1982 ல் சிங்கப்பூரில்– முதலில், ஓர் குடிசார் பொறியியல் துறை விரிவுரையாளராயும் (Lecturer in Civil Engineering) தொடர்ந்து… ஓர் கட்டிடப் பொறியியலாளராயும் ( Project Engineer[Building])- வேலை பார்த்து வந்த சமயத்தில்…..;
எனது எழுத்தார்வத்துக்கு சிங்கப்பூரில்வெளியாகும் “தமிழ் முரசு”ம்,
மலேசியாவில் வெளியாகிய “தமிழ் நேசனு”ம் களம் அமைத்துத் தந்தன.
ஆரம்பத்தில் எனது அறிவியல் கட்டுரைகளே இவ் இரு நாடுகளிலும் வெளியாகிவந்த பத்திரிகைகளில் பிரசுரமாகி…. வரவேற்பினைப் பெற ஆரம்பித்தன.
எனினும்,1984 பிற்பகுதியில் மலேசியாவில் இருந்து வெளியாகிவந்த “தினமணி” நாளிதழின் “ஞாயிறு வாரமலரி” ல் பிரசுரமான எனது “ குட்டித்தீவைக் குலுக்கும் குமுறல்கள்” என்னும் தலைப்பில் வெளியான ஈழ அரசியல் தொடர் என்னை ஓர் அரசியல் கட்டுரையாளனாக இனங்காட்டிற்று.
இதனைத் தொடர்ந்து 1985 முதல் 1990 வரையிலான ஏழு வருடகாலப் பகுதியில் மலேசியாவில் வெளியான எல்லா நாள்/வார இதழ்களிலும் சுமார் 3000 கட்டுரைகள் வரையில் வெளியாகி உள்ளன.
இவற்றுள் 26 கட்டுரைத் தொடர்களும் அடங்கும். இதில் நான்கு ‘அறிவியல் தொடர்’கள் ; ஏனையவற்றில் பலவும் ஈழ,இந்திய மற்றும் சர்வதேச அரசியல் சார்ந்தன.இத்தனைக்கும் நடுவே 1986 மே மாதத்தில் எனது கட்டுரைத் தொடரான ‘குட்டித்தீவைக் குலுக்கும் குமுறல்கள்’ நூலுருவில் வெளியீடுகண்டது.
மலேசியத் தலைநகரான கோலாலம்பூரின் ‘ பான் பசுபிக் ஹோட்டலி’ன் ‘அசெம்பிளி’மண்டபத்தில் அன்று பொதுப்பணி அமைச்சராக இருந்த டத்தோ சாமிவேலு, வீடமைப்புத் துறை தணையமைச்சர் டத்தோ சுப்ரமணியம், சுகாதாரத்துறைத் துணை அமைச்சர் டத்தோ பத்மநாதன்(இவர் இப்போது உயிருடன் இல்லை) உட்பட ‘மலேசிய இலங்கையர் காங்கிரஸி’ன் உதவித் தலைவராக இருந்த டொக்ரர் மகேந்திரன்.துரையப்பா ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி இடம்பெற்றிருந்தது.
அதற்கு அடுத்த நாள் வெளியான அனைத்து மலேசிய இதழ்களிலும் ( தமிழில் “தினமணி’;’தமிழ்நேசன்’; தமிழ் ஓசை’ ஆங்கிலத்தில் ‘The Star’; ‘New strait Times’) இந்நிகழ்ச்சி பற்றிய விபரங்களோடு செய்திகள் வெளியாகியிருந்தன.என்னை ஓர் கட்டுரையாளன் என்று ‘அங்கீகாரம்’ செய்த சம்பவம் இதுவே.
இதனைத் தொடர்ந்து எனது அறிவியல், அரசியல், சமூகம், கவிதை,சில சிறுகதைகள்,இசைப்பாடல்கள்(மலேசியா/சிங்கப்பூர் வானொலிகளில்) எனப் பல துறைகளிலும் எனது படைபுகள் வெளிவந்தன.
1987ம் ஆண்டில் ஈழ அரசியல் குறித்த 80 கட்டுரைகள் ‘தமிழ் நேசன்’/’தினமணி’ இவ்விரண்டு இதழ்களிலும் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பின.
