ஈழத்தில் மாட்டிக்கொண்ட இந்தியப் பேரரசு……[12/10/1987 ‘தமிழ் நேசன்’(மலேசியா) இதழில் வெளியானது.

ஈழத்து நிகழ்ச்சிகள்:-                              “சர்வசித்தன்”

[ 1987 அக்டோபர் 09ல் எழுதப்பட்டு 12-10-1987 ’தமிழ் நேசன்’(மலேசியா) இதழில் வெளியான கட்டுரை]

ஈழத்தில் மாட்டிக்கொண்ட இந்தியப் பேரரசு!

சுமக்கப் போவது, பழியையா ? பாவத்தையா?

[இந்த வருட(1987) ஆகஸ்ட் மாத ஆரம்பம், ஈழத்தமிழர்கள் மத்தியில் சிறிதளவு நிம்மதியையும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையினையும் விதைத்தது என்றால்; இம்மாத (அக்டோபர் ’87) ஆரம்பமோ அதற்கு முற்றிலும் மாறாக அமைந்து விட்டிருக்கிறது!

தமிழ்ப் போராளிகளின் தற்கொலையும் அதனைத் தொடர்ந்து சினமுற்ற தமிழர்களின் வன் செயல்களும்- இந்தியப் படைகளின் நடவடிகைகளும் என;

நாம் கேள்விப்படும் எந்தச் செய்தியும் மனதுக்கு ஆறுதல் தருவதாய், சமாதானம் அந்த நாட்டில் துளிர்க்கும் என்பதற்கு உத்தரவாதம் அளிப்பவையாக அமையவில்லை என்பது, வேதனையோடு ஒப்புக்கொள்ளவேண்டிய உண்மையாகி விட்டது!]

சில மாதங்களுக்கு முன்னர்……

ஈழத் தமிழர்கள் மீது, இலங்கை ராணுவம் மிக மோசமான ‘இன அழிப்பினை’ அரங்கேற்றிக் கொண்டிருந்த சமயம்……..  பல நூறு அப்பாவித் தமிழர்கள்; பெண்களும் குழந்தைகளுமாய் கொலைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த வேளையில்…..

இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி, இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கு ஓர் மனிதாபிமான வேண்டுகோளினை விடுத்திருந்தார்….

‘வன் செயல்களை அடக்குவதற்காக அப்பாவித் தமிழ் மக்களைக் கொல்லாதீர்கள். இந்தியா அதனைப் பார்த்துக் கொண்டு ‘சும்மா ’ இருக்காது. எமது இந்தியப் பேரரசின் கீழ் ஒரு மாநிலமாக இருக்கும் தமிழகத்தில் வாழும் ஆறு கோடித் தமிழர்களது உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டி நேரிடலாம்…’ என்னும் தொனியில்,ஒரு வகையிலான எச்சரிக்கையை; ’இனிப்புத்தடவி மருந்து கொடுப்பது போல்’ அன்று இந்தியா- இலங்கைக்கு விடுத்திருந்தது!

அதற்குப் பதில் கூறுமாப் போன்று, பௌத்த தர்மத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறும் இலங்கையின் அதிபர்; “ இந்தியப் பிரதமர் தமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு வழி காணட்டும், அதன் பின்னர் அண்டை நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து அவர் ஆலோசனை கூறுவதுதான் விவேகமானது!” என்னும் சாயலில் தமது அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.

மேற்சொன்ன சம்பவங்கள் இடம் பெற்ற சில மாதங்களின் பின்னர், இதே ஜே.ஆரும்; அதே ராஜீவ் காந்தியும், ஈழத் தமிழர்களது விடயத்தில் ஓர் உடன்பாட்டுக்கு வந்தார்கள். அந் நேரம், ராஜீவ் காந்தி; இந்தியாவில் நிலவிவந்த உள் நாட்டுப் பிரச்னைகளைத் தீர்த்துவிட்டா வந்தார்?’ என்று கேட்டுவிடாதீர்கள்!

