விடுதலைப் போராளிகளை அழித்துவிட்டால்…..[ 29-11-2010 ‘நம் நாடு’-கனடா இதழில் மீள் பிரசுரமானது.

ஈழத்து நிகழ்ச்சிகள்”                             ‘சர்வசித்தன்’

[ ஒக்ரோபர் 22,1987 ல் எழுதிய இக்கட்டுரை; ‘மலேசிய’ நாளிதழான ‘தமிழ் நேசனி’ல் 25-10-1987ல் வெளியாகியது]

விடுதலைப் போராளிகளை அழித்துவிட்டால், சமாதானம் தானே வருமா?

பாரதப் பிரதமர் தமது எண்ணத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும்!

{ சென்ற ஜூன் (1987) மாதமளவில், இலங்கைப் படைகளின் மிக மூர்க்கமான தாக்குதல்கள் யாழ்ப்பாணத்தின் மீது நடைபெற்றுக் கொண்டிருக்கையில்; விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு இணைந்து நின்று-சிங்கள ராணுவத்தோடு போரிட்ட ‘ஈரோஸ்’ இயக்கத்தின் தலைவர் பாலகுமார், இந்திய அரசிடம் ஒரு வேண்டுகோளினை விடுத்திருந்தார்.

அவரது அந்த வேண்டுகோள் பின்வருமாறு இருந்தது.

“இந்தியா எமக்கு எல்லாவகையிலும் ஆதரவு வழங்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்காக இந்தியா தனது படையை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அனுப்ப வேண்டும் என்பதில்லை. விடுதலைப் போராளிகளான எமக்குத் தேவையான ஆயுதங்களை அது வழங்கினாலே போதுமானது!”

என்றிருந்தது அவ் வேண்டுகோள்.

அப்போது எதுவும் செய்யாமல் இருந்த இந்தியா, பின்னர் தன் படையை அனுப்பியது.அவ்வாறு அது அனுப்பியது தமிழ்ப் போராளிகளுக்கு உதவவா என்றால்…அதுதான் இல்லை! எந்தத் தமிழர்களை இலங்கைப் படைகள் ‘துவம்சம்’ செய்தனவோ… அந்தத் தமிழர்களைக் கடைசிவரை காப்பாற்றி நின்ற விடுதலைப் போராளிகளை ஒழிக்க, சிங்கள அரசுக்குத் துணையாக படை நடத்தியது இந்திய அரசு!

பாலஸ்தீனர்களை ஒடுக்க- இஸ்ரேலுக்கு படை உதவி அளிப்பது போலவும்; தென்னாபிரிக்க மக்களை அடக்க இனவெறி பிடித்த ‘போத்தா’வின் அரசுக்கு ராணுவ உதவி வழங்குவது போலவும்; அமைந்த இந்தத் ‘தலைகீழ்’ மாற்றம் எப்படி ஏற்பட்டது?. இதற்கு என்ன காரணம் ? அப்பாவி ஈழத் தமிழர்களது தலைவிதி தான் காரணமோ ?! }

வாழ்விக்கச் சென்ற’ படைகள் பற்றிய வானொலிச் செய்திகள்…

ஈழத் தமிழ் மண்ணில், அமைதியை நிலைநாட்டவெனச் சென்ற ‘அமைதி’ப் படைகள், அதனை முன்பிருந்ததை விடவும் இரத்தக் காடாக்க ஆரம்பித்து இரண்டு வாரங்களாகிவிட்டன!

இதற்கு முன்னர் ,’மனிதாபிமானமற்ற’ படைகள் என்று சர்வதேச முத்திரை பதித்துக் கொண்ட(?) இலங்கைப் படைகளின் தாக்குதல்கள்கூட ஆறு நாட்களுக்கு மேலாக நீடித்ததில்லை. தாக்குதலுக்குள்ளாகும் இடத்தில் உள்ள மக்கள் பட்டினியாலும்,நோயாலும் ஏன் பயத்தாலும் பாதிக்கப்பட்டு விடுவார்கள் என்னும் இரக்கம்(!) ஓரளவாவது இலங்கைப் படைகளுக்கு இருந்ததால் அவை இடைவெளி விட்டே தங்கள் தாக்குதல்களை நடாத்தி வந்தன. தாம் தாக்குவது தமது நாட்டு மக்களையே என்னும் (நாட்டு)உணர்வு இலங்கைப் படைகளுக்கு இருந்திருக்கிறதோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது!விடுதலைப் போராளிகளை வேட்டையாடிவிட்டே ஓய்வது என்னுமாப்போல் ‘கங்கணம்’ கட்டிக் கொண்டு செயல்படும் இந்தியப் படைகளின் நடவடிக்கைகளைப் பார்க்கையில், இவ்வாறான எண்ணம் மூளையுள்ள எந்த மனிதனுக்கும் எழுவது இயல்பானதே.

