திலீபன், கலைஞர் ; வீரவன்ச….! [11-07-2010 ஈழ நேசனில் வெளியான கட்டுரை]

திலீபன்; ‘கலைஞர்’ ; வீரவன்ச !

சர்வசித்தன்”

ஈழத் தமிழர்கள் தொடர்பில், கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் மேற் கொள்ளப்பட்ட/படும் ‘சாகும்வரை உண்ணா நோன்பு’ போராட்டங்கள் மூன்று ஆகும். இதில் முதலாவதாகவும் இதயத் தூய்மையுடனும் ஆரம்பிக்கப்பட்டு அதின் மூலம் உயிர் நீத்த பெருமை திலீபனையே சாரும்.

இவரது போராட்டத்தின் பின்னணியில், ராஜீவ் காந்தி தலைமையிலான அன்றைய இந்திய அரசும்- இலங்கையும் ;தமிழர் உரிமைகள் குறித்துச் செய்துகொண்ட ‘சமாதான ஒப்பந்தத்தை’ உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும் என்னும் கோரிக்கை இருந்தது.

இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனமான தமிழர்களது, உரிமைகள்;  ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவிலாவது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தித் தனது போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், அஹிம்சையால் சுதந்திரம் பெற்றதாகப் பெருமை பேசும் இந்திய அரசினாலேயே ‘கண்டுகொள்ளப் படாமல்’ உயிர் இழக்க நேர்ந்தது.

அதனை அடுத்து இரண்டாவதாக எமது மனக் கண்களில் நிழலாடுவது, தமிழகத்தின் முதல்வர் ‘கலைஞர்’ நிகழ்த்திய ஐந்து மணிநேர ‘மெரீனாக்’ கடற்கரைப் போராட்டம்.

காற்றோட்டம் நிறைந்த கடற்கரையிலேயே, குளிரூட்டிகள் சகிதம் ‘உலகப் புகழ்’மிக்க போராட்டத்தை நடாத்தியதன் மூலம் அவர் ‘முள்ளிவாய்க்கால் படு கொலைகளை’ தடுத்து நிறுத்த முடிந்ததா ? என்பது இன்றுவரை ‘மில்லியன் டாலர்’ கேள்வியாகவே தொக்கி நிற்கிறது.

இப்போது மூன்றாவதாக இடம் பெற்றிருப்பது, இலங்கை அமைச்சர் ஒருவரின் ‘போராட்டம்’.

சென்ற வருடம், நிகழ்ந்துவிட்ட மனிதப் படுகொலைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து, அதன் உண்மை நிலையினை உலகிற்குத் தெரிவிப்பதற்கென, ஐ.நா வின் தலைமைத்துவத்தால் அனுப்பிவைக்கப் படுவதுதான் இந்த மூவர் குழு.

இதனைக் கலைக்க வேண்டும், இல்லையேல் ‘ சாகும்வரை எனது போராட்டம் தொடரும், நான் இறந்து விட்டால் சிங்களத்தின் மைந்தர்கள் இதனைத் தொடர்வார்கள்’ என்று சூளுரைத்துவிட்டுக் களத்தில் குதித்திருக்கிறார் விமல் வீரவன்ச.

இந்த மூவரின் ‘போராட்டங்க’ளும் ஈழத் தமிழர்கள் தொடர்பானவை என்பதைத் தவிர, அவர்களது குறிக்கோள்கள் வேறுவேறானவையே!

திலீபன் ஓர் ‘ஆயுதப் போராளி’யாக இருந்தும்; அண்டை நாடொன்று தமிழருக்குச் சில உரிமைகளையாதல் பெற்றுத்தரும் பொருட்டுச் செய்து கொண்ட ஒப்பந்தததைக் காலம் தாழ்த்தாது நிறைவேற்றுங்கள் என்னும் வேண்டுகோளினை முன்வைத்து அதன் மூலம் உயிர் நீத்தார்.

ஓர் இனத்தின் அவல நிலைக்குப் பரிகாரம் வேண்டிப் போராடியவர் அவர். அதன் பின்னணியில் ‘பதவி ஆசையோ’. ‘நடிப்போ’ இருக்கவில்லை. ஆகையினால்தான் தனது ‘போராட்டத்தில்’ உறுதியோடிருந்து, அதனை உதாசீனம் செய்த ‘அரசுகளின் நடவடிக்கைகளால்’ தனதுயிரையும் இழக்க நேர்ந்தது.

அவர் ‘புலி’யாகவோ அல்லது ‘சிங்க’மாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்.ஆனால் அவரது கோரிக்கையில் நியாயம் இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது.

‘கலைஞ’ரின் ‘உண்ணா விரதப் போராட்டம்’ எத்தகையது என்பதை இங்கு விபரமாக எழுதவேண்டியதில்லை. அண்மையில், இலங்கை அரசினால் சுட்டுக் கொல்லப்படும் தமிழக மீனவர்கள் மீது திடீர்ப்  ‘பாசம்’ கொண்டு மீண்டும் ‘கடிதம்’ எழுத ஆரம்பித்ததில் மறைந்திருக்கும் ‘2011’ தமிழகத் தேர்தல் குறித்த அவரது ‘காய் நகர்த்தல்களை’   புரிந்துகொண்டவர்களுக்கு, அன்றைய அவரது ‘மெரீனா ஒத்திகை’பற்றிய பின்னணியையும் புரிந்துகொள்ளும் ஆற்றல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

’வீர வன்ச’ வின் போராடம் சற்று விசித்திரமானது !

இலங்கை உட்பட உலக நாடுகள் பலவும் உறுப்பினர்களாக இருக்கும், ஐ.நாவுக்கு, அண்மைக்காலங்களில் கிடைத்த, ‘2009 ம் ஆண்டின் தமிழினப் படு கொலைகள்’ பற்றிய உண்மைகளை அறியும் நிர்ப்பந்தம் அல்லது கடமை உருவாகியிருந்தது.

