வடக்கும் கிழக்குமல்ல….. [ 02-02-1987 ‘தினமணி’(மலேசியா)யில் வெளியானது

[ஈழத்து நிகழ்ச்சிகள்:-      ‘தினமணி’ 1987 பெப் 02ல் வெளியானது].

’வடக்கும் கிழக்குமல்ல முழு இலங்கையும் தமிழர் தாயகமே!’

என்கிறார் இலங்கை அதிபர்.

சர்வசித்தன்”

இது என்ன ? எங்காவது படுத்துறங்கி ‘கனாக் கண்டு’விட்டு எழுதுகிறேனோ.. என்று ‘விழி’க்கவேண்டாம்.

“தமிழர்கள் இலங்கைக்குச் சொந்தமானவர்கள் அலல, அவர்கள் வந்தேறு குடியினர், இலங்கயில் சிங்கள மக்களுக்கு இருக்கும் பாத்தியதை தமிழர்களுக்குக் கிடையாது. இப்போது சிங்களர்கள் தமிழர்களுக்கு அளித்திருக்கும் சலுகைகளே அதிகபட்சமானது!” என்னும் பொருள்படச் சுமார் இரண்டுவருடங்களுக்கு முன்னர் (1985ல்) வெளிநாட்டுப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி கொடுத்திருந்தார் ஓர் பௌத்த பிக்கு.

ஏறத்தாள முப்பது வருடங்களாக-தமிழ் அரசியல் வாதிகள், இலங்கையில் வாழும் தமிழ் மக்களது நிலைப்பாட்டிற்காக-அவர்களது உரிமைகள் காலத்துக்குக் காலம் இலங்கையின் ‘பெரும்பான்மை இன’ அரசினால்; சிறிது சிறிதாகப் பறிக்கப்பட்டுவரும் போதிலெல்லாம், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முயற்சி செய்ததை- ’சுமார் அறுபது வருட கால அரசியல் வாழ்க்கையினை உடையவன் நான்’ என்று மார்தட்டும் அதிபர் ஜே.ஆர்; தெரியாதவராய் இருக்கமுடியாது!

என்றாலும், இன வாதம் கக்கும் சில சிங்கள இயக்கங்கள் போன்று, தமிழர்களும் பதிலுக்கு, “சிங்களர்கள் இலங்கைக்கு உரித்தில்லாதவர்கள், அவர்கள் வட இந்தியாவின் கலிங்கப்பகுதியில் இருந்து; தன் தந்தையினால் விரட்டப்பட்ட ஓர் இளவரசனின் வழித்தோன்றல்கள்- அவன் இலங்கயின் மேற்குக் கரையில் வந்திறங்கிய போது இலங்கையில் இந்து மதம் தழைத்திருந்தது! இந்துக்கள் தமிழர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஏன், முதல் சிங்கள அரசனான விஜயனே இந்துக் கோவில்களைச் சீராட்டி இருக்கிறான்!. யாழ்ப்பாணத்தின் வட முனையில் உள்ள நகுலேஸ்வரத்துக்கும்(கீரிமலை); மேற்குப் பகுதி நகரான மாதோட்டத்திற்கும் அவன் சென்றிருக்கிறான். அப்போதெல்லாம் அங்கு சிவ ஆலயங்கள் சிறப்புடன் இருந்திருக்கின்றன.எனவே தமிழர்களே அங்கு வாழ்ந்திருக்கிறார்கள். ஆகையால், பிந்தி வந்தவர்கள் சிங்களர்களே.இவ்வாறிருக்கையில் சிங்களர்களை விடவும் தமிழர்களுக்கே இலங்கை உரித்துடையது !” என்றெல்லாம் எந்தத் தமிழ்த் தலைவரும் பேசியதில்லை. இனியும் பேசப்போவதும் இல்லை.

இது இலங்கையின் அதிபருக்கு நிச்சயம் நன்கு தெரிந்தே இருக்கும்.

