மனித உரிமைகளை மதிக்காத நாடு…….. [25-06-2010 ஈழநேசனில் மீள் பிரசுரமான கட்டுரை]

[1987 ஜூன் 08 ல்; மலேசியாவின் “தினமணி” நாளிதழில் வெளியான கட்டுரை]

ஈழத்து நிகழ்ச்சிகள்:-சர்வசித்தன்”

மனித உரிமைகளை மதிக்காத நாடு, பிரதேச உரிமை பற்றிப் பேசுவது விநோதம்!

மூன்று மாத காலங்களுக்கு முன்னர், மார்ச் (1987) 12ம் தேதி, ஜெனீவாவில் நடைபெற்ற ஐ,நா வின் மனித உரிமைகளுக்கான கூட்டத்தில்; ‘இலங்கை அரசு, இலங்கைத் தமிழர் விடயத்தில் மனித உரிமைகளை மீறிச் செயல்படுகிறது’ என்பதை உறுதிசெய்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம், இந்தியாவின் தூண்டுதலினால், ஆர்ஜென்டீனாவால் கொண்டுவரப் பட்டதாயும்; அதனைக் கண்டு சீற்றமடைந்த இலங்கை அதிபர், “உங்கள் நாட்டு மனித உரிமைகளைப் பற்றி முதலில் நீங்கள் கவனியுங்கள், அதற்கப்புறம் அண்டை நாடுகள் குறித்துப் பேசலாம்” என்று ‘சூடு’ கொடுத்ததாகவும் செய்தி வெளியாகியிருந்தது!

இலங்கையோ அல்லது வேறு எந்த நாடோ- அவை மனித உரிமைகளை மீறும் அநாகரிகச் செயலைப் புரிந்தால் அது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும்.

உலக வல்லரசாக இருந்தாலென்ன , உள்ளங் கை அளவுள்ள குட்டி நாடாக இருந்தாலென்ன இதில் வேறுபாடு கிடையாது.

மனிதர்களது கௌரவம், உரிமை, சுதந்திரம் என்பன, இந்த மண்ணில் அனைவருக்கும் பொதுவான ஒன்றே என்னும் அடிப்படையில் வைத்தே தீர்மானிக்கப்படவேண்டும்.

இந்த வகையில், இலங்கையும், மனித உரிமைகளை மீறிப் பல நடவடிக்கைகளைத் தனது ராணுவத்தின் உதவியோடு செய்திருக்கிறது, செய்தும் வருகிறது என்பதை உலக நாடுகள் சில, அங்கீகாரம் செய்த நாள் தான் மார்ச் 12,1987!

மற்றும்படி, இது போன்ற மனித உரிமை மீறல்கள் அங்கு அதற்கு முன்பிருந்தே சில வருட காலமாக இடம்பெற்று வரும் ‘சாதாரணமான’ சங்கதிகள் தாம்!

அதுசரி……இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றி இப்போது எழுதவேண்டிய தேவை எதனால் ஏற்பட்டது ? அதுதான் உலகறிந்த விடயமாயிற்றே ?!   என்பீர்கள்…

ஆனால்….

இப்போது, இந்திய அரசின் விமானப் படை, யாழ்ப்பாண மக்களுக்காக மனிதாபிமான முறையில் மேற்கொண்ட நடவடிக்கையினைத் தனது நாட்டின் பிரதேச உரிமையினை மீறும் செயல் என்று, ஓலமிடும் ஸ்ரீலங்கா அரசு…. ; அந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல  லட்சம் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவது எந்த வகையில் நியாயம் ?

தனது பிரதேச உரிமை பற்றிப் பேசு முன்பாக…, மனித உரிமைகள் பற்றி யோசித்துப் பார்த்ததா அந் நாட்டு அரசு?

மனிதர்கள் வாழ்வது தானே பிரதேசம்.. அந்தப் பிரதேசத்துக்கான உரிமை, அந்த மனிதர்களுக்கான உரிமை அல்லவா ?

ஸ்ரீலங்காவின் கோபம் சற்று புதுமையாகத்தான் படுகிறது!