அதனை நிறைவேற்றுவதற்காக ஐ.நாவின் தலைமை மூவரை இலங்கைக்கு அனுப்பத் திட்டமிட்டது.

ஏற்கனவே எமது நாட்டில் அதனை விசாரிக்க ஆணைக்குழு அமைத்துவிட்டோம், இனி எதற்கு ஐ.நா வின் விசாரணை என்று ‘குதிக்கிறது’ இலங்கை.

அதன் நிலையை ஆதரித்துப் ‘போராட்டத்தில்’ இறங்கியிருக்கிறார் வீரவன்ச.

ஐ,நா வின் போக்கினை ரஷ்யா போன்றவை வெளிப்படையாகவே கண்டிக்கின்றன. ஒரு காலத்தில் ‘இரும்புத்திரை நாடு’ என்று பெயர் பெற்றிருந்த ரஷ்யா , செச்சென்யாவால் ‘தலை வலி’யை அனுபவிக்கும் ரஷ்யா ஐ.நாவைக் கண்டிக்காது விட்டிருந்தால்தான் ஆச்சரியம்!

‘முக்காடு’ போட்டுக் கொண்டிருக்கும் இந்தியா இன்னும் வாய் திறக்கவில்லை.

வீரவன்ச எதற்காகப் பயப்படுகிறார் என்பதை அவரது பேச்சே எதிரொலிக்கிறது!

இலங்கையின் தேசீயப் பத்திரிகைகளுள் ஒன்றான ‘வீர கேசரி’யின் சென்ற வெள்ளிக்கிழமை [09-07-2010] முகப்புச் செய்தியில் வீரவன்சவின் ‘வீர வசனங்கள்’ பதிவாகியிருக்கின்றன.

“வெள்ளைக் கொடியுடன் வந்த புலிகளைக் கொன்றதாகக் கூறி இலங்கை இராணுவத்தையும் அரச தலைவர்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தூக்கிலிட பான் கீ மூனின் நிபுணர் குழு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் சிலரது ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது…………………………………………………………

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐ.நா வின் நிபுணர் குழுவை குறைவாக கணிப்பிடக் கூடாது. ஏனெனில், இந் நிபுணர் குழு எதிர்வரும் நாட்களில் விசாரணைக் குழுவாக மாறலாம். பின்பு பல விசாரணைகளை நடத்தி பொய் குற்றச் சாட்டுகளை நிரூபித்து எமது நாட்டுத் தலைமைத்துவங்களை சர்வதேசம் தூக்கிலிட்டுவிடும்.”

இவ்வாறு பேசியிருக்கிறார் விமல் வீரவன்ச.

இத்தனைக்கும், ஐ.நா;  இலங்கையில் தமிழினப் படுகொலைகள் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில், நம்பியாரையும், மேனனையும் நம்பிக்  ‘கைகட்டி நின்ற’ ஓர் நிறுவனந்தான்!

இதற்குப் போய் வீரவன்ச இவ்வளவு தூரம் பயப்படுவதுதான் வியப்பாக உள்ளது.

ஒரு வேளை இதுவும் சர்வதேசம் ஆடும் மற்றொரு நாடகமோ ? யார் கண்டது…!

***********************************************************************************

மனித உரிமைகளை மதிக்காத நாடு…….. [25-06-2010 ஈழநேசனில் மீள் பிரசுரமான கட்டுரை]

[1987 ஜூன் 08 ல்; மலேசியாவின் “தினமணி” நாளிதழில் வெளியான கட்டுரை]

ஈழத்து நிகழ்ச்சிகள்:-சர்வசித்தன்”

மனித உரிமைகளை மதிக்காத நாடு, பிரதேச உரிமை பற்றிப் பேசுவது விநோதம்!

மூன்று மாத காலங்களுக்கு முன்னர், மார்ச் (1987) 12ம் தேதி, ஜெனீவாவில் நடைபெற்ற ஐ,நா வின் மனித உரிமைகளுக்கான கூட்டத்தில்; ‘இலங்கை அரசு, இலங்கைத் தமிழர் விடயத்தில் மனித உரிமைகளை மீறிச் செயல்படுகிறது’ என்பதை உறுதிசெய்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம், இந்தியாவின் தூண்டுதலினால், ஆர்ஜென்டீனாவால் கொண்டுவரப் பட்டதாயும்; அதனைக் கண்டு சீற்றமடைந்த இலங்கை அதிபர், “உங்கள் நாட்டு மனித உரிமைகளைப் பற்றி முதலில் நீங்கள் கவனியுங்கள், அதற்கப்புறம் அண்டை நாடுகள் குறித்துப் பேசலாம்” என்று ‘சூடு’ கொடுத்ததாகவும் செய்தி வெளியாகியிருந்தது!

இலங்கையோ அல்லது வேறு எந்த நாடோ- அவை மனித உரிமைகளை மீறும் அநாகரிகச் செயலைப் புரிந்தால் அது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும்.

உலக வல்லரசாக இருந்தாலென்ன , உள்ளங் கை அளவுள்ள குட்டி நாடாக இருந்தாலென்ன இதில் வேறுபாடு கிடையாது.

மனிதர்களது கௌரவம், உரிமை, சுதந்திரம் என்பன, இந்த மண்ணில் அனைவருக்கும் பொதுவான ஒன்றே என்னும் அடிப்படையில் வைத்தே தீர்மானிக்கப்படவேண்டும்.

இந்த வகையில், இலங்கையும், மனித உரிமைகளை மீறிப் பல நடவடிக்கைகளைத் தனது ராணுவத்தின் உதவியோடு செய்திருக்கிறது, செய்தும் வருகிறது என்பதை உலக நாடுகள் சில, அங்கீகாரம் செய்த நாள் தான் மார்ச் 12,1987!

