புத்துருவாக்கமும் …………..

புத்துருவாக்கமும் பிறழ்மைய நடத்தைகளும் !

பொதுவாகப் புதிய கண்டுபிடிப்புகள்,புத்திலக்கியங்கள், புதுமையான சிந்தனைகள் இவற்றுக்குச் சொந்தக்காரர்களான அதி தீவிர அறிஞர்களில் பலர் கிறுக்குத்தனமான நடவடிக்கைகள் கொண்டவர்களாகவோ அல்லது தம்மைச் சுற்றிலும் நடப்பனவற்றைப் பற்றி அறியாதவர்களகவோ இருப்பதைப் பலர் கவனித்திருக்கலாம்!

இந்த மேதாவித்தனமும் அதனுடன் ஒட்டிப்பிறந்த கிறுக்குத்தனமும் எவ்வாறு ஒரே மனிதரிடத்தில் உருவாகின்றன என்பதை ஆராயும் கட்டுரையே இதுவாகும்.

கிரேக்க தத்துவ ஞானிகள் எனப் போற்றப்படும் அரிஸ்ரோட்டில், பிளேட்டோ ஆகியவர்களே இந்தப் படைப்பாக்க சிந்தனையாளர்களான கவிஞர்கள், நாடக ஆசிரியர்கள், புத்திலக்கியம் படைபவர்கள் போன்றோரைப் பற்றி முதன்முதலாகக் கருத்தினை வெளியிட்டிருக்கிறார்கள் படைப்பாக்கசிந்தனையாளர்களுக்கும் மனப்பிரமைக்கும் நெருங்கிய தொடர்பு காணப்பட்டதாக அவர்கள் கருதியிருப்பது தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் நீண்ட காலங்கள் கழித்து, சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் இத்தாலியைச் சேர்ந்த குற்றவியல் ஆய்வாளரான சீஸாரே லொம்ப்ரோஸோ ( Cesare Lombroso )  தனது ‘ த மான் ஆஃப் ஜீனியஸ்’ (The Man of Genius ) என்னும் நூலில், இவ்வாறான பிரசித்தி பெற்ற மேதைகளின்  பழக்கவழக்கங்கள் குறித்த பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

இவரது நூலில், மேதாவித்தனம் கொண்டவர்களிடம் காணப்பட்ட மனப்பிரமைக்கும், பயங்கர குற்றவாளிகள் சிலரது நடத்தைகளுக்கும் இடையேயான தொடர்புகள் குறித்த விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

எனினும் கடந்த சில தசாப்தங்களுக்கு முன்புதான், இந்தப் புத்துருவாக்க சிந்தனைக்கும் புரியாத நடத்தைகளுக்கும் இடையேயான தொடர்புகள் பற்றிய ஆய்வுகளில் உளவியலாளர்களும் ஏனைய அறிஞர்களும் ஈடுபட ஆரம்பித்தார்கள். அவர்கள் இவற்றின் தன்மையினை அளவிடும் பொருட்டுத் தமக்கெனச் சில நெறிமுறைகளையும் ஏற்படுக்க் கொண்டார்கள்.

இவற்றுள், புத்துருவாக்க சிந்தனையாளர்களை அறிந்துகொள்ள அவர்களது புத்துருவாக்கம் தொடர்பான பதிவுகள், அவர்கள் அத்துறையில் ஈடுபட்டிருந்தமைக்கான ஆதாரங்கள், அவர்களது புத்துருவாக்க ஆற்றல்- இதில் ஒரு பொருளைப் பற்றிப் பல கோணங்களில் சிந்திக்கும் ஆற்றலும் அடங்கும்- என்பனவற்றின் அடிப்படையில் இதனைத் தீர்மானிக்கும் முடிவினை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

அதே சமையம் புரியாத அல்லது கிறுக்குத் தனமாகச் செயல்படுவதைத் தெரிந்து கொள்ள மனச்சிதைவுடன் தொடர்புடைய நடத்தைகள் ஆராயப்பட்டு அதனை அலகாகக் கொள்ளும் முறையினை ஏற்படுத்தியிருந்தனர்.

இது, ஆங்கிலத்தில் ஸ்கிட்ஸொடைபல் ( Schizotypal ) ஆளுமை எனக் குறிப்பிடப்படுகிறது.

இதன் கீழ் விசித்திரமான நம்பிக்கைகள்- அதாவது இன்று நாம் பெற்றுள்ள திறமைகளிற் சில, முன்பு அத்துறையில் பிரபலமாக இருந்தவர்கள் வழங்கும் கொடை என நம்புவது- உணர்வில் தடுமாற்றம் ஏற்படுவது; தானறியாமல் யாரோ தன்னைத் தொடர்கிறார்கள் என நினைப்பது போன்ற மனப் பிரமைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இது போன்ற மன நிலையில் உள்ளவர்கள், மருத்துவ ரீதியில் ஓரளவு மன நலன் பாதிக்கப்பட்டவர்கள் என்றே கருதப்படுகிறது.

அமெரிக்காவின் மன நலக் கூட்டமைப்பு ( American Psychiatric Association ) இதனை ஒரு வகை ‘பிறழ் மைய நடத்தை’ என வகைப்படுத்தியிருக்கிறது.

இது பற்றி ஆழமாக ஆராய்ந்த போது, இம் மன நிலை கொண்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் மனச் சிதைவு ( Schizophrenia ) நோய்க்கு ஆளானவர்களாய் இருப்பது/இருந்தது தெரியவந்தது.

பொதுவாக இப்பாதிப்பினுக்கு ஆளானவர்கள், விநோதமாக உடை அணிபவர்களாக, வழக்கமாகப் பேசுவதிலிருந்தும் மாறுபட்ட பேச்சினை உடையவர்களாக, சமூகத்தில் இருந்தும் விலகி இருப்பவர்களாக, மாறுபாடான உணர்வு நிலை கொண்டவர்களாக, சகுனம், டெலிபதி போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவர்களாக, நெருக்கமாக உறவாடும் மனப்போக்கு இல்லாதவர்களாக…..  இவ்வாறு மேற் குறிப்பிட்ட ஏதாவதோர் குறைபாட்டினைப் பெற்றிருப்பார்கள்.

எனினும், ஸ்கிட்ஸொடைபல் அளவீட்டின்படி, இதில் அடங்கும் யாவரும் ஆளுமைக் குறைபாடு கொண்டவர்களாக இருக்கவேண்டிய அவசியம் ஏதும் இல்லை.இந்த அளவீட்டின்படி சராசரிக்கும் மேல் இடம்பெற்ற பலர் புத்துருவாக்க சிந்தனை மற்றும் புத்திசாலித்தனம் போன்றவற்றில் சிறப்பாக இருப்பதை, ஹார்வர்ட் ( Harvard ) பல்கலைக் கழக ஆய்வொன்று உறுதி செய்துள்ளது.

இயல்பும் வளர்ப்பும்.

1966 இல், அமெரிக்க மரபணு வல்லுநராக விளங்கிய லெனார்ட்ஹெஸ்டன் ( Leonard Heston) மனச் சிதைவு கொண்ட தாயர்களிடம் இருந்து பிரித்தெடுத்து வளர்ககப்பட்ட குழந்தைகளையும், எவ்வித மனச் சிதைவுமற்ற தாயர்களது குழந்தைகளையும் வைத்து நடாத்திய ஆய்வின்படி மனச்சிதைவுற்ற தாயார்களின் குழந்தைகள் மற்றவர்களை விடவும் புத்திக்கூர்மை, புத்துருவாக்க சிந்தனை என்பனவற்றில் மேம்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் பின்னர், 40 வருடங்கள் கழித்து,ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வாளரான டென்னிஸ் கின்னி (Dennis Kinney )  முன்பு ஹெஸ்டன் மேற்கொண்ட ஆய்வுகளை ஒட்டித் தமது ஆய்வினை நடாத்தியிருந்தார்.இதில் சுமார் 36 குழந்தைகள் மனச்சிதைவுள்ள தாய்மார்களிடமிருந்தும், வேறு 36 குழந்தைகள் சாதாரண தாய்மார்களிடமிருந்தும் பெறப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

மனச் சிதைவுக்கு ஆளான தாய்மார்களது குழந்தைகளிடம் ஸ்கிட்ஸோடைப்பல் இயல்பும் காணப்பட்டது அதே சமையம் மற்றவர்களைவிடவும் மிக உயர்ந்த கற்பனை வளமும், படைப்பாக்க சிந்தனையும் இணைந்திருந்தது.

இது போன்ற கற்பனை வளமும், படைப்பாக்கத் திறனும் கொண்டவர்களிடையே எதிர்காலத்தைப் புலப்படுத்தும் கனவுகள், ரெலிபதி, கடந்த காலம் பற்றிய உணர்வு என்பன குறித்த நம்பிக்கைகள் ஆழமாக இருப்பதையும் ஆய்வுகள் புலப்படுத்தின.

இது போன்ற விபரீத எண்ணப்போக்கினுக்கும், புத்துருவாக்கத் திறனுக்கும் இடையே காணப்படும் தொடர்பு, பல ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

ஹார்வாட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஷெல்லி கார்சன் ( Shelley Carson ) இது பற்றிக் குறிப்பிடும்போது, “ சாதாரணமாக எமது மூளைக்கு அனுப்பப்படும் வெளியுலகத் தகவல்கள் யாவும் ஏதோவொரு வகையில் வடிகட்டப்பட்ட பின்பே , அவை மூளையால் உணரப்படுகின்றன. இந்த வடிகட்டல் முறை, அதிபுத்திசாலிகள், ஸ்கிட்ஸோடைப்பல் ஆளுமை கொண்டவர்கள், கற்பனை வளம் கொண்டவர்கள் ஆகியோரிடையே ஏதோ ஒரு வகையில் தடுக்கப்பட, மூளையைச் சென்றடையும் அனைத்துத் தகவல்களும் உணர்வூட்டப்பட்டு விடுகிறன. என்றாலும் இவ்வகை மித மிஞ்சிய உணர்வூட்டல்கள், ஆளுக்கு ஆள் வேறுபடும் சாத்தியம் உள்ளது.” என்கிறார்.

அதிலும் குறிப்பாக, ஸ்கிட்ஸோடைப்பல் மற்றும் மனச்சிதைவுத் தன்மை உள்ளவர்களிடம் இந்த வடிகட்டல் முறை மிகவும் குறைந்தே காணப்படுவது நிரூபணமாகியுள்ளது.

லேடண்ட் இன்ஹிபிஷன் ( Latent Inhibition) அல்லது எல் 1 ( L 1) எனக் குறிப்பிடப்படும் இந்த வடிகட்டல் செயல்பாடு குறைவுபடும் போது, ஆழ்மனத்திரையில் அனைத்துத் தகவல்களும் ஓடவாரம்பிக்கிறது. இதன் விளைவாக விசித்திர எண்ணங்களும், பிரமைகளும் உருவாகின்றன என்கிறார்கள்.

புத்துருவாக்க சிந்தனையில் ஈடுபடும் ஒருவர் மற்றவர்களை விடவும் தனது மூளையிலிருந்து சுமார் 8 முதல் 12 ஹெர்ட்ஸ்க்கும்( Hertz) அதிகமான ஆல்ஃபா வீச்சினை ( Alpha Range ) வெளிவிடுகிறார் எனவும் கண்டுள்ளனர். இந்த ஆல்ஃபா ஆற்றல், சம்பந்தப்பட்டவரை அவரது துறையில் மிகத் தீவிரமாக ஈடுபடவைக்கும் தன்மை கொண்டது. இவை ஒருவரை மேன்மேலும் அக உலகை நோக்கி இழுத்துச் செல்வதால் அவர்கள் புற உலக எண்ணங்களில் இருந்தும் விடுபட்டுவிடுகிறார்கள் என்னும் கருத்தினை, ஆண்ட்ரேயாஸ் ஃபிங் ( Andreas Fink) என்னும் ஔஸ்ட்ரியா நாட்டு ஆய்வாளர் முன் வைத்துள்ளார். இதுவே அவர்களை ஸ்கிட்ஸோடைப்பல் நிலைக்கு இட்டுச் செல்கிறது என்பது அவரது வாதமாகும்.

இந்த ஆல்ஃபா அலைகள் குறித்து 2009ல் குனியோஸ்(Kounios) மற்றும் பீமன்(Beeman) என்னும் இரு ஆய்வாளர்கள் ஆராய்ந்த போது, தொடர்ச்சியான ஆல்ஃபா அலைகள், முடிவில் ‘காமா’ ( Gamma) அலைகளாக, அதுவும் சுமார் 40 ஹெர்ட்ஸ்ஸுக்கும் மேலான அலைவரிசைக்கு மாற்றமடையும் எனவும், இது மேலும் ஆழ்மன நிலைக்கு இட்டுச்செல்ல வல்லது எனவும் கண்டுள்ளனர். [1]

தலைமம் அல்லது மூளையின் உள்ளறையில் (thalamus) இடம் பெற்றிருக்கும் துணைப்புறணிப்பகுதியில் ( sub cortical)  இருக்கும் டோபமீன் 2 ( D 2 ) இருக்கும் அடர்த்திக்கும், சிந்தனைத் திறனுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்த ஓர்ஜான் டெ மன்ஸானோ ( Örjan De Manzano), ஃப்ரீட்ரிக் யுல்லென் (Fredrik Ullén) ஆகியோர், 14 பேரிடம் மேற்கொண்ட ஆய்வின் வழி,இந்த டோபமீனின் அடர்த்தி குறைவிற்கும் சிந்தனைத் திறன் குறைவிற்கும் தொடர்பு இருப்பதை நிரூபித்துள்ளனர். [2]

அதே சமயம், இந்த நியூரோ டிரான்ஸ்மிட்டர் டோபமீனால் ஏற்படும் புத்துருவாக்க சிந்தனை மற்றும் தன்னிலை மறக்கும் தன்மை என்பன மரபணுக்களோடு தொடர்பு உடையன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இது பற்றிய ஆய்வினை மேற்கொண்ட ஹங்கேரி நாட்டவரான, ட்ஸபோச் கியெரி ( Szabolcs Keri ) 2009 ஆம் வருடம், நியூரெகுலின் 1 (Neuregulin-1 ) என்னும் மரபணு, மனச்சிதைவினால் பாதிப்புறுபவர்களிடம் காணப்படுவதை உறுதி செய்தார்.

இதன் மூலம் மரபணுவில் உண்டாகும் மாறுதல்களுக்கும், புத்துருவாக்கச் சிந்தனை மற்றும் தன்னிலை மறந்து செயல்படுதல் ஆகியவற்றுக்கும் இடையே தொடர்பு இருபதாக நம்பப்படுகிறது.

பொதுவாகக் கிறுக்குத்தனமும், தன்னிலை மறந்து செயல்படுவதுமே ஒருவரைப் படைப்பாக்கச் சிந்தனையாளராக மாற்றிவிடாது. எனினும் அத்தகைய திறமை மிக்கவர்களிடம் ஒருவித கிறுக்குத்தனமும், தன்னிலை மறந்த செயலும் காணப்பட வாய்ப்புகள் உள்ளன.

மேலும் இது போன்ற திறமைகள் வாய்ப்பதற்கு, அவரது புத்திசாலித்தனமும் துணைசெய்தல் வேண்டும்.

இன்றைய விளம்பர உலகில், விநோதமாகச் சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்களுக்குப் பல வித வேலை வாய்ப்புகள் கிட்ட வாய்ப்பு உள்ளதை மறுப்பதற்கில்லை.

மற்றெவரும் சிந்திக்காத வகையான புதுமையான எண்ணங்களை உருவாக்கும் வகையில், இன்று பல பயிற்சிகளும் வழங்கப்பட்டுவருகின்றன. கொக்கோ கோலா, டூ பொன்ற், ஹுமானா போன்ற மிகப் பெரும் உலக வர்த்தக நிறுவனங்கள் இது போன்ற புத்துருவாக்கச் சிந்தனை கொண்டவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் காலம் உருவாகியிருக்கிறது.

எனவே புத்திசாலிகளான, புத்துருவாக்க சிந்தனையாளர்களது காட்டில் இனிமேல் அடை மழைதான்!