ஏனெனில், இலங்கையின் அரசியலில் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே ‘பெயர் போட்டு’ வரும் ஜே.ஆர், அப்படியொன்றும் ‘மூளை கெட்ட’ பேர்வழியுமல்ல! மிகச் சிறந்த இராஜ தந்திரி ! அவரது அரசியல் சாணக்கியத்துக்கு- இன்று, இலங்கையின் ராணுவத்தைப் பலப் படுத்துவதற்காக இஸ்ரேலியர்களது உதவியையும்- அதே நேரத்தில், யூதர்கள் என்றாலே காதுகளைப் பொத்திக்கொள்ளும் அரபு உலகையும்; தமது இரு கரங்களிலும் வைத்துக்கொண்டிருப்பதில் இருந்தே இது புரிந்து போயிருக்கும்!

சென்ற வருடத்தில்தான், ” இஸ்ரேலியர்களை- உயிருள்ளவரை எதிர்த்தே தீருவோம் – அவர்கள் எமது மண்ணான பாலஸ்தீனத்தைப் பறித்துக் கொண்ட வேட்டை நாய்கள்…” என்று சற்றுக் காரமாகவே சூழுரைத்த பாலஸ்தீன விடுதலை முன்னணிக்குச; ’சிறீலங்கா அரசு. என்றும் தார்மீக ஆதரவினை வழங்கும்’ என்று இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஜே.ஆர்  பேசியிருக்கிறார்.

அதாவது, வெளி நாட்டு அரசியலில் இஸ்ரேலியர்களையும், அரபுக்களையும் ஒரே சமயத்தில் சமாளித்துத் தமக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ளும் அதே இராஜ தந்திரத்தை; இந்தியாவின் விடயத்திலும் அவர் கடைப்பிடிக்கத் தவறவில்லை.

இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி பதவியேற்றதும்- அவரிடம் வலிதில் சென்று, ‘இலங்கைப் பிரச்னையை தீர்த்து வையுங்கள்.அதற்குச் சரியான ஆள் நீங்கள் தாம்’ என்றதில் ஆரம்பித்து; மறந்த பிரதமர் இந்திராகாந்தியின் தூதுவராக இருந்த ஜி.பார்த்தசாரதியினை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக ரொமேஷ் பண்டாரியை நியமித்து…… தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் பேசிப்பேசியே நாட்களைக் கடத்தி- அதே சமயத்தில்… சீனா, பாக்கிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து ஆயுதங்கள், போர்க் கப்பல்கள், கவச வண்டிகள், குண்டுவீச்சு விமானங்கள் இவ்வாறு ஓர் முழு அளவிலான போருக்கு உரிய தளவாடங்கள் அனைத்தையும் சேர்த்துக் கொண்டது வரை- அவரது ராஜ தந்திரம் உலகின் கண்களில் மிகப் பிரசித்தமாகி விட்டிருக்கிறது!

இத்தனை சாதுர்யம் மிக்க இலங்கையின் அதிபரை – பத்திரிகை உலகைச் சேர்ந்த பலர் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார்கள். அதிலும், இந்தியப் பத்திரிகையாளர்கள் பலர் பலதடவைகள் பேட்டிகண்டு எழுதி வருகிறார்கள். அது போன்ற ஒன்று இவ்வருட ஆரம்பத்தில் எடுக்கப்பட்டு பிரசுரமாகியிருந்தது.

அந்தப் பேட்டியின் போது- ஜே.ஆர் கூறிய சில கருத்துகள் சிறிது வித்தியாசமாக அமைந்திருந்தன. இதுவரை அவர் வழக்கமாகக் கூறிவரும் ‘கொளகொள’ப்பான மழுப்பல் பதில்களை இந்தப் பேட்டியில் காணமுடியவில்லை. இதிலிருந்து, அவர் அடுத்த கட்ட நடவடிக்கை ஒன்றிற்குத் தயாராகி விட்டார் என்பதாகவும் எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

‘தமிழ்ப் போராளிகள்,இலங்கையின் சிறுபான்மை இனமான தமிழர்கள் அனைவரையும் பிரதி நிதிப்பவர்கள் அல்ல. அவர்கள் ஆயுதம் ஏந்திய கும்பல்கள் (?)’ என்று கூறிய அவர்; இந்திய அரசின் ஏற்பாட்டால் தாம் அவர்களோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாகக் கூறியிக்கிறார்.