மற்றும்படி, இது போன்ற மனித உரிமை மீறல்கள் அங்கு அதற்கு முன்பிருந்தே சில வருட காலமாக இடம்பெற்று வரும் ‘சாதாரணமான’ சங்கதிகள் தாம்!

அதுசரி……இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றி இப்போது எழுதவேண்டிய தேவை எதனால் ஏற்பட்டது ? அதுதான் உலகறிந்த விடயமாயிற்றே ?!   என்பீர்கள்…

ஆனால்….

இப்போது, இந்திய அரசின் விமானப் படை, யாழ்ப்பாண மக்களுக்காக மனிதாபிமான முறையில் மேற்கொண்ட நடவடிக்கையினைத் தனது நாட்டின் பிரதேச உரிமையினை மீறும் செயல் என்று, ஓலமிடும் ஸ்ரீலங்கா அரசு…. ; அந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல  லட்சம் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவது எந்த வகையில் நியாயம் ?

தனது பிரதேச உரிமை பற்றிப் பேசு முன்பாக…, மனித உரிமைகள் பற்றி யோசித்துப் பார்த்ததா அந் நாட்டு அரசு?

மனிதர்கள் வாழ்வது தானே பிரதேசம்.. அந்தப் பிரதேசத்துக்கான உரிமை, அந்த மனிதர்களுக்கான உரிமை அல்லவா ?

ஸ்ரீலங்காவின் கோபம் சற்று புதுமையாகத்தான் படுகிறது!

‘காடாயிருந்தாலும்; நாடாயிருந்தாலும்; மேடாயிருந்தாலும் ; பள்ளமாயிருந்தாலும் அங்கு வாழும் மக்களைக் கொண்டல்லவா அந்தப் பிரதேசத்தின் பண்பும், உரிமையும் பேசப்படுகிறது !

அவ்வாறிருக்கையில்….. தமிழ்ப் பகுதிகளில் வாழும் மக்களது தனி மனித மற்றும் ஜீவாதார உரிமைகளையே மதிக்காத நாடு- அங்கு முற்றுமுழுதான மனிதாபிமான எண்ணத்தோடு உணவுப் பொதிகளையும், மருந்துகளையும்  வான்வழியாகப் போட்டுவிட்டு வந்திருக்கும் இந்திய அரசினைக் கண்டிப்பது எந்த வகையில் நியாயம்  என்பதுதான் புரியவில்லை!

கவலை’ப் படும் நாடுகள்:-

செத்துக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவுப் பண்டங்களை வழங்க விடுமாறு ஏற்கனவே இந்தியா; இலங்கையிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. சில படகுகளில் சுமார் நாற்பது தொன் உணவுப் பொருட்களோடு, பாக்கு நீரிணையைக் கடந்து இலங்கைக்குச் சென்று, செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளின் உதவியோடு அவற்றைப் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு வழங்கும்படி கேட்டது!

ஆனால், இலங்கை அரசு அதனை மறுத்துவிட- மறு நாள் அதே பொருட்கள் விமானப் படையின் உதவியுடன், யாழ் மண்னில் போடப்பட்டன.

ஆம், முதல் நாள், மனிதாபிமான அடிப்படையில் இந்திய அரசினால் விடுக்கப்பட்ட ஓர் கோரிக்கையினைத் தட்டிக் கழித்து விட்ட ஸ்ரீலங்கா,  மறுநாள் அதே உதவியினைத் தமிழ்ப் பகுதிகளில் விமானமூலம் அனுப்பிவைத்த இந்தியாவின் செயல் அத்துமீறல் சம்பவம் என்று வர்ணித்தது.

எட்டு லட்சம் தமிழர்களது மனிதாபிமான உரிமைகளை மதியாது அவர்களைப் பட்டினிபோட்டுச் சாகடிப்பது மட்டுமல்லாமல், குண்டுகளை வீசியும் அழிப்பது நியாயம் என்று வாதிடும் ஸ்ரீலங்கா; உணவுப் பொதிகளை அந்த மக்களுக்கு வழங்குவது உரிமை மீறும் செயல் என்கிறது!

இது எப்படி இருக்கிறது, பார்த்தீர்களா?

‘தட்டிக் கேட்ட ஆளில்லாவிட்டால், தம்பி அண்டப் பிரசண்டன்’ என்பார்களே ; இதுவரை ஸ்ரீலங்காத் தம்பியின் அடாவடிதனங்களை, இந்திய அண்ணன் தட்டிக் கேட்காது காலன் தாழ்த்தியதால் வந்த வினை இது!

நடந்தது தான் போகட்டும்… ஆனால்…. இந்தியாவின் இந்தச் செயலைக் கண்டிப்பதுபோன்று அறிக்கை வெளியிடும் நாடுகள் அல்லது அந்  நாடுகளின் பத்திரிகைகளைப் பாருங்கள்……….

தென்னாபிரிக்க இன வெறி அரசுக்கு முண்டுகொடுக்கும் திருமதி தாடசரின் பிரிட்டன்; இந் நாடு வடக்கு அயர்லாந்தின் விடுதலைப் போராளிகளால் நூறு வருடங்களாக நிம்மதியற்றிருக்கிறது ! இதனால் தானோ என்னவோ, விடுதலைப் போராட்டம், போராளிகள் என்றாலே ‘அலர்ஜி’ உண்டாகிவிடுகிறது போலும்! அதே சமயத்தில் இது, இந்தியாவில் போராடும் சீக்கியர்களுக்கு ஓரளவு ஆதரவாகச் செயல்படுகிறது. இந் நாட்டின் பத்திரிகைகள் சிலவும், இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதை ஆதரிக்கவில்லை!

மற்றொரு நாடு அமெரிக்கா!- இது தன்னை ஆதரிக்காத நாடுகளில், தனது ரகசிய ஒற்றர்களை  அனுப்பி வைப்பதன் வழியாக, மிரட்டல்கள், அராஜக நடவடிக்கைகள், முடிந்தால் ஆட்சிக் கவிழ்ப்புவரை நடாத்துவதில் கைதேர்ந்த நாடு!