***

அடிக்குறிப்புகள்:

[1] குனியோஸ் ட்ரெக்ஸல் பல்கலையில் உளவியல் துறைப் பேராசிரியர்.  ஆஹா கணங்களைப் பற்றிய அவருடைய ஆய்வுகள் குறித்து அவரே பேசும் ஒரு சிறு காணொளியை இங்கே காணலாம்: https://www.youtube.com/watch?v=J1IWm8tJroo

[2]  ஒர்ஜன் டெ மன்ஸானோவின் உரை ஒன்றுக்கான காணொளிக்குச் சுட்டி இங்கு: https://www.youtube.com/watch?v=zaWz3BlACWo

இக்கட்டுரைக்கான ஆதாரங்கள்:

1.Creativity and Psychopathology.

Canadian Journal of Psychiatry 2011. S.H.Carson

2.Thinking Outside a Less intact Box. PLoS   2010.

3.Genes for Psychosis and Creativity.

Psychological Science  2009; S.Keri

4.The Aha Moment   Current Directions in Psychological Science Aug 2009.

5.Creativity in Offspring of Schizophrenic and control Parents.

{இக்கட்டுரை அக்டோபர் 2, 2019 சொல்வனம் (solvanam.com) இணைய இதழில் வெளியானது}

 

 

 

 

 

 

 

Creativity Research Journal . Jan 2001

உணவின்றி வாடுமா உலகு?

அண்மைய ஆனந்த விகடன் இதழ் 30-05-2012 இல் காணக்கிடைத்த செய்தி இது- ”வரலாறு பார்த்திராத அளவுக்குக் கடந்த நிதி ஆண்டில் நாட்டின் உணவு தானிய உற்பத்தி 25.26 கோடி டன்னாக உயர்ந்திருக்கிறது. அதில் அரிசி 10.34 கோடி டன்; கோதுமை 9.23 கோடி டன்…”

ஆனால் இச்சாதனையைப் புரிந்த விவசாயிகளது உற்பத்திப் பொருட்களைப் பாதுகாத்துச் சேமித்து வைப்பதற்கு இந்தியாவில் போதுமான அளவுக்கு சேமிப்புக் கிடங்குகள் கிடையாது! இந்தியாவில் உள்ள சேமிப்புக் கிடங்குகளின் அதிகபட்சக் கொள்ளளவு சுமார் 7.85 கோடி டன்களே என்பதை அந்த செய்திக் குறிப்பு வெளிப்படுத்துகிறது. இது தவிர, இந்திய விவசாயிகள் உற்பத்தி செய்யும் 7.15 கோடி டன் பழங்கள், 13.37 கோடி டன் காய்கறிகள் மற்றும் எண்ணெய் பொருட்கள் ஆகியனவற்றில் சுமார் 35 விழுக்காடு அதாவது மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான அளவு வீணாகிக் கொண்டிருக்கிறதாம்.

இன்னும் சுமார் நாற்பது வருடங்களுக்குப் பின்னர்- அதாவது 2050ல்- உலகமக்கள் தொகை இப்போது இருப்பதை விடவும் சுமார் 200 அல்லது 300 கோடி அதிகமாகி ஏறத்தாழ 900 அல்லது 1000 கோடிகளை எட்டி விடலாம். அவ்வாறு பெருக்கமுறும் மக்கள் தொகைக்குத் தேவையான உணவினை வழங்கும் ஆற்றலை எதிர்கால உலகம் பெற்றிருக்குமா என்று அறிவியலாளர்கள் கவலைப்படத் துவங்கியுள்ளனர்.

இன்று, நமது மக்கள் தொகையில் ஏழில் ஒரு பங்கினர்-அதாவது சுமார் 100 கோடி மக்கள்- பசிக் கொடுமைக்கு ஆளாகி உள்ளார்கள். இதற்கு உற்பத்திக் குறைவு காரணமல்ல. மாறாக, விளைபொருட்களை உரிய வகையில் விநியோகிக்கும் வசதிகள் இல்லாமையே இது போன்ற பட்டினிகளுக்குக் காரணமாக உள்ளதாக, உலக உணவு உற்பத்தி குறித்த அண்மைய அறிக்கை ஒன்று குற்றம் சாட்டுகிறது.

முன்னர் கூறியது போல எதிர்கால மக்கட் தொகை 200 முதல் 300 கோடி வரையில் அதிகரிக்குமாயின் அதற்கான உணவுத் தேவை இன்று உள்ளதைப் போல் இருமடங்காக இருக்கும் என்பதே ஆய்வாளர்களது அச்சமாகும். மக்களில் பல கோடி பேர் பசியால் வருந்தவும், உரிய ஊட்டச் சத்தின்றி இறக்கவும் வாய்ப்புள்ளது. இன்னொரு பக்கம், இவ்வாறான இரட்டிப்பான தேவையின் பின்னால் , அன்றைய காலப் பகுதியில் வாழப்போகும் மக்களது வருவாய்ப் பெருக்கம் – அவர்களை அதிகம் உண்பவர்களாக மாற்றிவிடும், அதிலும் குறிப்பாக, இறைச்சியின் தேவை இவ்வாறு அதிகரிக்க வாய்ப்புள்ளது எனப்படுகிறது.

எனவே, இன்று உணவின்றி வாடும் மக்களது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு மட்டும் நின்று விடாது இனி வரும் காலங்களில் ஏற்படப் போகும் மிதமிஞ்சிய உணவுத் தேவையையும் ஈடு செய்யும் வகையிலும் செயல்பட வேண்டும் என்பதே இவ்வாய்வுகளது கருத்தாகும். இதற்கான வழிமுறைகள் சிலவற்றை ஆய்வாளர்கள் முன்மொழிந்துள்ளார்கள்.

ஒரு புறம், நமது உணவுத் தேவையினை நிறைவு செய்ய வேண்டும். அதே சமயம்,அதன் விளைவாய் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசுபாட்டினைத் தவிர்க்கும் வழிவகைகளிலும் நாம் முனைப்புக் காட்ட வேண்டிய தேவை உள்ளது. இல்லையெனில் வயிற்றுக்கு உணவு அளிப்பதோடு மட்டும் நின்று விடாமல், நோயுறும் மக்களுக்கான மருந்துகளையும் கண்டுபிடிக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.

மேலே சொன்ன உணவுத் தேவையும், சூழல் மாசுபாடும் குறித்த கவலை ஆய்வாளர்களிடையே உருவானபோது, அதனை ஈடு செய்யும் வழிகள் குறித்த ஆய்வுகள் உத்வேகம் கண்டன.
மின்னசோட்டா பல்கலைக் கழகச் சுற்றுச் சூழல் நிறுவனத்தின் செயற்பாட்டாளரான ஜோனாதன் எ ஃபோலே [ Jonathan A Foley] என்பவரது தலைமையில் உலகளாவிய அளவில் ஆய்வாளர்களைக் கொண்ட குழு ஒன்று இதில் முனைப்புடன் ஈடுபடத் தொடங்கிற்று. இக் குழுவினரது பரிந்துரைகள் சென்ற 2010 ல் வெளியிடப்பட்டன.

இன்றைய நிலை

கிறீன்லாந்து, அன்டார்ட்டிகா தவிர்ந்த பூமியின் ஏனைய நிலப்பகுதியில், சுமார் 38 விழுக்காடு விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றுள் பல மிகச் சிறந்த மண்வளம் நிறைந்த விவசாய பூமி ஆகும். எஞ்சியுள்ளவை மலைகள், நகரங்கள், விளையாட்டிடங்கள் மற்றும் பனி மேடுகளாய் உள்ளன. இவை தவிர மேலும் சில, மிகக் குறைந்த பரப்பிலான பகுதிகளைக்; காடுகளும், மேய்ச்சல் நிலங்களும் ஆக்கிரமித்து உள்ளன. சிறிய பரப்பளவில் உள்ள இவற்றை அழித்து விளைநிலங்களாக மாற்றுவதன் மூலம், கரிமம் மற்றும் உயிர்ப் பன்மைத்துவம் நிறைந்துள்ள நிலப்பகுதிகளை இழக்க நேரிடும். இது சுற்றுச் சூழலினை பாதிக்கும்.

சென்ற இருபது வருடங்களில் சுமார் ஐந்து முதல் பத்து மில்லியன் ஹெக்டேர் நிலப் பகுதி இவ்வாறு கையகப்படுத்தப்பட்டதாகவும், இது மொத்த விவசாய நிலங்களின் பரப்பளவில் மூன்று விழுக்காடு மட்டுமே என்றும் கூறப்படுகிறது. இவை கூட அரசுகளினால், விளையாட்டிடங்கள், குடியிருப்புகள் என்பன உருவாக்கப்பட்ட பரப்பினை ஈடுசெய்யும் வகையில் ஏற்படுத்தப் பட்டவையே எனவும் தெரிகிறது.

கடந்த இருபது வருடங்களில், உலக உணவு உற்பத்தியில் சுமார் இருபது விழுக்காடு அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனை, வளர்ச்சி என எடுத்துக் கொண்டாலும், அடுத்த சில வருடங்களில் இவை இரட்டிப்பாகும் வாய்ப்புகள் மிக அரிதே. மேலும், இந்த அதிகரித்த உணவிலும், சில வகை உணவு தானியங்களில் அதிக அளவு பெருக்கமும், வேறு சிலவற்றில் இதற்கு எதிரிடையாக உற்பத்தியில் வீழ்ச்சியும் ஏற்பட்டிருப்பதை அறிய முடிகிறது. அதிக அளவில் உணவினை உற்பத்தி செய்வது முழுக்க முழுக்க நன்மை தருவதாகவும் இல்லை – பருவ நிலை, சமுத்திரங்களின் அமிலத்தன்மை என்பன மாறுதல் அடைகின்றன.

தற்போது அதிகரித்திருக்கும் உணவு உற்பத்தியிலும்கூட ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் இன்று உற்பத்தி செய்யப்படும் உணவு வகைகள் அனைத்துமே மனிதர்களுக்கானவை அல்ல. உற்பத்தியாகும் மொத்த உணவில் 60 விழுக்காடு மட்டுமே மனிதர்களது பாவனைக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. எஞ்சியதில் 35 விழுக்காடு கால்நடை உணவுக்காகவும், மீதமுள்ள 5 விழுக்காடு எரிபொருள் மற்றும் தொழிற்சாலைகளின் தேவைகளுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இவற்றுள், இறைச்சி உற்பத்திக்காக கால்நடைகளுக்கு என அளிக்கப்படும் உணவு, மனிதர்களது உணவுத் தேவையினைப் பெரிதும் பாதிப்பதாகச் சொல்கிறார்கள்.ஒரு கிலோ எலும்பற்ற மாட்டிறைச்சியினைப் பெறுவதற்காக் சுமார் 30 கிலோ கால் நடை உணவு வழங்கப்படுகிறது. இதில்கூட கோழி மற்றும் பன்றி போன்றவற்றுக்கான உணவுகளால் பாதிப்பு குறைவாகவே உள்ளது என்கிறார்கள்.

உணவு உற்பத்தியில் வளர்ச்சி காணும்போது தூய நீரின் பயன்பாடும் அதிகரிக்கிறது. ஆறுகள் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றின் மூலம் பெறப்படும் நீரில் 70 விழுக்காடு விவசாயத்திற்கு உபயோகிக்கப்படுகிறது. உற்பத்தியினைப் பெருக்குவதாயின் அதற்குத் தேவையான நீரின் அளவும் அதிகரிக்கவே செய்யும். எனவே நீரின் தேவை சுமார் 80 முதல் 90 விழுக்காடுவரை உயரலாம் என எதிர்பார்க்கிறார்கள். இதனால் இன்று உயிர்ப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளில் பல வற்றிச் செயலற்றுப் போகும். நிலத்தடி நீரும் காலப்போக்கில் இல்லாது போகவும் வாய்ப்புகள் உள்ளன. இன்று அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் ஆறுகள் வற்றிப் போவதற்கு இதுவும் ஓர் காரணமாகச் சொல்லப்படுகிறது.

ஒரு புறம், நீரின் வறட்சி எனில், மறு புறம் அதிக விளைச்சலைப் பெறும் பொருட்டுப் பயன்படுத்தப்படும் களைக் கொல்லிகள், பூச்சி மருந்துகள் மற்றும் உரங்கள் ஆகியனவற்றில் உள்ள இரசாயனப் பொருட்களால் சுற்றுச் சூழல் அதிக அளவு பாதிப்புறுகிறது.

ஆற்று நீரில் 1960 களில் இருந்ததைப் போன்று இருமடங்காக நைதரசன் மற்றும் பொஸ்பரஸ் இரசாயனக் கலப்பு ஏற்பட்டிருப்பதாக ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது. இது ஆற்றின் முகத்துவாரங்களில் வாழும் மீனினங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. உரங்கள் பசுமைப் புரட்சியின் தோழனாக இருப்பினும் அதன் மித மிஞ்சிய பாவனை எதிரிடையான பலன்களையே தரவல்லது. உபயோகிக்கப்படும் உரங்களில் பாதி, நீருடன் கலந்து வெளியேறி சூழலில் கலந்து அதை மாசுபடுத்துகிறது. இது மட்டுமின்றி பசுங்கூட விளைவின் பாதிப்பில், சுமார் 35 விழுக்காடு விவசாயத்தின் மூலமாகவே ஏற்படுகிறது. இவ்வாறு வெளியாகும் காபனீர் ஒக்ஸைடு, மீதேன், நைட்ரஜன் ஒக்ஸைட் எனபனவற்றின் அளவு; உலகளாவிய போக்குவரத்து சாதனங்களால் (கார், பஸ், விமானம் மற்றும் லொறிகள் ) வெளிவிடப்படும் வாயுக்களைவிடவும் அதிகமானதாகும்.

இவை அனைத்தையும் விடக் காடுகளை அழிப்பதன் மூலமும், விலங்குகள், நெல்வயல்கள் இவைகளில் இருந்து வெளியாகும் மீதேன் வாயுக்களாலும், மிதமிஞ்சிய உரங்களினால் உருவாகும் நைட்ரஸ் ஒக்ஸைடினாலும் உருவாகும் பசுங்கூட விளைவுகள் மிகமிக அதிகமாகும் எனப்படுகிறது.

அச்சம் போக்கும் ஐந்து வழிகள்

மனிதக்குலம் உணவின்றி வாடும் நிலையினைத் தவிர்க்க, பின்வரும் வழிகளைப் பின்பற்றலாம்:

1.வறண்டவலையப் பிரதேசங்களில் தரிசாகக் கிடக்கும் நிலங்களைப் புதிதாக விவசாயத்துக்கென ஆக்கிரமிக்காது இருத்தல்.

2.இப்போது குறைந்த அளவிலான உற்பத்தியினை அளிக்கும் பகுதிகளை மேம்படுத்தி அதிக உற்பத்தியினை ஏற்படுத்துதல்.

3. நீர் மற்றும் உரம் இவை இரண்டினையும் உரிய வகையில் பயன்படுத்தும் வழிகளைக் கண்டறிதல்.

4. இறைச்சி உண்பவர்கள் அதன் அளவினைக் குறைத்துக் கொண்டு, அதற்கான மாற்று வழிகளைப் பின்பற்றுதல்.

5. உணவு உற்பத்தியின் போதும், அதனைப் பின்னர் பகிர்ந்தளிக்கும் போதும் ஏற்படும் இழப்புகளை மட்டுப்படுத்தும் வழிகளை உருவாக்குதல்.

இதில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும், புதிய விளைநிலங்களை உருவாக்காது தவிர்ப்பதன் மூலம் உயிர்ப்பன்மைத்துவ அழிப்பும் அதன் விளைவாய் ஏற்படும் கரிம வாயுவின் அதிகரிப்பும் தடுக்கப்படும்.

இதற்குச் செயல் வடிவம் தரவென.. REDD [ Reducing Emissions from Deforestation and Degradation- காடழிப்பு மற்றும் நிலத்தின் இயல்பு இவற்றிலிருந்து உண்டாகும் விழைவுகளைக் குறைத்தல்] என்னும் அமைப்பின்வழி, பணக்கார நாடுகள் வறிய நாடுகளில்; அதிலும் குறிப்பாக வரண்ட பிரதேச நாடுகளில் மேற்கொள்ளப்படும் காடழிப்பினைத் தவிர்க்கும் வகையில் ஊக்கத் தொகையினை வழங்க முன்வரலாம். இவை மட்டுமன்றி விளை பொருட்களைச் சந்தைப்படுத்தும்போது அவை காடழிப்பின் மூலம் பெறப்பட்ட நிலத்தில் விளைந்தவை அல்ல என்னும் உறுதிச் சான்றினை வழங்கும் முயற்சியினையும் செயல்படுத்தலாம். இதனால் உற்பத்திக்கெனப் புதிய இடங்களை நாடி, ஏற்கனவே உள்ள பூமியின் காட்டு வளங்களை அழிப்பது தவிர்க்கப்படும்.