‘காடாயிருந்தாலும்; நாடாயிருந்தாலும்; மேடாயிருந்தாலும் ; பள்ளமாயிருந்தாலும் அங்கு வாழும் மக்களைக் கொண்டல்லவா அந்தப் பிரதேசத்தின் பண்பும், உரிமையும் பேசப்படுகிறது !

அவ்வாறிருக்கையில்….. தமிழ்ப் பகுதிகளில் வாழும் மக்களது தனி மனித மற்றும் ஜீவாதார உரிமைகளையே மதிக்காத நாடு- அங்கு முற்றுமுழுதான மனிதாபிமான எண்ணத்தோடு உணவுப் பொதிகளையும், மருந்துகளையும்  வான்வழியாகப் போட்டுவிட்டு வந்திருக்கும் இந்திய அரசினைக் கண்டிப்பது எந்த வகையில் நியாயம்  என்பதுதான் புரியவில்லை!

கவலை’ப் படும் நாடுகள்:-

செத்துக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவுப் பண்டங்களை வழங்க விடுமாறு ஏற்கனவே இந்தியா; இலங்கையிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. சில படகுகளில் சுமார் நாற்பது தொன் உணவுப் பொருட்களோடு, பாக்கு நீரிணையைக் கடந்து இலங்கைக்குச் சென்று, செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளின் உதவியோடு அவற்றைப் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு வழங்கும்படி கேட்டது!

ஆனால், இலங்கை அரசு அதனை மறுத்துவிட- மறு நாள் அதே பொருட்கள் விமானப் படையின் உதவியுடன், யாழ் மண்னில் போடப்பட்டன.

ஆம், முதல் நாள், மனிதாபிமான அடிப்படையில் இந்திய அரசினால் விடுக்கப்பட்ட ஓர் கோரிக்கையினைத் தட்டிக் கழித்து விட்ட ஸ்ரீலங்கா,  மறுநாள் அதே உதவியினைத் தமிழ்ப் பகுதிகளில் விமானமூலம் அனுப்பிவைத்த இந்தியாவின் செயல் அத்துமீறல் சம்பவம் என்று வர்ணித்தது.

எட்டு லட்சம் தமிழர்களது மனிதாபிமான உரிமைகளை மதியாது அவர்களைப் பட்டினிபோட்டுச் சாகடிப்பது மட்டுமல்லாமல், குண்டுகளை வீசியும் அழிப்பது நியாயம் என்று வாதிடும் ஸ்ரீலங்கா; உணவுப் பொதிகளை அந்த மக்களுக்கு வழங்குவது உரிமை மீறும் செயல் என்கிறது!

இது எப்படி இருக்கிறது, பார்த்தீர்களா?

‘தட்டிக் கேட்ட ஆளில்லாவிட்டால், தம்பி அண்டப் பிரசண்டன்’ என்பார்களே ; இதுவரை ஸ்ரீலங்காத் தம்பியின் அடாவடிதனங்களை, இந்திய அண்ணன் தட்டிக் கேட்காது காலன் தாழ்த்தியதால் வந்த வினை இது!

நடந்தது தான் போகட்டும்… ஆனால்…. இந்தியாவின் இந்தச் செயலைக் கண்டிப்பதுபோன்று அறிக்கை வெளியிடும் நாடுகள் அல்லது அந்  நாடுகளின் பத்திரிகைகளைப் பாருங்கள்……….

தென்னாபிரிக்க இன வெறி அரசுக்கு முண்டுகொடுக்கும் திருமதி தாடசரின் பிரிட்டன்; இந் நாடு வடக்கு அயர்லாந்தின் விடுதலைப் போராளிகளால் நூறு வருடங்களாக நிம்மதியற்றிருக்கிறது ! இதனால் தானோ என்னவோ, விடுதலைப் போராட்டம், போராளிகள் என்றாலே ‘அலர்ஜி’ உண்டாகிவிடுகிறது போலும்! அதே சமயத்தில் இது, இந்தியாவில் போராடும் சீக்கியர்களுக்கு ஓரளவு ஆதரவாகச் செயல்படுகிறது. இந் நாட்டின் பத்திரிகைகள் சிலவும், இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதை ஆதரிக்கவில்லை!