உலக வல்லரசுகளில் ஒன்று என்பதை விடவும், குட்டி நாடுகளை வளைத்துப் பிடித்து, அவற்றின் மூலமாகத் தானே உலகில் முதன்மை பெற்ற நாடாக இருக்கவேண்டும் என்பதில் கருத்தோடிருக்கும் நாடு இதுவாகும்!

இலங்கை அரசு, கிழக்கிலங்கைத் துறைமுகமான திருகோணமலையை இந்த நாட்டுக்குத் தாரை வார்க்கத் தயாராக இருப்பதாகப் பேசப்படுகிறது! இதன் தத்துப் பிள்ளை நாடான இஸ்ரேலின் ஆதரவினையும் இலங்கை பெற்றுவருவதும் குறிப்பிடத் தக்கதே.

எனவே, இந்தியாவின் எந்த நடவடிக்கையும் இலங்கையைச் சிறிதும் பாதித்துவிடக் கூடாது என்பதில் இந் நாடு அக்கறை செலுத்தி வருகிறது.

இது, இந்தியாவின் அண்மைய நடவடிக்கையினைக் கண்டிக்காவிடினும், ‘மதில் மேல் பூனையாய்’ ஒப்புக்கு ‘வருத்தம்’ தெரிவித்திருக்கிறது.

அடுத்தது, பாகிஸ்தான். இந் நாட்டின் விமானிகள் இலங்கையின் போர் விமானங்களை ஓட்டுவதாகவும்; அவர்களது உதவியோடுதான் தமிழர்களது வாழ்விடங்கள் மீது குண்டுகள் வீசப்படுகின்றன என்றும் பரவலாகச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இலங்கைப் படையினர், பாக்கிஸ்தானில் பயிற்சி பெற்றதை இலங்கை அரசே ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவுக்குத் தொல்லை தரும் எவரையும் ஆதரிப்பதன் மூலமாக, இந்தியாவை அரசியல் ரீதியாகப் பழிவாங்கக் காத்துக்கொண்டிருக்கும் நாடு இது…. எனவே, இது இந்தியாவின் செயலைக் கண்டிக்காது விட்டால்தான் ஆச்சரியமாய் இருந்திருக்கும்! ஆனால், அதற்கு இடந்தராமல், பாகிஸ்தான் தனது கண்டனத்தைத் தெரிவித்து விட்டது!

இந் நிலையில், இது ஐ.நா வரை எடுத்துச் செல்லப்படலாம் என்னும், ஆருடங்களும் உலாவருகின்றன.

அவ்வாறு எடுத்துச் செல்லப்படின் என்ன நடக்கும் ?

ஐ.நா ‘தலையாட்டிப் பொம்மை’யா?

1945 ஆம் ஆண்டின் இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து உருவாக்கப் பட்ட ஐ.நா சபை; உலக நாடுகளிடையே சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும், மனித உரிமைகளையும் நிலை நிறுத்தவெனத் தனது பணிகளை  மேற்கொள்கிறது..

நாற்பது வருடங்களுக்கும் மேலாக, இது உலகப் பிரச்னைகள் பலவற்றையும் கூடிப்பேசித் தீர்மானித்து, அவற்றில் ஓரளவு வெற்றிகளை எட்டியுமிருக்கிறது.

அதே சமயம், குறிப்பிட்ட நாலைந்து நாடுகளின் ரத்து அதிகாரத்தால் இதன் பணி முழுமையாக வெற்றியடைவதில் பின் தள்ளப்பட்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை.

தீவிர வலதுசாரி நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளது பிரேரணைகளுக்கு எதிராகத் தீவிர இடதுசாரி நாடான ரஷ்யா தனது ரத்து அதிகாரத்தின் மூலம்; தன்னை ஆதரிக்கும் அல்லது தன்னால் ஆதரவு வழங்கப்படும் நாடுகளின் மீது நடவடிகை எடுப்பதைத் தடை செய்திருக்கிறது.

அதே போன்று, அமெரிக்காவும் தனது அணியில் உள்ள நாடுகள் விடயத்தில் தனது ‘தலையை’ நுழைத்துக் கொள்வது இயல்பாகிவிட்டது!

இதனால், உலக அமைதிகாக ஏற்படுத்தப்பட்ட ஐ.நா, ஒரு குறிப்பிட்ட அளவே இந்தப் பாதையில் பயணிக்க முடிந்திருக்கிறது. சொல்லப்போனால், முற்றுமுழுதாக நடு நிலை வகிக்கும் நாடுகள் சம்பந்தப்பட்டவற்றில் இதன் அதிகாரம்- நடவடிக்கைகள் என்பன செல்லுபடியாகும் என்பதுதான் உண்மை.

எனவே, இலங்கை- இந்தியா; இவ்விரு நாடுகளையும் பொறுத்தவரையில், இலங்கையை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும், இந்தியாவை ரஷ்யாவும் ஆதரிக்கும் நிலை இருப்பதால், இந்தப் பிரச்னை ஐ,நா வரை கொண்டு செல்லப்படும் என்பது சந்தேகமே!

ஆனால்,மனித உரிமைகள் குறித்து ஐ.நா வலியுறுத்தும் வாய்ப்புகள் உள்ளன. நாடுகளின் எல்லைகள், அவற்றின் உரிமைகள் தொடர்பான விடயங்களில் காணப்படாத அல்லது காணமுடியாத தீர்வுகளை விடவும், மனித உரிமைகள் குறித்தவற்றில் அது தீர்வினை எட்டமுடியும் என்பதால், இலங்கையின் இனம் சார் பிரச்னையை, மனிதாபிமானத்துடன் ஐ.நா அணுகுமாயின் விரைவில் அதற்கொரு தீர்வு ஏற்படலாம்!

