நடிகர்களும், நாடாளும் ஆசையும்! [ 03-02-2011ல் எழுதியது]

நடிகர்களும், நாடாளும் ஆசையும்!

சர்வசித்தன்”

இன்று நாடாள்பவர்களில் பலர் ‘கைதேர்ந்த’ ”நடிகர்”களாக மாறியிருக்கும் நிலையில் தொழிலால் நடிகர்களாயிருப்பவர்கள் நாடாளும் ஆசையினைக் கொண்டிருப்பது தவறானதா எனக் கேட்கலாம்….

அல்லது, சென்ற வருட ஆரம்பத்தில் ராகுல் காந்தி கூறியிருந்த நான்கு தகுதிகளில்  ஒன்றான ‘மக்கள் ஆதரவு பெற்றவர்கள் அரசியலுக்கு வரலாம்’ என்பதில் ஒன்றான மக்கள் ஆதரவு இந்த நடிகர்களுக்கும் இருக்கிறதே எனக் காரணம் கூறலாம்……..

ஆனால்…… உண்மையில் ‘அரசியல்’ என்பது ‘மக்கள் தொண்டே’ என்பவர்கள் அருகிவிட்ட காரணத்தால்; இன்று அரசியல் என்றாலே ‘போக்கிரிகளின் புகலிடம்’ என்னும் ‘புன்மொழி’  நிரூபணமாவதைக் கண்டு வெதும்பும் எந்தக் குடிமகனும், வெறும் பிரபல்யமும், வாரிசு உரிமையும் மட்டும் ஓர் தூய அரசியல்வாதியை- சமூகத்தொண்டனை-ஓர் ‘மகாத்ம’னை உருவாக்கிவிட முடியாது என்பதை ஒப்புக்கொள்வார்கள்.

அரசியலில் புக எண்ணும் ஒவ்வொருவருக்கும் சமூக நலன் குறித்த சிந்தனையும், அதனைச் செயலாக்கும் தொண்டுணர்வும் அவசியம். அவ்வாறு தம் மனதில் உள்ள சமூக நலத்திட்டங்களைத் தடங்கலின்றி நிறைவேற்றுவதற்கு அவர்களது கையில் ஆளும் அதிகாரம் இருந்தாக வேண்டும். இந்த ஆட்சி அதிகாரத்தினைத் தாமும் ,தம்மோடொத்த சிந்தனைப் போக்கும் கொண்ட ஓர் ‘குழு’ –அதாவது ‘கட்சி’ பெறுவதன் வழியாகத் தங்கள் சமூக- இன- தேச நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்லமுடியும் என்னும் ‘தொண்டுள்ளத் தேவையே’ அரசியலாக உருவெடுக்கிறது.

ஆனால், இப்போது உள்ள அரசியல்வாதிகள் இப்படியேவா இருக்கிறார்கள்?.. அல்லது தாமும் அரசியல்வாதி ஆகவேண்டும், நாட்டின் ஆளும் அதிகாரத்தினைத் தாமும் பெறவேண்டும் என் ஆசைப்படுபவர்கள் யாவருமே இந்தத் ‘தூய’ தொண்டுள்ளத்தோடேயா இருக்கிறார்கள்? எனக் கேட்டால் அதற்குப் பதில் ‘மௌனம்’ மட்டுமே எஞ்சும்

ஒரு நல்ல பாடகராக வேண்டுமெனில் அதற்கு ஏற்ற குரல் வளம் அமையவேண்டும். அது மட்டும் அல்ல இசை பற்றிய தேர்ந்த அறிவும், பயிற்சியும் இருத்தல் வேண்டும். அதே போன்று நல்லதோர் மருத்துவருக்கு அது குறித்த படிப்பறிவும், தொண்டுள்ளமும் இருத்தல் அவசியமாகிறது. கவிஞனாயின் கற்பனை வளமும், மொழியின் மீது சிறந்த ஆளுமையும், பரந்த உலகப் பார்வையும் தேவை என்றாகிறது…. இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகச் செயல்பட அத் துறைகளுக்கே உரிய சில அடிப்படைத் தகுதிகள் தேவைப்படுகின்றன.