மற்றொரு நாடு அமெரிக்கா!- இது தன்னை ஆதரிக்காத நாடுகளில், தனது ரகசிய ஒற்றர்களை  அனுப்பி வைப்பதன் வழியாக, மிரட்டல்கள், அராஜக நடவடிக்கைகள், முடிந்தால் ஆட்சிக் கவிழ்ப்புவரை நடாத்துவதில் கைதேர்ந்த நாடு!

உலக வல்லரசுகளில் ஒன்று என்பதை விடவும், குட்டி நாடுகளை வளைத்துப் பிடித்து, அவற்றின் மூலமாகத் தானே உலகில் முதன்மை பெற்ற நாடாக இருக்கவேண்டும் என்பதில் கருத்தோடிருக்கும் நாடு இதுவாகும்!

இலங்கை அரசு, கிழக்கிலங்கைத் துறைமுகமான திருகோணமலையை இந்த நாட்டுக்குத் தாரை வார்க்கத் தயாராக இருப்பதாகப் பேசப்படுகிறது! இதன் தத்துப் பிள்ளை நாடான இஸ்ரேலின் ஆதரவினையும் இலங்கை பெற்றுவருவதும் குறிப்பிடத் தக்கதே.

எனவே, இந்தியாவின் எந்த நடவடிக்கையும் இலங்கையைச் சிறிதும் பாதித்துவிடக் கூடாது என்பதில் இந் நாடு அக்கறை செலுத்தி வருகிறது.

இது, இந்தியாவின் அண்மைய நடவடிக்கையினைக் கண்டிக்காவிடினும், ‘மதில் மேல் பூனையாய்’ ஒப்புக்கு ‘வருத்தம்’ தெரிவித்திருக்கிறது.

அடுத்தது, பாகிஸ்தான். இந் நாட்டின் விமானிகள் இலங்கையின் போர் விமானங்களை ஓட்டுவதாகவும்; அவர்களது உதவியோடுதான் தமிழர்களது வாழ்விடங்கள் மீது குண்டுகள் வீசப்படுகின்றன என்றும் பரவலாகச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இலங்கைப் படையினர், பாக்கிஸ்தானில் பயிற்சி பெற்றதை இலங்கை அரசே ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவுக்குத் தொல்லை தரும் எவரையும் ஆதரிப்பதன் மூலமாக, இந்தியாவை அரசியல் ரீதியாகப் பழிவாங்கக் காத்துக்கொண்டிருக்கும் நாடு இது…. எனவே, இது இந்தியாவின் செயலைக் கண்டிக்காது விட்டால்தான் ஆச்சரியமாய் இருந்திருக்கும்! ஆனால், அதற்கு இடந்தராமல், பாகிஸ்தான் தனது கண்டனத்தைத் தெரிவித்து விட்டது!

இந் நிலையில், இது ஐ.நா வரை எடுத்துச் செல்லப்படலாம் என்னும், ஆருடங்களும் உலாவருகின்றன.

அவ்வாறு எடுத்துச் செல்லப்படின் என்ன நடக்கும் ?

ஐ.நா ‘தலையாட்டிப் பொம்மை’யா?

1945 ஆம் ஆண்டின் இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து உருவாக்கப் பட்ட ஐ.நா சபை; உலக நாடுகளிடையே சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும், மனித உரிமைகளையும் நிலை நிறுத்தவெனத் தனது பணிகளை  மேற்கொள்கிறது..

நாற்பது வருடங்களுக்கும் மேலாக, இது உலகப் பிரச்னைகள் பலவற்றையும் கூடிப்பேசித் தீர்மானித்து, அவற்றில் ஓரளவு வெற்றிகளை எட்டியுமிருக்கிறது.

அதே சமயம், குறிப்பிட்ட நாலைந்து நாடுகளின் ரத்து அதிகாரத்தால் இதன் பணி முழுமையாக வெற்றியடைவதில் பின் தள்ளப்பட்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை.