தமிழர்கள் மீதும், தமிழ்ப் போராளிகள் மீதும் இந்திய ‘அமைதிப்’ படைகள் நடாத்தும் தாகுதல்கள் ஒருபுறம் இருக்க, இந்தத் தாக்குதல்கள் பற்றியும், விடுதலைப் போராளிகள் பற்றியும், இலங்கை-இந்திய அரசுகள் வெளியிடும் வானொலிச் செய்திகளோ மிகமிக விநோதமானவையாக இருக்கின்றன!

“வெற்றியின் விளிம்பில் நிற்கும் இந்தியப் படைகள் இப்போது யாழ்நகரின் புறநகர்ப் பிரதேசங்களைக் கைப்பற்றிவிட்டன!” என்று ‘எக்காள’மிடுகிறது ஒரு செய்தி!

அதுசரி…., இந்தியப் படைகள் இப்போது எந்த நாட்டுடன் போரிட்டு வருகின்றன ?  சீனாவுடனா.. இல்லை பாக்கிஸ்தானுடனா.. அதுவும் இல்லை… சின்ன நாடான பங்களா தேசத்துடனா… ? எந்த வெற்றியை எண்ணி இன்றைய ராஜீவ் அரசு குதூகலிக்கிறது ?

கேவலம்…’அமைதி காப்பதற்காகச் சென்றோம்’ என்று இன்னமும் வாய்கிழியக் கூறிக்கொண்டு, முறியடித்து விட்டோம், கைப்பற்றி விட்டோம்….. நிலைகளை அழித்து விட்டோம், கொன்று விட்டோம் என்று சொல்வது வெட்கமாக இல்லையா…  என்றெல்லாம்  நீங்கள் கேட்டுவிடக் கூடாது.

இன்றைய இந்தியத் தலைமையின் ‘அகராதி’யில் ‘அமைதி’ என்பது மேற்சொன்ன மாதிரியான ,அழித்தல்,கொல்லுதல்,கைப்பற்றுதல்.. என்பதாகத்தான் இருக்கும் போலும்!

‘பாஸிஸம்’-இந்திய அரசு-தமிழ்ப் போராளிகள்:-

’பாஸிசம்’ என்றால் என்ன… ?

இது….’அடியாள்’ முறை எனச் சொல்லப்படும் ஒரு வகை அடக்குமுறை எனறு சொல்லலாம்!

இதில், ஒன்று சம்பந்தப்பட்டவர்களை அடித்து நொறுக்கிப் பணியவைப்பது, இல்லையேல் ஆளே இல்லாமல் செய்துவிடும் ‘செயல் முறை’ பின்பற்றப்படுவது!

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை பாஸிஸ்டுகள் என்று குற்றம் சாட்டியவாறு, இந்திய அரசு தனது ‘சமாதான’ப் படைகளை ஏவி, அவர்களை அடக்கி ஒடுக்க- அல்லது அழித்தொழிக்க முற்படுவதைப் பார்த்தால்…. யார் பாஸிஸ்டுகள் என்பது விளங்கிவிடும்.

இத்தனைக்கும் நடுவில், இந்திய வானொலி மூலம் ஈழத்தமிழ்ப் போராளிகளுக்கு எதிராக நடாத்தப்படும் விஷமத்தனமான பிரச்சாரங்கள்- அது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்துமே சமாதானத்தை நோக்கி எடுக்கப்படும் தூய்மையான செயல்களே எனறு நம்பவைக்கப் பாடுபடுவதாகத் தெரிகிறது!

மாதிரிக்கு, இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டெல்லி வானொலி நிலையம், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கென வழங்கும் ஒலிபரப்பில் வெளியாகும் செய்திகளைக் கேட்டுப் பாருங்கள்….