ஜே.ஆரின் கருத்துப்படி- ’தமிழ்ப் போராளிகள், இலங்கையின் ஒரு பகுதியினைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது; விமானக் கடத்தலைப் போன்றது!? அங்கு உள்ள மக்களைப் பாதுகாப்பதற்காக இந்தப் பயங்கரவாதிகளுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும்’ என்றிருக்கிறார். ஆனால், அதே சமயம் இன்றுவரை இலங்கை அரசுப்படைகள்- ஜே.ஆரின் கூற்றுப்படி இந்தப் போராளிகள் என்னும் ‘பயங்கரவாதிகளை’ விடவும் பணயம் வைக்கப் பட்டிருக்கும் அப்பாவி மக்களை அல்லவா கொன்று தீர்த்துக் கொண்டிருக்கின்றன என்னும் செய்திகளைப் பற்றி  அவர் எந்தக் கருத்தினையுமே கூறவில்லை1 ஒரு வேளை பேட்டி கண்டவர் இதனை கேட்க மறந்தாரோ என்னவோ ?!

இப்பேட்டியின் போதுதான் ஓரிடத்தில்……

“தமிழர்கள் வடக்கும் கிழக்கும் தமது தாயகம் என்றும் அவற்றை இணைத்து வழங்கும்படியும் கேட்கிறார்களே.. இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?’ எனக் கேட்டதற்கு….

‘வடக்கு கிழக்கு மட்டும் அல்ல, முழு இலங்கையுமே அவர்களுக்குச் சொந்தமானது தான். இதற்குமேல் நான் அவர்களுக்கு என்ன கொடுத்துவிட முடியும் ?’ என்று கூறியிருக்கிறார்.

இது மட்டுமல்லாமல்…’ இன்று இந்தியாவின் முயற்சியால் தொடர்ந்துகொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடையும் பட்சத்தில், ராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலம் தமிழ்ப் போராளிகளை அழித்து விடுவது அல்லது அவர்கள் எண்ணப்படியே கைவிட்டு விடுவது…..   இவை இரண்டுக்கும் நடுவே அகிம்சை முறையிலான மற்றொரு ஆலோசனையும் கருத்தில் உள்ளது ‘ என்றும் கூறியிருக்கிறார்.

1972 வரை தமிழர்கள் அரச நிறுவனங்களின் முன்பாக சத்தியாக்கிரகம் இருந்ததை இலங்கை மக்கள் அறிவார்கள். இப்போது அதிபர் ஜே.ஆர் கூறும் புதிய அகிம்சைத் திட்டம்… ஒரு வேளை விடுதலைப் புலிகளின் முகாம்களின் முன்னால் அரசுப் படையினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போகிறார்ககளா என்ன ? என்று கேலியாகச் சொன்னார்… அண்மையில் யாழ்ப்பாணப் பகுதியிலிருந்து தப்பிவந்து கனடாவுக்குக் கப்பலேறிய யாழ் தமிழர் ஒருவர்.

ஆனால், ஜே.ஆர் கூறும் அந்த அகிம்சைத் திட்டம்; விஜே குமாரதுங்கா போன்ற இளைய தலைமுறையினர் மூலம் செயல்படுத்தப்படவும் வாய்ப்புகள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

என்றாலும், இன்று இலங்கையில் நடைபெற்று வரும் சம்பவங்கள், தமிழ்ப் பகுதிகளில் அரசுப் படைகள் மேற்கொள்ளும் திடீர் நடவடிக்கைகள் யாவும்- எல்லாவற்றுக்கும் முன்பாக ஓர் யுத்த நிலை உருவாகி வருவதையே புலப்படுத்துகின்றன.  ***************