சொல்லப் போனால், அப்போது பஞ்சாப்பில் நடைபெற்றுக் கொண்டிருந்த பெரும்பானமை மாநில அரசினைக் கலைத்துவிட்டும்; மத்திய அரசில் அவரது நெருங்கிய சகாவாக இருந்த வி.பி.சிங்கினால் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையிலும் இருந்த இந்தியப் பிரதமரோடுதான் இலங்கை அதிபர் சமாதான உடன் பாட்டை ஏற்படுத்திக் கொண்டார்.

அரசியலில் உண்மையான நண்பனும் கிடையாது- விரோதியும் கிடையாது என்பார்கள்!  எனவே, வசை பாடியவர்களையே புகழ்ந்து பாடும் காலம் வரும்போது, இவற்றையெல்லாம் நாம் தூண்டித்துருவி ஆராய்வது உசிதமானதல்ல!

ஒருவகையில் இலங்கைப் படைகளின் குண்டுகளில் இருந்து ஈழத்தமிழர்களை இந்த ஒப்பந்தம் காப்பாற்றியதை நாம் பெருந்தன்மையோடு ஒப்புக்கொண்டேயாக வேண்டும். அது மட்டுமின்றிச் சமாதானம் என்று யார் கூறினாலும் அதற்குக் கட்டுப்பட வேண்டியது ‘மனிதப்பண்பு’. ஏனெனில் சமாதானத்தின் மூலமாக மட்டுமே வாழ்வு சிறக்கும் என்பதால், இரு அரசுகளும் செய்துகொண்ட உடன்படிக்கையின் பின்னணி எதுவாக இருப்பினும் அதனை ‘மனிதர்கள்’ ஏற்றுக்கொண்டார்கள்.

விடுதலைப் புலிகளும் மனிதர்களே ஆதலால் அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டார்கள்.

இந்த மனிதத்துவத்தின்கீழ் ‘இனமானம்’ என்னும் ஒன்றும் இருக்கிறதல்லவா?. அந்த இனமானம்-தனி நாட்டுக் கொள்கைக்காக ஆயுதம் ஏந்திய, விடுதலைப் புலிகளை சற்று இடக்குப் பண்ண வைத்தது. என்றாலும், செய்து கொண்ட ஒப்பந்தத்தையாவது முறைப்படி இந்திய அரசும்- இலங்கை அரசும் நிறைவேற்றட்டும் என்று, தம்மிடம் இருந்த ஆயுதங்களில் பெரும்பகுதியினை ஒப்படைத்து- சமாதானத்துக்குப் பச்சைக் கொடியும் காட்டியது விடுதலைப்புலிகளின் இயக்கம்.

ஒப்பந்தம் அமலாகிய விதம்?:-

ஈழத் தமிழர்களின் அரசியல், சமூக விடுதலைக்காகப் போராடியவர்கள் எவருமே பங்கு பற்றாத- அண்டை நாடு ஒன்றோடு இலங்கை அரசு சமரச உடன்படிக்கையினை ஏற்படுத்தி இருந்தாலும், அதனை மதிக்கும் பண்பு, விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எல்லாத் தமிழ் இயக்கங்களிடையேயும் உருவாகியிருந்தது. எனவே, தமிழர்களது பாதுகாப்பினையும்-அரசியல் நிலைத் தன்மையினையும் மூன்றாம் தரப்பான இந்திய அரசு பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும் என்னும் எதிர்பார்ப்பும்- அவ்வாறு அது பொறுப்பேற்கும் என்ற நம்பிக்கையும் தமிழர்கள் மத்தியில் இருந்தது.

ஆனால், நடந்தது என்ன ?

சமாதானத்தை நிலை  நாட்டுவதற்காக இலங்கைக்குச் சென்ற அமைதிப் படையினரில் பெருமளவினர், தமிழர்கள் மட்டும் மிகமிக அதிக எண்ணிக்கையில் வாழ்கின்ற வடபகுதியில், அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில்; தங்கள் முகாம்களை அமைத்தார்கள்!