அதனை விட்டுவிட்டு, இலங்கை-இந்திய உரிமைகள் தொடர்பாக அது கவனம் செலுத்துமெனில், நோயை உணராது வைத்தியம் செய்யும் மருத்துவரின் நிலையை ஒத்ததாய் முடியும்.

இந்தியாவின் பணி இத்தனையுந்தானா?

யாழ்ப்பாண மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள் என்பதற்காக, இலங்கை அரசின் சொல்லையும் மீறி, இந்தியா 25 தொன் உணவு,எரிபொருள் மற்றும் மருந்துப் பொதிகளை அளித்துவிட்டு வந்துவிட்டது.

துன்புற்றிருக்கும் தமிழர்களுக்கு இந்தச் சிறு உதவி போதுமானதா? ஏற்கனவே, இந்தியத் தரப்பில் கூறப்பட்டது போன்று 800 தொன் அரிசி; 100 தொன் சீனி ; 50 தொன் பருப்பு என்பனவற்றோடு அங்கு மருத்துவ உதவியின்றித் தவிக்கும் மக்களுக்குச் சேவையாற்ற டாகடர்கள் என; புறப்பட்ட பயணத்தின் நூற்றில் ஒரு பங்குகூட இன்று யாழ்மக்களைச் சென்றடையவில்லை.

எனவே, இந்தியாவின் இந்த மனிதாபிமான உதவி முற்றுப்பெற்று விட்டதாகவோ, இனி மேலும் தொடர வேண்டிய அவசியமற்றதாகவோ தெரியவில்லை.

இந்தியாவும்-இலங்கையும் தங்கள் எல்லை உரிமைகள், இறைமை, சுதந்திரம் போன்றவற்றைப் பேசுவதென்பது வேறு; இந்த ‘வாய்ச் சண்டை’யில் அக்கரையில் இலங்கை அரசினால் கைவிடப்பட்ட நிலையில் பரிதவிக்கும் தமிழர்களது வாழ்வாதார உரிமைகளைப் புறக்கணிப்பது என்பது வேறு; என்பதை இவ்விரு நாடுகளில் தலைவர்களும் உணர்ந்தே இருப்பார்கள்!

வெறும் அரசியல் “ஸ்டண்ட்”டுக்காக, இந்தியா, ஒரு சில ‘டன்’ உணவுப்பொதிகளை விமான மூலம் வீசிவிட்டு ஓய்ந்துவிட்டது என்னும் அவப் பெயர் இந்தியாவுக்கு ஏற்படாமலிருக்கும்  அதே சமயம், அண்டை நாடான இந்தியா எமது மக்களான தமிழர்களுக்கு உணவு வழங்கும் நிலையை உருவாக்கிவிட்டோமே என்னும் வெட்க உணர்வு, சிங்கள் பௌத்த அரசுக்கு உருவாக வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்கு, அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண மக்களுக்கு, சிங்கள அரசு கடந்த ஆறு மாதங்களாக தடை செய்திருந்த உணவு,எரிபொருள்,மருந்து, மின் விநியோகம் என்பன அனைத்தும் அவர்களுக்குக் கிடைக்க வகை செய்வதுடன், அம் மக்களைத் துவம்சம் செய்துவந்த  படைகள் மீட்டுக்கொள்ளப்படவும் வேண்டும்!

இதற்கான உரிய முயற்சிகளில் இந்தியா அக்கறை செலுத்த வேண்டும் என்பதோடு; இலங்கை அரசுடன் நியாயமான வழிகளில் பேச்சுக்களை நடாத்தி தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்கவும் வேண்டும்.

ஆகையால், இந்தியா இப்போது எடுத்த நடவடிக்கை; இந்தியப் பேரரசு இலங்கைத் தமிழர்களை முற்றாகக் கைவிட்டுவிடவில்லை, விட்டுவிடவும் மாட்டாது என்பதைச் சிங்கள அரசியல் தலைமைக்கு உணர்த்தும் ‘சோற்றுப் பருக்கை’ எனலாமா?

இந்தப் பருக்கையினைப் பதம் பார்த்து அறியும் ஆற்றல் இலங்கைக்கு இருக்குமாயின்; பானையில் இருப்பது என்ன என்பது அதற்குப் புரிந்துவிடும்.

அதே போன்று, தமிழர்களுக்கு, இந்தியா இப்போது அளித்த உதவி, பருக்கையே அன்றி வேறில்லை1

அடங்காப் பசியுடன் காத்திருக்கும் ஈழத் தமிழர்களுக்கு பானை நிறைந்த சோற்றினை வழங்குவதும் இந்தியாவின் கைகளில்தான் உள்ளது.

பானை சோறு எப்போது கிட்டும், ஈழத் தமிழரின்  ”விடுதலை”ப் பசி என்று ஆறும் ?

( ஏறத்தாழ 23 வருடங்களுக்கு முன், இலங்கை அரசு; யாழ் மக்களைப் பட்டினி போட்டுப் பணிய வைக்கும் மனிதாபிமானம் அற்ற செயலைப் புரிந்த சமயத்தில், ராஜீவ் காந்தியின் தலைமையில் இருந்த இந்திய அரசு, அதிரடியாகச் செயல்பட்டு விமான மூலம் உணவு வழங்கிய சமயத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரை, மலேசியாவின்  நாளிதழ்களில் ஒன்றான ‘தினமணி’யில் வெளியாகியிருந்தது.

கால் நூற்றாண்டின் பின், ஏதோவொரு வகையில், இன்று ஈழத்தின் தமிழ்மக்கள் தொடர்பான ’அக்கறை’ இந்திய அரசுக்கும்,அதன் மாநில அரசான தமிழகத்துக்கும் ஏற்பட்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில், இக் கட்டுரை மூலம் வாசகர்களை அக்காலச் சூழலுக்கு இட்டுச் செல்லலாம் என நம்புகிறோம்.)

