அறுபத்திரண்டு ஆண்டுகளும்……. [ஏப்ரல் 11,2010 ஈழநேசனில் வெளியாகியது]

அறுபத்திரண்டு ஆண்டுகளும்; அப்பாவி(ஈழ)த் தமிழர்களும்!

“சர்வசித்தன்”

இலங்கை என்னும் சின்னஞ் சிறு தீவு நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்து அறுபத்திரண்டு வருடங்கள் கடந்து போய்விட்டன என்பதைக் கொண்டாடும் வகையில், இந்த வருட முற்பகுதியில் தென்னிலங்கையில் மிகவும் குதூகலமான முறையில் விழாக்கள் நடந்தேறியிருக்கின்றன.

நாட்டின் அதிபர் ‘புதிய துட்ட கெமுனு’வாக மீண்டும் அவதரித்திருக்கிறார்!

கி.மு இரண்டாம் நூற்றாண்டில், தமிழ் மன்னன் எல்லாளனை வீழ்த்தி அனுரதபுர நகரினைச் சிங்களருக்கே மீண்டும் பெற்றுத்தந்த இளவரசன் துட்டகெமுனுவைப் போன்று, பிரபாகரன் தலைமையில் தமிழுரிமைக்காகப் போராடியவர்கள் அத்தனைபேரையும்- போராளிகள்,பொதுமக்கள் என்ற பேதமின்றி- அழித்த இருபத்தோராம் நூற்றாண்டின் ‘சிங்கள அரசனை’ப் பாராட்டி மகிழ்ந்தார்கள் அவ்வினத்தைச் சேர்ந்த பலர்! கூடவே, வரலாற்றில் எப்போதும் இடம்பெறும் ‘விபீஷணக்’கும்பல்களும்; தாம் வெற்றி அடைந்துவிட்ட இறுமாப்பில் நெஞ்சை நிமிர்த்திப் பீறுநடை போட்டன.

சிங்கள இனம், அண்மையில் அடைந்த ‘வெற்றி’யின் நாயகர்களில் ஒருவரான அதன் படைத் ‘தளபதி’ இப்போது தனது எதிர்காலம் பற்றிய கவலைகளுடன் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறார் என்பது ஒரு புறமிருக்க, ஒரே இலங்கை; ஒரே மக்கள் என்று ‘கவர்ச்சி சுலோ’கங்களை முழங்கும் அரசு, முப்பதாண்டுப் போரில் தாம் முறியடித்துவிட்ட ‘எதிரி நாடொன்றில்’கூட அரங்கேற்றமுனையாத செயல்களைப் ,’போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறோம்’ என்னும் போர்வையில், அண்டை நாடுகள் சிலவற்றின் பொருளுதவியோடு வெகு துரிதமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது!

இவையனைத்தையும் அறிந்திருந்தும், சென்ற ஆண்டு முற்பகுதியில் வடபுலத்தில் அரங்கேறிய படுகொலைகளைக் ‘கண்டும் காணாதிருந்ததை’ப் போன்று சர்வதேசம் ‘கள்ள மௌனம்’ சாதிக்கிறது!

படுகொலைகளின் தடயங்கள் அனைத்தும் அழிக்கப்படும்வரை ‘பொறுமை காத்த’ ஐ.நா வின் தலைவர்,திடீரென ‘ஞானோதயம்’ பெற்றுவிட்டவர் போன்று இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.

ஆயிரக்கணக்கில் தமிழர்கள் எரிகுண்டுகளுக்கும்,தடைசெய்யப்பட்ட கனரக ஆயுதங்களுக்கும் பலியாகி உயிப்பிச்சை கேட்டு மன்றாடிக்கொண்டிருந்த சமயத்தில்; மெரீனா கடற்கரையில் ‘குளிரூட்டிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்’ சகிதம் ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க மூன்று மணி நேர’ உண்ணாவிரதத்தை மேற்கொண்ட ‘தலைவர்’ இப்போது ‘ஈழத் தமிழர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படாவிடில், நாம் சும்மா இருக்கமாட்டோம்’ என்று புதிதாக எதையோ ‘சுமந்து கொண்டு’ அறிக்கை விடுகிறார்.

தமிழர்கள் அழிந்தாலும் பரவாயில்லை அவர்களது நிழல்களுக்கு ஆடைகட்டி அழகு பார்க்கும் கலையில் வல்ல கலைஞர் இப்போது ‘செம் மொழி’ ஆடையுடன் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இதோ இப்போது, இலங்கையின் பொதுத் தேர்தலும் முடிந்துவிட்டது.

தேர்தல் முடிவுகள், பலரும் எதிர்பார்த்திருந்தது போன்று, அதிபரது கட்சி அறுதிப் பெரும் பான்மையுடன் மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது.