அடுத்து, உற்பத்தித் திறனை அதிகரிப்பது தொடர்பானதாகும். இதில், ஏற்கனவே ஓரளவு நல்ல உற்பத்தியினை அளித்து வரும் விவசாய நிலங்களில், நவீன மரபணுப் பயிர்களை வளர்ப்பதும், அவற்றினை நிர்வகிப்பதும் அடங்கும்.

மேலும், ஆப்பிரிக்கா, மத்திய அமெரிக்க நாடுகள் மற்றும் தெற்கு ஐரோப்பிய நாடுகளில் இன்று, படிப்படியாக வளர்ச்சி அடைந்து வரும் விவசாய மேம்பாடுகளில் இடம் பெறும் சக்தி மிக்க உரவகைகளையும், அவற்றினை பயன்படுத்தும் வழிமுறைகள், சிக்கனமான நீர்ப்பாசனத் திட்டங்கள் என்பனவற்றினையும் அறிமுகம் செய்திடலாம்.

பதினாறு வகையான, பயிரினங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று; இவ்வாறான வழிமுறைகளின் மூலம் சுமார் 50 முதல் 60 விழுக்காடு வரை அதிக விளைச்சலைப் பெறமுடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பும் மிகக் குறைவானதாகவே இருந்தது.

இவற்றினை அடுத்து இடம் பெறுவது , நீராதாரங்களையும், விவசாயத்துக்குப் பயன்படுத்தும் உரங்களையும் உரிய வகையில் கையாள்வது பற்றியதாகும். இதில், ஓர் குறிப்பிட்ட அளவு நீர்; உரம் மற்றும் அதற்கெனச் செலவிடும் ஆற்றல் இவைகளது அடிப்படையில், மிக உயர்ந்த விளைச்சலைப் பெறுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிவது முக்கியமாகிறது.

சராசரியாக ஒரு லிட்டர் நீரின் மூலம் ஒரு கலோரி ஆற்றல் கொண்ட உணவு உற்பத்தி செய்யப்படுவதாகக் கண்டுள்ளனர். இவை இடத்திற்கிடம் வேறுபடினும் இதனைச் சராசரி அளவு எனக் கொள்லலாம். நீரினைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வழிமுறைகளின் கீழ்; சொட்டு நீர்ப்பாசனம் ( இதில் பயிரின் வேரினுக்கு நீர் செலுத்தப்படும்), பயிர்களின் அடிப்பகுதியைச் சுற்றிலும் சேதனப் பொருட்களால் மூடிவைத்தல் ( இதனால் பயிரின் வேர்ப்பகுதி ஈரலிப்பாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது), மற்றும் வாய்க்கால்கள் மூலமாகப் பாய்ச்சப்படும் நீரின் இழப்பினை ஈடுசெய்யும் வகையில் அவற்றை மாற்றி அமைப்பது போன்றவைகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

உரத் தேவையைப் பொறுத்தமட்டில், சில பயிர்களுக்கு அதிக உரமும், ஏனைய சிலவற்றுக்குக் குறைந்த அளவும் போதுமானதாக இருக்கும். இவற்றை ஆராய்ந்து உரிய அளவில் பயன்படுத்துவதன் மூலம் தேவைக்கு அதிகமான உரத்தினால் உண்டாகும் இரசாயனக் கழிவுகள் கட்டுப்படுத்தப்படும். இது போன்ற செயல்பாடுகள் சீனா, வட இந்தியா, மத்திய அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன என்பதை ஆய்வுகள் சுட்டுகின்றன.

இதனை அடுத்து, இறைச்சியின் தேவையைப் படிப்படியாகக் குறைப்பதன் மூலம் உணவுப் பற்றாக்குறையைத் தவிர்க்க இயலும் என விதந்துரைக்கப்படுகிறது. முன்பு குறிப்பிட்டது போன்று, ஒரு கிலோ இறைச்சியினைப் பெறுவதற்கு சுமார் முப்பது மடங்கு உணவு தானியம் கால்நடைகளுக்கு உணவாக இடப்படுகிறது. எனவே இதனைக் குறைத்து, மனிதர்கள் உண்ணும் பயிர்களுக்காக் இத் தொகை செலவிடப்படலாம். இவ்வாறு, கால்நடைகளைக் கொழுக்க வைத்து அவற்றைப் பின்னர் உணவாக (இறைச்சி) உண்பதைவிடவும், அவ்வுணவினை நேரடியாகவே மனிதர்களுக்கு வழங்க வகை செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் ஒவ்வொரு வருடமும் சுமார் 15,000,000,000,000,000 கலோரிகளை மிச்சம் பிடிக்கலாம் எனக் கண்டுள்ளனர்.

இது தற்போதைய உணவு வழங்கும் கலோரிகளை விடவும் 50 விழுக்காடு அதிகமானதாகும்.
இதில் மாட்டிறைச்சிக்கு பதிலாக, புல்வெளிகளில் மேய்ச்சலிடும் மாடுகள், பன்றிகள் மற்றும் கோழிகள் போன்றனவற்றின் இறைச்சியினைத் தொடர்ந்து பயன்படுத்திவருவதன் மூலமாகவும் பாதிப்பு அதிகம் ஏற்படாது தவிர்க்க இயலும்.

இவை அனைத்தையும்விட முக்கியமானது, உற்பத்தியாகும் உணவு தானியங்களைச் சேமித்து வைப்பதும் அவற்றை உரிய வகையின் தேவைப்படுபவர்களுக்கு விநியோகம் செய்வதும் ஆகும்.

சுமார் 30 விழுக்காடு உணவு இவ்வகையில் வீணக்கப்படுவதாக கணக்கிட்டிருக்கின்றனர். பணக்கார நாடுகளின் உணவகங்களின் குப்பைத் தொட்டிகளில் வீசப்படும் உணவுப் பொருட்கள், வறிய நாடுகளில் உரிய வகையில் பாதுகாக்கப்படாது பழுதடையும் பண்டங்கள், குறித்த இடத்திற்குக் குறித்த நேரத்தில் சென்றடையாது வீணாகும் உணவு, சேமிப்புக் கிடங்குகளில் எலிகள் மற்றும் பறவைகளால் வீணடிக்கப்படும் தானியங்கள் எனப் பல வகையில் உணவு மனிதர்களது பசியைப் போக்காது வீணாகிறது.

உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதற்கான தீர்வுகள் அனைத்தையும் உரிய வகையில் செயல்படுத்துவதன் மூலம், 2050 ல் ஏற்படப் போகும் உணவுத் தேவையினை நாம் துணிவுடன் எதிர்கொள்ள முடியும் என்கின்றனர் ஜோநாதனது தலைமையில் செயல்படும் ஆய்வாளர்கள்.
உலகின் மூலை முடுக்குகளில் விளையும் சொற்ப அளவிலான உணவினையும்கூட, மற்றொரு கோடியில் அதற்கான் தேவையுடன் காத்திருக்கும் மற்றையவர்களுக்குத் தெரிவிக்கவும், அதனை அவர்களிடம் சேர்ப்பிக்கும் வசதிகளை ஏற்படுத்தவும் இன்றைய கணினிமய உலகில் சாத்தியமே. எதிர்வரும் சந்ததியினர் புத்திசாலித்தனதுடன் செயல்படின், 2050 ல் இன்றிருக்கும் உணவுப் பற்றாக்குறைகூட இல்லாத நிலையினை ஏற்படுத்திட இயலும்.

(முற்றும்)

இக்கட்டுரை எழுத உதவியவை :

1. Solutions for a Cultivated Planet; Nature 2011; Jonathan A. Foley.

2. Food Security- Science 2010; H.Charles J. Godfray.

3. Enough: Why the World’s poorest Starve in an Age of Plenty; Public Affairs 2010.

4. Global Consequences of Land use; Science July 2005; Jonathan A.Foley.

[சொல்வனம் -’ இணைய இதழில் ’ 16-08-2012 ல் வெளியானது]

தீங்குயிரி ஒழிக்கும் மரபணு அறிவியல்

காலங்காலமாக வேளாண் உணவு உற்பத்திக்கு அச்சுறுத்தலாக விளங்குபவை தீங்குயிரிகளே. இவற்றை அழிப்பதற்கெனப் பூச்சி கொல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை சம்பந்தப்பட்ட தீங்குயிரிகளை அழிப்பதோடு மட்டும் நின்றுவிடாது சுற்றுச் சூழலையும் மாசுபடுத்தி விடுகின்றன. மேலும், பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்தும் மனிதர்கள், அண்மையில் வாழும் ஏனைய உயிரினங்கள் முதலியனனவற்றுக்கும் இவை தீமை விளைவிக்கின்றன.

பூச்சிகொல்லிகளால் ஏற்படும் பாதிப்புகளை ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்தும் வகையில், ஆய்வுகள் மேற்கொண்டு வருவதன் பயனாய், இவ்வகைத் தீங்குயிரி இனங்களின், ஆண்களை மலடாக்குவதன் மூலம், அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் முறை உருவானது.

இவ்வகையில் மலடாக்கும் உத்தி உலக நாடுகள் பலவற்றில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளன. பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் ( தீங்குயிரிகள்) பெரும் அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, அவற்றின் ஆண் பூச்சிகள் கதிர் வீச்சின் துணையோடு மலடாக்கப்படுகின்றன. இவற்றைப் பின்னர் வெளியே பறக்கவிடுவதன் மூலம், இவை ஏனைய பெண் பூச்சிகளுடன் உறவு கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இவ்வாறான உறவின் மூலம் வெளிவரும் முட்டைகள் புதிய உயிரினைத் தோற்றுவிக்கும் பலம் இழந்தவையாக இருப்பதால் இம் முறையின் மூலம் சம்பந்தப்பட்ட தீங்குயிரினம் காலப்போக்கில் முற்றிலும் அழிந்துபட வாய்ப்பு உருவாகிறது. இவை ஓரளவு வெற்றியையும் அளித்து வருகின்றன.

அமெரிக்காவிலும், பிற நாடுகள் சிலவற்றிலும் கால்நடைகளைத் தாக்கிவந்த திருகுப் புழுக்கள் (Screw Worm) இதுபோன்று, ஆண் புழுக்களை மலடாக்கியதன் வழி முற்றாக அழிக்கப்பட்டிருக்கிறது. அதே போல்,அமெரிக்காவின் மிகப்பெரும் ஏரிகளில் பரவி வந்த ஒருவகை ஒட்டுண்ணி மீனினமும் மேற்குறிப்பிட்ட உத்தியின் மூலம் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால், இம் முறையின் மூலம் ஆண் பூச்சிகளை மலடாக்குவதில் மிகுந்த கவனமுடன் செயல் படும் நிலை அவசியமாய் இருப்பதுடன், செயல்முறையில் சிரமங்களும் ஏற்படுகின்றன.

கதிர்வீச்சின் அளவு அதிகமாய் அமைந்துவிடில் ஆண் பூச்சிகள் ஏனைய பெண் பூச்சிகளுடன் உறவு கொள்ளும் வலிமையினை இழந்து விடுகின்றன. அதே போன்று கதிர் வீச்சின் அளவு குறைவாக இருப்பின், அவற்றின் மூலம் உருவாகும் முட்டைகளில் இருந்து புதிய உயிர்கள் தோன்றும் வாய்ப்பும் ஏற்படலாம். எனவே, இதில் மிகுந்த எச்சரிக்கையுடன், குறிப்பிட்ட அளவில் மட்டுமான கதிர்வீச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும். இதிலும், ஏற்கனவே மலடாக்கப்பட்ட ஆண் பூச்சிகளுக்கும், புதியனவற்றுக்கும் இடையே வேறுபாடு காண்பதிலும் சிக்கல்களை எதிர் கொள்ளும் நிலை உள்ளது. இதனால், இம்முறையின் மூலம் தீங்குயிரிகளை அழிக்கும் செயல் துரித வளர்ச்சியினை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டுவருகிறது

இந்த முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த சமயத்தில், 1990 ஆம் ஆண்டளவில், பிரிட்டனின் ஒக்ஸ்ஃபோர்ட் நகரில், ஒக்ஸிடெக் ( Oxitec) என்னும் உயிரியல் தொழில் நுட்ப நிறுவனத்தினை நடாத்தி வந்த லூக் அல்ஃபே ( Luke Alphey ) தமது நண்பர் ஒருவர் மூலமாக இந்த மலடாக்கும் நுட்பத்தினை அறிய நேர்ந்தது. ஏற்கனவே உயிரியல் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டிருந்த அவருக்கு, இந்த மலடாக்கும் துறையில், ஏற்கனவே இருப்பதைவிடவும் சுலபமான, அதே சமயம் செலவு குறைந்த முறை ஒன்றினைக் கண்டுபிடிக்கும் ஆர்வம் எழுந்தது.

medfly-male-duel
அடுத்த சில வருடங்களில் பழங்களைப் பாதிக்கும் ஒரு வகை ஈக்களை ஒழிப்பதற்கு மரபணுக்களுடன் இணைந்த அதே இன ஈக்களை இவர் உருவாக்கியிருந்தார். இவரது செய்முறையின் விளைவால், புதிய நச்சு மரபணுக்களைப் பெற்றிருந்த ஈக்களின் உறவால் அவற்றுடன் உறவு கொண்ட ஈக்கள் மடிந்து போயின.

இதன் தொடர்ச்சியாய் பிரிட்டனில், பருத்தி உற்பத்தியினை பாதித்துவந்த ஒரு வகைப் புழுக்களை அழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது, அப்புழுக்களில் ஏற்கனவே மரபணு ஏற்றப்பட்ட ஆண் புழுக்களுக்கும், புதியனவற்றுக்கும் இடையே இனம் காண்பதற்கு உதவியாக ‘டிஎஸ் ரெட்’ ( Ds Red ) என்னும் ஒளிரும் அடையாளத்தை அவற்றின் மரபணுத் தொகுப்பினுள் செலுத்தி அவற்றினை இனம் காணும் வழியினை ஏற்படுத்தியிருந்தார். 2002 இல், அமெரிக்காவில் மேற்கொள்ளப் பட்ட தீங்குயிர் ஒழிப்பு நடவடிக்கைகளில் இந்த மரபணு ஏற்றப்பட்ட புழுக்களும் ஏனைய மலடாக்கப்பட்ட புழுக்களுடன் இடம் பெற்றிருந்தன.

2006 இல் இந்த மரபணு மாற்றத்தின் வழி தன் இனத்தையே அழிக்கும் பருத்திப் புழுக்கள் வெளி உலகிற்கு அறிமுகமாயின. இவைகளே, உலகின் முதல் மரபணு மாற்றத் தீங்குயிரி என்னும் பெயரையும் பெற்றன. இம்மரபணு மாற்றத்திற்கு உள்ளான ஆண் தீங்குயிரியும், சாதாரண பெண் தீங்குயிரியும் இணைவதன் மூலமாக உருவாகும் முட்டைகளில் இருந்து வெளிப்படும் ஆண் இனம், தன் உடலில், தனது இனத்தினை அழிக்கும் நஞ்சுடனேயே பிறக்கிறது. அது வளர்ந்து ஏனைய பெண் தீங்குயிரிகளுடன் உறவில் ஈடுபடும்போது அப்பெண் தீங்குயிர்கள் அனைத்தும் இறந்துவிடும்.

இந்தச் செயல்முறையில், முன்னைய, மலடாக்கும் செயல் முறையினை விடவும் வேகமாகக் குறிப்பிட்ட தீங்குயிரினை அழிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அடுத்த மூன்று வருடங்களில் இது அடைந்த வெற்றியின் காரணமாக, சென்ற வருட இறுதிவரை அமெரிக்காவில் மட்டும் சுமார் இருபது மில்லியன் மரபணு மாற்றத் தீங்குயிரிகள் உருவாக்கி வெளிவிடப்பட்டிருக்கின்றன.