ஆனால் அரசியல்வாதி ஆவதற்கு, எந்த அடிப்படைத் தகுதிகளும் இங்கு தேவைப்படுவதில்லை என்பது ஆச்சரியமான உண்மை!

தொகுதிகளில் வேட்பாளர்களாக அறிமுகமாகி மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று; சட்டசபைக்கும், நாடாளுமன்றுக்கும் செல்லும் ஒருவருக்கு எவ்வித அடிப்படைத் தகுதியும் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதா ? சட்டசபை என்னும் பெயரிலேயே அது சமூக-நாட்டு நலத் திட்டங்களுக்குத் தேவையான சட்டங்களை- ஒழுக்காறுகளை உருவாக்கும் அவை என்னும் கருத்து வலியுறுத்தப்படுகிறது. அவ்வாறாயின் அங்கு பதவியில் அமரும் ஒவ்வொருவரும் ‘சட்டப்படி’ தூய்மையானவராக மட்டுமின்றிச் சட்டம் குறித்த அடிப்படை அறிவும் கொண்டவராக இருபது அவசியமல்லவா? ஆனால், இன்றோ ஊழல் வாதிகளும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரும் , ஏழைகள் மலிந்த ஓர் நாட்டில் இலவசங்களையும் , முடிந்தால் பணத்தையும் வழங்கும் வல்லமை பெற்றவர்களும், மாயத் தோற்றத்தால் மக்களை மயக்குபவர்களும் தேர்தல் மூலம் நாட்டை ஆளுபவர்களாக; நாட்டு மக்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்களாக மாறிவிடுகிறார்கள். அதன் பின்னர் அவர்களே நாட்டு மக்களின் தலைவிதியை நிர்ணயம் செய்பவர்களாகி விடுகிறார்கள்.

இவர்களிடையே உண்மையான சமூகத் தொண்டும், நல் ஒழுக்கமும் கொண்டவர்கள் மிகச் சிலராக இருப்பதனாலேயே இன்று, நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய முறையில் சீர்கேடுகள் மலியவும், அச்சீர் கேடுகள் மேலும் வளரவும் காரணமாகிறது.

இவற்றுள் இன்று தமிழ் நாட்டைப் பீடித்திருக்கும்மிகப் பெரும் அபாயம் நடிகர்களின் உருவில்வளர ஆரம்பித்திருக்கிறது.

இவ்வாறு எழுதுவதால் தமிழகத்தின் முன்னாள்முதல்வர் எம்.ஜி.ஆரையோ, ஜெயலலிதாவையோ குறிப்பிடுவதாக எண்ணவேண்டாம். அதே சமயம் நடிகர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது எனவும் பொருள் கொள்ளவும் வேண்டியதில்லை.

தான் செய்யப்போகும் செயல் (தொழில்) பற்றிய தெளிவும், திறமையும் இருப்பின் எவரும் எதிலும் முயன்று வெற்றி காணலாம். ஆனால், வெறும் கவர்ச்சி மாயையை மட்டும் நம்பி ஒருவர் தன்னால் எதனையும் செய்துவிட இயலும் என எண்ணுவது ஏற்புடையதல்ல. கையில் கத்தியை வைத்திருக்கும் ஒருவர்; மக்களின் ஆதரவு இருந்தால் நோயாளிக்கு ‘ஆபரேஷன்’ செய்துவிடலாம் என நினைப்பது போன்றதே, மக்கள் ஆதரவு இருந்தால்  நாட்டை ஆண்டுவிடலாம் என்பதும்!