தகுதி பெற்ற வாக்காளர்களில் சுமார் அறுபது விழுக்காட்டினர் இந்தத் தேர்தலில் வாக்களித்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.என்றாலும், இலங்கை, சுதந்திரம் அடைந்ததில் இருந்து அங்கு நடைபெற்றுவந்த பொதுத் தேர்தல்கள் யாவற்றினையும் விடவும், இந்தத் தடவை வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்றும், செய்தி வெளியாகி இருக்கிறது.

சிங்களப் பகுதிகளில் அரசு அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்றும்; எதிர்க் கட்சியினர் பல குழுக்களாக்ப் பிரிந்து நின்று போட்டியிட்டதால் அரசுக்கு எதிரான வாக்குகள் சிதறிப்போய் விட்டன எனவும்; மக்கள் இவ்வாறான தேர்தல் ‘விளையாட்டுகளில்’ நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்றும் இதற்குப் பலவாறான காரணங்களை; அவரவர் சார்பு நிலைகளுக்குத் தக்கவாறு பேசிக்கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள்.

ஆட்சி அதிகாரத்துக்காகப் போட்டியிட்ட சிங்களக் கட்சிகளுக்குச் சிங்களர்களது உரிமைக்காகப் போராடும் நிர்ப்பந்தம் ஏதும் கிடையாது.

ஆங்கிலேயர் மூன்று நூற்றாண்டுகளாகச் சுரண்டிக் கொழுத்த இலங்கையை விட்டு , மூட்டைமுடிச்சுகளுடன் தங்கள் நாட்டுக்குத் திரும்பிய போது, ஜனநாயகத்தின் பேரால் தீவின் ஆட்சி அதிகாரத்தினை, ‘தலை’ எண்ணிக்கையில் அதிகமாயிருந்த சிங்களரிடம் விட்டுவிட்டுச் சென்றார்கள்.

எனவே, ஒரு நாட்டின் அரசியல் அதிகாரத்தின் வழியாகக் கிடைக்கவேண்டிய அத்தனை நலன்களையும், தீவின் பெரும்பான்மை இனம் பெற்றுக்கொள்வதில் எவ்வித தடைகளும் அதற்கு இருக்கவில்லை.

ஆனால் ஆளப்படும் இனமாக மாறியிருந்த தமிழ்த் தேசிய இனம்; அந் நாடு எதிர் கொண்ட ஒவ்வொரு ஆட்சி அதிகாரத்துக்கான தேர்தல்களின் போதும், படிப்படியாகத் தனது வாழ்வுரிமைக்கான இருப்பினைப் பறிகொடுத்தே வந்துள்ளது.

ஆட்சி அதிகாரத்துக்காகப் போராடிய பெரும் பான்மை இனத் தலைவர்கள், தாம் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக நாட்டுக்கு எவ்வாறான நல்ல திட்டங்களை அளிப்போம் என்று கூறி வாக்குக் கேட்பதை மறந்து, தமிழர்களிடமிருந்து எவற்றை எல்லாம் பறிப்போம் என்னுமாப்போல் பேசிவந்ததும் ,தேர்தல் முடிவுற்ற பின்னர் செயல்பட்டதும் , அந்நாட்டின் முதல் முப்பது வருடங்களைச் சிறுபான்மை இனத்தினை அரசியல் போராட்டங்களிலும்; அதனைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபடவைத்தது.

இப்போது முடிவடைந்துள்ள தேர்தலின் பயனாய்,அந் நாட்டில் உண்மையான அமைதியும், அதன் அதிபர் தமது வாயால் கூறும் தமிழர்-சிங்களர் என்ற பேதமற்ற சம உணர்வும் இனியாதல் நிலைபெறவேண்டுமானால்……….

சில வருடங்களுக்கு முன்னால் ஓர் மனித உரிமைப் போராளியாகத் தன்னை இனங்காட்டிக் கொண்ட இலங்கையின் இன்றைய அதிபர், இப்போது தமக்குக் கிடைத்திருக்கும் ‘அசுரத்தனமான’ வெற்றியை நன்கு பயன்படுத்தி இனப்பூசலுக்கு ஏற்ற ஓர் தீர்வினை எட்ட இயலும்.

இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்த இரு இனங்களும் ‘நாம் இலங்கையரே’ என்று மார்தட்டிச் சொல்லும் நிலையை உருவாக்குவது ஆளுபவர்களது கைகளில்தான் தங்கியிருக்கிறது.

நியாயத்துக்காகக் கூடப் போராடும் திராணியற்றுக்கிடக்கும் ஈழத்தமிழினத்தின் தன்மானத்துக்கும், சுக வாழ்வுக்கும் பாதுகாப்பளிக்கும் அரசியல் கடமை ஆளும் பெரும்பான்மை இனத்துக்கே உண்டு.

இதனை மறுப்பதும், அந்த இனத்தையே ஒறுப்பதும் மானுட விழுமியங்களை அழிப்பதற்கு ஒப்பானதாகும். இவற்றை இனியும் பார்த்துக் கொண்டிருக்கும் சர்வதேசமும், அண்டை நாடுகளும்கூட ஒருவகையில் குற்றவாளிகளே.

************************************************************************************************************************