டெங்குக் கொசுக்களை அழிக்கும் ஆய்வுகள்:

malarial-mosquitoesமேற்சொன்னவாறு பருத்திச் செடிகளை நாசம் செய்யும் புழுவினத்தை அழிப்பதுடன் மட்டும் நின்றுவிடாது, வறண்ட வலயப்பகுதிகளில் ஆண்டு தோறும் ஐம்பது முதல் நூறு மில்லியன் பேரைப் பலிவாங்கும் டெங்குக் காய்ச்சலின் காரணகர்த்தாவான ‘ஏடிஸ்’ கொசுக்களைக் கட்டுப்படுத்தும் ஆய்வுகளில் ஒக்ஸ்சிரெக் நிறுவனம் ஈடுபடத் தொடங்கியது.

சென்ற மார்ச் மாதம் (2012) உலகசுகாதார நிறுவனத்தினால் (WHO) வெளியிடப்பட்ட இந்தத் தகவலின்படி 1970 ஆம் வருடத்தின் முன் உலகளாவிய அளவில் சுமார் ஒன்பது நாடுகளில் மட்டும் பரவி இருந்த டெங்கு இன்று ஆபிரிக்கா, அமெரிக்கா, கிழக்கு மத்திய தரைக் கடல் நாடுகள், தென்கிழக்கு ஆசியா, மேற்கு பசுபிக் நாடுகள் உட்படச் சுமார் நூறு நாடுகளில் பரவி விட்டிருக்கிறது.

இது மட்டும் அல்லாமல், உலக சனத் தொகையில் நாற்பது விழுக்காட்டினர்- அதாவது சுமார் 2500 மில்லியன் பேர்- டெங்கின் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும், இதில் 1800 மில்லியன் மக்கள் ஆசிய பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களாக இருபர் என்றும் குறிப்பிடுகிறது அந்த உலகசுகாதார நிறுவன அறிக்கை! இந்த டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் ‘ஏடிஸ் ஏஜிப்டி’ (Aedes Aegypti) இனக் கொசுக்கள் வழமையான பூச்சிகொல்லிகளுக்குக் கட்டுப்படுவதில்லை. எனவே இவற்றை இல்லாது ஒழிக்கப் புதுவகை உத்திகளை மேற்கொள்வது அவசியமாக இருந்தது.

இந்நிறுவனத்தின் மரபணு மாற்ற ஆண் கொசுக்கள், ஏனைய பெண் கொசுக்களுடன் கூடி உருவாகும் முட்டைகளில் இருந்து வெளிப்படும் லார்வாக்கள் (Larvae) ஏனைய லார்வாக்களைப் போன்று வளர்ச்சி அடையும் வல்லமையினைப் பெற்றிருந்தன. ஆனால், அவை கூட்டுப் புழுக்களாக (pupae) மாறும் பருவத்தில் அவற்றின் தந்தையர்க்கு ( ஆண் புழுக்களுக்கு) வழங்கப்பட்ட மரபணுக்கள் லார்வாக்களைக் கொன்றழித்துவிடும். இதன் மூலம், அப்புதிய லார்வாக்கள் தாம் வளரும் சமயத்தில், மரபணு மாற்றப்படாத கொசுக்களின் லார்வாக்களுடன் போட்டியிட்டு அவற்றுக்கான உணவின் ஒரு பகுதியினையும் தின்று தீர்த்து விடுகின்றன. இதன் வழியாகவும் அவற்றை இன அழிப்புச் செய்யும் உத்தி கடைப்பிடிக்கப்படுகிறது என்பது அல்ஃபேயின் கோட்பாடாகும்.

இம்முறை மூலம் மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் 2009 ஆம் ஆண்டு, கரீபியன் தீவுக் கூட்டங்களுள் ஒன்றான கைமன் ( Cayman Islands ) தீவில் பரீட்சார்த்தமாக வெளிவிடப்பட்டிருந்தன. இங்கு உள்ள ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கு எண்ணிக்கையிலான மரபணு மாற்றக் கொசுக்களே இதன்போது வெளிவிடப்பட்டன.

எனினும், இதன் மூலம் அங்குள்ள பெண் கொசுக்களுடன் இவை கூடியதால் உருவான முட்டைகளில் சுமார் பத்து வீதமானவை இம்மரபணுக்களுடன் காணப்பட்டன. இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்போது, ஏடிஸ் கொசுக்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்படுவதுடன், நாளைடைவில் அவை முற்றாக ஒழிக்கப்பட்டுவிடும் என்கிறார் அல்ஃபே.

சென்ற வருட இறுதி பகுதியில் இதனை விடவும் அதிக செலவில் இதே போன்ற மரபணு உத்தியுடன் கூடிய செயல் திட்டம் ஒன்று பிரேசில் நாட்டின் ஜுவாசிரோ ( Juazeiro)வில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இவற்றைவிட மற்றொரு புதிய திட்டத்தினையும், அல்ஃபேயின் குழுவினர் அறிமுகம் செய்ய உள்ளனர். ஏற்கனவே உள்ள முறையில், ஆண் கொசுக்களை இனங்கண்டு அவற்றுக்கு மரபணு மாற்றத்தினை ஏற்படுத்துவதோடு, பெண் கொசுக்களின் செயல்பாட்டினைக் கட்டுப்படுத்தும் வகையிலும் மரபணு மாற்று உத்தியினை உபயோகிக்க உள்ளனர்.

பெண் கொசுக்களே மனிதர்களின் இரத்தத்தை உறிஞ்சுவதன்மூலம் தாம் வாழ்வதோடு மட்டுமல்லாமல் மனிதர்களுக்கு டெங்கினையும் பரிசாக அளித்துவிட்டுச் செல்கின்றன.இவை பறக்கும் ஆற்றலை இழந்துவிட்டால், இரத்த உறிஞ்சலும், அதன் வழியாக டெங்குப் பரவலும் இடம் பெறாது தவிர்க்கப்பட்டு விடும். அதோடு, ஆண் பெண் என்னும் வேறுபாடின்றி எல்லாக் கொசுக்களும் ஏதோ ஒரு வகையில் மரபணுமாற்ற உத்தியின் வழி தமது சந்ததிகளை அழிப்பதில் முனைந்து செயல்படும் நிலையை உருவாக்கிவிட முடியும். இந்த முறைமை, ஏடிஸ் கொசுக்களை ஒழிப்பதில் துரிதமான வெற்றியினை அளிக்கும் என நம்புகிறார்கள்.

பிராணித் தீங்குயிரி ஒழிப்பின் ஆரம்பம்:

இத்தகைய தீங்குயிரிகளில் பூச்சி இனங்களை அழிப்பதில் வெற்றி கண்டது போன்று, தீங்கு விளைவிக்கும் விலங்குகளை அழிப்பதில் இன்னும் சில சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. தவளைகள், எலிகள், முயல்கள் எனபனவும் வேளாண் துறையில் பல இழப்புகளுக்குக் காரணமாக இருக்கின்றன. இவற்றைத் தீங்குயிரிகள் என்று முற்றிலுமாக அழித்துவிட முடியாது.

அல்ஃபேயும் அவரது குழுவினரும் பூச்சி இனங்களில் தீங்குயிரி வகைகளை அழிப்பதில் முனைப்புக்காட்டிய காலப்பகுதியில், அவுஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனமான ‘சிஸிரோவின் ’ ( CSIRO ), சூழலியல் ஆய்வாளரான ரொனால்ட் திரேஷர் ( Ronald Thresher ), இந்தத் தன்னின அழிப்பு முறையினை ஏனைய விலங்குகளால் ஏற்படும் பாதிப்பினை நீக்கவும் பயன்படுத்த முடியும் என்னும் கருத்தினை வெளியிட்டிருந்தார்.

அவர் அதனுடன் நின்றுவிடாது, ‘ஸீப்ரா மீன்’ ( Zebra Fish )களில் தனது பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ளவும் ஆரம்பித்தார். தென் அவுஸ்திரேலியாவின் முர்ரே-டார்லிங் ( Murray-Darling) நதிகளின் முகத்துவாரத்தை ஒட்டிய பகுதிகளில் மண் அரிப்பினையும்,அங்கு வாழும் மீனினங்களுக்கு அச்சுறுத்தலாயும் விளங்கும் ‘கார்ப்’ ( Carp ) மீன்களை இல்லாது ஒழிக்கும் முயற்சியின் முதற்படியாக அவர் இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.

இம்மீனினத்தில் பெண் இனங்களைத் தோற்றுவிக்கும் ’அரோமற்றேஸ்’ ( Aromatase ) என்னும் நொதிகளை ( enzymes) நீக்கிவிடுவதன் மூலம், தொடர்ந்து ஆண் மீன்களே உற்பத்தியாகும் முறையினை இவர் கண்டுபிடித்துள்ளார். இவரது மாதிரிகளின் (Models ) மூலம் இவர் பெற்ற தகவல்களின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள ‘கார்ப்’ மீனினத்தின் ஐந்து விழுக்காடு ( 5%) மீன்களுக்குப் பெண் வாரிசுகள் உருவாகாத வகையில் மரபணு மாற்றத்தினை ஏற்படுத்துவதன் மூலமாக 2030 ஆம் ஆண்டளவில் அந்த மீனினத்தையே முற்றாக அழித்துவிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது ‘மாதிரி’களின்படி, கரும்புத் தவளைகள் ( Cane Toads ), எலிகள் போன்றவற்றுக்கும் இது போன்ற மரபணு ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்துவதன் வழியாக அவற்றின் பெருக்கத்தையும் கட்டுப்படுத்த இயலும் எனத் தெரிய வந்துள்ளது.

தீங்குயிரி இனங்களை அழிக்கும் இவ்வாறான ஆய்வுகள் ஒரு புறம் நடைபெற்று வந்தாலும், மரபணு மாற்றத்தினை எதிர்க்கும் ஆய்வாளர்கள் இவற்றுக்குத் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

எகோ நெக்ஸஸ் (Eco Nexus) சைச் சேர்ந்த ரிகார்டா ஸ்ரெய்ன்பீரீச்சர் ( Ricarda Steinbrecher ), “இது போன்ற மரபணு மாற்று உத்திகள் நாம் எதிர்பார்க்கும் மாறுதல்களை மட்டும் அல்லாது நாம் எதிர்பார்க்காதனவற்றையும் ஏற்படுத்த வல்லவை “ என எச்சரித்துள்ளார். இவை ஏனைய உயிரினங்களில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் கருதுகிறார்.

ஹோசிமின் சிற்றியில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளரான ‘ஜெரெமி ஃபரார்’ ( Jeremy Faraar ) “இவ்வாறான மரபணு மாற்றச் செயல் முறைகளால் உண்டாகும் நன்மைகளையும், அவற்றினால் விளையும் தீமைகளையும் ஒப்பீடு செய்து அவற்றில் நன்மைகளே அதிகம் ஏற்படும் எனத் தெரிந்தால் இவை தொடரப்படுவது அவசியம். ஏனெனில் டெங்கு போன்ற விரைந்து பரவும் நோய்களை அழிப்பதற்கு இம் மரபணு உத்திகளே வெற்றிபெற உதவுவதை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்,” எனக் கருத்துரைத்துள்ளார்.

எனினும் மாற்று மரபணு உத்தியினை மக்கள் ஏற்றுக் கொள்வதில் காணப்படும் தயக்க மனப்பாங்கு அதிகமாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக இதனை எதிர்ப்பதில் ஐரோப்பிய நாடுகள் முன்னணியில் உள்ளதை மறுப்பதற்கில்லை.

இம்முறைமையை முதலில் உருவாக்கியவரான அல்ஃபே, “ தொடரும் வெற்றிகள் மக்களது மனதைக் காலப்போக்கில் மாற்றும் திறன் கொண்டவை. அப்போது மரபணு மாற்றங்களின் மீது மக்களுக்கு இருந்துவரும் சந்தேகமும், பயமும் நீங்க வழி ஏற்படும்” என்கிறார் நம்பிக்கையுடன். காலப் போக்கில் சுற்றுச் சூழலைப் பாதிக்கும் ஏனைய பூச்சிகொல்லி மருந்துகளுக்கு பதிலாக, இது போன்ற மாற்று உத்திகள் பயன்படுத்தப்படுவதன் வழி இம் மருந்துகளால் எமது சூழலில் உருவாகும் பாதிப்புகளில் இருந்தும் விடுபடுவதோடு நோய்களையும் விரட்டுவதில் வெற்றி காணும் நிலை உருவாகும்.

கட்டுரை ஆக்கத்திற்கு ஆதாரமாயிருந்தவை:-

1.W.H.O website March 2012.

2.Science Vol 287, P 2474.

3.New Scientist 22 March 2003.

[2012-10-04  ’சொல்வனம்’ இணைய இதழில் வெளியானது]

ஈழத் தமிழரை மறந்த இந்தியப் பிரதமர்!

இம் மாதம் (செப்டெம்பர் 2011) 24 ந் தேதி  ஐக்கிய நாடுகள் சபையின் அறுபத்துஆறாவது ஆண்டுப் பொதுக்குழுவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், உலகவல்லரசான அமெரிக்காவையும், ஏனைய ஐரோப்பிய நாடுகளையும் சாடும் வகையில் உரையாற்றி இருக்கிறார்.
“சட்டப்படியான ஆட்சி என்பது நாடுகளுக்கு உள்ளே மட்டும் அல்ல, சர்வதேச அரங்கிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், தங்களுக்கு எப்படிப்பட்ட அரசு வேண்டும் என்பதை அந்தந்த நாடுகளின் மக்களே தீர்மானிக்குமாறு விட்டுவிட வேண்டும். வெளியிலிருந்து ராணுவத் தாக்குதல் மூலம் ஒரு நாட்டைக் கைப்பற்றி அங்கே புதிய ஆட்சியை நிறுவும் போக்கு கூடவே கூடாது”
எனக் கூறியதன் மூலம், அவர் மறைமுகமாக அமெரிக்காவையே சாடியிருக்கிறார் என்னும் கருத்து சர்வதேச ராஜதந்திரிகள் மத்தியில் உருவாகி இருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஈராக் மீதும்; ஆப்கானிஸ்தான் மீதும் ஐக்கிய நாடுகளின் ஒப்புதல் இன்றியே; அந் நாடுகளின்மீது படையெடுத்து அங்கு பெரும் மனித மற்றும் பிரதேச அழிப்புகளையே நடாத்திய அமெரிக்காவை அப்போது கண்டிக்காது விட்டுவிட்டு ;இன்று அந் நாட்டின் மீதும் அதன் நேச நாடுகள் மேலும் குற்றம் சுமத்தும் துணிவினை; இந்தியா பெற்றிருப்பதைப் பாராட்டத்தான் வேண்டும்.

அமெரிக்கா மட்டுமல்ல ,ஏனைய மேற்குலக நாடுகள் பலவும் இருபதாம் நூற்றாண்டின் நடுப் பகுதிவரை தங்கள் குடியேற்ற நாடுகளாகக் கருதியிருந்த கீழைத்தேய நாடுகளின் மீது கொண்டிருந்த ஒருவித ‘கீழான’ எண்ணத்தை ;இன்று அந் நாடுகள் சுதந்திரம் அடைந்துவிட்டன என்பதற்காக முற்று முழுதாக மாற்றிக் கொண்டுவிட்டதாக நம்பமுடியாது. அது தவிர,அன்று மேற்குலகிடம் அடிமைப் பட்டிருந்த நாடுகள் சிலவற்றில் ; இன்றைய பொருளாதாரத்தின் முதுகெலும்பாய் விளங்கும் எண்ணெய் வளம் சிக்கிக் கிடப்பதைச் சகித்துக் கொள்ள இவற்றால் இயலவில்லை!எனவேதான் பயங்கரவாத எதிர்ப்பு என்றும், ஜனநாயக மறுமலர்ச்சி என்றும் மிக நூதனமான கண்டுபிடிப்புகளை உருவாக்கி ;அதனையே சாக்காகக் கொண்டு சம்பந்தப்பட்ட நாடுகளைப் ‘பொருளாதார அடிமை’களாக்கும் செயலில் இவ் வளர்ந்த நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. எனவே மன்மோகன் சிங் அவர்கள் இந் நாடுகளின் போக்கினைக் கண்டித்திருப்பது பாராட்டுக்கு உரியதே! அதே சமையம், அவர் பாலஸ்தீனத்தை ஐ.நா பேரவை தனி நாடாக அங்கீகாரம் செய்வதன் அவசியத்தையும் வலியுறுத்தி உள்ளார். இஸ்ரேலின் அடாவடித்தனங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆயுதப் போரினையும், அதே சமையம் ; எண்ணெய் வளங் கொழிக்கும் அரபு நாடுகளின் தயவுக்காகக் காத்திருக்கும் சில மேற்கு நாடுகளின் ஆதரவினையும் பெற்ற பாலஸ்தீனம், நிச்சயம் தனி நாடாக உருவாவது காலத்தின் கட்டாயமே.