இந்தியா அத்துமீறியதா ? [ 19-06-2010 ஈழநேசன் இணைய இதழில் மீள்பிரசுரம் ஆன கட்டுரை]

ஈழ அரசியல் கண்ணோட்டம்:- “சர்வசித்தன்”

[ஜூலை 7,1987ல் எழுதி ஜூலை 11,1987 ‘தமிழ் நேசன்’(மலேசியா) இதழில் வெளியான கட்டுரை]

இந்தியா அத்து மீறியதா ?

ஏறத்தாள மூன்றரை வருட காலம்- சில சமயங்களில் மிகுந்த சினேக மனப் பாங்கோடும், வேறு சில சந்தர்ப்பங்களில் சற்று முரட்டுத்தனமான அணுகுமுறைகளோடு ’வாய்வீரம்’ பேசியும், சமயங்களில் பணிந்தும்; தொடர்ந்த இந்தியா-சிறீலங்கா உறவு , தீவிரமான கட்டத்தை எட்டியது சென்ற ஜூன் 4 ந் தேதியில் (1987) தான்!

ஆம், அன்று தான் இந்தியா, தனது விமானப் படையின் உதவியோடு, வட இலங்கையில் பாதிப்புற்றிருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு வான் வழியாக உணவு விநியோகம் செய்தது!

அந்த நாளில்தான் முதன்முதலாக, இந்தியா தனது அண்டை நாடொன்றினுள் அத்துமீறிப் பிரவேசித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது!

இலங்கை அரசோடு இணைந்து கொண்டு; பாகிஸ்தானும், சீனாவும் இந்தியாவின், இந்த விமான மூலமான உணவு உதவி நடவடிக்கையினைக் கண்டித்தன.

இது போன்று, ’அண்டை நாட்டின் சுதந்திரத்தில் தலையிடும் இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்னும் செய்தியினை; இலங்கையின் வெளியுறவு அமைச்சர், டெல்லியில் உள்ள இலங்கைத் தூதர் திரு திலகரட்ணா மூலம் இந்திய அரசுக்கு அனுப்பிவைத்தும் இருந்தார்!

இத்தனை தூரம் இந்திய அரசு, தனது அண்டை நாட்டின் பிரதேச உரிமையினையும் மீறி- நடவடிக்கைகளில் இறங்கும் அளவுக்கு, அதனைத் தூண்டியது எது?

இதன் பின்னணியைத் தெரிந்து கொள்வதற்கு, மீண்டும் இலங்கையின் அரசியல் சம்பவங்களை ஒரு தடவை அசைபோட்டுப் பார்க்கவேண்டிய தேவை ஏற்படவே செய்கிறது.

இலங்கைப் பிரச்னையில் இந்தியத் தலையீடு:

இலங்கையில் நடைபெற்ற அரசியல் பிரச்னைகளில், இந்திய அரசு தீவிர கவனம் செலுத்த நேர்ந்தது-  1983 அந் நாட்டில் இடம்பெற்ற மோசமான இனக் கலவரத்தின் பின்னரே ஆகும்.

1977ம் வருடம், கண்டி மலைப் பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களைப் பெரிதும் பாதித்த இனக் கலவரத்தினை ஒத்த ஒன்றினை, இலங்கையின் வட பகுதி- மற்றும் இந்திய வர்த்தகர்கள் அதிகமாக வாழும் கொழும்புப் பிரதேசத்தில் ஏற்படுத்தவென, ஆளும் கட்சியில் இருந்த சிலராலேயே திட்டம் தீட்டப் பட்டதாயும், அது கச்சிதமாக நிறவேற, யாழ்ப்பாணத்தில் 1983 ஜூலை 14 ல் நடைபெற்ர, தமிழ் இளைஞர்களின் தலைமறைவுத் தாகுதலில் மரணமுற்ற பதின்மூன்று சிங்கள ராணுவத்தினர் தொடர்பான சம்பவம் ஒரு ‘சாக்காக’ எடுத்துக் கொள்ளப் பட்டதாயும், அப்போது தகவல்கள் வெளியானதுண்டு!

அப்போது நிகழ்ந்த இனக் கலவரங்களின் போது, பல இந்திய வர்த்தக நிறுவனங்களும், தமிழர்களுக்குச் சொந்தமான மிகப் பெரும் தொழிற்சாலைகளும் அழிக்கப்பட்ட சம்பவமும்; வெலிக்கடை போன்ற சிறைச்சாலைகளில் கூட கைதிகள் ஈவிரக்கமின்றி அடித்துக் கொல்லப்பட்டதுவும் ; பல தமிழர்கள்- பெண்கள், குழந்தைகள் உட்பட கொன்று அழிக்கப்பட்டதும், அது ஓர் திட்டமிடப்பட்ட கலவரமாக இருக்கலாம் என்னும் சந்தேகத்தை வெளி உலகில் உருவாக்கியிருந்ததில் வியப்பேதுமில்லை.

அந்தக் கலவரங்களின் விளைவாக, ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள், இந்தியாவின் தென்பகுதி மாநிலமான தமிழகத்தை நோக்கி அகதிகளாக வந்தடைந்தார்கள்.

இந்த அகதிகளின் வருகை, இந்திய அரசினை இலங்கையின் இனப் பிரச்னையின் பக்கம் பார்வையைத் திருப்பிவிட உதவியது.

இந்திய மாநிலமான தமிழகத்தில், இத்தனை பெருந் தொகையிலான எண்ணிக்கையில் ஈழத் தமிழர்கள் அகதிகளாக வந்தது மட்டுமல்லாமல்; இலங்கை அரசு, அந்நிய நாடுகள் சிலவற்றின் ஆயுத உதவியினை நாட முற்பட்டது, இந்தியாவுக்குச் சங்கடமான நிலையினைத் தோற்றுவித்து விட்டது.