யாழ்ப்பாண மக்களுக்கு இந்திய அரசின் அமைதிப்படையினர் விடுக்கும் வேண்டுகோள் என்னும் பெயரில் சென்ற 21ந் தேதி[ 21-10-1987] வெளியான செய்தி இதுவாகும்…

“அதிகார மோகம் கொண்ட, தீய குறிக்கோள் கொண்ட எல்.டி.டி.ஈ யினர், உங்களுக்கு அமைதியையும், மாமூல் வாழ்க்கையையும் மீண்டும் நாங்கள் கொண்டுவர; பல தடைகளை ஏற்படுத்துகிறார்கள். அதன் உயர் மட்டத் தலைவர்கள் கடைப்பிடிக்கும் கொடூரமான போக்கு அவர்களது சொந்த லாபத்தைக் கருதி வரையப்பட்டதாகும். அமைதிகாக்கும் படை அவர்களை மீண்டும் அமைதிப்பணிக்குக் கொண்டுவர எடுத்த எல்லா நடவடிக்கைகளையும் அவர்கள் நிராகரித்து விட்டார்கள்.

மக்கள் பாதிப்புற்றாலும் பரவாயில்லை என்று தாங்கள் தப்புவதற்காக பொதுமக்களைக் கேடயமாக உபயோகிக்கிறார்கள்.

சாதாரண பொதுமக்களுக்கு எந்தவித காயம்கூட ஏற்படாதவாறு இந்திய அமைதிப்படையினர் மிகுந்த கவனத்துடன், எசசரிக்கையுடன் தங்களது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உங்களுக்கு ஏக்கத்தையும்,துக்கத்தையும் தவிர வேறெதையுமே அளிக்காத விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்காக உங்களதும், உங்கள் குழந்தைகளதும் எதிர்கால வாழ்க்கையினைச் சீரழிப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை. எனவே எல்.டி.டி.ஈ யின் தலைமையுடன் தொடர்பை அறுத்துக் கொண்டு நாங்கள் குறிப்பிட்டுள்ள சோதனைச் சாவடிக்கு வாருங்கள்.”  இப்படிச் செல்கிறது அந்த வானொலி அறிக்கை…

இதில் வேடிக்கை என்னவெனில்….

கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக, சிங்கள தீவிரவாத அரசின் அடக்குமுறைக்கு ஈடுகொடுத்துப் பல இளைஞர்களைப் பலிகொடுத்திருக்கும் விடுதலைப் போராளிகள், அதிகார வெறிபிடித்தவர்கள்-தீய நோக்கம் கொண்டவர்கள் என்று, இன்று இந்திய அரசினால் சித்தரிக்கப் படுவதும்; இலங்கை அரசின் அறிக்கைகளின் படி, சுமார் நூறு விடுதலைப் புலிகளே கொல்லப்பட்டிருப்பார்கள் என்று தெரிவிக்கையில், மொத்தம் 670 பேரை கொன்றுவிட்டோம்- அத்தனைபேரும் விடுதலைப் புலிகளே என வீர கோஷமிடுவதன் மூலம்- அவர்களால் கொல்லப்பட்ட   500 ற்றுக்கும் மேலானவர்கள் அப்பாவிப் பொதுமக்களாக இருக்கையில், நாங்கள் சாதாரணமக்களுக்கு எந்தக் காயமும் ஏற்படாதவாறு மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறோம் என்று சொல்வதும்….

எந்த விடுதலை போராளிகளோடு தாமும் இணைந்துகொண்டு ஆயுதங்களைச் செய்து, இந்திய மைதிப்படையினை எதிர்க்கத் துணியும் யாழ்மக்களிடம் [ தகவல்- மலேசிய தொலைக்காட்சி செய்தி] விடுதலைப் புலித்தலைமையினை உதறிவிட்டு நம்மிடம் வாருங்கள் என்று வேண்டுகோள் விடுப்பதும்… இந்திய அரசின் அறியாமையா.. அல்லது பாஸிஸ சித்தாந்தம் அதன் மீது கொஞ்சம்கொஞ்சமாகப் படிவதன் வெளிப்பாடா என்பது புரியவில்லை!

அண்மையில் கிடைத்த வெளிநாட்டுச் செய்திகளின்படி, தமிழ் மண்ணில் இந்தியப்படைகளுக்கு எதிரான மனப்பாங்கே குடிகொண்டிருப்பதாகவும், பல சிவிலியன்களது உயிரிழப்புக்கு இந்தியப்படைகளே காரணமாக அமைகின்றன என்பதும் தெரியவந்துள்ளது!

செய்திகளைத் தருவதிலும், இந்திய தகவல் நிறுவனங்களுக்கிடையே மிகப்பெரும் ‘குழறுபடிகள்’, மாறுபாடுகள் தெரிகின்றன..