மத்திய கிழக்கில் உள்ள பல அரபு நாடுகளின் தார்மீக ஆதரவு பெற்றிருக்கும் பாலஸ்தீனத்தில்; இஸ்ரேல் புரிந்த வன் கொடுமைகளிலும்  பார்க்கப் பலமடங்கு கொடுமைகள், இந்தியப் பெரு நிலத்தின் காலடியில்; ஓர் சுண்டைக்காய் அளவேயான இலங்கையில் அந் நாட்டின் தேசியச் சிறுபான்மை இனமான தமிழினம் அனுபவித்திருக்கிறது.

ராஜீவ் காந்தியின் ஆட்சியின் போதே அங்கு மிகப் பெரிய மனிதாபிமானப் பிரச்னை உருவானதும், அதனை நீக்கும் பொருட்டு அண்டை நாடான இலங்கையின் இறையாண்மை மீறப்பட்டு விட்டது என்னும் கூக்குரல் எழுந்தபோதும், தமிழர் வாழ்விடங்களில் விமான மூலம் உணவுப் பொதிகள் வீசப்பட்டதும், மன்மோகன் அவர்கள் அறியாததல்லவே!
அந்தச் சிறுபான்மைத் தமிழினம் 2009ல் மனிதாபிமானமற்ற வகையில்
அழிக்கப் படும்போது மட்டும் இவர் மௌனித்திருந்ததுதான் ஏனென்று புரியவில்லை!
அது மட்டுமின்றி, இந்த உரையில்கூட ஈழத்தமிழர்களது இன்றைய நிலை பற்றியோ, அதற்கு இந்தியா எவ்வகையில் உதவ முடியும் என்பது குறித்தோ ஓர் வரிதானும் கிடையாது.
இத்தனைக்கும், இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசப்படவேண்டும் என உலகளாவிய மனித உரிமைஅமைப்புகளின் வற்புறுத்தல்கள் தீவிரமடந்திருந்த வேளையில்….. இலங்கையைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல் தவிர்த்திருப்பது இந்திய நடுவு நிலைக் கொள்கைக்கு ஏற்புடையதாகப் படவில்லை.

**********************************************

 

உயர் மட்ட(மான) ‘விதூஷகர்’கள்!

“சர்வசித்தன்”

இந்தியா,இலங்கை… இவ்விரு நாடுகளின் அரசியல் அதிகார ‘உச்சாணிக் கொம்பில்’ இருப்பவர்கள் உதிர்க்கும் வார்த்தைகள்; சில சமையங்களில் ‘வடிவேலு’வையும் மிஞ்சிவிடுபவையாக அமைந்து விடுகின்றன! (இங்கே ‘வடிவேலு’ தி.மு.க வுக்காகப் பரிந்து பேசியதைக் குறிப்பிடவில்லை; அவரது திரையுலக ‘கோமாளித்தனங்களை’யே சுட்டிக் காட்டியுள்ளேன்)

ஈழத் தமிழர்களது அரசியல் உரிமைகள் தொடர்பாக இந்தியா தம்மை வலியுறுத்தவில்லை என்னும் ‘புதிய குண்டொன்றை’ த் தூக்கிப் போட்ட இலங்கை அதிபர் ஒரு புறமும்;

ஈழத் தமிழர்கள் தம்மை அந் நாட்டில் இரண்டாந்தரப் பிரஜைகளாக உணர்கிறார்கள். இந்தியா அவர்கள் அனைவரும் இலங்கையில் சம உரிமையுடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடும் எனக் கூறும் இந்தியப் பிரதமர் மறுபுறமுமாக…. இந்த இரு நாட்டுத் தலைவர்களது அறிக்கைகளைப் படிக்கும் எவருக்கும் நான் ஏற்கனவே கூறிய ‘வடிவேலு’ சமாச்சாரம் மனதில் தோன்றுவதில் வியப்பில்லைத் தானே ?

ஆனால், இந்த இரு தலைவர்களும் உண்மையில்  ‘ஈழத் தமிழர்கள்’ அந் நாட்டில் சம உரிமையுடன் வாழவேண்டும் என விரும்புகிறார்களோ என்னவோ….. இன்று அந் நாட்டில் தமிழர்களுக்கு உரிய மரியாதையும், அவர்களுக்கான அரசியல் பாதுகாப்பும் கிடையாது என்பதைத் தமது பேச்சுகளின் மூலமாக ஒப்புக் கொள்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை!

ராஜபக்‌ஷேவைப் பொறுத்தவரை அவர் ஈழத் தமிழர்களுக்காகக் கவலைப்படும் ஒருவர் என நம்புபவர்கள் மீதுதான் எமக்குச் சந்தேகம் எழும். ஓர் பயங்கரவாத(!?) அமைப்பினைத் துடைத் தொழிப்பதற்காகப் பன்னாட்டு ராணுவ ஆலோசனைகளையும், ஆயுத உதவிகளையும் பெற்றுக் கொண்ட அவருக்கு; இந்தப் போராட்டம் அந் நாட்டின் தமிழர்கள் ஆயுத முனையின் அடக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்டதே என்னும் உண்மை நிச்சயம் தெரிந்தே இருக்கும்!

இத்தனையும் ஏன்? ஆயுதம் ஏந்தியவர்கள் ‘பயங்கரவாதிகளாகவே’ இருந்தாலும், அவர்களையும்… அவர்களால் பாதுகாக்கப்பட்ட தமிழர்களையும் ஒட்டு மொத்தமாக அழித்துவிட்டு….  அந்த ‘இன அழிப்பினை’ வெற்றி விழாவாகக் கொண்டாடும் மன நிலை எந்தத் தலைவருக்கும் வரமாட்டாது. குறிப்பிட்ட ஓர் இனத்தை வெறுக்கும் ஒருவரால் மட்டுமே இது போன்ற ‘விழாக்களை’ நடாத்துவது சாத்தியம் என்பதை மன்மோகன் உட்படக் ‘கருணாக்கள்’வரை புரியாமல் இருப்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!

1971 ஆம் வருடம், சிங்கள இளைஞர்களால் உருவான; ‘மாவோ ’இயக்க சாயம் பூசப்பட்ட ஜாதிக விமுக்திப் பெரமுனவின் ஆயுதக் கிளர்ச்சியினை அடக்க அன்றைய இந்திய அரசும் உதவியிருக்கிறது. அப்போது ஆட்சியில் இருந்தது… இன்று ஆட்சியில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திராக் கட்சி அரசே ஆகும்.அப்போது பல்லாயிரம் சிங்களப் ‘பயங்கரவாதிகள்’ கொல்லப்பட்டார்கள்…… இலங்கையின் பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ‘யாழ்ப்பாணக் கோட்டை’யினுள் மறைந்திருந்ததாகவும் அப்போது ‘வதந்தி’ பரவியிருந்தது.இத்தனை கொடூரமான ‘பயங்கரவாதிகளை இந்தியாவின் உதவியுடன் அடக்கிய அன்றைய பிரதமர் அந்தப் பயங்கரவாதிகளை அடக்கிய நிகழ்வை மாபெரும் கொண்டாட்டமாக நடாத்தவில்லை…

அப்போது; இன்று இலங்கையின் அதிபராக இருக்கும் ராஜபக்‌ஷேயும் அதே சுதந்திராக்கட்சியில்தான் இருந்தார்.அவருக்குக் கூட அந் நிகழ்வினை- அதுதான் சிங்களப் பயங்கரவாதிகளை ஒடுகிய நிகழ்வினை- திருவிழாவாகக் கொண்டாடும் எண்ணம் எழுந்ததில்லை! காரணம் அன்று அழிக்கப்பட்டவர்கள் சிங்கள இளைஞர்கள் மட்டுமே.

ஆனால், ராஜபக்‌ஷே அரசினால் இரண்டுவருடங்களுக்கு முன் நிகழ்த்தப்பட்டது அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் என்றும்; இனப் படுகொலைகளே என்றும் சர்வதேசம் உணர்ந்திருக்கும் இந்தத் தருணத்தில்…….. இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக உணர்கிறார்கள் என்னும் பேருண்மையைக் கண்டறிந்து அதனை வெளியிடுகிறார் இந்தியத்தின் பிரதமர்!

அவ்வாறாயின்… 1986 ல் திம்புவில் ஈழப்போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடை பெற்றுவந்த பேச்சுவார்த்தைகளில்……. இலங்கை ‘அணு ஆயுத வல்லரசாக மாறுவதை அமெரிக்கா எதிர்ப்பது(!)’ குறித்தா ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்?

அதனைத் தொடர்ந்து 1987ல் மறைந்த ராஜீவ் காந்தி அவர்களுக்கும், இலங்கை அதிபர் ஜே.ஆருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம்….. ஈழத்தமிழர்களது ஒடுக்கப்பட்ட உரிமைகளில் சிலவற்றையாதல் மீளப் பெற்றுத்தரவென உருவாக்கப் பட்டதல்லவா? அப்போது மன்மோகன் அவர்கள் அயலுலக அரசியல் அறியாதவராக இருந்தாரா?

தந்தை செல்வா முதல் பிரபாகரன் வரை அந்த நாட்டின் தமிழர் தலைவர்கள் ஆறு தசாப்தங்களாகப் போராடிக் கொண்டிருந்தது……. அந் நாட்டில் தமிழர்களும் சிங்களர்களும் சம உரிமையுடன், அவர்களுக்கே உரிய கௌரவத்துடன் வாழவேண்டும் என்பதற்காகத் தான்.

இதில் உள்ள வேறுபாடு யாதெனில்… தந்தை செல்வா ‘காந்தீய வழியில்’ போராடியதற்கு மதிப்பளிக்காது….. அதற்குப் பதிலாக அரச அடக்கு முறைகளையும், இனக் கலவரங்களையும் பதிலாக அளித்த சிங்கள அரசுகளின் மீது நம்பிக்கை இழந்த இளைஞர்கள்…….. இலங்கை சுதந்திரம் அடைந்து சுமார் முப்பது வருடங்களுக்குப் பின்னர் ஆயுதப் போர் பற்றிச் சிந்தித்தார்கள்.

அங்கு, தமிழர்களது அறவழிப் போராட்டங்களும் அவற்றுக்குப் பதிலாக அரச அடக்கு முறைகளும்…… தொடர்ந்து கொண்டிருந்த போது அங்கு வாழ்ந்த தமிழர்கள் தம்மை ‘முதலாந்தரப் பிரஜை’களாகவா எண்ணிக் கொண்டிருந்தார்கள்? மன்மோகன் சிங் அவர்களது இன்றைய விளக்கத்தைக் கேட்கும் போது சிரிப்பதா அழுவதா என்னும் குழப்பம் ஏற்படாமல் வேறென்ன செய்யும்?

ஈழத் தமிழர்களைப் ‘பேச்சுவார்த்தைகள்’ மூலம் ஏமாற்றும் செயலை, நீண்ட காலமாக நடாத்திக் கொண்டிருக்கும் இலங்கையின் அரசுகள் போல; இந்திய அரசும் அவர்களது உரிமைகள் மற்றும் உயிர்கள் தொடர்பில் ஏமாற்றம் தரும் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவது தாய்த் தமிழகத்தின் உணர்வுகளை மதியாது புண்படுத்தும் செயலுக்கு ஒப்பானதாகும் என்பதை அதன் தலைவர்கள் எப்போதுதான் உணர்வார்களோ?

[ஜூலை 01,2011ல் www.keetru.com ல் வெளியானது]

குட்டித் தீவில் குமுறல்கள் ……-05

தமிழரின் பலம் அழிக்கும், நிலப் பறிப்பு!

நான்காம் கட்ட ஈழப்போரின் பின்னர், விடுவிக்கப் பட்டதாகச் சொல்லப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இப்போது சுமார் 70,000 தமிழர்கள் வாழ்வதாகவும், அதே சமையம் அங்கு ‘பாது காப்புக் கருதி’(?!) நிலை கொண்டிருக்கும் ‘சிங்கள’ அரசபடையினரின் எண்ணிக்கையும் எழுபதாயிரத்தை எட்டும் எனவும் ,ஓர் பத்திரிகை அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

ஒரு தமிழ்க் குடிமகனுக்கு ஓர் அரசுப் படையினரைப் பாதுகாவலாக அனுப்பி வைத்திருக்கும் இன்றைய இலங்கை அரசின் பெருந்தன்மையைப்(!) பாராட்டுவதா, அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காக என்னும் ‘போர்வை’யில்; முன்பு விடுதலைப் புலிகள் வசம் இருந்த தமிழர்களது பிரதேசங்களில் வலிந்து சிங்கள மொழிபேசும் அரசுப் படையினரைக் குடியமர்த்தும் சாணக்கியத்தைக் கண்டிப்பதா என்று புரியாமல் திணறிக் கொண்டிருக்கிறது  ஈழத் தமிழினம்!

இதனை, வழக்கம் போல் ‘வேடிக்கை’ பார்த்துக் கொண்டிருக்கிறது சர்வதேசம்!

ஆனால், ஈழத்தில் வாழும் தமிழர்களது வாழ்விடங்களில் அவர்களைப் படிப்படியாகச் சிறுபான்மை இனத்தினராக மாற்றுவதன் மூலமே, இலங்கையை ஓர் வலிமையான ‘ஒற்றை ஆட்சி’யின் கீழ் வைத்திருக்க முடியும் என்னும் எண்ணம்; அந் நாடு பிரித்தானியர்களிடமிருந்து  சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே; சிங்களத் தலைமைகளிடம் உருவாகி இருந்தது.

ஆனால், இது போன்ற எண்ணம் பெரும்பான்மைச் சிங்களத் தலைவர்கள் மத்தியில் உருவாவதற்கு, ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய  நிர்வாக அமைப்பே காரணம் என்பதில் சந்தேகம் இல்லை!

அந்நிய தேசத்தவரான ஆங்கிலேயர்கள் தமது நிர்வாக வசதிக்கேற்ப இலங்கையைப் பல பிரிவுகளாகப் பிரித்து அவை ஒவ்வொன்றினுக்கும் அரச அதிபர்களை நியமித்திருந்தார்கள்.

கி.பி 1833 ஆம் ஆண்டு கோல்புறூக்-கெமரோன் ஆகியோரது ஆலோசனையின் பேரில் ஏற்படுத்தப்பட்ட ஒற்றை ஆட்சி நிர்வாக அமைப்பின் கீழ், இலங்கை; ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.

வடமாகாணம்,கிழக்கு மாகாணம், மேல் மாகாணம், தென்மாகாணம் மற்றும் மத்திய மாகாணம் என்னும் பெயரில் அமைந்த இம் மாகாணப் பிரிவுகளில் வடக்கும் கிழக்கும் தமிழர்களது தாயகப் பிரதேசத்தையும், ஏனைய மூன்றும் சிங்களர்களது பிரதேசத்தையும் குறிப்பதாக இருந்தது.

உண்மையில், ஆங்கிலேயர்கள் உருவாக்கிய இந் நிர்வாகப் பிரிவுகள் ஏற்படுவதற்கு முன்னர், இலங்கையின் மொத்தப் பரப்பளவில் சுமார் 35 விழுக்காடு தமிழர்களது வழிவழித் தாயகமாக இருந்திருக்கிறது. 1833ல் ஆங்கில அரசால் உருவாக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழர்களது பிரதேசங்களாக இருந்தாலும், அதன் பரப்பளவு இலங்கையின் மொத்தப் பரப்பளவில் 29 விழுக்காடாகச் சுருங்கி விட்டிருந்தது!

