தடவைகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். அவ்வாறு இடம் பெற்ற பேச்சுவார்த்தைகள் சிலவற்றின் முடிவில் ‘ஒப்பந்தங்கள்’ என்னும் பெயரில் சில தீர்வுகள் இரு தரப்பினரிடையேயும் உருவாகியும் இருக்கின்றன. பின்னர் அவை வழக்கம் போல்(!) கிழித்து வீசப்பட்டும் உள்ளன.

இனிச் சுரண்டுவதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில், பிரித்தானிய அரசு இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்து வெளியேறத் தீர்மானித்த நேரத்தில்; இந்தியாவும் இலங்கையும் ஒன்றன்பின் ஒன்றாக விடுதலை பெற்றன.அவ்வாறு, ஆங்கிலேயரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட இலங்கை மக்களில் சிறுபான்மையோராக இருந்த தமிழர்களுக்கு, விடுதலைக்குப் பதிலாக ‘எஜமானர் மாற்றமே’ ஏற்பட்டிருந்தது!

இதனால், ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டம், சுதந்திரத்திற்கு முன் (சு.மு); சுதந்திரத்துக்குப் பின் (சு.பி) என்னும் புதியதோர் பரிமாணத்தை எட்டியிருந்தது என்பதே உண்மை.

ஆரம்பத்தில் சுமார் முப்பது வருடங்கள் அமைதியான வழியில் தமிழர்களது வாழ்வாதார உரிமைகளுக்காகத் தமிழ்த் தலைமைகள் போராட நேரிட்டது.

1956 ல் சிங்களம் மட்டும் அரச மொழி என்பதை முன்னிறுத்தி இலங்கையின் ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற பண்டாரநாயக்கா, பின்னர் தந்தை செல்வாவுடன், தமிழர் பிரதேசங்களில் அவர்களது அபிலாசைகளை ஓரளவுக்கேனும் பூர்த்திசெய்யவல்ல “பண்டா-செல்வா” ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்.

ஆனால், இவ் வொப்பந்தம், அன்று எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஜே.ஆரின் (ஐ.தே.கட்சி) கண்டியாத்திரையின் பயனாய் ‘அற்ப ஆயுளில்’ முடிவுக்குவந்தது.

அதன் பின்னர் மேலும் பத்து வருடங்கள் கழித்து 1965 ல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவான அரசு  ‘தமிழ் மொழி விசேட விதிகள்’ மூலம் தமிழர்களுக்கு ‘பஞ்சு மிட்டாய்’ வழங்கித் தமிழ்த் தலைமைகளின் ‘அழுகையை’(?)க் கட்டுப்படுத்தி வைக்க முயன்றது.

என்றாலும் வயிற்றுப் பசிக்கு மிட்டாய் பரிகாரமாக இயலுமா?.. அதுவும் சிங்களத் தலைமைகளுக்கே உரிய வழிகளில் ஒப்பந்த மீறல்களை நாசூக்காகச் செய்வதைத் தமிழ்த் தலைவர்கள் எவ்வளவு காலந்தான் பொறுத்திருப்பார்கள்?…

அடுத்த பொதுத் தேர்தலில், ஐ.தே.கட்சி பதவியிலிருந்து நீக்கப்பட அந்த இடத்திற்கு; ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையிலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வந்தது.

‘தவிடு வழங்கும் அப்பன் போய், உமி வழங்கும் பிள்ளை’ அதிகாரத்துக்கு வந்ததுபோல், முன்னைய ஐ.தே.கவை விடவும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் ஆட்சியில் தமிழர்களது உயர்கல்வியைப் பாதிக்கும் ‘தரப்படுத்தல்’ சட்டம் தமிழுரிமைப் போரில் மாணவர்களையும் ஈடுபடுத்தும் புதிய வாசலினைத் திறந்து வைத்தது.

அதே காலப் பகுதியில் இலங்கையில் ஆரம்பித்திருந்த ஜாதிக விமுக்திப் பெரமுன (ஜே.வி.பி) கிளர்ச்சிகளும்; தமிழ் மாணவர் பேரவையின் தோற்றமும் இலங்கை அரசியல் வரலாற்றில்; அரசியல் போராட்டங்களின் பக்கம்; அதிக அளவில் இளைஞர்களைத் திசை திருப்பிய நிகழ்ச்சிகள் எனலாம்.

1976 ல், தமிழர்களது மூன்று முக்கிய கட்சிகளும் இணைந்து உருவான தமிழர் விடுதலை கூட்டணியும், அதன் பெறுபேறாய் ஏற்பட்ட ‘வட்டுக் கோட்டைத் தீர்மானமும்’ தமிழ் அரசியல் போராட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருந்தன.