தீவிர வலதுசாரி நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளது பிரேரணைகளுக்கு எதிராகத் தீவிர இடதுசாரி நாடான ரஷ்யா தனது ரத்து அதிகாரத்தின் மூலம்; தன்னை ஆதரிக்கும் அல்லது தன்னால் ஆதரவு வழங்கப்படும் நாடுகளின் மீது நடவடிகை எடுப்பதைத் தடை செய்திருக்கிறது.

அதே போன்று, அமெரிக்காவும் தனது அணியில் உள்ள நாடுகள் விடயத்தில் தனது ‘தலையை’ நுழைத்துக் கொள்வது இயல்பாகிவிட்டது!

இதனால், உலக அமைதிகாக ஏற்படுத்தப்பட்ட ஐ.நா, ஒரு குறிப்பிட்ட அளவே இந்தப் பாதையில் பயணிக்க முடிந்திருக்கிறது. சொல்லப்போனால், முற்றுமுழுதாக நடு நிலை வகிக்கும் நாடுகள் சம்பந்தப்பட்டவற்றில் இதன் அதிகாரம்- நடவடிக்கைகள் என்பன செல்லுபடியாகும் என்பதுதான் உண்மை.

எனவே, இலங்கை- இந்தியா; இவ்விரு நாடுகளையும் பொறுத்தவரையில், இலங்கையை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும், இந்தியாவை ரஷ்யாவும் ஆதரிக்கும் நிலை இருப்பதால், இந்தப் பிரச்னை ஐ,நா வரை கொண்டு செல்லப்படும் என்பது சந்தேகமே!

ஆனால்,மனித உரிமைகள் குறித்து ஐ.நா வலியுறுத்தும் வாய்ப்புகள் உள்ளன. நாடுகளின் எல்லைகள், அவற்றின் உரிமைகள் தொடர்பான விடயங்களில் காணப்படாத அல்லது காணமுடியாத தீர்வுகளை விடவும், மனித உரிமைகள் குறித்தவற்றில் அது தீர்வினை எட்டமுடியும் என்பதால், இலங்கையின் இனம் சார் பிரச்னையை, மனிதாபிமானத்துடன் ஐ.நா அணுகுமாயின் விரைவில் அதற்கொரு தீர்வு ஏற்படலாம்!

அதனை விட்டுவிட்டு, இலங்கை-இந்திய உரிமைகள் தொடர்பாக அது கவனம் செலுத்துமெனில், நோயை உணராது வைத்தியம் செய்யும் மருத்துவரின் நிலையை ஒத்ததாய் முடியும்.

இந்தியாவின் பணி இத்தனையுந்தானா?

யாழ்ப்பாண மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள் என்பதற்காக, இலங்கை அரசின் சொல்லையும் மீறி, இந்தியா 25 தொன் உணவு,எரிபொருள் மற்றும் மருந்துப் பொதிகளை அளித்துவிட்டு வந்துவிட்டது.

துன்புற்றிருக்கும் தமிழர்களுக்கு இந்தச் சிறு உதவி போதுமானதா? ஏற்கனவே, இந்தியத் தரப்பில் கூறப்பட்டது போன்று 800 தொன் அரிசி; 100 தொன் சீனி ; 50 தொன் பருப்பு என்பனவற்றோடு அங்கு மருத்துவ உதவியின்றித் தவிக்கும் மக்களுக்குச் சேவையாற்ற டாகடர்கள் என; புறப்பட்ட பயணத்தின் நூற்றில் ஒரு பங்குகூட இன்று யாழ்மக்களைச் சென்றடையவில்லை.

எனவே, இந்தியாவின் இந்த மனிதாபிமான உதவி முற்றுப்பெற்று விட்டதாகவோ, இனி மேலும் தொடர வேண்டிய அவசியமற்றதாகவோ தெரியவில்லை.