’தினமணி’யில் ஈழத்து நிகழ்ச்சிகள் என்னும் தலைப்பிலும்; ‘தமிழ் நேசனி’ல் ஈழ அரசியல்கண்ணோட்டம் என்னும் தலைப்பிலும் இவை தொடர்ந்து வெளிவந்தன.
மாதிரிக்குச் சில கட்டுரைகளின் ‘தலைப்புகளை’யும் அவை வெளியான பத்திரிகை/தேதி விபரங்களையும் இங்கு தருகிறேன்.
” விடுதலைப் புலிகள் இந்திய அரசுக்கு அடங்காதவர்களா? “ ( தினமணி 9/02/1987)
“இலங்கையில் இரு நாட்டு யுத்தமா? ஈழத் தமிழரை அந்நியராக நினைக்கும் சிறீலங்கா “ ( தினமணி 16/02/1987)
”நாளொன்றுக்கு பத்து தமிழர்கள் கொலை; தடுத்து நிறுத்த இந்திய அரசைக் கோருகிறார் அமிர்தலிங்கம்” (தினமணி 24/02/1987)
“இந்திய சமாதான முயற்சிகளும்; விடுதலைப் புலிகளின் நிலையும் “ ( தினமணி 02/03/1987 )
“ இலங்கையைக் கண்டித்து ஐ.நா கமிஷன் தீர்மானம்- இது ஒரு புதுத் திருப்பம்” ( தினமணி 16/03/1987)
“ஈழத்தில் நடக்கும் இனப் படுகொலைகள்” ( தினமணி 24/03/1987)
“ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற இந்தியா தயங்குகிறதா? “ ( தினமணி 19/05/1987)
“இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையும், இந்தியாவின் மனிதாபிமான உதவியும் “ (தினமணி 04/06/1987)
“இந்திய அரசுக்கு முஷ்டியை உயர்த்துவதில் இருந்த வேகம், முடங்கிவிட்டது பரிதாபம்! “ (தினமணி 10/06/1987 )
”இலங்கை அரசு மலையகத் தமிழரை அன்று விரட்டியது, ஏனைய தமிழரை இன்று விரட்டுகிறது …” (தினமணி 11/06/1987)
-“ஜனநாயக ஆட்சிக்கு எதிரான ஆயுதப் போரும், மக்களுக்கு எதிரான அரசபயங்கரவாதமும் ஆபத்தானவையே!” (தமிழ் நேசன் 10/07/1987)
” கிழக்கிலங்கையில் வன்முறை தலைதூக்க யார் காரணம் ? இந்திய அமைதிப் படையா; விடுதலைப் புலிகளா, போட்டிக் குழுக்களா?” (தமிழ் நேசன் 17/09/1987)
“உடன்பாட்டை நிறைவேற்றவும் உயிர்ப் பலி தேவையா ? திலீபனின் தியாகம் திசை மாறிவிடக்கூடாது, “ (தமிழ் நேசன் 05/10/1987)
“ஈழத்தில் மாட்டிக் கொண்ட இந்தியப் பேரரசு; சுமக்கப் போவது பழியையா ? பாவத்தையா? “ ( தமிழ் நேசன் 11/10/1987)
“ இந்தியப் படைகளின் அமைதிகாண் படலமா; ஈழத் தமிழரின் மயான காண்டமா? தமிழ் மண்ணில் நடப்பது என்ன? “ (தமிழ் நேசன் 14/10/1987)
“விடுதலைப் போராளிகளை அழித்து விட்டால், சமாதானம் தானே வருமா ? பாரதப் பிரதமர் தமது எண்ணத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும்” ( தமிழ் நேசன் 25/10/1987)
மேற்குறிப்பிட்டுள்ளவை 1987ல் நான் எழுதி வெளியான ஈழக் கட்டுரைகளில் சிலவாகும்.அதே வருடத்தில் வெளியான எனது அறிவியல்/சமூக மற்றும் உலக அரசியல் கட்டுரைகளும் பிறவும் பலவுள்ளன.
இப்போது , நேரம் கிடைக்கும் போது எனது பழைய படைப்புகளையும் தட்டச்சிட்டு அவற்றினை அவ்வப்போது, இவ் ’வலைப் பூ’வில் பதிவுசெய்து வருகிறேன்.
எனது, அண்மைக்கால ஆக்கங்களோடு இவற்றினையும் நீங்கள் இப்பக்கத்தில் பார்வையிடலாம்.