தொடர்ந்து இலங்கையின் மக்கட் தொகையும், வர்த்தகப் பெருக்கமும் அதிகரிக்கவே, நிர்வாக வசதிகளுக்காக ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஐந்து மாகாணங்களது எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டன.

கி.பி 1845 ல் வடமேல் மாகாணம் என்னும் பெயரில் ஆறாவதாக ஓர் பிரிவினை ஏற்படுத்திய போது, வட மாகாணத்தின் சில தமிழ்ப் பிரதேசங்கள் பிரித்தெடுக்கப்பட்டு இப்புதிய மாகாணத்தோடு இணைக்கப்பட்டது.

இதே போன்று, கி.பி 1873ல் வட மத்திய மாகாணம் உருவாக்கப் பட்டபோது; வட மாகாணத்தின் நுவர வாவியும்; கிழக்கு மாகாணத்தின் தம்பன் கடவையும் பிரித்தெடுக்கப்பட்டு புதிய மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.

கி.பி 1886ல் ஊவா மாகாணம் உருவான சமையத்தில், கிழக்கு மாகாணத்தின் விந்தனைப் பிரதேசம் புதிய மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.

கி.பி 1889ல் இலங்கையின் ஒன்பதாவது மாகாணமாக சப்பிரகமுவா உருவான போது ஆரம்பத்தில்-அதாவது- ஆங்கிலேய அரசு தனது நிர்வாக வசதி கருதி 1833ல் உருவாக்கிய மாகாணப் பிரிவுகளில் வடக்கு-கிழக்கு இவ்விரு மாகாணங்களும் பெற்றிருந்த 26,500 சதுர கிலோமீற்றர் பரப்பளவு 19,100 சதுர கி.மீ ஆகச் சுருங்கி விட்டிருந்தது!

அந்நியர்களான ஆங்கிலேயர்களுக்கு, இலங்கை அளித்த பொருளாதாரம் குறித்த அக்கறை இருந்த அளவுக்கு அந் நாட்டின் இரு பெரும் இனங்களது வரலாறு பற்றியும், அவர்களுக்கு இடையில் இருக்க வேண்டிய புரிந்துணர்வு குறித்தும் எவ்வித கவலையும் இருக்கவில்லை என்பதை; அவர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்திக் கொண்ட அமைப்புகளே சான்றாகும்.

பூமிப் பந்தில் எங்கெங்கெல்லாம் வளம் நிறைந்த மண்ணும், அதனைத் தம் உழைப்பால் மேம்படுத்தும் மனிதரும் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் தமது ’வர்த்தகத் திறமை’யின் உதவியோடு கால் பதித்த ‘விதேசி’களுக்கு அவர்கள் செல்லும் நாடுகள் குறித்த பண்டைய வரலாற்றுப் பெருமைகளும், அவற்றின் மாந்தர்களுக்குரிய தன்மானமும் பற்றிய அக்கறை தேவையான ஒன்றல்ல.

ஆனால், இலங்கையின் பெரும்பான்மைச் சமூகமான சிங்கள இனமும், அந்நியர்கள் வகுத்துத் தந்த வழிமுறைகளையே கெட்டியாகப் பற்றிக் கொண்டது மட்டுமின்றி… அதிலும் சில படிகள் மேலே சென்று, அந் நாட்டில் காலங்காலமாகத் தங்களுக்கு என்றோர் அரசினையும், தாயகத்தையும்,கலாச்சாரத்தையும் கொண்டிருக்கும் தமிழர்களை; அவர்களது சொந்த மண்ணிலேயே அநாதைகளாகும் அரசியல் ‘வித்தையை’ அரங்கேற்ற முனைந்ததுதான் வேதனையானது!

ஆங்கிலேய அரசினால், இலங்கையில் உருவாக்கப்பட்ட  முதலாவது மந்திரி சபையில் (1931ல்) காணி அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தவர் டி.எஸ்.சேனாநாயக்கா ஆவர்.இவரே பின்னர் சுதந்திர இலங்கையின் பிரதம மந்திரியாகும் வாய்ப்பினையும் பெற்றிருந்தார்.

இவர், காணி அமைச்சராக இருந்த காலப் பகுதியிலேயே; அபிவிருத்தித் திட்டங்கள் என்னும் பெயரில்; ஏற்கனவே தமிழர்களது பிரதேசங்களாக இனங்காட்டப்பட்டிருந்த பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்து வைப்பதில் முனைப்புக் காட்டிவந்தார்.

1931 முதல் 1943 வரைக்குமான சுமார் 12 வருட காலப்பகுதியில், அன்றைய மதிப்புப்படி 33 இலட்ச ரூபாவைக் குடியேற்றத் திட்டத்திற்கும்,  115 இலட்சம் ரூபாவினை விவசாய மேம்பாட்டுக்கும் என ஒதுக்கியதன் மூலம், கிழக்கு மாகாணத்தின் எல்லையோரக் கிராமங்களில் சிங்களர்களைக் குடியமர்த்தும் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே, தமிழர்கள் உரிமைகோரும் பிரதேசங்களிலேயே அவர்களைக் ‘குரலற்ற’வர்களாக்கும் செயலில்  முனைப்புக்காட்டியவர்கள் சிங்களத் தலைவர்களே!

1948ல் சுதந்திரம் அடைந்த இலங்கையில், சிங்களத்தலைமைகளின் திட்டமிட்ட தமிழின ஒடுக்கல்கள்….. சுதந்திரமாக மேற்கொள்ளப்படலாயிற்று…….

காலப்போக்கில், மாகாணங்கள்; மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இடம் பெற்றிருந்த சில மாவட்டங்கள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் காரணமாக முற்று முழுதாகச் சிங்களமயமாக்கப்பட்டது.

(குமுறல்கள் தொடரும்……)

[ஜூலை 01,2011ல் ’ஈழநேசன்’ இணைய இதழில் வெளியானது]

சட்ட சபையில் சரிபாதி இழந்தோம்! [குட்டித் தீவில் குமுறல்கள் -பகுதி-04]

ஈழப் போராட்டம், அரசியல் தளத்திலிருந்து ஆயுதப் போராக உருவான  1980 களின் ஆரம்பத்தில்  மலேசியாவில் எனது அரசியல் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தேன் என முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்.

அப்போது அந் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் நண்பர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி…

” ஏன் சார் நீங்கள் இலங்கையில் சிங்களவர்களுடன் போரிட்டுக் கொள்கிறீர்கள்…? நாங்கள் இங்கு வாழ்வது போல் நீங்களும் அவர்களுடன் சேர்ந்து வாழலாம் அல்லவா? நாங்கள் இங்கு என்ன மகிழச்சியாக இல்லையா.. ? மலேசியா-சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நாம் வந்து குடியேறியது போன்று இலங்கைக்கும் சென்றவர்கள் தாமே நாமும்… ..” என்பார்கள்.

ஓரளவு படித்த மக்களிடையேயும் இது போன்ற ‘ஈழ வரலாறு புரியாத’ ஓர் மயக்க நிலை இருப்பதை அப்போது கண்டிருக்கிறேன். இது போன்ற எண்ணம், இன்றும் – தமிழகம், மலேசியா இந் நாடுகளில் வாழும் சிலரிடம்- உள்ளது!

உண்மையில் இலங்கையில் வாழும் மலையகத் தமிழ்ச் சகோதரர்களைப் போன்று, ஆங்கிலேயர்களது ஆட்சியில் அவர்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒப்பந்தக் கூலிகளாய் அழைத்து வரப்பட்ட மக்களே இன்று இந் நாடுகளின் குடியுரிமை பெற்று, அந் நாட்டின் ’புத்திரர்கள்’ என்று சொல்லப்படும் மக்களுக்குரிய உரிமைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் இந் நாடுகளில் ஓர் குறிப்பிட்ட பிரதேசத்தில்  நிலையாகவும் செறிவாகவும் வாழும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கவில்லை. இவ்வாறிருந்தும், இந்த நாடுகள் ஆங்கில அரசிடமிருந்து சுதந்திரம் அடைந்த போது அங்கு வாழ்ந்து கொண்டிருந்த அனைவருமே அந் நாட்டின் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளப் பட்டார்கள்.

இன்று அந் நாடுகளில் அரசின் உயர்ந்த பதவிகளிலும், அமைச்சுக்களிலும் இடம் பெற்றுச் சிறப்புடன் வாழும் தமிழர்கள் யாவரும், ஆங்கில அரசினால் அழைத்துவரப் பட்டவர்களின் வழித் தோன்றல்களே.

ஆனால், இலங்கையைப் பொறுத்த வரையில், அந் நாட்டின் வடக்கு-கிழக்குப் பகுதிகளைப் பல நூற்றாண்டுகளாய் தமது தாயகமாகக் கொண்டிருக்கும் தமிழர்கள் ஒரு புறமும், ஆங்கிலேயர்களால் அழைத்து வரப்பட்டு ‘மலையகப் பகுதிகளில்’ குடி அமர்த்தப்பட்ட தமிழர்கள் மறு புறமும் என இரு வேறுபட்ட அரசியல் வரலாற்றை உடைய மக்கள் அங்கு வாழ்கிறார்கள்.

ஈழத்தில் தமக்கென ஓர் அரசினைப் பெறப் போராடுபவர்கள் ஈழத்தின் பூர்வீகத் தமிழர்களே அன்றி, மலையக மக்கள் அல்ல.

இதில், வேடிக்கை யாதெனில், ஆங்கிலேய அரசினால் கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் யாவரும், அதன் பின்னர் அவர்கள் வாழ்ந்த நாடுகளின் குடிமக்களாக ஆக்கப்பட்டனர்

இலங்கையிலோ, அவ்வாறு வந்தவர்களில் பலர் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.

இதற்கெனச் சட்டங்களை இயற்றித் தமிழர்களை இலங்கையில் மிகச் சிறுபான்மை இனமாக மாற்றும் ‘சதியினை’ திட்டமிட்டுப் புரிந்தவர்கள் சிங்களத் தலைவர்களே!

மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டது போல், சுதந்திரத்தின் முன் அந் நாடுகளில் வாழ்ந்த அனைவருமே அந் நாட்டின் குடிமக்கள் என்னும் நிலை ஏற்படுத்தப் பட்டிருக்குமாயின், ‘பிரஜா உரிமைச் சட்டத்தினை’ எதிர்த்து இலங்கைத் தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்ததால் உருவான தமிழரசுக் கட்சியினைத் ‘தந்தை செல்வா’ தோற்றுவிப்பதற்கான காரணமும் ஏற்பட்டிருக்காது.

ஒருவகையில், இலங்கை அரசு அது சுதந்திரம் பெற்ற காலத்திலேயே மிகப் பெரும் மனித உரிமை மீறல்களைப் புரிந்திருக்கிறது எனலாம்! மூன்று தலைமுறைகளுக்கும் மேலாகத் தங்கள் தாயகம் என வாழ்ந்திருந்த –இலங்கைப் பொருளாதாரத்தின் முது கெலும்பாக வாழந்த- மிகப் பெரும் மக்கள் சமூகத்தினை, அவர்கள் ’தமிழர்கள்’ என்னும் ஒரே காரணத்துக்காக நாடற்றவர்களாக்கி விரட்டியவர்கள் சிங்கள அரசியல் வாதிகள் தாம்.

மக்கள் எண்ணிக்கையை வைத்து அரசியல் நடாத்தும் ‘மக்களாட்சி’ முறையில், தமிழர்களைப் பலமிழக்கச் செய்யும் வகையில் திட்டங்களை வகுப்பதில், சிங்களத் தலைமைகள் நீண்ட காலமாகவே ஈடுபட்டு வந்திருக்கின்றன.அதன் ஆரம்பப் படியே ‘பிரஜா உரிமைச் சட்டம்’.

மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக மாற்றியதன் மூலம், தமிழர்களது அரசியல் பங்களிப்பினைக் கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்தது சிங்கள அரசு!

அந்நியர்களின் ஆதிக்கம்:-

மேற்குலக வியாபாரிகளான, போர்த்துக் கேயர்கள் இலங்கயை வந்தடைந்த 1505 ஆம் ஆண்டில், அங்கு வடக்கில் யாழ்ப்பாண அரசும்; மத்திய மலை நாட்டில் கண்டி ராஜ்யமும்; தென் மேற்குப் பகுதியில் கோட்டே [கோட்டை] ராசதானியும் இருந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது.

இவ்வாறு வந்த போர்த்துக் கேயர்கள் சுமார் 89 வருடங்கள் கழித்து கோட்டை ‘ராஜ்ஜியத்’தின் நிர்வாகத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அச் சமையத்தில் கண்டியும், யாழ்ப்பாணமும் தனி அரசுகளாகவே இருந்துவந்தன.

எனினும், அடுத்த 25 வருடகாலப் படையெடுப்புகளின் வழியாக, 1619ல் அவர்கள் யாழ்ப்பாண அரசினையும் தங்களது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தனர். கி.பி 1284 முதல்  சுமார் 335  வருடங்களாகத் தொடர்ந்து ஆட்சி செலுத்திய யாழ்ப்பாண அரசு தனது முடி உரிமையை இழந்தது அப்போதுதான்.

ஆனால், கண்டி அரசு அப்போதும் தனி அரசாகவே தொடர்ந்தது. போர்த்துக் கேயர்களது மிரட்டல்களைச் சமாளிப்பதற்காக, அன்று அவர்களுக்குச் சவாலாக விளங்கிய ஒல்லாந்தர்களை (டச்சுக்காரர்கள்) கண்டி அரசன் நாடினான்.

ஒருங்கிணைந்த கிழக்கிந்தியக் குழுமம்[United East-India Company] என்னும் பெயரில் அன்றைய கண்டி அரசனின் ஆதரவுடன் மலைப் பிரதேசங்களில் தங்களை வலுவாக்கிக் கொண்ட டச்சுக்கள், 1638 ல் கோட்டைப் பகுதியிலும் காலூன்றினர்.

வழக்கமாக, அரசுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் யாவும்; அவர்களது ஆட்சியின் கீழுள்ள மக்களது நலன்களை விடவும், சம்பந்தப் பட்ட அரசுகளது ஆளுமையை வலுப்படுத்தவும், வர்த்தக நலன்களைப் பேணவுமே உதவுகின்றன. இது அன்று முதல் இன்றுவரை தொடரும் ‘மாறா விதி’ எனலாம்!

ஒல்லாந்தர்களுக்கும் அன்றைய கண்டிய அரசர்களுக்கும் இடையே உருவான ஒப்பந்தங்கள் அனைத்தும் மேற்குறிப்பிட்ட ‘ஆளும் தரப்பினர்’களது நலன்களையே குறியாகக் கொண்டிருந்ததில் வியப்பேதும் இல்லை.

இவ்வாறு அடுத்த 157 வருடங்களாகத் தொடர்ந்த கண்டி-ஒல்லாந்த அரசுகளுக்கிடையிலான உறவில் 1795 ஆம் ஆண்டளவில் விரிசல்கள் தோன்றின.

இதனால் ஒல்லாந்தர்களுக்குப் போட்டியாக விளங்கிய பிரித்தானிய கிழக்கிந்தியக் குழுமத்துடன் அன்றைய கண்டி மன்னன் செய்து கொண்ட ஒப்பந்தம் 1796ல் கோட்டை அரசின் நிர்வாகம் பிரித்தானியர்கள் வசம் சிக்க வழிகோலிற்று.

அதன் பின்னர், 1815 மார்ச் 02 ஆம் நாள் கண்டி அரசும் ஆங்கிலேயர் வசமாகியது.

1833 முதல் இலங்கை முழுவதும் ஓர் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

ஆங்கில அரசினால் ஏற்படுத்தப் பட்ட சட்டப் பேரவையில் அதன் உறுப்பினர்கள் யாவரும் சமூகங்களின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டனர்.

தமிழர் ,இசுலாமியர்,பறங்கியர், மேலை நாட்டினர், கண்டிச் சிங்களர், கரையோரச் சிங்களர் என இச்சமூக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகளே 1931 வரையிலான ஆங்கிலேயர்களது ஆட்சி  நிர்வாகத்தில் இடம்பெற்றிருந்தனர்.