இவை காரணமாக , இந்திய அரசு, இலங்கைப் பிரச்னை குறித்து மேற்கொண்ட அணுகு முறைகளை நான்கு கட்டங்களாகப் பிரித்து விளக்க முடியும்!

இந் நான்குமே 1983ம் வருட இனக் கலவரங்களின் பின்னர் நிகழ்ந்த சம்பவங்களை ஒட்டியே கணிக்கப் படுகின்றது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

நான்கு கட்ட அணுகு முறைகள்:

இலங்கை, பூரண இறைமையும் சுதந்திரமும் கொண்ட ஓர் நாடு என்பதையும், அங்கு வாழும் இரு பெரும் இனங்களும் அந்த மண்ணில் சில ஆயிரம் வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றன என்பதையும் – உட் பூசல்கள் பல இருந்தாலும் அவ்விரு இனங்களும் சகோதரத்துவத்தோடு வாழ முயற்சி செய்ததையும் இந்தியா மறக்கவில்லை. எனவே, ஒருங்கிணைந்த இலங்கையின் அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட, ஆனால் அதே சமயம், பாதிப்புற்றிருக்கும் ஈழத் தமிழினத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வல்ல

அரசியல் தீர்வு ஒன்றினுக்கான முயற்சிகளை இந்திய அரசு முடுக்கிவிட்டிருந்தது.

அவ்வாறு காணப்படும் எந்தவொரு தீர்வும், அங்கு வாழும் இரு இனங்களினதும் ஒப்புதலைப் பெற்றிருக்கவேண்டும் என்பதிலும் இந்தியா கவனம் செலுத்தியது.

எந்தவொரு தீர்வும், நாட்டைப் பிரிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்பதில் பெரும் பான்மைச் சிங்கள அரசும் ; அவ்வாறு எட்டப்படும் தீர்வின் வழியாக மீண்டும் மீண்டும் தமிழர்கள், அரசின் அடக்குமுறைகளுக்கு ஆளாகுவார்களாயின், தாம் இதுவரை செய்த உயிர்த் தியாகங்களும், போராட்ட முயற்சிகளும் வெறும் கதைகளாய்ப் போய்விடும் என்பதில் சிறுபான்மையினரான தமிழர்களும், மிகவும் எச்சரிக்கையோடு இருக்கையில், இந்தியாவின் சமரச முயற்சிகள் ஆரம்பமாகி இருந்தன.

1983 ஜூலை இனக் கலவரத்தைத் தொடர்ந்து- இந்தியப் பிரதமராக அப்போது இருந்த இந்திரா காந்தியின் ஆலோசனையின் பேரில், இந்தியாவின் விசேஷ தூதுவரான ஜி.பார்த்தசாரதியின் தலைமையில் முதற்கட்டப் பேச்சுக்கள் நடைபெற்றிருந்தன. இவை 1984 டிசம்பர்  வரை நீண்டன….!

அப்போது, தமிழர் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், ஜி.பார்த்த சாரதியினால் முன்வைக்கப்பட்ட அனெக்ஸ்- சி [Annex- C] இலங்கையின் சர்வ கட்சி மாநாட்டினால் நிராகரிக்கப் பட்டபோது, இந்த முதல் கட்டப் பேச்சுகள் முறிவடைந்தன.

அதன் பின்னர், இந்திராவின் மரணமும், இந்தியப் பொதுத்தேர்தல்களும், ராஜீவ் காந்தியின் தலைமையும் இந்தியாவில் உருவாகியிருந்தது.

சிறிது காலம் தேக்கமுற்றிருந்த சமரச்ப் பேச்சுக்கள் 1985 முற்பகுதியில் மீண்டும் தொடங்கப்பட்டபோது; ஜி.பார்த்தசாரதிக்குப் பதிலாக, வெளியுறவுச் செயலகத்திலிருந்து ரொமேஷ் பண்டாரியும், மாநிலத்துறை அமைச்சர் சிதம்பரமும் இதில் பங்குபற்றினார்கள்.

இம்முயற்சிகளின் பயனாய், இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும் சந்தித்து, இருவருமாகப் பங்களாதேஷ் சென்று, அப்போது வெள்ளத்தால் பாதிப்புற்றிருந்த அந் நாட்டின் சில பகுதிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பியதும், அதன் பின்னர் திம்புப் பேச்சுகளின் ஆரம்பமும் இவற்றுள் அடங்கும்.

எனினும், போராளிகள்-இலங்கை அரசுப் படைகள் இரண்டிற்கும் இடையே கடைப்பிடிக்கப்பட்ட இடைக்காலப் போர் ஓய்வு; எவரது நடுநிலையான கண்காணிப்பும் இன்றி, பரஸ்பரம் ஒருவரை மற்றவர் குற்றம் சாட்டுவதில் கழிந்துபோய் இறுதியில் அது மீறப்படவும் செய்தது.

இந்தக் களேபரத்தினாலும் இலங்கையின் ஆலோசனைகள் தமிழர்களது அடிப்படை உரிமைகளை எந்தவகையிலும் தீர்த்துவைக்க மாட்டாது என்னும் தமிழர் தலைவர்களது மறுப்பினாலும் இந்த இரண்டாவது சமரச முயற்சியும் முறிந்து போயிற்று.

எனினும், 1985 ஆகஸ்ட்டில், இலங்கை அரசு தமிழர்களுக்குத் தாம் வழங்கவிருக்கும் அடிப்படை உரிமைகள் பற்ரிய விபரத்தினை இந்தியாவிடம் கையளித்தது.