இலங்கையில் உள்ள இந்தியத் தூதர் தீட்சித், யாழ்மாவட்டத்தில் பொதுமக்கள் உயிரிழப்பு பற்றிக் கேட்டதற்கு, பலர் கொல்லப்பட்டிருக்கலாம்… ஆனால் விபரம்(எண்ணிக்கை) தெரியவில்லை என்கிறார்.

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியோ, ”எந்தவொரு குடிமகனும் கொல்லப்படவே இல்லை” என்று அடித்துச் சொல்கிறார். இது போன்ற அவரது பேச்சுக்கள் வெறும் ‘போர்போஸ்’விவகாரம் என்று கைவிட்டுவிடலாமா ? என்ன !? மக்களின் உயிர்களாச்சே  …!

இந்திய வானொலிகள் கூறுவதை மட்டும் தெரிந்து கொண்டால் எப்படி? இதோ வெளி நாட்டு நிருபர்கள் தரும் தகவல்களையும் சிறிது கேட்டுப் பாருங்களேன்….

“ஏறத்தாழ எழு நூறு தமிழ்ப் பொதுமக்கள் இந்திய ராணுவத்தின் தாகுதல்களின்போது கொல்லப்பட்டதாக யாழ்ப்பாணப் பொதுமக்கள் குழு கூறியுள்ளது. உணவு,உடை,உறையுள் இன்றி மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடந்த பதினைந்து நாள்களுக்கும் மேலாக அவதியுறுகின்றனர். இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் தமிழர் விரோதப் போக்கினை வெளிப்படுத்தியதாயும் அகதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இலங்கை ராணுவத்தின் கொடூரத்தன்மையை விட இந்திய ராணுவ நடவடிக்கைகள் மிகக் கொடூரமாக அமைந்ததாக அகதிகள் கூறுவதாய் இலண்டன் பி.பி.சியின் செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.

இந்திய ராணுவம் வெற்றிகரமாக முன்னேறிச் செல்வதாகக் கூறுவது முற்றிலும் உண்மை அல்ல என்று படுவதாகவும் அந்த நிறுவன அறிக்கை கூறியிருக்கிறது.

இந்தச் செய்திகளில் இருந்து என்ன தெரிகிறது ?

தமிழர்களுக்குப் பாதுகாப்பளிப்பதாகக் கூறிக்கொண்டு தமிழ்ப் பகுதியினுள் நுழைந்த இந்திய அமைதிப்படையின் நோக்கம், தமிழர்களைக் காப்பாற்றுவது என்பதைவிடவும், விடுதலைப் போராளிகளை ஒழித்துக்கட்டுவது என்பதாகத்தான் இருக்கிறது என்று புரிகிறதல்லவா ?

இல்லையாயின் இத்தனை லட்சம் மக்களை துன்புறுத்தி, பல நூறு தமிழர்களைக் கொன்று அதன் மூலம் தான் அமைதியை ஏற்படுத்தமுடியும் என்றால்… இது விநோதமாகவல்லவா இருக்கிறது !

இந்திய மாநிலங்களில் கூட மேற்கொள்ளாத இத்தகைய கடுமையான நடவடிக்கையினை பிரதமர் ராஜீவ்காந்தி ஈழத் தமிழர் மீது எடுக்கக் காரணம் யாது… ? அதுதான் புரியாத புதிராக உள்ளது!

முன்பொரு தடவை, இலங்கையின் அதிபர் { ஜே.ஆர்} “ நான் அரசியலில் நுழைந்த காலத்தில் இன்றைய இந்தியப் பிரதமர் ‘ஜட்டி’ கூட அணியாத சிறு பையன்… அவரா எனக்கு அரசியல் பாடம் கற்றுத்தர நினைக்கிறார்” என்று குறிப்பிட்டிருந்ததைப் போல்; இலங்கை அதிபரின் அரசியல் முதிர்ச்சிக்கு முன்னால், இந்தியப் பிரதமரின் அரசியல் விவேகமும், மதிநுட்பமும் வெறும் ‘ஜட்டிப் பையத்தனம்’ தானா ?

இந் நிலை நீடிக்குமாயின்… நேரு வின் காலத்தில் இருந்தே இந்தியப் பேரரசு கட்டிக்காத்துவந்த பெருமையும், மதிப்பும் வெகுவிரைவில் சிறுபிள்ளைத் தனமாகிச் சிரிப்புக்கிடமாகி விடும்.

இந்திய அறிஞர்களும், நீதி உணர்ந்த பொதுமக்களும் சற்று கவனிப்பார்களாக!

****************************************************************************************************************