அதன் பின்னர் உருவான ‘டொனமூர் ஆணைக்குழு’  தமிழர்களைப் பொறுத்த மட்டில் மிகப் பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது!

எனினும், சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரை மக்கள் தொகை மற்றும் அவர்களது பிரதேசத்தின் பரப்பளவு இவற்றின் அடிப்படையில் அமைந்திருந்தது தமிழர்களுக்கு ஓரளவு சாதகமாக அமைந்தது.

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன் பிரித்தானிய அரசுடன் அது குறித்துப் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்துச் சென்றவை அன்றைய பிரதிநிதிகள் சபையின் அமைச்சர் குழுக்களே ஆகும்.

அன்று அவர்களால் ஆங்கிலேய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த உத்தேச அரசியல் அமைப்புத் திருத்தத்தில்…………..முழு இலங்கையிலும் தேர்வு செய்யப்படும், 95 பிரதிநிதிகளில்….

சிங்களர்- 58 ; இலங்கைத் தமிழர்- 15; இந்தியத் தமிழர்-14; இசுலாமியர்-08  என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக் கொண்டு இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்படவேண்டும் என்பதே சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரையாக இருந்தது.

என்றாலும், இதன் அடிப்படையில் அமைந்த –சோல்பரி அரசியல் அமைப்பின் கீழ் நடைபெற்ற 1947 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர்களது பிரதேசமான வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இருந்து 12 பேரும்; மலையக மக்களைப் பிரதிநிதித்துவம் செய்து 08 உறுப்பினர்களும் மட்டுமே தெரிவாகி இருந்தார்கள்!

அதுதான் போகட்டும், சுதந்திர இலங்கையின் முதலாவது தேர்தல் என்னும் பெருமை(?)யினைப் பெற்ற 1952 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இருந்து மட்டுமே தமிழர்கள் அரச பேரவைக்குத் தெரிவானார்கள். மலையகத்தில் தெரிவான அனைவருமே சிங்களர்களாகவே இருந்தனர். ஆம்,மலையகத் தமிழர்களது வாக்குரிமைகளைப் பறித்த ‘சுதந்திரச் சிங்கள’ அரசு தமிழர்களது பிரதிநிதித்துவத்தையும் சேர்த்தே பறித்தெடுத்துக் கொண்டது.

சுதந்திர(?) இலங்கையின் தமிழர்கள் மீது விழுந்த முதல் அடி இந்தப் பிரதி நிதித்துவ அடியே ஆகும்.

அதனைத் தொடர்ந்தது……… பிரதேசப் பறிப்பு……

[குமுறல்கள் தொடரும்…]

(www.eelanation.com ல் வெளியானது)

தந்தை செல்வா, அன்றே சொன்னார்….![ குட்டித்தீவில் குமுறல்கள்……. பகுதி-03]

“சர்வசித்தன்”

உலகப் பற்றினை உதறித் தள்ள முற்படும் ஞானியர் கூடத் தம் தாயின் மீதுள்ள பாசத்தைக் கைவிட இயலுவதில்லை!

ஆதிசங்கரரில் ஆரம்பித்துப் பட்டினத்தடிகள் வரை இந்த வரலாற்றைக் காணலாம்…..

இறைவன் மீது பக்தி கொண்டு,  அவனது புகழ்பாடித் திரிந்த இறை அடியார்கள் கூட, அந்த இறைவனைப் போற்றும் போது……

“தாயிற் சிறந்த தயாவான தத்துவனே….” என்றும்

“தாயினும் நல்ல தலைவன்…” என்றும்  ….

தாயை முன்னிலைப்படுத்தியே தங்கள் கருத்துகளைப் பாடல்களாய் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஓர் இனத்தின் குமுறல்களை எழுத வந்த இடத்தில்…. இது என்ன இடை நடுவில்… ’தாய் பற்றிய புராணம்’ என்று குழம்புகிறீர்களா?

உலக உறவுகளில் எந்தச் சந்தர்ப்பத்திலும் பிரிக்கவோ, விலக்கி வைக்கவோ முடியாத உறவு… தாயின் மீதான உறவு.  பறவைகள்.. விலங்குகளுக் கிடையே கூட இந்த உறவு குறிப்பிட்ட காலம் வரை பிரிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

வீட்டில் தங்கள் வளர்ப்புப் பிராணிகளை வைத்திருப்போர் இதனைக் கண்கூடாகக் காணமுடியும்…

தன் குஞ்சுகளுக்காகப் போராடும் கோழிகள்; தனது குட்டிகளையும், கன்றுகளையும்  ‘மடிகளை’(முலை) நோக்கி இழுத்துவிடும் ஆடு-மாடுகள் என இந்தத் தாயன்பு எல்லா உயிர்களிடத்தும் விரவிக் கிடப்பதை எவரும் மறுப்பதில்லை.

மனித வரலாற்றில்…… இந்தத் தாயினுக்கு ஒப்பாகச் சொல்லப்படுபவை….. ஒருவரது மொழியும்; அவர் பிறந்த மண்ணும் ஆகும்.

மொழியைத் தாய் மொழி என்றும், பிறந்து வாழும் மண்ணைத்  தாய்மண் அல்லது தாயகம் என்றும் சொல்வது உலகின் எந்த மொழி பேசுபவர்க்கும்,எந்த நாட்டைச் சேர்ந்தவர்க்கும் பொதுவான ஒன்று.

மனித இனம் தனது எண்ணங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்த அன்று மொழியும்; அதன் பின்னர் அவன் தனது நாடோடி வாழக்கையைக் கைவிட்டு ஓரிடத்தில் நிலையாக வாழ ஆரம்பித்த போது  அவனுக்கு என்று ஓர் இடமும் உறுதியானது.

மனித இனத்தின் முதல் இரு அடையாளங்களாய் அமைந்த இந்த மொழியையும், அவன் வாழும் மண்ணையும் அவன் தன் தாயினும் மேலாக எண்ண ஆரம்பித்தான், நேசித்தான் . எனவே தான் இவை இரண்டுமே ’தாய்’ என்னும் அடை மொழியால் சிறப்படைகிறது.

இவை தன்னிடமிருந்து பறி போவதையும், இவற்றில் ஒன்றினைத் தானும் இழப்பதையும் அவனால் பொறுத்துக் கொள்ள இயலுவதில்லை.

தாயை நேசிக்கும், போற்றும் எந்த மனிதனுக்கும் ஏற்படும் உடனுறை உணர்வு இது எனலாம்.

மனிதன் என்னும் பொதுப் பெயரில் உருவான இனம்; பின்னர், பேசும் மொழியாலும்,வாழும் இடத்தாலும் தனக்கென ‘இன’ அடையாளங்களை ஏற்படுத்திக் கொண்டு… அதனைப் பாதுகாப்பதே தனது பெருமை என்னும் நிலையை அடைந்தது.

குறிப்பிட்ட மொழி பேசும் மனிதர்கள் கூடிவாழும் இடம் அவர்களது நாடாயிற்று. இந்தக் கூட்டு வாழ்க்கையே காலப் போக்கில் அவர்களுக்கு எனக் கலாச்சாரத்தையும்,பண்பாட்டினையும் தோற்றுவித்தது.

இவற்றைப் பேணுவதும், போற்றுவதும் அவர்களது தனி உரிமையாகவும், பெருமையாகவும் நிலைபெற்றது.

எனவேதான்….. ஓர் இனத்தை- அதன் அடையாளத்தை அழிக்க வேண்டுமாயின் அதன் மொழியையும், அவ்வினம் ஒன்றாகக் கூடிவாழும் இடத்தையும் அழித்து விட்டால் போதும் என்னும் திட்டத்தினை ; இன்று நாகரீகத்தில் முதிர்ச்சி அடைந்து விட்டதாகப் பேசும் சில நாடுகள் ஆங்காங்கே அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறான நாடுகளின் வரிசையில் முதலிடம் பிடிப்பதற்காக ஓடிக் கொண்டிருக்கும் நாடு ஸ்ரீலங்கா என்றால் மறுப்பதற்கில்லை!

பிரித்தானிய அரசு, தனது நிர்வாக எளிமைக்காக இலங்கைத் தீவின் இரு தேசிய இனங்களையும் ஒரே அலகின் கீழ் அமைத்துத் தனது ‘வர்த்தக வேட்டையை’ நடாத்தி வந்தது. அதே நிர்வாக முறையின் கீழ், மக்கட் தொகையில் அதிகமாக இருந்த சிங்களர்களிடம் நாட்டைக் கையளித்து விட்டும் சென்றது.

ஆங்கிலேயர்களிடம் இருந்து  சிங்களப் பெரும் பான்மையிடம் அரச நிர்வாகம் வழங்கப்பட்ட நாளே இலங்கை சுதந்திரம் அடைந்த நாளாக உலகப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால், ஈழத் தமிழர்களின் சுதந்திரம் படிப்படியாகப் பறி போவதற்கு வகை செய்யப்பட்ட நாளே அது என்பதைச் சுதந்திர(?) இலங்கையின் அரசியல் வரலாறு கடந்த அறுபத்து மூன்று வருடங்களாய் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்கள் இலங்கைத் தீவில் காலடி வைக்கும் வரை, அங்கு தமிழர்களுக்கென ஓர் அரசும், சிங்களர்களுக்குத் தனியான அரசுகளும் இருந்து வந்தன. அன்றைய கால வழக்கப்படி அரசர்களுக்கிடையில் எழும் முரண்பாடுகளால் இரு நாடுகளுக்கிடையே போர்களும் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழர்களும் சிங்களர்களும் தங்களது தாயகத்தில், தங்கள் மொழி, பண்பாடு இவற்றினைத் தொடர்ந்து பேணும் நிலை இருந்து வந்துள்ளது.

போர்த்துக்கேயர்களைத் தொடர்ந்து ஒல்லாந்தரும், அவர்களின் பின் ஆங்கிலேயர்களும் இலங்கைத்தீவின் நிர்வாகத்தினைச் சுமார் நானூறு வருடங்களுக்கும் மேலாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில் தான் அத்தீவின் இரு இன அரசுகளது நிர்வாகமும் ஒன்றாக  இணைக்கப் பட்டது.

எனினும், மக்கள் தொகையின் அடிப்படையில் ஆட்சி அதிகாரத்தினைப் பெற்றுக் கொண்ட சிங்கள இனத்தின் தலைமை, மீண்டும் தமிழர்கள் தங்கள் ஆட்சி உரிமைக்காகப் போராடும் வலிமையினை ஒடுக்கும் வகையில் தனது திட்டங்களைத் தீட்டலாயிற்று.

அதன் முதல் படியாக, அந் நாட்டின் தமிழ் பேசும் மக்களது எண்ணிக்கையினை மட்டுப்படுத்தும் சட்டம் ஒன்றினை இயற்றியது. இது தமிழ் பேசும் மக்களில் ஒரு பகுதியினரை வெளியேற்ற என உருவாக்கப்பட்ட மறைமுக ‘இன ஒழிப்புக் கொள்கை’ எனலாம்.

இலங்கை; சுதந்திரம் அடைந்ததும் சிங்களப் பெரும்பான்மை அரசு கொண்டு வந்த மலையகத் தமிழர்களைப் பாதித்த இந்தப் ‘பிரஜா உரிமைச் சட்டம்’, ஏற்கனவே சிறுபான்மை இனத்தினராக இருக்கும் தமிழர்களைக் குரல் அற்றவர்களாக்கும் முயற்சியாகவே கருதப்பட்டது.

இச்சட்டம் நாடாளுமன்றத்தில் ,விவாதத்திற்கு வந்தபோது ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைகாக அடுத்து வந்த முப்பது ஆண்டுகளாகப் போராடிய ‘தந்தை செல்வா’ அவர்கள்; “ இன்று மலையகத்தவர்களை நாட்டை விட்டு விரட்டும் சிங்கள அரசு, நாளை ஈழத்தமிழர்களையும் விரட்டுவதற்கு முன்வரலாம்” எனக் கூறிய வார்த்தைகள், இன்று அந் நாட்டு அரசின் செயல்கள் மூலம் செயலுருப் பெறுவதாகவே தெரிகிறது.

( குமுறல்கள் தொடரும்….)

[ www.eelanation.com ல் 20-05-2011 ல் வெளியானது]

மே18, 2009 ல்…. ஈழத்தமிழினத்தைத்…

துடைத்தழித்தது ஸ்ரீலங்கா; துணை நின்றது இந்தியா ; தூங்கிக் கிடந்தது சர்வதேசம்!

சர்வசித்தன்

ஐ.நா நிபுணர் குழுவின் ‘இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள்’ தொடர்பான அறிக்கை வெளியான சமையம்;

என்னையும்… எனது ‘உணர்வுகளை’யும் தெரிந்த நண்பர் ஒருவர் என்னிடம்,

“ சார் இப்போது உங்களுக்குத் திருப்தி தானே…….? கொடுங்கோலன் ராஜபக்‌ஷ செய்த இனக் கொலைகளைச் சர்வதே நிபுணர்கள் கண்டித்திருக்கிறார்கள் அல்லவா ?” என்றார் அப்பாவித் தனமாக……!?

நண்பரது வார்ததைகளில் இருந்த அவரது நிம்மதியை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்றாலும்….. அவருக்கு நான் சொன்ன பதில்…

உங்கள் இன உணர்வினை நான் மதிக்கிறேன்…..ஆனால், இந்த நிபுணர்கள் குழுவின் அறிக்கையினைக் கண்டு என்னால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை…. காரணம்….பசித்திருப்பவனுக்குப் படி அரிசி வழங்குவதையும்; பலியாகிப் போனவனுக்கு வாய்க்கரிசி போடுவதையும்…. பொத்தாம் பொதுவாக அரிசி வழங்கினார்கள் எனக் கூறித் திருப்தி அடைவதைப் போன்றதே இதுவும்’  என்பதாகும்.

எனது இந்தப் பதில் அவரை அசர வைத்து விட்டது என்றே சொல்லவேண்டும்! அவரை மட்டும் அல்ல இன்று அந்த நிபுணர்கள் குழு அளித்திருக்கும் அறிக்கையைப் படித்த இன உணர்வும், மனிதாபிமானமும் உள்ள எந்தத் தமிழருக்கும் ஏற்படும் எண்ணமே இது என்பதில் எனக்குத் துளியளவும் ஐயமில்லை!

ஆம், ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்ட ஓர் செயல் குறித்து  ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிடும் ‘சப்பைக் கட்டுகள்’ தாம் இவை!.

கொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டுக் கொலையுண்டவனின் உடலைப் பரிசோதனை செய்வது போன்றதே இந்த அறிக்கைகைகளும், ஆய்வுகளும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து.

இதில் உடன்பாடு கொண்ட பலர் இருப்பார்கள் என்பதும் எனது நம்பிக்கை.

அது மட்டும் அல்ல, அதில் குறிப்பிடப் பட்டிருக்கும் ‘மனித உரிமை மீறல்கள்’ என்னும் சொல்; மனிதர்கள் அவ்வுரிமையை மீறினால் அதனைக் கண்டிக்கும் விதமாக உபயோகிக்கப்படும் வார்த்தை. ஆனால் ’முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது மனிதர்கள் செய்யக்கூடிய கொடூரங்கள் அல்ல அவை ‘காட்டுமிராண்டித்தனமானவை’ என்று குறிப்பிட்டிருந்தால் அதனைக் கண்டு ஓரளவுக்கேனும் திருப்தி அடைய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்!

ஸ்ரீ லங்கா எவ்வளவு தூரம், அதன் சிறுபானமைச் சமூகமான தமிழர்களைப் பாதுகாப்பதில் அக்கறையுடன் செயல்படுகிறது என்பதை இந்தியா உட்படச் சர்வ தேசங்களும் உணர்ந்துதானிருந்தன. இதனை அவற்றுக்கு உணர்த்திய சம்பவம் ஏற்கனவே 1983 ஜூலையில் நிகழ்ந்தேறியிருக்கிறது.