அதனைப் பரிசீலனை செய்த தமிழ்த் தலைவர்கள் (தமிழர் கூட்டணியின் சார்பிலும்) சில கோரிக்கைகளை முன் வைத்திருந்தார்கள்.இதன் பின்னர், 1986 மே மாதம் திரு சிதம்பரத்தின் இலங்கைப் பயணம், மற்றொரு புதிய சமரசப் பேச்சுக்கு வழிகோலியது.

பஹாமாவில் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜே.ஆரும் நேரில் சந்தித்து உரையாடியதைத் தொடர்ந்து, இந்த மூன்றாவது சமரச  முயற்சிக்கான இடம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற ‘சார்க்’ மா நாடென உறுதியாயிற்று.

இம்மாநாட்டின் போது இடம் பெற்ற முயற்சி  எந்தவொரு திடமான தீர்வினையும் அளிக்கவில்லை எனினும், 1986 டிசம்பர் 19 க்கான அரசியல் ஆலோசனைகளுக்கு வித்திட்டது இந்தச் சார்க மாநாட்டுச் சந்திப்புகளேயாகும்.

1986 டிசம்பர் 19ல், திரு சிதம்பரமும்,திரு நட்வார் சிங்கும் இலங்கை அதிபரைச் சந்தித்து உரையாடிய பின்னர் ,அவர்களது ஆலோசனைகளை ஏற்காது, அதிலிருந்து பின்வாங்கிய இலங்கை, 1987ன் ஆரம்பத்தில் இருந்து தீவிரமான போர் நடவடிக்கைகளை, வட பகுதித் தமிழர்கள் மீது எடுக்கத் தொடங்கியது.

அரசின் நடவடிக்கைகள்:

இவ்வருட (1987)ஆரம்பத்தில், சுமார் ஒன்பது லட்சம் தமிழர்கள் வாழும் பிரதேசமான யழ்ப்பாணக் குடா நாட்டுக்கான எல்லா, உணவு மற்றும் எரி பொருள் விநியோகங்களை அரசு தடை செய்தது.

அப் பகுதிக்கான மின் விநியோகமும் இடைக்கிடை இடை நிறுத்தப்பட்டது.

சுமார் 3,500 சதுர மைல்கள் பரப்பளவை உடைய வட பகுதியில், யாழ் குடா நாடு மட்டும் ஏறத்தாள 900 சதுர மைல்களாகும்.

அந்தப் பிரதேசத்தில், படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளும்- அவற்றினோடு தொடர்ந்த ;தமிழ் மக்களைப் பட்டினிபோடும் திட்டமும் உச்ச கட்டத்தை எட்டியது சென்ற மே 1987ல் தான்.

பெப்ரவரியில் வடபகுதியின் சில நகரங்களான மன்னார், கிளி நொச்சி , முல்லைத்தீவு அகியவற்றில் மிகப் பெரும் தாக்குதல்களை நடாத்திய இலங்கை ராணுவம்; ‘ஆப்பரேசன் லிபரேசன்’ என்னும் பெயரில் யாழ்குடா நாட்டைத் தாக்கி- அங்கு நிலை கொண்டிருக்கும் தமிழ்ப் போராட்ட அணிகளான எல்.ரி.ரி.ஈ [LTTE], ஈரோஸ் [EROS] இரண்டினையும் நிர்மூலமாக்க ஆயத்தம் செய்தது.

இதற்கிடையில், ஏற்கனவே கிளிநொச்சி, மன்னார் போன்ற பகுதிகளில், இலங்கை அரசு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளால் உயிரிழந்த தமிழர்கள் குறித்தும், அது போன்ற நடவடிக்கைகளால் தொடர்ந்தும் இன்னலுக்கு ஆளாகும் மக்கள் பற்றியும் இந்தியா தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவிதுக் கொண்டாலும்-இவற்றைச் ஸ்ரீலங்கா அரசு, காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை!

அது, அந் நாட்டின் இனப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில், ராணுவ ரீதியிலான நடவடிக்கை ஒன்றினையே நம்பியிருப்பதாக இந்திய அரசியல் பார்வையாளர்கள் நம்பத் தொடங்கினார்கள்!

சுமார் ஐந்து மாதங்களுக்காவது யாழ்ப்பாண மக்களைப் பட்டினி போட்டுவிட்டு, பின்னர் பெரும் எடுப்பிலான ராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலமாக, அந்தப் பிரதேசத்தைத் தமிழ்ப் போராளிகளின் கட்டுப்பாட்டிலிருந்து முற்றாக விடுவித்து விடுவது என்று இலங்கை அரசு திட்டம் தீட்டி அதற்கேற்றாற்போல் செயலபட ஆரம்பித்தது!

ஏப்ரல்[1987] மாதத்தில் யாழ்ப்பாணப் பகுதிக்குச் சென்றுவந்த ஒருவர், அங்குள்ள மக்களில் கால் பங்கிற்கும் அதிகமானோர் [அதாவது சுமார் இரண்டரை லட்சம் பேராவது] நாளொன்றுக்கு ஒரு தடவை மட்டுமே உணவு உண்ணக்கூடிய நிலையில் வாழ்வதாக குறிப்பிட்டுள்ளார். அத்தனை தூரம், இலங்கை அரசு, தனது மக்கள் என்று சொல்லிக் கொள்ளும் தமிழர்களை பட்டினிச் சாவின் விளிம்புவரை இட்டுச் செல்வது நினோதமான செயல் தான்!

இத்தனைக்கும் பின்னரே, சென்ற மே மாதத்தின் இறுதியில், ‘ஆப்பரேசன் லிபரேசன்’ திட்டம் இலங்கை ராணுவத்தால் முடுக்கி விடப்பட்டது.

இது ஏற்படுத்திய மனிதப் படு கொலைகளே இந்திய அரசின் விமான உணவுத் திட்டமான, ‘ஆப்பரேசன் பூ மாலை’யினை,  ஜூன் 4,1987 பிற்பகலில் நடாத்துவதற்கு வித்திட்டது எனலாம்.

*******************************************************************************************

.