தமிழகத்தின் முன்னாள் முதல்வருக்கு, திரையுலக கவர்ச்சி இருந்தது மட்டுமல்லாமல் அவர் அறிஞர் அண்ணாவின் ‘பாசறை’யில் அரசியல் அரிச்சுவடி கற்றவர் என்னும் தகுதியும், ஓர் சிறந்த மனிதாபிமானி என்னும் பண்பும் ஒருங்கே அமைந்திருந்தது. அது மட்டுமல்லாமல் தி.மு.க வின் பொருளாளர் பதவியினையும் அவர் வகித்திருந்தார். அண்ணாவுக்குப் பின், கலைஞர் புரிய ஆரம்பித்த நேர்மையீனங்களைத் தட்டிக் கேட்டதனால் கட்சியிலிருந்தும் வெளியேற்றப்பட்டவர் என்னும் ‘சிறப்புத் தகுதி’ யையும் அவர் பெற்றிருந்த காரணத்தினால் அவரால் அரசியலில் ஈடுபடவும் அதன் மூலம் நாட்டை நிர்வகிக்கவும் முடிந்தது. அவருக்கிருந்த தகுதிகளுள் மிக முக்கியமான தகுதி அவர் தன்னை ஓர் சிறந்த மனிதன் என நிலை நாட்டிக் கொண்டது எனலாம். இவற்றோடு கூடுதலாக  தோற்றக் கவர்ச்சியும், வெளிப்படையான செயல் பாடுகளும் அவரைச் சிறந்த தலைவர்களுள் ஒருவராக்கியது என்பதே உண்மை.

ஜெயலலிதாவுக்கு;  எம்.ஜி.ஆரின் ஆதரவும், அரசியலில் ஈடுபட அவரது வழிகாட்டுதலும் இருந்தது என்பதை யாரும் மறுப்பதில்லை. இவற்றோடு அவர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவர் என்னும் எண்ணமுமே; எம்.ஜி.ஆருக்குப் பின் அவரைத் தங்கள் தலைவியாக மக்கள் ஏற்றுக் கொள்ள வழி சமைத்தது.

ஆனால், அரசியல் அனுபவமோ, மக்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றலோ  அல்லது சமூக நலன்களில் தொடர்ச்சியான ஈடுபாடோ இன்றி வெறும் ‘ரசிகர்’களின் ஆதரவோடு ஆட்சியைப் பிடிப்பதும், நிர்வாகம் செயவதும் சாத்தியமான ஒன்றா ? ….   அல்லது அவ்வாறு அவர்கள் கையில் ‘தப்பித்தவறி’ ஆளும் அதிகாரம் கிடைக்குமேயாகில் அதனைச் சீரிய வகையில் நெறிப்படுத்த இயலுமா ?… இவை பற்றியெல்லாம் சிந்திக்கும் தேவை நாட்டின் குடிமகன்/மகள் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

ஆள்பவர்கள் மீதும்,முன்பு ஆண்டவர்கள் மீதும் மக்களுக்கிருந்த வெறுப்பும், அவ நம்பிக்கையும்  தான், நடிகர் விஜயகாந்துக்கு இப்போது இருக்கும் ஆதரவாகும். அ.தி.மு.க வுக்கும்; தி.மு.க வுக்கும் மாற்றாக ’49ஓ’ வுக்கு அளிக்கும் வாக்குகளே இன்று அவரின் வாக்கு வங்கியாக உயர்ந்திருக்கிறது.  உண்மையில் அவை யாவும் அவரது திறமைக்குக் கிடைத்தவை அல்ல. அவரது திரையுலக ‘வெளிச்சம்’ அவரை மக்களுக்குத் தெரிந்தவராக உருவாக்கியிருக்கிறது. அவ்வளவே… ! அவரும் இப்போதுள்ள இரு பெரும் கட்சிகளில் ஏதாவது ஒன்றில் ஐக்கியமாகிவிட்டால் அவருக்குக் கிடைத்த ‘49ஓ’ வாக்குகள் கூட இனி  எவருக்கும் கிடைக்காது போகலாம்.

திரையுலகம் சம்பந்தப்பட்ட வகையில், அன்றைய சிவாஜியில் ஆரம்பித்து, டி.ராஜேந்தர், கார்த்திக், விஜயகாந்த் இன்றைய விஜய் வரை அரசியல் ‘ஆசைப்’ பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது……….இடைக்கிடை ரஜனிகாந்தும் தமது அரசியல் பிரவேசம் பற்றிக் கூறி மிரட்டிக்கொண்டேயிருக்கிறார்!

ஆனால்   எமது ஊரில் வயதான பெரியவர்கள் சொல்வது போல் …

“காக்காய் ஓட்டத் தெரிந்தவரெல்லாம், குதிரை ஓட்ட முடியுமா?” என்று கூறும் வாக்கியந்தான்  மனதில் எழுகிறது!

[பெப் 04,2011 ‘கீற்று’வில் வெளியானது.www.keetru.com]