கறுப்பு ஜூலை எனப் பெயர் பெற்றிருந்த(!) அன்றைய இனக் கலவரங்களின் பின்னரே; இலங்கைத் தமிழர்கள் முதலில் இந்தியாவுக்கும்,தொடர்ந்து பல மேற்கு நாடுகளுக்கும் அகதிகளாய் இடம் பெயர்ந்தார்கள். இவ் அகதிகளைச் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளவும் செய்தது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து  அங்கு ஆயுதப் போராட்டம் முழு அளவில், தன்னை வடிவமைத்துக் கொண்டது. முதலில் ஒன்றாகவும்,பின்னர் பலவாகவும் பிரிந்து நின்றாலும் ஈழத் தமிழ்க் குழுக்களின் குறிக்கோள் ; ஈழம் வாழ் தமிழருக்கெனத் தனியான-தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வலிமை படைத்த பிரதேசம் ஒன்றினை உருவாக்குவது என்பதாகத் தான் இருந்தது. இதற்கு அன்றைய இந்திய அரசு துணைசெய்யவும் தவறவில்லை.

1986 ஆம் வருட முற்பகுதியில், வட மாநிலத் தமிழர்களைக் காப்பாற்றவென இந்திய விமானப் படை உணவுப் பொட்டலங்களை வீசியதில் இருந்தே—அந் நாட்டின் தமிழர்களைச் சிங்கள அரசுகள் எத்தனை தூரம் மனிதாபிமானமற்று நடாத்துகின்றன என்பதைச் சர்வதேசம் புரிந்திருக்க வேண்டும். அங்கு நடந்து கொண்டிருப்பது ஆயுதக் குழுக்களின் பயங்கரவாதம் அல்ல; அது ஓர் இன உணர்வுப் போராட்டம் என்பதை அன்றே உலக அரசுகள்  உணர்ந்து அதற்கான  தீர்வினை எட்டியிருக்க வேண்டும்.

அதுதான் போகட்டும், 1986ல் ஆரம்பித்த திம்புப் பேச்சுகளும்; பின்னர் 1987 ல் ஏற்பட்ட “ராஜீவ்-ஜெயவர்த்தனா” ஒப்பந்தமும் இலங்கைத் தீவில் நடைபெற்றுவரும் தமிழ்த் தேசிய இனத்தின் கிளர்ச்சிகள் யாவும் வெறும் பயங்கரவாதம் அல்ல அது ஓர் இனத்தின் உரிமைப் போராட்டமே என்பதை ஒப்புக்கொண்ட சம்பவங்கள் அல்லவா?

இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்ற நிலையில் –ஈழத்தின் ஆயுதப் போராட்டம் விடுதலைப்புலிகளின் தலைமையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட நேரத்தில், நோர்வேயின் தூண்டுதலால் நடை பெற்றுவந்த பேச்சுவார்த்தைகளும்……. அவற்றின் சறுக்கல்களும், நிமிர்வுகளும்…… அதன் தொடர்ச்சியாய் 2002 ல் உருவான ‘விடுதலைப் புலிகள்- ஸ்ரீ லங்கா அரசு’ இவற்றுக்கு இடையே உருவான சமாதான உடன்படிக்கை என்பன வெல்லாம்; அந்த நாட்டில் தமிழினம் தனது பிரதேச-நிர்வாக உரிமைகளுக்காகவே போராடி வருகின்றது என்பதைச் சம்பந்தப்பட்ட இந்தச் சர்வதேச நாடுகளுக்கு  உணர்த்தியே இருக்கும்!

இவ்வாறு உலக நாடுகளுக்குத் தெரிந்தே அங்கு தொடர்ந்து கொண்டிருந்த ஓர் விடுதலைப் போராட்டம் ‘பயங்கரவாதிகளின் போராட்டமாக’ச் சித்தரிக்கப்பட்டு ; காலங்காலமாகத் தமிழினத்தை அந் நாட்டின் இரண்டாந்தரப் பிரஜைகளாக வைத்திருப்பதில் நாட்டங்கொண்ட ஸ்ரீ லங்கா அரசுக்கு ஆயுத தளபாட உதவிகளும், நிபுணத்துவ ஆலோசனைகளும் வழங்கப் பட்டு இனப் படுகொலைகள் வாயிலாக முடித்து வைக்கப்பட்டதற்கு இந்தியா உட்பட இந்த நாடுகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்திருக்கின்றன!

விடுதலைப் புலிகள் ‘பயங்கரவாதி’களாக இருப்பினும், அங்கு இறுதி போரின் போது அகப்பட்டிருந்த மூன்று இலட்சம் தமிழ் மக்களும் பயங்கர வாதிகள் தாமா? இவர்களையேனும் காப்பாற்ற இந்தச் சர்வதேச நாடுகளும், இந்தியாவும் எந்தவொரு முயற்சியில்தானும் இறங்காது இருந்து விட்டு……… இப்போது மட்டும் நிபுணர்கள் குழுவை அனுப்புவதும், பாழாகிக் கிடக்கும் தமிழர் பிரதேசத்தைச் சீரமைக்கப் பொருள் வழங்குவதும் வேடிக்கையாக இருக்கிறது.

உண்மையில் சர்வதேசமும் ; இந்தியாவும் ஈழத்தமிழர்களுக்கு உதவி புரிய விரும்பினால்….

அங்கு  பல்லாயிரம் ஆண்டுகளாகத் தங்கள் தாயகம் என்னும் பெருமையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் வடக்கு-கிழக்குப் பிரதேசங்களின் நிர்வாகத்தினை , அப்பிரதேசங்களின் சொந்தக்காரர்களான தமிழர்களிடமே வழங்கும் படி, ஸ்ரீலங்காவுக்கு ஆலோசனை அளிக்கவேண்டும்.

அதனை அந் நாடு மறுக்குமாயின்; அக்கோரிக்கை நிறைவேறும் வரை அந் நாட்டுக்கு அளிக்கும் அனைத்து உதவிகளையும் நிறுத்திவைப்பதன் மூலம் ; இந்த நியாயமான தீர்வினை ஏற்றுக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்க வேண்டும்.

ஒரு வேளை; ராஜபக்‌ஷேயும்,கோதபாயாவும் சர்வதேசச் சிறைகளில் வாடுவதாக இருந்தால்… எஞ்சியிருக்கும் தமிழர்கள் அதற்காக மகிழ்ச்சியடையலாம், ஆனால் அதன் மூலம் அந் நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டிவிடாது.

எனவே, தமிழினப் படுகொலைகளின் இரண்டாவது ஆண்டின் நிறைவின் போதாவது, சர்வதேசமும், இந்தியாவும் தாம் செய்யத் தவறிய ‘மனிதாபிமான உதவி’யினுக்குக் கைமாறாகவேனும்…   ஈழத்தமிழர்களது நெடுங்காலத் தாகத்தினைத் தீர்த்துவைக்கும் வகையில் ‘முதல் அடியினை’ எடுத்துவைக்கும் என எதிர்பார்கிறோம்.

[http://www.eelanation.com ல் வெளியானது]

*********************************************************************

இன்றைய (தமிழக) முதல்வரும்,ஈழத் தமிழர்களும்!

“சர்வசித்தன்”

இக்கட்டுரை வெளியாகும் சமையத்தில் ஜெயலலிதா அவர்கள், தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றிருப்பார்கள். எம்.ஜி.ஆருக்குப்பின் அ.தி.மு.க வினை வழிநடாத்தும் தலைவரான அவருக்கு இது மூன்றாவது தடவையாகக் கிட்டும் ஆட்சி உரிமை. இந்தத் தடவை அவர்  தமிழக மக்களுக்கு மட்டும் அல்லாமல் ஈழத் தமிழர்களுக்கும் அவரது நியாயமான செயல்பாடுகள், மத்தியில் உள்ள ஆட்சியாளர்களுடன் மேற்கொள்ளவேண்டிய அணுகு முறைகள்; வழி காட்டுதல்கள் தேவைப்படும் நேரம் இது!

தமது கூட்டணியினரது வெற்றிச் செய்தி வெளியான போது, அவர் வெளியிட்ட முதல் உரையிலேயே ஈழத் தமிழர்களது பிரச்னைகள் குறித்துத் தமது கருத்தினைக் கூறியிருந்தார்.

இலங்கைப் பிரச்னை ஓர் சர்வதேசப் பிரச்னையாகும்.அதில் இந்திய நடுவண் அரசின் ஓர் அங்கமாக இருக்கும் மாநில அரசான தமிழக அரசு ஓரளவே செயல்பட முடியும். இந்த விடயத்தில் மத்தியில் உள்ள அரசு நினைத்தால் மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.எனவே போர்க்குற்றம் புரிந்த ராஜபக்‌ஷே அரசினைச் சர்வதேச போர்க் குற்றங்களுக்கான நீதி மன்றத்தில் நிறுத்த இந்திய அரசு செயலில் இறங்கவேண்டும் என நான் வலியுறுத்துவேன்.

 ஈழத்தமிழர்கள் சுதந்திரமாகவும், கௌரவத்துடனும் வாழ இலங்கை அரசு நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் இந்திய அரசு அதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இலங்கை, அதற்கு உடன்படாவிடில், இந்தியா அதன்மீது பொருளாதாரத் தடையினை விதிக்க வேண்டும்.”

இன்று ஈழத் தமிழர்கள் எதற்காகக் காத்திருக்கிறார்களோ அவை அனைத்தினதும் குரலாக ஒலித்திருப்பதன் மூலம் ஜெயலலிதா அவர்கள் ;ஒரு வகையில் அவர்களது உணர்வினைப் பிரதிபலித்திருக்கிறார்  எனலாம்.

இவ்வாறு எழுதுவதன் மூலம், புதிய முதல்வரை அளவுக்கு அதிகமாகவே புகழ்வதாகப் பொருள் கொள்ள வேண்டாம். காரணம், அவரது முந்தைய செயல்பாடுகள் எவ்வாறு இருந்திருப்பினும், கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக- அதாவது ஈழத்தில் இனப்படுகொலை மிக மூர்க்கத்துடன் ஆரம்பமான சமையத்தில் இருந்து- அவரது பேச்சும் செயலும் ஓரளவு நம்பிக்கை அளிப்பதாகவே இருந்து வந்துள்ளது.

எவரைத் தமிழினத்தின் தலைவர் என்றும்,தமிழினக் காவலர் என்றும் ஈழத்தமிழர் உட்பட, உலகில் தமிழர்கள் என்று சொல்வதில் பெருமை அடையும், அனைவரும் நம்பி இருந்தார்களோ- அந்தத் தலைவர் ‘தனது குடும்பத்தின் தலைவராக மட்டுமே’ செயல் பட ஆரம்பித்த போதே தமிழினம் ஏமாற்றத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டது.

சொல்லப்போனால், அதிலும் குறிப்பாக ஈழத்தமிழர்கள் எம்.ஜி.ஆருக்குப் பின்னர், ‘கலைஞர்’மீது கொண்டிருந்த நம்பிக்கை அளவுக்கு ஜெயலலிதா மீது கொண்டிருக்கவில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.ஆனால்; நம்பி இருந்த ஓர் இனம் ஒட்டு மொத்தமாக அழிந்து கொண்டிருந்த வேளையில், ஒப்புக்குச் சில ‘நாடகங்களை’ அரங்கேற்றி விட்டுத்,தமது குடும்ப உறுப்பினர்களுக்காகவும், தனக்கு வேண்டியவர்களுக்காகவும் பேரம்பேச நாட்டின் தலை நகருக்குப் படையெடுத்ததில் இருந்த அக்கறையில் கால் பங்கினைத்தானும் இன மீட்சிக்காகக் காட்ட மறந்த ‘கலைஞரை’ நம்பி ஏமாந்தவர்கள் தமிழர்கள். இந்த விடயத்தில் ஜெயலலிதா தமிழர்களை ஏமாற்றவும் இல்லை தாமே தமிழினத்தின் காவலர் என்று பிரகடனஞ் செய்யவும் விரும்பியதில்லை.

1991 ல்  பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையும்-அதுவும் அக் கொலையினைச் செய்தவர்கள் விடுதலைப் புலிகளே என்னும் குற்றச்சாட்டும் எழுந்த சமையத்தில், ஜெயலலிதா முதல் தடவையாகத் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பில் இருந்தார். அன்றைய நிலையில், ஓர் மாநில அரசின் முதல்வர், நாட்டின் பிரதமரையே கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் ஓர் இயக்கத்துக்கு ஆதரவாக- அது உண்மையிலேயே தமிழர் விடுதலைக்காகப் போராடி வந்தாலும்-  செயல்பட இயலாது. அது மட்டுமல்லாமல் அப்போது; அ.தி.மு.க -காங்கிரசுடன் கூட்டணியின ஏற்படுத்தியே தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றிருந்தது..

அந்தச் சந்தர்ப்பத்தில் புலிகள் இயக்கத்துக்கு எதிராக அவர் பேசியும், செயல்பட்டும்  இருப்பினும் அதனை வைத்தே அவர் ஈழத்தமிழர்களின் எதிரி என வகைப்படுத்துவது சரியாகப் படவில்லை. இந்திய அமைதிப்படை ஈழப் பிரதேசங்களில் இருந்து மீட்டுக் கொள்ளப்பட்டு இலங்கையில் ஓர் இடைக்கால அமைதிநிலை தொடர்ந்த சமையத்தில் தான்  அவர் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். அக்காலப் பகுதியில் அங்கு பாரிய அளவில் இனப் படுகொலைகள் நடந்ததாகவோ அண்டை நாட்டின் தலையீடு அவசியம் என்னும் நிலை உருவானதாகவோ  செய்திகள் ஏதும் இல்லை.

மீண்டும் 2001ல் அவர் இரண்டாவது தடவையாகத் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற சமையம், 2002 முதல் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று நடைமுறையில் இருந்தது. அப்போதும் அண்டை நாட்டின் தலையீடு அங்கு தேவையானதாக அமையவில்லை.

1986ல் ஈழத்தின் யாழ்ப்பாணப் பகுதியில் பெரும் அளவிலான மனித உரிமை மீறல்களும், குண்டுத் தாக்குதல்களும் நிகழ்ந்த சமையம், தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த எம்.ஜி.ஆர் அவர்களின் தலையீடு காரணமாக அவ்வருடப் பிற்பகுதியில் இந்திய அரசின் தூண்டுதலால் ‘திம்பு’ப் பேச்சுகள் ஆரம்பமாகியது. அதன் பின் கலைஞரது ஆட்சியின் போது சென்ற 2008 முதல் 2009 வரையில் தொடர்ந்த  நான்காம் கட்ட ஈழப் போரே அங்கு வாழ்ந்த தமிழர்கள் பலரைக் காவு கொண்ட ‘இனப்படுகொலைக் களமாக’ மாறிவிட்டிருந்தது.

உண்மையில் அவ்வாறான தருணங்களில்  அண்டை நாடொன்றில் வாழும் தனது இன மக்களைக் காப்பாற்றும் கடமையும் வாய்ப்பும் இருந்தும், ராஜிநாமா மிரட்டல்களையும்; மனிதச் சங்கிலி ‘விளையாட்டுக்களை’யும் ; உண்ணாவிரத நாடகங்களையும் நிறைவேற்றிக் கொண்டிருந்த தமிழகத் தலைமையைவிடவும் ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்கு எந்தவித நம்பிக்கைத் துரோகத்தையும் இழைத்து விடவில்லை!

2011ல்…. இப்போது மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கும் அவர், கடந்த இரு வருடங்களாக ஈழத்தமிழர்கள் மீது காட்டும் பரிவு தொடருமானால், அங்கு எஞ்சியிருக்கும் தமிழர்களாவது, இனியேனும் நிம்மதியாகவும், கௌரவத்துடனும் வாழ வழி கிட்டும் என்பதில் சந்தேகமில்லை.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அவர் அறிவித்திருந்த 18 அம்சத் திட்டமும், இப்போது வெற்றிச் செய்தி வந்ததும் அவர் அளித்த அறிக்கையும் அவர் ஈழத் தமிழர்களுக்காகத் தன்னால் முடிந்தவரையில் உதவிட முயல்வார் என்னும் நம்பிக்கையினை விதைத்திருக்கிறது.

‘கலைஞர்’ மீது வைத்திருந்த நம்பிக்கையினைப் போன்று இதுவும் பொய்த்துவிட அவர் அனுமதிக்க மாட்டார் என நம்புவோம்.

நம்புவதைத் தவிர வேறு வழிதான் ஏது?

[www.keetru.com ல் வெளியானது]

**********************************************************************