இந்தியாவும்-இலங்கையும் தங்கள் எல்லை உரிமைகள், இறைமை, சுதந்திரம் போன்றவற்றைப் பேசுவதென்பது வேறு; இந்த ‘வாய்ச் சண்டை’யில் அக்கரையில் இலங்கை அரசினால் கைவிடப்பட்ட நிலையில் பரிதவிக்கும் தமிழர்களது வாழ்வாதார உரிமைகளைப் புறக்கணிப்பது என்பது வேறு; என்பதை இவ்விரு நாடுகளில் தலைவர்களும் உணர்ந்தே இருப்பார்கள்!

வெறும் அரசியல் “ஸ்டண்ட்”டுக்காக, இந்தியா, ஒரு சில ‘டன்’ உணவுப்பொதிகளை விமான மூலம் வீசிவிட்டு ஓய்ந்துவிட்டது என்னும் அவப் பெயர் இந்தியாவுக்கு ஏற்படாமலிருக்கும்  அதே சமயம், அண்டை நாடான இந்தியா எமது மக்களான தமிழர்களுக்கு உணவு வழங்கும் நிலையை உருவாக்கிவிட்டோமே என்னும் வெட்க உணர்வு, சிங்கள் பௌத்த அரசுக்கு உருவாக வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்கு, அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண மக்களுக்கு, சிங்கள அரசு கடந்த ஆறு மாதங்களாக தடை செய்திருந்த உணவு,எரிபொருள்,மருந்து, மின் விநியோகம் என்பன அனைத்தும் அவர்களுக்குக் கிடைக்க வகை செய்வதுடன், அம் மக்களைத் துவம்சம் செய்துவந்த  படைகள் மீட்டுக்கொள்ளப்படவும் வேண்டும்!

இதற்கான உரிய முயற்சிகளில் இந்தியா அக்கறை செலுத்த வேண்டும் என்பதோடு; இலங்கை அரசுடன் நியாயமான வழிகளில் பேச்சுக்களை நடாத்தி தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்கவும் வேண்டும்.

ஆகையால், இந்தியா இப்போது எடுத்த நடவடிக்கை; இந்தியப் பேரரசு இலங்கைத் தமிழர்களை முற்றாகக் கைவிட்டுவிடவில்லை, விட்டுவிடவும் மாட்டாது என்பதைச் சிங்கள அரசியல் தலைமைக்கு உணர்த்தும் ‘சோற்றுப் பருக்கை’ எனலாமா?

இந்தப் பருக்கையினைப் பதம் பார்த்து அறியும் ஆற்றல் இலங்கைக்கு இருக்குமாயின்; பானையில் இருப்பது என்ன என்பது அதற்குப் புரிந்துவிடும்.

அதே போன்று, தமிழர்களுக்கு, இந்தியா இப்போது அளித்த உதவி, பருக்கையே அன்றி வேறில்லை1

அடங்காப் பசியுடன் காத்திருக்கும் ஈழத் தமிழர்களுக்கு பானை நிறைந்த சோற்றினை வழங்குவதும் இந்தியாவின் கைகளில்தான் உள்ளது.

பானை சோறு எப்போது கிட்டும், ஈழத் தமிழரின்  ”விடுதலை”ப் பசி என்று ஆறும் ?

( ஏறத்தாழ 23 வருடங்களுக்கு முன், இலங்கை அரசு; யாழ் மக்களைப் பட்டினி போட்டுப் பணிய வைக்கும் மனிதாபிமானம் அற்ற செயலைப் புரிந்த சமயத்தில், ராஜீவ் காந்தியின் தலைமையில் இருந்த இந்திய அரசு, அதிரடியாகச் செயல்பட்டு விமான மூலம் உணவு வழங்கிய சமயத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரை, மலேசியாவின்  நாளிதழ்களில் ஒன்றான ‘தினமணி’யில் வெளியாகியிருந்தது.

கால் நூற்றாண்டின் பின், ஏதோவொரு வகையில், இன்று ஈழத்தின் தமிழ்மக்கள் தொடர்பான ’அக்கறை’ இந்திய அரசுக்கும்,அதன் மாநில அரசான தமிழகத்துக்கும் ஏற்பட்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில், இக் கட்டுரை மூலம் வாசகர்களை அக்காலச் சூழலுக்கு இட்டுச் செல்லலாம் என நம்புகிறோம்.)