அங்கிருந்தவாறே யாழ்ப்பாணத்து இளம் பெண்கள் எவ்வாறு சேலை அணிந்துகொள்ள வேண்டும் என்று அக்கறை காட்டினார்களோ அந்தளவுக்கு,கிழக்குப் பகுதியில், சிங்கள மக்களை மீண்டும் குடியமர்த்தும் பணியில், இலங்கை அரசு மேற்கொண்ட சில நடவடிக்கைகளில் பொதிந்து கிடந்த ‘அரசியலை’ ஆராயத் தவறிவிட்டதாகவே படுகிறது!

இதுகுறித்து, விடுதலைப்புலிகள் இயக்கம் பலதடவைகள், இந்திய அமைதிப் படையிடமும், இலங்கை அரசிடமும் கூறியிருந்தும், கிழக்கில் வாழும் தமிழர் பிரதேசங்களைப் பாதுகாப்பதில் அமைதிப்படை மிகமிகத் தாமதமாகவே நடவடிக்கைகளில் இறங்கியது.

மற்றொருபுறம், பூசா ராணுவ முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரக் கணக்கானவர்களில் பலர் விடுவிக்கப்படுவதிலும் இலங்கை அரசு தாமதம் காட்டியது.

இடைகால நிர்வாகம் ஒன்றினை ஏற்படுத்துவதில் உருவான தேக்க நிலை, யாழ்ப்பாணம் உட்படப் பல பகுதிகளில் சமூக விரோத சக்திகளுக்கு வாய்ப்பினை அளித்தது.

இத்தனையும் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில்; யாழ் மண்ணைச் சிங்கள ராணுவம் சுடுகாடக்குவதிலிருந்து மட்டுமல்ல- இன்று இந்தியப் பிரதமர் ‘சமாதானம்’ என்னும் பெயரில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வகை செய்யும் அளவுக்கு- இலங்கைப் படைகளோடு போரிட்டு வந்த விடுதலைப் புலிகளைப் பழிவாங்கவெனச் சில போட்டிக் குழுக்கள் எடுத்த முற்சிகளை; இந்திய அரசு முளையிலேயே கிள்ளி எறியாது காலந்தாழ்த்தியதும்; பிரச்னையைத் திசை திருப்பிவிடப் போதுமானவையாக இருந்தன!

இந்தச் சந்தர்ப்பத்தில் தான், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் செயலாளர் திலீபன் இந்திய அரசிடம், சில அரசியல் நெறிமுறைகளை வலியுறுத்தி, ’சாகும் வரை’ உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார்.

அவரோடு வேறு சில போராளிகளும் ‘அஹிம்சை’ப் போரில் குதித்தார்கள்.

எந்தவித உணவும் நீரும் இன்றி மனித உயிர் எத்தனை நாளைக்குத் தாக்குப்பிடிக்கும் என்பது இந்திய அரசுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை! அப்படியிருந்தும், பன்னிரெண்டு நாட்களின்பின் உயிர் நீத்த திலீபன்; வீணாக வீம்புக்காக இறந்ததாய் அறிக்கை விடுத்தது ‘சமாதான அரசு’!

அதுதான் போகட்டும் என்றால்…. அதன் பின்னர் நிகழ்ந்தவைகளோ தமிழர்களின் சினத்தை மேலும் தூண்டிவிடுபவையாகவே அமைந்திருந்தன.