1977 ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், அப்போதைய ஆளும் சுதந்திராக்கட்சியின் அணி தோல்வியைத் தழுவ, அரசியல் அதிகாரம் ஐ.தே.கட்சிக்குக் கிடைத்தது. எதிர்க் கட்சியாக  அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழர் கூட்டணியும்; எதிர்க் கட்சித் தலைவராக அமிர்தலிங்கமும் தெரிவானார்கள்.

இலங்கை வரலாற்றில் தமிழர்கட்சி ஒன்று எதிர்க் கட்சியாகவும், தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த-முதலும்,முடிவுமான- சந்தர்ப்பம் அதுவே எனலாம்!

[ கருத்துப் படம்; நன்றி ‘The Island'(Sri Lanka)]

எதிரணி அந்தஸ்த்தையே இழந்துவிட்ட வகுப்புவாதக் கட்சியான ஸ்ரீ.ல.சு.கட்சியின் கீழ் மட்டத் தலைவர்கள் சிலரால் தூண்டிவிடப்பட்டதாக நம்பப்படும் 1977 ஆகஸ்ட் கலவரம், மலையகத் தமிழர்களைக் குறியாகக் கொண்டிருந்தது.இதனால் நானூறுக்கும் அதிகமான மலையகத் தமிழர்கள் உயிரிழக்கவும், பல ஆயிரம் பேர் உடமைகளை இழக்கவும் நேரிட்டது.

1978 ல், இலங்கை குடியரசாகப் பிரகடனஞ் செய்யப்பட்டு, அதற்கான புதிய அரசியலமைப்பும் உருவாக்கப்பட்டது. அன்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பன்மையைப் பெற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சி; புதிய அரசியலமைப்பில் தமிழர்களது பாதுகாப்பு,உரிமை இவைகளை உறுதி செய்யும் எதனையும் வழங்கியிருக்கவில்லை.

இதனை கண்டித்து நாடாளுமன்றத்திற்குச் செல்லாது புறக்கணித்த தமிழர் கூட்டணி, முடிவில் தமது எதிர்க் கட்சி அந்தஸ்த்தையும் இழக்க நேர்ந்தது.

இவையனைத்தும், தமிழுரிமைப் போராட்டத்தினை அதன் அதன் கட்டத்திற்கு நகர்த்திற்று.

தன்னிலும் சிறியவனான தன் தம்பியை அரவணைத்துச் செல்லும் உணர்வினை மறந்து, அவனையே எதிரியாகப் பார்க்கும் அண்ணனைப் போல் நடந்து கொள்ளும் சிங்களப் பெரும்பான்மை இனத் தலைவர்களது இது போன்ற செயல்கள்…………..

“அக்கா அக்கா என நீ அழைத்தால்…

அக்கா தரவென்ன சுக்கா? மிளகா? சுதந்திரம் கிளியே”

என்னும் புரட்சிக் கவிஞனின் கவிதை வரிகளின் பொருளுக்கு உருவம் கொடுக்க முனையும் வேட்கையினைத் தமிழ் இளைஞர்களது எண்ணங்களில் ஏற்படுத்தியது என்பதே பொருத்தமானது. இதற்குரிய முழுப் பெருமையும்(!?) சிங்களத் தலைமைகளுக்கே உரியது.

1983 இனக் கலவரமும், அதனைத் தொடர்ந்து வேகமடைந்த ஆயுதப் போராட்டமும்…….. அதனால் ஈழத்தமிழர்களில் சரி பாதிப்பேர் ஏதிலிகளாய் உலக நாடுகள் பலவற்றிலும் அடைக்கலம் நாடியதும்…..   முடிவில்…. இரக்கமற்ற வகையில் அது அடக்கப்பட்டதும் நாமனைவரும் அறிந்ததே.

இப்போது, மீண்டும், விட்ட இடத்திலிருந்து சமாதானப் பேச்சுகள் ஆரம்பமாகியிருக்கின்றன.

தமிழ் அரசியல் கூட்டரங்கு ‘கோழிக் கறியோடு’ உணவு கிடைக்கும் என்னும் ‘கனவோடு’ காத்திருக்கிறது! ராஜபக்‌ஷே ‘பானை’யில் துழாவிக் கொண்டிருப்பது வெறும் ஒடியல் கூழா அல்லது ‘வெற்றுப்’ பானையே தானா என்பது விரைவில் தெரிந்து விடும்.

எது எப்படியோ, முடிவில் பானையை எடுத்துத் தமிழ் அரசியல் வாதிகள் தலைமீது கவிழ்த்து விடாமல் இருந்தாலே போதும்!

[ 2011 மார்ச் 02 ‘ஈழநேசன்’ இணைய இதழில் வெளியான கட்டுரை]

********************************************************************************