நிதானம்- ஒருவருக்கு மட்டும் சொந்தமானதல்ல:

இந்த மாத(அக்டோபர் 1987) ஆரம்பத்தில் சுமார் பதினேழு விடுதலைப் போராளிகள் அடங்கிய படகு ஒன்றினை இலங்கைப் படை வழிமறித்து, அதில் இருந்த அனைவரையும் கைது செய்தது. அவர்கள் ஆயுதங்களைக் கடத்த முயன்றார்கள் எனக் குற்றம்சாட்டி விசாரணைக்காக அவர்களைக் கொழும்புக்குக் கொண்டுசெல்ல இலங்கை இராணுவம் முயன்ற சமயத்தில்- அவ்வாறு பிடிபட்ட தனது இயக்கத்தினரை இந்திய அமைதிப்படை பொறுப்பேற்க வேண்டும் அல்லது விடுவிக்க வேண்டும் என விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அந்தப் போராளிகள் அனைவரும் ‘சயனைட்’ அருந்தி அதில் பன்னிருவர் மாண்டதும்….

இந்திய அமைதிப்படை இலங்கை அரசின் கைப்பொம்மையாகச் செயல்படுகிறதோ என்னும் சந்தேகத்தை தமிழர்களிடையே ஏற்படுத்தியிருந்தது!

அதே சமயம், உயிரிழந்த தமது சகாக்களின் மரணத்துக்குப் பழிவாங்கும் வகையில் புலிகள், தாம் பிடித்து வைத்திருந்த எட்டுச் சிங்களப் படையினரைக் கொன்று, யாழ் பஸ் நிலையமொன்றில் வீசிவிட்டிருந்தனர்.

இது பயங்கரவதச் செயல் எனக் கண்டிக்கப்பட வேண்டியதே!

ஆனால், அவ்வாறு உயிரிழந்த எட்டுப் படையினருக்காக மனமிரங்கி அறிக்கை வெளியிட்ட இந்தியா; அதற்குக் காரணமான பன்னிரு தமிழ்ப் போராளிகளின் அநியாயச் சாவுக்கு   வருத்தம் தெரிவிக்கவில்லை.

மாறாக,அவர்கள் அவசரப்பட்டு விட்டார்கள் என்று ஓர் அறிக்கை-அதுவும் போராளிகளைத் தாக்கி வெளியாகியிருந்தது!

இத்தனை சம்பவங்களும்- ஏற்கனவே, ஆயுதம் மூலம் நியாயம் பேசினால்தான் சிலருக்குப் புரியும் போலும் என்னும் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு-அதற்குப் பழக்கப் பட்டுப்போன புலிகளை- மீண்டும் அதன் துணையை நாடத் தூண்டியிருக்கவேண்டும் என்றே படுகிறது!

கிழக்கிலங்கையில்,ஆயிரக்கணக்கில் குடியமர்த்தப்பட்டிருந்த சிங்களர்களை விரட்டுவதன் மூலம் மெத்தனப் போக்கினைக் கடைபிடிக்கும் அமைதிப் படைக்கு ‘வேலை கொடுக்க’ நினைத்தார்களோ என்னவோ…….. நூற்றுக்கணக்கில் சிங்களர்களைப் பழிவாங்கும் அளவுக்கு அவர்களது சினம் பெருகிவிட்டது!

இப்போது, அமைதி என்பது இந்திய அரசினால்கூட ஏற்படுத்த இயலாத ஒன்றா  என்று அவநம்பிக்கை கொள்ள வைக்கும் அளவுக்கு நிலமை மாறிக்கொண்டிருக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில்….. ‘நிதானம்’ விடுதலைப் புலிகளுக்கு மட்டும் அல்ல, இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் தேவையான ஒன்றே.

ஒருவகையில்….. சமரசம் செய்யும் எண்ணத்தோடு அங்கு சென்றுள்ள இந்தியா மிகமிக நிதானத்தோடு செயல்பட வேண்டிய தருணம் இது.

அது எடுக்கவிருக்கும் அடுத்த நடவடிக்கையில் இருந்துதான், அது சுமக்கப்போவது பழியையா இல்லைப் பாவத்தையா… ? இல்லை ‘மனிதாபிமான அரசு’ என்னும் பெயரையா…  ? என்பது புரிந்துபோகும்!

****************************************************************************************************************.